மிரியம் லெவன் குட்
(செப்டம்பர்-அக்டோபர் 2021)

மேலும், தமது மூலமாய்த் தேவனிடத்தில் சேருகிறவர்களுக்காக வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் அவர்களை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார் (எபி.7:25)


நான் இரட்சிக்கப்பட்டுள்ளேன் என்ற நிச்சயத்தை எப்படிப் பெறலாம்? என்பது இன்று அநேகருக்குப் பிரச்சனையாகவே உள்ளது. ஒரு வாலிப சகோதரி இப்படியாக எழுதியிருந்தாள்:

நான் மிகச்சிறிய வயதிலே கிறிஸ்தவளாகிவிட்டேன். கிட்டத்தட்ட 5வயதில் நான் ஒரு கிறிஸ்தவளாக இருப்பதற்காக மிகவும் சந்தோஷப்பட்டேன். இரட்சிக்கப்பட்டுவிட்ட நிச்சயமும் எனக்குள் இருந்தது. ஆனால், எனது 10வது வயதில் திடீரென எனக்கொரு சிந்தனை வந்தது. உண்மையில் இரட்சிக்கப்பட்டிருக்கிறேனா? அல்லது நான் இன்னும் இரட்சிக்கப்படவில்லையா? என யோசித்தேன். ஆகவே, மறுபடியும் இயேசுவை நோக்கி என் இதயத்தில் வாரும் என்று நான் வேண்டிக்கொண்டேன். அதன்பின் நான் இயேசுவின் பிள்ளை, பயமே இல்லை என்ற நிச்சயம் எனக்குள் வந்தது. எனக்கு 13 வயதானபோது எனது வாழ்க்கையைக் குறித்து நான் சிந்தித்துப் பார்த்தபோது மீண்டும் நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேனா? இல்லையா? என்ற சந்தேகம் எனக்குள் வர ஆரம்பித்தது. இப்போது எனக்கு வயது 15. ஆனால், இன்னும் இதைக்குறித்துக் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதனை யோசிக்கும்போதெல்லாம் எனக்குள் மிகவும் துக்கமாக இருக்கிறது என்று எழுதி இருந்தாள்.

அந்த வாலிப சகோதரி சிலவேளைகளில் தான் குழப்பத்துடனும் துயரத்துடனும் இருப்பது போலவும் மற்றும் சில சமயங்களில் ஒரே சஞ்சலமாயிருப்பதாகவும், அதன்பின்னர் கொஞ்சநேரம் அழுத பின்புதான் மன அமைதி கிடைத்தது போன்ற திருப்தி ஏற்படுவதாக உணர்ந்தாள். அநேக கிறிஸ்தவர்கள், அவர்கள் பெரியோராயினும், சிறியோராயினும் தாங்கள் உண்மையிலேயே இரட்சிக்கப்பட்டுள்ளனரா என்ற வீண் கலக்கம் ஏற்படத்தான் செய்கிறது. அநேக தடவை இவர்கள் இரட்சிப்பைக் குறித்து சந்தேகமடைவதற்கு காரணம், “இவர்களுக்கு இரட்சிக்கப்பட்டது போன்ற உணர்வுகள் ஏற்படாமலிருப்பதுதான்”.

முதலாவதாக, நாம் இரட்சிக்கப்பட்டுள்ளதை எவ்வாறு அறியலாம்? என்ற கேள்வியை நாம் கவனத்தில் கொள்ளும்முன் நான் இரட்சிக்கப்படுவது எவ்வாறு? எனக் கேட்கவேண்டும். அத்துடன், ஏன் நான் இரட்சிக்கப்பட வேண்டும்? என்றும் கேட்கவேண்டும். இந்த கடைசிக் கேள்விக்குரிய விடை, எல்லா மனுஷரும் பாவஞ் செய்தவர்கள், பாவத்தின் விளைவு மரணம் (ரோ.6:23) என்பதாகும். பாவ சுபாவத்தோடு பிறந்தபடியினாலும் பாவமான காரியங்களைச் செய்தபடியினாலும் நாம் மரண தண்டனைக்குரியவர்களாகிறோம். இது வெறுமனே சரீரப் பிரகாரமான மரணத்தைக் குறிப்பது மட்டுமல்ல; நமது ஆவிக்குரிய மரணத்தை, அதாவது, ஆண்டவரிடத்திலிருந்து பிரிக்கப்படுவதைக் குறிக்கிறது. இந்த கொடிய தண்டனையினின்று நாம் மீட்கப்படுவதற்கு இரட்சிக்கப்படவேண்டும்.

