கே.ப.ஆபிரகாம்
(செப்டம்பர்-அக்டோபர் 2021)
இன்றைய உலக சூழல் பயம் நிறைந்ததாகக் காணப்படுகிறது. பயமானது வேதனையுள்ளது என்று வேதம் கூறுகிறது. தேவன் தம்முடைய பிள்ளைகள் பயத்தின் அடிமைத்தனத்தோடு வாழ்வதை விரும்புகிறதில்லை. ஆகையால்தான் வேதாகமத்தில் அவர் தமது ஜனங்களைச் சந்தித்த போது “பயப்படாதிருங்கள்” என்று சொல்வதைப் பார்க்கிறோம். இவ்வுலகத்தில் எத்தனையோ விதமான பயங்கள் உண்டு. இந்த பயங்கள் எல்லாவற்றிலிருந்தும் தேவன் நமக்கு விடுதலை தருகிறார். சங்கீதக்காரனாகிய தாவீது, நான் கர்த்தரைத் தேடினேன்; அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங்.34:4) என்று பாடுகிறார்.
அதேவேளையில் நமது வாழ்வில் இயல்பாக காணப்படுகிற பயங்களும் உண்டு. நமது பெற்றோர், ஆசிரியர், வயது முதிர்ந்தவர்கள், நமது எஜமான்கள் போன்றவர்களிடத்தில் எல்லாம் நமது பயத்தைக் காண்பிப்போம். அவர்கள்மீது நாம் வைத்திருக்கும் பாசம், மரியாதை மற்றும் கனத்தினிமித்தமும் இவ்விதமான பயம் ஏற்படுகிறது.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, வேதாகமம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைக் குறித்தும் அதன் அவசியத்தையும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. தேவபயம் ஒரு கிறிஸ்தவனுடைய வாழ்வில் தவிர்க்கமுடியாத இன்றியமையாத ஆவிக்குரிய பண்பாகும். ஏனென்றால் தேவன் நம்மிடம் அதை விரும்புகிறார். இதைக்குறித்து மல்கியா 1:6இல் பார்க்கிறோம்: குமாரன் தன் பிதாவையும், ஊழியக்காரன் தன் எஜமானையும் கனம் பண்ணுகிறார்களே; நான் பிதாவானால் என் கனம் எங்கே? நான் எஜமானானால் எனக்குப் பயப்படும் பயம் எங்கே? என்று சேனைகளின் கர்த்தர் தமது நாமத்தை அசட்டை பண்ணுகிற ஆசாரியர்களாகிய உங்களைக் கேட்கிறார். தேவபயம் இல்லாதவன் கர்த்தரை கனவீனப்படுத்தி அவரை அசட்டை பண்ணுகிறான். தேவன் தம்முடைய ஜனங்களிடம், “நீ உன் தேவனாகிய கர்த்தரை விடுகிறதும், என்னைப் பற்றும் பயம் உன்னிடத்தில் இல்லாமலிருக்கிறதும், எத்தனை பொல்லாப்பும் கசப்புமான காரியம் என்று உணர்ந்துகொள்” (எரே.2:19) என்று எச்சரிக்கிறதைப் பார்க்கிறோம்.
அப்படியென்றால் கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்றால் என்ன? இதற்கான விளக்கங்கள் அநேகம் உண்டு. எளிய முறையில் நாம் இதைக் குறித்து அறிய விரும்புவோமென்றால், கர்த்தர் வெறுப்பதை வெறுத்து அதைவிட்டு விலகுவதும், கர்த்தர் விரும்புவதைச் செய்வதற்கு நம்மை ஒப்புக் கொடுப்பதுமாகும். தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் என்று நீதிமொழிகள் 8:13 நமக்கு விளக்குகிறது. மேலும் பெருமை, அகந்தை, தீய வழி, புரட்டு வாய் ஆகியவற்றையும் கர்த்தர் வெறுக்கிறார் என்றும் இவைகளைவிட்டு நாம் விலகவேண்டுமென்றும் இவ்வசனத்தில் பார்க்கிறோம். தேவபயமில்லாத இடத்தில் இவ்வாறான அருவருப்பானவைகள் காணப்படும்.
