சகோதரி சாந்தி பொன்னு
(செப்டம்பர்-அக்டோபர் 2021)

நான் நித்திரை பண்ணினேன், என் இதயமோ விழித்திருந்தது; கதவைத் தட்டுகிற என் நேசரின் சத்தத்தைக் கேட்டேன்; என் சகோதரியே! என் பிரியமே! என் புறாவே! என் உத்தமியே! கதவைத் திற; என் தலை பனியினாலும், என் தலைமயிர் இரவில் பெய்யும் தூறலினாலும் நனைந்திருக்கிறது என்றார் (உன்னத.5:2).


என் பிரியமே! கதவைத் திற! மணவாட்டி உள்ளே, மணவாளன் வெளியே!

மணவாளனுக்காகக் காத்திருக்காமல் மணவாட்டி நித்திரைக்குச் சென்றிருந்தாள்; என்றாலும் அவளுடைய இருதயம் தன் மணவாளனுக்காக ஏங்கி நின்றது. ஆனால், மணவாளன் வந்து கதவைத் தட்டினான்; அப்போது நடந்தது என்ன? தன் மணவாட்டியைத் தேடிவந்த மணவாளன் தன் அன்புக்கினியவளை அழைத்த வார்த்தைகள் எத்தனை இன்பமானவை. அவர் “என்” என்று உரிமையோடு அழைக்கிறார். “என் சகோதரியே, என் பிரியமே, என் புறாவே, என் உத்தமியே!” என்று மணவாளன் தன் மணவாட்டியைக் குறித்துத் தன் இருதயத்திலே கொண்டிருந்த அன்பின் அலைகள் வெளிப்படுகின்றன.

நம்பிக்கையோடு வந்த மணவாளன், “கதவைத் திற” என்கிறார். தன் மணவாளனின் சத்தத்தை அவள் நன்கு அறிந்திருந்தாள். ஆனால் மணவாளனே தன்னை அழைக்கிறார் என்பதை உணர்ந்தறிந்தும் அவள் கதவைத் திறக்கவில்லை. அவள் மணவாளனைச் சந்திப்பதற்காக அணிந்திருக்கவேண்டிய வஸ்திரத்தைக் கழற்றிப்போட்டாள். தூங்குவதற்கு வசதியாக அவள் தன் பாதங்களையும் கழுவிவிட்டாளாம். தான் நினைத்தவுடன் அவர் வரவில்லை என்று அவளுக்கு மனக்கசப்பா? அல்லது எதிர்பார்த்து அலுத்துப்போன ஆதங்கமா? ஆனால், அவளின் நேசர் கதவு திறக்கப்படாததைக் கண்டு, தமது நேசம் குறைவற்றது என்பதுபோல தமது கையைக் கதவுத் துவாரத்தின் வழியாய் நீட்டினார். அதைக் கண்ட அவள் உள்ளம் அவருக்காய் பொங்கியது. எழுந்துவந்து கதவைத் திறந்தாள். பூட்டின கைப்பிடியில் அவள் கைகளை வைத்தபோது நேசருக்குப் பிரியமான வாசனையும் வீசியது. ஆனால், அவள் கதவைத் திறந்தபோதோ அவளுடைய நேசர் அங்கே இல்லை, அவர் போய்விட்டார்.

முழங்கால் ஜெபம்

இன்று கர்த்தருடைய சபையின், அதாவது நமது நிலைமையும் இதுதானா என்று எண்ணத் தோன்றுகிறது. நமது ஆத்ம நேசராம் இயேசுவுக்கும் நமக்கும் உள்ள உறவின் தார்ப்பரியம்தான் என்ன? நாம் அவரை நேசிக்கிறோம், அவரையே கர்த்தராக விசுவாசித்து ஆராதிக்கிறோம், அதில் சந்தேகமில்லை. ஆனால், அவரை நேசிக்கிறோம் என்று சொல்லுகின்ற நாம் அவரை எங்கே நிறுத்தியிருக்கிறோம்? நாம் நினைத்தவுடன் அவர் வரவில்லை, நாம் நினைத்ததை அவர் செய்யவில்லை என்று அங்கலாய்த்து இதயக்கதவைப் பூட்டிவிட்டோமா? அல்லது, அவர் உள்ளே வந்தால் நம் சுயகாரியங்களை நிறைவேற்றமுடியாது என்று எண்ணி அவரை வெளியே விட்டு கதவைப் பூட்டி, நமது சுயவிருப்பங்களில் லயித்துவிட்டோமா? சுய களிப்பிலிருந்து வெளிவர சற்று சங்கடப்படுகிறோமா?