இனி இரண்டாவது கேள்வியைக் கவனிப்போம்: நான் இரட்சிக்கப்படுவது எவ்வாறு? அதாவது, இந்த மரண தண்டனையினின்று நான் எங்ஙனம் இரட்சிக்கப்படலாம்? அப்போஸ்தலர் 16இல் பவுலையும் சீலாவையும் ஒரு சிறைச்சாலைக்காரனையும் நாம் காண்கிறோம். சிறைச்சாலைக்காரன் பவுலைப் பார்த்து இதே கேள்வியைத்தான் கேட்டான்: ஆண்டவன்மாரே இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்? (வச.30). அதற்கு அவர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி (வசனம் 31) என பதில் கூறினார்கள். சரி, இயேசுகிறிஸ்துவை விசுவாசி என்றால் என்ன? இன்னொரு விதத்தில் இதை நாம் விவரிப்பது என்றால், அவரிலே உன் நம்பிக்கையை வைத்துவிடுவதாகும்!

கிறிஸ்துவின் சிலுவை மரணம் நம்முடைய மரண தண்டனைக்குப் போதுமான ஈடாக அமைந்தது என்பதை நாம் நம்பவேண்டும். நம்முடைய பாவத்திற்கான மரண தண்டனையை நமக்குப் பதிலாக அவரே தன்மீது ஏற்றுக்கொண்டார் என்பதை நாம் விசுவாசித்து அவரை அணுகும்போது இனிமேல் அந்த தண்டனைக்கு நாம் பரிகாரம் செலுத்தவேண்டிய அவசியமே இல்லாமல் போகிறது. இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கியபோது அவர் பிதாவிடமிருந்து ஒரு கணம் பிரிக்கப்பட்டிருந்தார். இனி அப்படிப்பட்ட பிரிவை நாம் அனுபவிக்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் அவரை ஏற்றுக்கொண்டபின் அவர் நம்மோடுகூட துணையாகவே இருப்பார்.

இப்போது நம்முடைய சந்தேகமான கேள்விக்கு வருவோம். நாம் இரட்சிக்கப்பட்டுள்ளதை அறிவது எங்ஙனம்? இரட்சிப்பின் நிச்சயத்தை அருள்வதற்கு ஒரேயொரு சிறந்த ஆதாரமுண்டு. அதுதான் தேவனுடைய வார்த்தைகள் அடங்கிய பரிசுத்த வேதாகமம் மட்டும்தான்!

நமது இரட்சிப்பின் நிச்சயத்தை நமது உணர்வுகளின் அடிப்படையில் பெறமுடியாது. ஏனென்றால், ஆண்டவர் அருளும் இரட்சிப்பானது உணர்வின் அடிப்படையில் அமைந்ததல்ல. ஆண்டவர் கூறினார். இரட்சிப்பின் மார்க்கமானது விசுவாசத்தின் வழியாகும். உணர்வுகளல்ல, விசுவாசத்தினாலேயே நாம் இரட்சிக்கப்படுகிறோம். மேலும், உணர்வுகள் மாறும் தன்மை உடையன. தேவனுடைய வார்த்தையோ மாறாதது, உறுதியானது. ஆண்டவராகிய இயேசு, “என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்” (யோ.5:24) என்று கூறியுள்ளார்.

நீங்கள் மாபெரும் பிரயாணத்தை மேற்கொள்ளுவதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்குப் போகிறீர்கள். முதலில் “மரணம்” என்ற தீவில் இருக்கிறீர்கள். அதாவது, உங்கள் பாவத்தின் நிமித்தமாக கிடைக்கும் ஆவிக்குரிய மரணத் தீவு. இத்தீவினின்று மற்ற தீவுக்கு போகின்ற பாதைதான் “நம்பிக்கை” என்ற பாதை. அதாவது, நமக்காக கிறிஸ்து தம்மைத்தாமே பலியாகக் கொடுத்ததை விசுவாசிப்பதாகும். அந்தப் பாதை, “வாழ்வு” என்று எழுதப்பட்ட அறிவித்தல் பலகை காட்டும் திசையிலுள்ள தீவுக்கு நம்மைக் கொண்டுச் செல்லக்கூடியது. அது சாதாரண சரீர வாழ்வு அல்ல; ஆனால், நித்திய வாழ்வு. இதனை நாம் முடிவே இல்லாத வாழ்வு எனக் கூறுவதைவிட, இனி தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்காத ஆவிக்குரிய வாழ்வு என்று கூறலாம். இந்த நித்திய வாழ்வு என்பது வாழ்க்கையின் சிறப்புத் தன்மையை அதாவது, கிறிஸ்து நமக்குள் வாழும் வாழ்க்கையைக் குறிக்கின்றது.