இன்று அவருடைய பிள்ளைகள் மத்தியில் தேவபயம் காணப்படாமற் போனதும், அதைக் குறித்த சிந்தையற்றவர்களாக வாழ்வதும் மிகவும் வருந்தத்தக்க காரியமாகும். அவருக்கு சாட்சியாக வாழவேண்டிய விசுவாசிகளிடத்தில் ஒழுக்கக்கேடான காரியங்களும் சீரழிவுகளும் பாவங்களும் மலிந்து காணப்படுகின்றது. இவ்வாறு மக்கள் தேவனைத் தேடாமல் உணர்வற்ற நிலையிலும் தேவன் நியமித்த பாதைகளை விட்டு வழிதப்பி வாழ்வதற்கும் கெட்டுப்போவதற்கும் காரணம், “அவர்கள் கண்களுக்கு முன்பாக தெய்வ பயமில்லை” என்று பவுல் ரோமர் 3:10-18இல் விளக்குகிறதைப் பார்க்கிறோம். கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற் போனவர்கள் தங்கள் வழிகளின் பலனைப் புசிப்பார்கள் என்று நீதிமொழிகள் 1:29,31 நம்மை எச்சரிக்கிறது.
கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைக்கொண்ட மக்கள் தேவனுக்கு எது பிரியமென்பதையும் அவர் எதை வெறுக்கிறார் என்பதையும் அறிந்து அவருக்கு உகந்தவர்களாக வாழ்வதையே தங்கள் நோக்கமாக வைத்திருப்பர். இதைப் போன்று காத்தருக்குக் கீழ்ப்படிந்து அவருக்குப் பிரியமாக வாழ்ந்தவர்கள் “கர்த்தருக்கு பயந்து நடந்தவர்கள்” என்ற சாட்சியைப் பெற்றனர். ஆபிரகாம் ஈசாக்கை பலியிட ஒப்புக்கொடுத்தபோது, நீ தேவனுக்குப் பயப்படுகிறவன் என்று இப்பொழுது அறிந்திருக்கிறேன் என்றார் (ஆதி.22:12). தேவன் அருவருக்கிற பொல்லாப்புக்கு விலகின யோபுவைக் குறித்து “தேவனுக்கு பயந்தவன்” என்று தேவனே சாத்தானுக்கு முன்பாக சாட்சிகொடுத்தார் (யோபு 2:3). எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணிக்கொண்டிருந்த கொர்நேலியு தேவனுக்கு பயந்திருந்தவன் என்ற சாட்சியைப் பெற்றவனான் (அப்.10:2). ஆவியானவரின் வழிநடத்தலின்படி கொர்நேலியுவை சந்திக்கவந்த பேதுரு, எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன் என்றும் நிச்சயமாய் அறிந்திருக்கிறேன் (அப்.10:35) என்றார். வேதாகமத்தில் தேவன் தமது கைகளில் எடுத்து உபயோகப்படுத்தின பாத்திரங்கள் அனைத்தும் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தைக் கற்று அறிந்திருந்தனர்.
கர்த்தருக்குப் பயந்து அவருக்குப் பிரியமான வழியில் நடக்கும் ஒரு மனிதன் அடையும் பாக்கியங்களைக் குறித்து தொடர்ந்து பார்ப்போம். கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நாம் அடையும் பல ஆசீர்வாதங்களுக்கு திறவுகோலாக அமைகிறது.
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (நீதி.1:7).
நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் தெய்வீக ஞானம் இன்றியமையாதது என்பதை நீதிமொழிகள் மற்றும் பிரசங்கி புஸ்தகங்கள் பிரதானமாக நமக்கு உணர்த்துகிறது. ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள் (நீதி.4:7). முத்துக்களைப் பார்க்கிலும் ஞானமே நல்லது (நீதி. 8:11). அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது (நீதி.24:14). ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் (பிர.10:10). இந்த ஞான வாக்கியங்களெல்லாம் எந்தளவிற்கு ஞானம் நமது வாழ்வில் இன்றியமையாதது என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. நமது குடும்பத்தை நடத்துவதற்கும் பிள்ளைகளைக் கர்த்தரண்டை நடத்துவதற்கும் நமது காரியங்களைக் கையாள்வதற்கும் நமது வேலை ஸ்தலத்திலும் ஊழியப்பணியிலும் சபையை நடத்துவதற்கும் நமக்குத் தெய்வீக ஞானம் தேவை.