ஆண்டவருக்கும் நமக்கும் உள்ள உறவின் கதவு, அந்த உறவுப்பாலம் முழங்கால் ஜெபம் ஒன்றுதான். அந்த முழங்கால் ஜெபம் மங்கிவிட்டதா? நாம் எல்லோரும் நிச்சயமாகவே ஜெபிக்கிறோம்; அதிலும் இந்தக் கொள்ளை நோய்க் காலத்தில் சிறுவர்கள்கூட ஜெபிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். நல்லது, ஆனால், ஜெபிக்கின்ற நமது மனநோக்கு என்ன? ஜெபம் உயிரோட்டம் உள்ளதாக இருக்கிறதா? அல்லது, உதடுகளில் சிதறி வெடிக்கின்ற வெறும் வார்த்தைகளுடனும், நமது சுயதேவைகளை எடுத்துரைக்கும் ஒரே நோக்குடனும் ஜெபம் முடிந்துவிடுகிறதா? இன்று இணையத்தள ஜெபங்கள் ஏராளமாகவே ஏறெடுக்கப்படுகின்றன. அவற்றில் மெய்யாகவே நமது இருதயம் ஒருமனமாக இணைந்திருக்கிறதா என்பதை கர்த்தருக்கு முன்பாக நாம் ஆராய்ந்து பார்ப்போமாக.

மணவாட்டி தன் கால்களைக் கழுவி கட்டிலில் ஏறிவிட்டாள்; அவளால் இனி இறங்கி வரமுடியாது, கட்டிலைவிட்டு இறங்கினால் தன் கால்கள் அழுக்காகிவிடும் என்று நினைத்தாளோ! இன்று நமது முழங்கால்கள் எங்கே? முடங்கிப்படுத்திருக்கிறதா? அல்லது மூட்டுவலி முடக்க இடமளிப்பதில்லையா? இது ஒன்று. அடுத்தது, மணவாட்டி தன் நேசரின் சத்தத்தைக் கேட்டும் சாக்குப்போக்குச் சொன்னாள். தன் மணவாளனே கதவண்டையில் நிற்கிறார் என்பதை நன்கு அவள் அறிந்திருந்தும், அவள் காத்திருந்தவர் வந்துவிட்டார் என்பதை அறிந்திருந்தும், அவரது சத்தந்தான் என்பதை அவள் உணர்ந்திருந்தும், அவள் ஏன் சாக்குப்போக்குச் சொன்னாள்? தேவனுடைய வார்த்தைக்கு அவர் சத்தத்திற்கு இன்று நாம் எந்தளவிற்குச் செவிகொடுக்கிறோம். பேசுகிறவர் கர்த்தர்தான் என்பதை நாம் அறியாமல் இல்லை. ஆனால், அவரது வார்த்தைக்கு நாம் கொடுத்திருக்கிற முக்கியத்துவமே நம்மைப் பின் தள்ளியிருக்கிறது.