மற்றுமொரு இடத்தில் ஆண்டவராகிய இயேசு தம்மை மேய்ப்பராகவும் விசுவாசிகளை தமது மந்தைகளாகவும் படம் பிடித்துக்காட்டுகிறார். அவர் தம்முடைய மந்தையை தாம் அறிந்துள்ளதாகவும் அவருடைய பராமரிப்பிலும் பாதுகாவலிலுமுள்ள எந்தவொரு மந்தையையும் எவருமே பிரிக்க முடியாதென்றும் உறுதி அளித்தார் (யோவா.10:27,29). இரட்சிக்கப்படுவதற்கென்று, ஆண்டவராகிய இயேசுவை விசுவாசிக்கும் நம்பிக்கை வைக்கும் ஒருவனை எவருமே பிரிக்கமுடியாது என்பதைக்குறித்து நாம் நிச்சயமாயிருக்கலாம்.

இன்னுமொரு உண்மை என்னவென்றால், இரட்சிப்பின் விஷயத்தில் உங்களது பங்கு, இயேசுகிறிஸ்துவினிடம் உங்களுடைய விசுவாசத்தை வைப்பதுதான். அவர் உங்களுக்காக தன்னுடைய ஜீவனைக் கொடுத்தார். அவர்தான் உங்களுக்காக பலியானார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். அதன்பிறகு உங்களை இரட்சிப்பில் வைத்துக்கொள்வது, அதாவது உங்களைக் காத்துக்கொள்வது அவர் பொறுப்பாகும். அவர் தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்களை முற்று முடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார் என்று எபிரெயர் 7:25இல் வாசிக்கிறோம். தேவன் உங்களிடத்தில், ஒரு காரியத்தைத் துவக்கினால் இறுதிவரை நடத்துவார் என்று நீங்கள் உறுதிகொள்ளலாம் (பிலி.1:5,6). உங்களில் இரட்சிப்பு என்னும் கிரியைகளைத் தொடங்கினவர் அதை முடிவுபரியந்தம் நடத்துவார். பாதிவழியில் விழ விடமாட்டார்.

தொடர்ந்து அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டால் அந்த சகோதரி தன்னுடைய உணர்வின் அடிப்படையிலே இரட்சிப்பின் அனுபவத்தை நிச்சயப்படுத்த முயலுகிறார். அப்படியானால் இரட்சிப்பின் அனுபவத்தை பெற்றவருக்கு ஒரு விசேஷ உணர்வு ஒன்று உண்டா என்ற கேள்வி எழுகிறது, சிலர் நான் இரட்சிக்கப்பட்டபின் சந்தோஷமாயிருக்கிறேன் என்று சொல்லலாம். இன்னும் சிலர், நான் விடுதலை உணர்வினைப் பெற்று உள்ளேன் என்று சொல்லலாம். இது உண்மைதான். இன்னொருவர் தனக்கு எந்தவிதமான வித்தியாச உணர்வுமே இல்லையென்றும் சொல்லலாம். இது அவருடைய அனுபவம்.

எனவே, இரட்சிப்புக்கும், உணர்வு ஏற்படுவதற்கும் எந்தவிதமான சம்பந்தமுமே இல்லையென்றுதான் சொல்லவேண்டும். நாம் மேலே குறிப்பிட்ட வேத வசனங்களில் “உணர்வு” என்ற வார்த்தை இடம்பெறாதிருந்ததை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். நீ “விசுவாசி” அல்லது “நம்பு” என்ற வார்த்தைகள்தான் இடம் பெற்றுள்ளன. மேலும், மனித உணர்வுகள் மாறும் தன்மை கொண்டவை. ஒருநாள் ஒரு புது ஆடையை அணிந்து அதனால் நாம் சந்தோஷமாயிருக்கலாம். ஆனால், அடுத்தநாள் ஏதோவொரு நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் நிமித்தம் சோர்ந்துபோய்விடுவோம். எனவே, நம்முடைய உணர்வுகள் நாளுக்குநாள் மாறும் தன்மை கொண்டவை. எனவே, நாம் பெற்றுக்கொண்ட இரட்சிப்புக்கும் உணர்வுகளுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அறிந்திருக்க வேண்டும்.

எனவே, பிரியமான சகோதர, சகோதரிகளே, அடுத்த முறை உங்களது இரட்சிப்பைக் குறித்து உங்களுக்குக் கேள்வி எழும்போது நீங்கள் அவ்விதமாக நினைக்கக் காரணமாயிருந்தது என்னவென்பதைக் கவனித்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்துவில் நீங்கள் விசுவாசம் வைத்தது உண்மையானால், ஆண்டவருடைய வாக்கை நம்பி தொடர்ந்து செல்லுங்கள். அவர் உங்களை இரட்சிப்பேன் என்று கூறியுள்ளார். அதை நீங்கள் நம்பாவிட்டால் நீங்கள் அவரைப் பொய்யராக்குகிறீர்கள்.