இந்த விசேஷித்த ஞானத்தைப் பெற்றிருந்த தானியேலின் காரியங்கள் ஜெயமாயிருந்தது. இதற்குக் காரணம் தானியேல் கர்த்தருக்கு பயந்து நடக்கிற மனிதனாக இருந்தார். கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (சங்.111:10, நீதி.1:7, 9:10). நாம் ஞானத்தை அடைவதற்கு கர்த்தருக்குப் பயப்படும் பயமே திறவுகோலாக இருக்கிறது என்பதை இவ்வசனங்கள் வாயிலாக அறிகிறோம்.
நமது ஞானமற்ற செயல்களினாலும் பேச்சுகளினாலும் எவ்வளவு கண்ணிகளை வருவித்துக் கொண்டோம். இன்றும் நமது வாழ்வில் நேர்ந்த விபரீதங்களாலும் தோல்விகளினாலும் மனங்கலங்குகிறோம். ஆம்! பிரியமானவர்களே, ஒரு காரியத்தைச் செவ்வையாய்ச் செய்வதற்கு ஞானமே பிரதானம் (பிர.10:10). இந்த பரலோக ஞானத்திற்கு திறவுகோலாக இருப்பது “கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்”. பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது (யாக்.3:17).
கர்த்தருக்குப் பயந்தவர்களை தேவன் விடுவிக்கிறார்.
கர்த்தர் தம்முடைய பிள்ளைகளை, குறிப்பாக அவருக்குப் பயந்தவர்களை, அவர்களுக்கு வரும் சோதனையினின்றும் ஆபத்தினின்றும் அழிவினின்றும் போராட்டத்தினின்றும் பாதுகாக்கிறார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார் (சங்.34:7). இது தாவீதினுடைய அனுபவமாகும். வேதாகமத்திலே தேவன் தம்மை ஆராதிக்கிற ஜனங்களையும் ஊழியர்களையும் தமக்காக வைராக்கியமாக நின்றவர்களையும் தமது தூதர்களை அனுப்பி பாதுகாத்த சம்பவங்களைப் பார்க்கிறோம். சிங்க கெபியிலிருந்த தானியேலையும் ஏழு மடங்கு தீயிலிருந்து சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகுவையும் சிறைச்சாலையில் கட்டப்பட்டிருந்த பேதுருவையும் தமது தூதனை அனுப்பி பாதுகாத்தார். நமது ஆண்டவர் இன்றைக்கும் நமக்காக செயல்படுகிறார். நமது இக்கட்டுகளிலிருந்து விடுவிக்க தம்முடைய தூதர்களை அனுப்புவார். வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம் பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டு போய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன் (யாத்.23:20).
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆசீர்வாதத்திற்கு ஆரம்பம்.
இன்றைய கிறிஸ்தவ உலகில் ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு எத்தனையோ வழி முறைகள் மக்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகிறது. இம்முறைகளில் கர்த்தரோடு நெருங்கி ஜீவிப்பதற்கான போதனைகளோ அவருடைய சித்தத்தைச் செய்வதற்கான போதனைகளோ இல்லை. எளிய முறையில் இலகுவான வழிகளில் ஆசீர்வாதங்களை பெறுவதில்தான் இன்றைய விசுவாசிகளின் வாஞ்சையாயிருக்கிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற தமது ஜனங்களை தேவன் ஆசீர்வதிக்கிறார் என்பது உண்மை. கர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார் (சங்.115: 13). நாம் ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக்கொள்வதற்கு திறவுகோலாக இருப்பது கர்த்தருக்குப் பயப்படுகிற பயம்.
128ஆம் சங்கீதத்தில் குடும்பத்திற்கான ஆசீர்வாதங்கள் சொல்லப்பட்டிருப்பதை நாம் அறிவோம். இந்த ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்க திறவு கோலாக இருப்பது கர்த்தருக்குப் பயப்படுகிற பயம். கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான். இதோ, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் இவ்விதமாய் ஆசீர்வதிக்கப்படுவான் (சங்.128:1,4). அவருக்குப் பயப்படுகிற ஜனங்களை தேவன் பஞ்சகாலத்திலும் போஷிப்பார் என்று வேதாகமம் உறுதியளிக்கிறது.
கர்த்தருக்குப் பயப்படுதலே பரிசுத்த வாழ்விற்கு ஆரம்பம்.