வார்த்தை இல்லாத ஜெபம் பயனற்றதுதான். வேதம் வாசிக்கும்போது தேவன் நம்முடன் பேசுவார், ஜெபிக்கும்போது நாம் கர்த்தரோடு பேசுகிறோம் என்ற சிறுவயதின் பாடத்தில்தான் நாம் இன்னமும் நிற்கிறோமா? அல்லது, தேவனோடு கொண்டிருக்கும் உறவுதான் ஜெபவாழ்வு என்று பின்னர் கற்றுக்கொண்டது போதுமென்று திருப்திப்பட்டுள்ளோமா? இல்லை, அதற்கும் மேலாக, தேவனோடு உறவாடி, அவருடைய இதய விருப்பத்தை அறிந்து, அவர் நமக்கு வகுத்துள்ள வட்டத்துள் நாம் கடந்துசெல்லும் நேரமே ஜெப நேரம் என்பதை உணர்ந்திருக்கிறோமா? இதற்கும் மேலாக, தேவனுடைய வார்த்தையின்படி, தேவனுடைய இருதய விருப்பத்திற்கு ஏற்ப, ஆவியானவரின் துணையுடன் தேவனுடைய விருப்பத்தையே ஜெபமாக ஏறெடுக்கின்ற உன்னத அனுபவத்துள் நாம் வந்திருக்கிறோமா? இதற்காகவே பரிசுத்த ஆவியானவரும், சத்திய வார்த்தையும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது. வார்த்தையின் அடிப்படையில், ஆவியானவரின் வல்லமையுடன் ஜெபிக்கின்ற ஜெபமே உயிரோட்டமுள்ள ஜெபமாகும். கிறிஸ்தவ வாழ்வின் அஸ்திபாரமே தேவனுடைய வார்த்தையில் ஊன்றிய முழங்கால் ஜெபம்தான். ஆனால், இன்று அநேகமாக முழங்கால் மறக்கப்பட்டுவிட்டது; ஜெபங்கள் நமது சொந்த வார்த்தைகளால் நிரம்பிவிட்டது; நாம் நித்திரைக்குப் போய்விட்டோம்.

ஜெபம் அன்றும் இன்றும்:

வேதாகமத்திலே பதிவுசெய்யப்பட்டுள்ள தேவ பிள்ளைகளின் ஒவ்வொரு ஜெபமும் வெவ்வேறு சூழ்நிலைகளில் ஏறெடுக்கப்பட்ட உயிரோட்டமுள்ள ஜெபமாக இருப்பதால், இன்று அந்தந்த சூழ்நிலைக்குள் நாம் அகப்படும்போது அந்தந்த ஜெபங்கள் நம்மைத் தாங்கி, நமக்குப் புத்துயிர் கொடுக்கின்றன. இயேசுவின் ஜெபங்களோ, நமது வாழ்வின் அஸ்திபாரத்தையே அசைக்கக் கூடியதாக இருக்கின்றன. அதன்பின்னர், ஆரம்ப கால சபையில் அப்போஸ்தலரும் சீஷர்களும் ஒரு மனதோடு ஒன்று கூடியபோது அவர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். அவர்களது உறுதியான ஜெபவாழ்வும், அவர்களுக்கூடாகச் செய்யப்பட்ட அற்புத அடையாளங்களும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியது (அப்.2:42,43). உபத்திரவங்கள் மத்தியிலும் ஆரம்பகால சபை ஒன்றுகூடி ஒருமனதுடன் ஜெபித்தபோது, அவர்கள் ஜெபம்பண்ணக் கூடியிருந்த இடம் அசைந்தது (அப்.4:31). அவர்கள் ஜெபித்தபோது சங்கிலிகள் கழன்று விழுந்தன, காவலரண்களும் இரும்புக் கதவுகளும் திறவுண்டன (அப்.12:5-10). அநேக அடிகள் அடிக்கப்பட்டு உட்காவலறையில் அடைக்கப்பட்டு, தொழு மரத்தில் கால்கள் பூட்டப்பட்டுச் சிறை வைக்கப்பட்டிருந்தபோதும் அவர்கள் ஜெபித்துத் துதித்தபோது, சிறைச்சாலைகளின் அஸ்திபாரங்கள் அசைக்கப்படும்படி பூமி அதிர்ந்தது, சிறைக் கதவுகள் திறவுண்டன, இவர்களுடைய கட்டுகள் மாத்திரமல்ல, சிறைக்காவலிலிருந்து அனைவரினது கட்டுகளும் கழன்றுபோயின (அப்.16:22-26). சிறைச்சாலைக் காவலனும் அவன் வீட்டாரும் இரட்சிப்படைந்தார்கள். இன்னும் சம்பவங்கள் நிகழ்ந்ததுண்டு. இதுதான் அன்றைய ஜெபங்களும் அவற்றின் பிரதிபலிப்புகளும்.