உங்களுக்குள் எவ்விதமான உணர்வு ஏற்படுகிறது என்பதை மறந்துவிடுங்கள். ஒருவேளை கிறிஸ்துவை நீங்கள் நம்பும்போது சந்தோஷமும் சமாதானமும் மனநிறைவும் ஏற்படலாம். அப்படியானால் அதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள். ஆனால் இரட்சிப்பின் அடிப்படை அந்த உணர்வுதான் என்று எண்ணிவிடாதீர்கள்!

உங்களுடைய இரட்சிப்பு எப்போதுமே ஆண்டவர் சொன்ன மாறாத வார்த்தையில்தான் நிலைத்திருக்கிறது. தேவனையும் அவருடைய வார்த்தைகளையும்போல இந்த உலகில் நம்பிக்கைக்குரிய எவரையும் எப்பொருளையும் நீங்கள் காணவே முடியாது. அவரை உங்களுடைய நோக்கத்தின் மையமாக வைக்கும்போது இரட்சிப்பைக் குறித்த எந்தவொரு சந்தேகமும் உங்களுக்குள் வரத் தேவையே இல்லை.


ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் வேதாகமம்

ஆங்கிலத்தில் மொழியில் முதன் முதலில் முழு வேதாகமத்தையும் மொழிபெயர்த்தவர் ஜாண் வைக்ளிப் என்பவராவார். 1328இல் பிறந்த இவர், இங்கிலாந்திலுள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று, பின்னர் அங்கு விரிவுரையாளராக பணியாற்றிய ரோம சபையின் போதகராவார். சீர்திருத்தத்தின் விடியற்காலத்து நட்சத்திரம் என சபை சரித்திரத்தில் வர்ணிக்கப்படும் இவர், ரோம சபையின் நிர்வாகத்தையும் உபதேசத்தையும் வன்மையாக எதிர்த்தார். 1382இல், போப்பாண்டவர் அல்ல, கிறிஸ்துவே சபையின் தலைவர் என்பதை உறுதியாக அறிவித்ததோடு, சபையல்ல வேதாகமமே விசுவாசியின் மீது அதிகாரமுடையது. ஆகையால், சபையானது புதிய ஏற்பாட்டுக்கால சபையைப் போல இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.

மக்கள் வேதாகமப் போதனைகளின்படி வாழ வேண்டுமானால், வேதாகமம் அவர்களுக்கு விளங்கக் கூடியவிதமாக அவர்களுடைய சொந்த மொழியில் இருக்கவேண்டும் என்பதே அவரது இலட்சியமாய் இருந்தது. இதன் பயனாக, 1382இல் அவர் புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வைக்ளிப்பின் சீடரான நிக்கொலஸ் என்பார் 1384இல் பழைய ஏற்பாட்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதன் பயனாக முதல் தடவையாக முழு வேதாகமத்தையும் ஆங்கிலேயர்களால் தங்களது சொந்தமொழியில் வாசிக்கக் கூடியதாயிருந்தது.

1384இல் வைக்ளிப் மரணமடைந்தார். எனினும், ரோமசபை 1428 இல் லூட்டர்வேர்த் எனுமிடத்திலிருந்த அவரது கல்லறையைத் தோண்டி, அவரது எலும்புகளை எடுத்து, அவற்றை எரித்து, அதன் சாம்பலை அந்நகரைச் சுற்றி ஓடும் ஆற்றில் தூவியது. வைக்ளிப் ஆங்கிலத்தில் வேதாகமத்தை மொழிபெயர்த்து, அதன் கையெழுத்துப் பிரதிகளை மக்கள் மத்தியில் விநியோகித்தது, ரோம சபைக்கு எதிரான குற்றம் என அக்கால சபை கருதியமையினாலேயே அவரது எலும்புகளை ரோம சபை எரித்தது. வைக்ளிப் உயிரோடிருக்கும்போது அவரைத் தண்டிக்க முயன்றும், அதில் தோல்வியடைந்த ரோம சபை, அவர் மரித்து பல வருடங்களுக்குப் பிறகு அவரது எலும்புகளைத் தண்டித்துள்ளது. 1415 இல் வைக்ளிப்பின் ஆங்கில வேதாகமமும் ரோம சபையின் கண்டனத்துக்குள்ளாகியதோடு, அதன் பிரதிகளும் எரிக்கப்பட்டன. அப்படியிருந்தும் இன்று வைக்ளிப்பின் ஆங்கில வேதாகமத்தின் 170 கையெழுத்துப்பிரதிகள் இங்கிலாந்தின் அரச வம்சத்தினரிடமும், முக்கிய மனிதர்களிடமும் உள்ளன. 150 வருடகாலமாக வைக்ளிப்பின் வேதாகமமே ஆங்கிலேயர்கள் உபயோகித்த ஒரேயொரு வேதாகமமாக இருந்தது. எனினும், இம்மொழிபெயர்ப்பு அச்சடிக்கப்பட்ட புத்தகமாகாமல் வெறும் கையெழுத்துப் பிரதியாகவே இன்றும் உள்ளது.