யோசேப்பு தனது வாலிப வயதில் பரிசுத்தமாக வாழ்ந்தார். தனது சகோதரருடைய துன்மார்க்க வாழ்விற்கு அவன் உடந்தையாயிருக்கவில்லை. எகிப்து தேசத்தில் அவனிருந்தபோது போத்திபாரின் மனைவியின் மூலம் சோதனை வந்தது. நான் இத்தனை பெரிய பொல்லாங்குக்கு உடன்பட்டு, தேவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்வது எப்படி என்றான் (ஆதி.39:9). தேவன் தன்னைப் பார்க்கிறார் என்றும் பாவ சோதனை வரும் இடத்தைவிட்டு விலகி ஓடவேண்டும் என்பதையும் யோசேப்பு நன்கு அறிந்திருந்தான். இதற்கெல்லாம் மூலகாரணம், அவன் கர்த்தருக்குப் பயப்படுகிறவனாயிருந்தான். “நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்” (ஆதி.42:18) என்று தன் சகோதரரிடம் அறிக்கையிடுகிறான். கர்த்தருக்குப் பயப்படுதல் பரிசுத்த வாழ்விற்கு திறவுகோலாயிருக்கிறது. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை (சங்.34:9).
கர்த்தருக்குப் பயப்படுதல் ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படையாயிருக்கிறது.
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும் (மல்கி. 4:2). அவருக்குப் பயப்படுகிற ஜனங்களை ஒரு நாளும் அவர் கைவிடமாட்டார். எவ்விதமான ஆபத்துக்களின் வழியாக அவர்கள் செல்லவேண்டியதிருந்தாலும் தமது செட்டைகளின் மறைவில் வைத்து பாதுகாக்கிறார். தேவபயத்தோடு வாழ்கிற அவரது பிள்ளைகளுக்கு அவர் அளிக்கும் வாக்குதத்தம்: “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். எனக்கு அடைக்கலமாயிருக்கிற உன்னதமான கர்த்தரை உனக்குத் தாபரமாகக் கொண்டாய். ஆகையால் பொல்லாப்பு உனக்கு நேரிடாது, வாதை உன் கூடாரத்தை அணுகாது” (சங்-91:4,9-10).
கர்த்தருக்குப் பயப்படுகிறவர்கள் அவரது கிருபையில் வளர்ந்து பெருகிறார்கள்.
நாம் அவரது கிருபையைப் பெற்ற ஜனங்கள். அவரது கிருபையை சுதந்தரிக்க நாம் எவ்வளவேனும் தகுதியற்றவர்கள். அவருடைய பரிபூரணத்தினால் நாம் எல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம் என்று யோவான் கூறுகிறார் (1:16).
இவ்வளவு விலையேறப்பட்ட கிருபையை ஈவாக பெற்றவர்கள் அதிலே நிலைத்திராமல் அதை இழந்து போனவர்கள் உண்டு. ஆகையினால்தான், “ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்து போகாதபடிக்கும்… எச்சரிக்கையாயிருங்கள்” (எபி.12:15,16) என்று எபிரெயர் ஆக்கியோன் எழுதுகிறார். கர்த்தருக்குப் பயப்படும் பயம் நம்மை விட்டு அகலும்போது அவரது கிருபையையும் நாம் இழந்துபோகிறவர்களாயிருக்கிறோம். மேலும் அவர், “ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே” (எபி.12:28,29) என்று எச்சரித்து அந்த அதிகாரத்தை முடிக்கிறார்.
கிருபையினால் நாம் பெற்ற பரலோக சிலாக்கியங்களை நாம் இழந்துபோகாதபடிக்கு நாம் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தோடும் பக்தியோடும் வாழவேண்டியது அவசியமாயிருக்கிறது. கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள் மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது (சங்.103:17).
கர்த்தருக்கு பயப்படுகிறவர்கள் பரலோக ராஜ்யத்தில் காணப்படுகிறார்கள்.
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். … அவர்கள்: அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். … மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது (வெளி.19:1-5). இவ்வுலக வாழ்க்கையில் கர்த்தருக்குப் பயந்து அவர் வழியில் நடந்த சிறியோரும் பெரியோரும் பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டத்தில் இடம் பெறுவார்கள். அவர்கள் அல்லேலூயா என்று சொல்லி ஆர்ப்பரிப்பார்கள். இந்த பாக்கியத்தைப் பெற நாம் முன்வருவோமா? ஆண்டவர் இன்று நம்மை அழைக்கிறார்.
பிள்ளைகளே, வந்து எனக்குச் செவிகொடுங்கள்; கர்த்தருக்குப் பயப்படுதலை உங்களுக்குப் போதிப்பேன் (சங்.34:11).