ஆரம்பகால சபை எந்த தேவனிடம் ஜெபித்ததோ அதே தேவனிடம்தானே இன்று நாமும் ஜெபிக்கிறோம்? அப்படியென்றால், அன்றைய அசைவு இன்று எங்கே? நம்மைக் கண்டு பயமடைகிறவன் யார்? அப்படி எதுவும் இல்லையென்றால், சபையின் அதாவது நமது ஜெபம் வலுவிழந்துவிட்டதா? சபை குளிருமில்லாமல், அனலுமில்லாமல் இருக்கிறதா என்பதைத் தீவிரமாகச் சிந்திக்கவேண்டிய கட்டாயத்தில் வந்துநிற்கிறோம். ஆரம்பகால சபைகள் ஒருபுறம் இருக்க, சுவிசேஷத்தைச் சுமந்துகொண்டு, தங்கள் சொந்த நாட்டை விட்டு நமது நாட்டைத் தேடிவந்த அன்றைய மிஷனெரிமாரின் இருதயத்தில் பற்றியெரிந்த அந்த ஜெப அக்கினி இன்று அவிந்துவிட்டதா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவனும் சீர்தூக்கிப்பார்ப்பது நல்லது. கர்த்தருக்கும் சபைக்கும், கர்த்தரின் வார்த்தைக்கும் சபைக்கும், மேலும், முக்கியமாக பரிசுத்த ஆவியானவருக்கும் சபைக்கும் உள்ள உறவு இவற்றை யெல்லாம் திறந்தமனதுடன் சிந்தித்து மனந்திரும்ப வேண்டிய கட்டாயத்துள் பொதுவாகவே கர்த்தருடைய சபை தள்ளப்பட்டுள்ளது.

இன்றைய கொள்ளைநோயும், நமது ஜெபங்களும்:

இன்று உலகம் முழுவதுமே, விசேஷமாக நமது தேசமும் கொள்ளைநோயினால் பாதிக்கப்பட்டுத் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. இன்னமும் உலகைவிட்டு இந்தக் கொள்ளைநோயின் தாக்கம் குறைவடையவில்லை. இந்த சூழ்நிலையில் கர்த்தருடைய சபை தனது பொறுப்பிலும் பங்களிப்பிலும் நேர்மையாக இருக்கிறதா என்பது முக்கிய கேள்வி. 2020 மார்ச் மாதத்திலிருந்து நாம் தனிப்படவும், குடும்பமாகவும், சபையாகவும். நவீன தொழில் நுட்பங்களைப் உபயோகிப்பதில் சளைக்காதவர்களாக பலவித ஜெபங்களை ஏறெடுத்துக் கொண்டே இருக்கிறோம். ஆனால் நடப்பது என்ன? கர்த்தர் ஜெபத்தைக் கேட்கவில்லையா? அவர் ஜெபங்களைக் கேட்கிறவர். அப்போ, கர்த்தர் பதில் தரவில்லையா? மனந்திரும்புதலுடனும், விசுவாசத்துடனும், தேவதிட்டத்துள்ளும் நின்று ஜெபிக்கின்ற அனைத்து ஜெபங்களுக்கும் அவர் பதிலளிக்கிறவர். அப்போ, இந்தக் கொள்ளை நோயை அனுமதித்து விட்டு, மக்களின் அவலத்தைப் பார்த்து கர்த்தர் அமைதியாக ரசித்திருக்கிறாரா? இது மகா தவறு. தமது கடைசி சொட்டு இரத்தத்தையும் மனுக்குலத்துக்காகவே சிந்திய அன்பின் கர்த்தர் இன்று நமது வேதனையைப் பார்த்து ரசித்திருப்பாரா?

அன்று மரியாளின் கண்ணீரைக் கண்டு ஆவியிலே கலங்கி, கண்ணீர்விட்ட ஆண்டவர், இன்றும் நம்முடன் சேர்ந்து துயரப்படுகிறார், கண்ணீர் விடுகிறார் என்பதை நாம் எவ்வளவுக்கு உணர்ந்திருக்கிறோம்? கண்ணீர்விட்ட இயேசு எதுவும் பேசாமல், எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று நேரடியாகவே கேட்டு, கல்லறைக்குப் போய் லாசருவை, அதிலும் அடக்கம் செய்து நான்கு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், லாசருவை உயிரோடே எழுப்பிய ஆண்டவர் தமது பிள்ளைகளாகிய நமது விஷயத்தில் பேசாமல் இருப்பாரா?

அப்போ தவறு எங்கே? நமது ஜெபங்கள் தவறா? அல்லது ஜெபிக்கின்ற நமது மனநோக்கு தவறா? அல்லது தேவன் கிரியை செய்ய முடியாதபடி நம்மில் தடைகள் இருக்கிறதா?

இந்த வைரஸ் அழியவேண்டும் என்று ஜெபிக்கிறோம்; நல்லது. ஆனால் வைரஸ், பாக்டீரியா, ஃபங்கஸ் போன்ற Antigens உலகிற்கும் நமக்கும் தேவை. நமது உடலில் ஏற்கனவே பலவித பாக்டீரியாக்கள் சேவையில் இருக்கின்றன. இப்படிப்பட்ட இயல்பான வைரஸ்ஸைத் தங்கள் சுய இச்சைக்குப் பயன்படுத்தும்படிக்கு எடுக்கப்பட்ட மனித முயற்சியின் தீய விளைவையே நாம் இன்று அனுபவிக்கிறோம். இதற்கு எப்படி தேவன் பொறுப்பாக முடியும்?

இது ஒருபுறம் இருக்க, வெளியிலிருந்து எந்தக் கிருமியும் நமது சரீரத்துக்குள் புகுந்துவிடாதபடிக்கும், புகுந்தாலும் உடனடியாகவே அதைக் கெளவிப் பிடித்து அழித்துவிடும்படிக்கும் நமது சரீரத்திலே Antigens-க்கு எதிராக நோய் எதிர்ப்பு சந்திவாய்ந்த Antibodies-ஐ உருவாக்குகின்ற, நமது கண்களுக்குப் புலப்படாத ஓர் அதிசயமான நோய் எதிர்ப்பு அமைப்பை – Immune system – கர்த்தர் நமக்குள் வைத்திருக்கிறாரே! இதன் செயற்பாடு மகா அதிசயம்! நம்மைப் படைக்கும்போதே இந்த அமைப்பை நமது பாதுகாப்புக்காக நமக்குள் வைத்த தேவன் இந்த அழிவுக்குக் காரணமானவரா?

அப்படியானால் இந்த நோய் எதிர்ப்பு அமைப்பின் வலுகுறைவுபட்டால் தான் நமது சரீரம் பாதிக்கப்படும். இயற்கையாக நமக்குள் இருக்கின்ற இந்த எதிர்ப்பு சக்தி குறைவடைவதற்கு நாமேதான் காரணம். மாறுபட்ட உணவுப்பழக்கம், இரவில் விழித்திருப்பது, தகாத வெளிச்சங்கள், ஓய்வின்மை, சூரிய ஒளி படாமை என்று பல காரணங்கள் உண்டு. எதிர்ப்பு சக்தியைத் தக்கவைக்கவும், வலுவூட்டவும் இவை அவசியம்; ஆனால் “அவசியம்” என்ற இந்த அறிவு போதாது. அவற்றை நாம் செயற்படுத்திச் சரிசெய்யவேண்டும். இந்த நோய் எதிர்ப்பு சக்தி பல காரணங்களால் யார் யாருக்குக் குறைவுபட்டிருக்கிறதோ, அவர்கள்தான் இந்த கொரோனா வைரஸினாலும், அதின் மாற்றமான டெல்டா வைரஸினாலும் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆக, நாம் எதற்கு ஜெபிக்கவேண்டும்? வைரஸ் அழிய வேண்டும் என்றா? அது நடக்குமா? இந்த வைரஸ் போனால் இன்னொரு வைரஸ் வரும். ஆகவே, முக்கியமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவேண்டும் என்று நமது ஜெபங்களை சற்று மாற்றியமைப்போமாக.

இழக்கப்படுகின்ற ஆவிக்குரிய எதிர்ப்பு சக்தி:

ஒரு விஷயத்தை நாம் மறக்கக்கூடாது. நமது ஆவிக்குரிய எதிர்ப்புசக்தி குறைவடையும்போது, நமது சரீரத்தின் எதிர்ப்புசக்தியும் தன் வலுவை இழந்துவிட ஏதுவுண்டு. இன்று நமது ஆவிக்குரிய நிலை கேள்விக்குறியாகி இருப்பதை மறுக்க முடியாது. சபை ஆவிக்குரிய எதிர்ப்பு சக்தியை இழந்து விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. சபையின், அதாவது நமது எதிர்ப்பு சக்தி தேவனுடைய வார்த்தைதான். வார்த்தை இன்று யாருக்குத் தெரியாது? சிறிய பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் வார்த்தையை இன்று உதட்டின் நுனியில் வைத்திருக்கிறார்கள். ஏராளமான செய்திகள், கைப்பேசியைத் திறந்தால் மடைதிறந்து பாயும் செய்திகளும் ஜெபங்களும். எல்லாம் நல்லது. ஆனால், நம்மில் அவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா? நாம் கற்றுக்கொள்கிற வார்த்தையின்படி நடக்கிறோமா? கர்த்தரை எவ்விதத்தில் தேடுகிறோம்? அவரது சித்தத்திற்குள் அடங்கி நிற்கிறோமா?

“என் இருதயத்துக்கு ஏற்றவன்”(அப்.13:22) என்று கர்த்தரால் சாட்சிபெற்ற தாவீதின் இருதயத்தை சாத்தானால் ஏவக்கூடியதாக இருந்தது எப்படி? (1நாளாகமம் 24ம் அதிகாரம்) நடந்தது என்ன? இஸ்ரவேல் புத்திரரின் தொகையைக் கணக்குப்பார்க்கும் பொருட்டு எண்ணும்போது என்ன செய்யவேண்டும் என்ற கர்த்தரின் கட்டளையை தாவீது அறியாதிருக்கமுடியாது (யாத்.30:11-14). அதன்படி எண்ணுவது என்றால் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் இட்ட கட்டளையைப் பார்க்கும்போது, அவர் பெருக்கிய மக்களின் தொகையைத் தொகை பார்ப்பது தேவனுக்குப் பிரியமல்ல என்பது விளங்குகிறது. யோவாப் புரிந்திருந்ததைக் கூட தாவீதால் புரிந்துகொள்ள முடியவில்லையா? அல்லது அது தாவீதால் மறக்கப்படும்படி சாத்தான் அவனுக்குள் புகுந்து விளையாடினானா? கர்த்தராலே சாட்சி பெற்ற தாவீதை, தொகையிடும் பாவத்தைச் செய்யும்படி சாத்தான் ஏவிவிட்டது என்றால், சாத்தான் தாவீதுக்குள் நுழையும்படிக்கு தாவீது செய்த தவறு என்ன? தாவீது கர்த்தரின் வார்த்தையைப் புறக்கணித்துவிட்டார்; கர்த்தரோடுள்ள உறவில் சறுக்கிவிட்டார்; கர்த்தரிடம் தாவீது ஜெபித்திருந்தால் கர்த்தர் பதலளித்திருக்கமாட்டாரா? தாவீது வார்த்தையைவிட்டு விலகி, ஜெபத்தைப் புறக்கணித்து, தன்னிஷ்டப்படி நடந்து பாவம் செய்துவிட்டார்.

இன்று சபைக்குள்ளும் வார்த்தைக்குப் புறம்பான தவறான ஏவுதல் கொடுக்க சாத்தான் வரமாட்டான் என்று நாம் கர்வம் கொள்ளக்கூடாது. நாம் சத்திய வார்த்தையைவிட்டு விலக எத்தனித்தால், கள்ள, கவர்ச்சியான உபதேசங்களைக் கொண்டுவந்து நம்மை வார்த்தையைவிட்டு அவனே விலக்குவான். அப்போது ஜெபங்களும் மாறும். கர்த்தரைவிட்டு விலகுவது தெரியாமலே சபை விலகிவிடக்கூடிய வாய்ப்புண்டு. பின்னர் நடப்பது என்ன?

தாவீது தன் பாவத்தை உணர்ந்ததும் (2சாமு. 24ம் அதிகாரம்) செய்த ஞானமான செயல், கர்த்தருடைய கைகளில் விழுந்ததுதான். 70,000 பேர் கொள்ளை நோயில் மரித்தார்கள். அதைக் கண்ட தாவீது,”தேவனே, நான்தான் பாவஞ்செய்தேன்; பொல்லாப்பு நடப்பித்தேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? என் தேவனாகிய கர்த்தாவே, வாதிக்கும்படி உம்முடைய கரம் உம்முடைய ஜனத்துக்கு விரோதமாயிராமல் எனக்கும் என் தகப்பன் வீட்டிற்கும் விரோதமாயிருப்பதாக” என்று தேவனுடைய பாதத்தைச் சரணடைந்தாரே! அந்த சரணடைதல் இன்று கர்த்தருடைய சபைக்கு அவசியம்.

சரணடைவோம்!

சபையின் ஜெபக்குழுக்கள் எங்கே? உபவாச ஜெபங்களின் அர்த்தம் என்ன? சுயநீதி, பிரிவினை, சண்டைகள் என்று சபை ஏன் தடுமாறி நிற்கிறது. இவை மிகுதியாகும்போது ஜெபத்திற்குப் பதில் கிடைப்பது எப்படி? இவற்றை விட்டுவிலகி, ஒருமனதுடன் தேவபாதத்தில் முகங்குப்புற விழுந்து மனங்கசந்து ஜெபித்து, வார்த்தைக்குத் திரும்ப வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். சண்டைகளையும் பிரிவினைகளையும் தேவன் அங்கீகரிப்பாரா? இயேசுவின் இரத்தத்திலிருந்து, அவரது விலா எலும்பு குத்தப்பட்டதிலிருந்து, பரிசுத்தாவியானவரின் நிறைவிலிருந்து உருவானதே சபை! இதன் அஸ்திபாரத்தை யாரும் அசைக்கமுடியாது. ஆனால், சபை வார்த்தையை விட்டு விலகுமானால் அது தன் வலுவை இழக்க நேரிடும்; அப்போது அதன் எதிர்ப்பு சக்தியும் மங்கி விடும். எதிர்ப்பு சக்தி மங்கும்போது சத்துரு சபைக்குள் இலகுவாகவே நுழைந்துவிடுவான்.

ஆகவே, மனஸ்தாபத்துடனும், உண்மை மனதுடனும் வார்த்தைக்குத் திரும்பி, தேவனுடைய பாதத்தில் “நீர் மாத்திரமே” என்று சரணடைவது ஒன்றேதான் தப்பிக்கத்தக்க ஒரே வழியாகும்.

ஏழு குத்துவிளக்குகளின் மத்தியில் உலாவிய ஆண்டவர், இறுதிக்கால சபையாகிய லவோதிக் கேயா சபையிலே வாசலுக்கு வெளியே நின்று தட்டுவது ஏன்? சபையிலே ஆண்டவருடைய மெல்லிய சத்தம் கேட்கட்டும். அவர் கதவைத் தட்டிக் கொண்டு வெளியே நிற்கிறார். என் புறாவே! கதவைத் திற! என்கிறார். சபை கர்த்தருடைய வார்த்தைக்குத் திரும்பி, தான் மறந்துவிட்ட முழங்கால்களை நிமிர்த்தி முடக்கட்டும். ஜெபங்கள் தூபங்களாக மேலெழும்பட்டும். கண்ணீருடன் அழுகுரலும் எழும்பட்டும். இருதயங்கள் நொறுங்கி ஜெபிக்கும் ஜெபங்கள் ஏறெடுக்கப்படட்டும். நாம் கதவைத் திறக்காவிட்டால் அவர் கடந்துசென்றுவிடுவார். பின்னர் தேடிக்கொண்டு வீதியில் செல்லும்போது நாம் நிச்சயம் வாதிக்கப்படுவோம்.

எனவே, இப்போதே நமது நேசருக்கு நமது இதயக் கதவுகளைத் திறந்து, உணர்வுள்ள உயிரோட்டமுள்ள ஜெபங்களை ஏறெடுப்போமாக. சபையாகிய நாம் மண்டியிட்டு தேவபாதம் சரணடைய ஆவியானவர் கிருபை புரிவாராக. ஆமென்.