Rev.நாட் க்ராபோடு
(செப்டம்பர்-அக்டோபர் 2021)

…, ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலிப்பியர் 3:13.14).


(கடந்த இதழின் தொடர்ச்சி)

பரம அழைப்பின் பந்தயப் பொருளை அடைவதற்கு ஒரு விசுவாசியினிடத்தில் காணப்படவேண்டிய கீழ்க்கண்ட பண்புகளில் முதல் நான்கை கடந்த இதழில் பார்த்தோம். தொடர்ந்து மற்றவைகளை இவ்விதழில் தியானிப்போம்.

1. ஆசையாய் ஓட்டத்தைத் தொடர வேண்டும் (பிலி.3:12).

2. ஒரேயொரு காரியத்தில் மாத்திரம் நோக்கமாக இருக்கவேண்டும் (பிலி.3:13).

3. பின்னானவைகளை மறந்து முன்னானவைகளை நாடிச் செல்லவேண்டும் (பிலி.3:13).

4. பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடர வேண்டும் (பிலி.3:14).

5. முற்றிலும் தேறினவர்களாய் மாறவேண்டும் (பிலி. 3:15-16).

6. நல்ல முன்மாதிரியானவர்களைப் பின்பற்ற வேண்டும் (பிலி.3:17).

7. சிலுவைக்குப் பகைஞர்களாக இருக்கக் கூடாது (பிலி.3:18).

8. இவ்வுலகில் வாழ்ந்தாலும் பரலோகவாசிகளாக வாழவேண்டும் (பிலி.3:19-20).

5. முற்றிலும் தேறினவர்களாய் மாறவேண்டும்.

பிலி 3: 15 இவ்வாறு கூறுகிறது: ஆகையால், நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாயிருக்கக்கடவோம்; எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார்,

கிருபையினால், இலவசமாய் நாம் இரட்சிப்பைப் பெற்றிருக்கிறோம் என்றும், நாம் முற்றிலும் தேறினவர்களாக மாற முன்னோக்கி ஓடவேண் டும் என்றும் நாம் நன்கு அறிந்திருக்கிறோம். எனவே, அநேகர் முற்றிலும் தேறினவர்களாய் மாறி இருப்பதுபோல, நாமும் கிறிஸ்துவைப்போல் மாறுவதற்கு பொறுமையோடே ஓடக்கடவோம். சிலர் முற்றிலும் தேறினவர்களாக மாறிவிட்டார்கள் என்று பவுல் கூறுகிறாரா? அவ்வாறு கூறவில்லை. முதிர்ச்சி அடைந்தார்கள் என்பதே இதை விட ஓர் சிறந்த மொழிபெயர்ப்பாக இருக்கும். குழந்தையொன்று சரீரப்பிரகாரமாக வளர்ந்து முதுமையடைவதற்கு இதை ஒப்பிடலாம். மேலும், இந்த வளர்ச்சியை வாழைப்பழம் பழுப்பதற்கும் ஒப்பிடலாம்: வாழைக்காய் பழமாவதற்கு முன் மூன்று நிலையைக் கடக்கிறது. முதல் நிலையில் அது பச்சை நிறக்காயாக இருக்கும்பொழுது, அது உண்பதற்கு உகந்ததாக இருக்காது. அடுத்து அது நன்கு பழுத்து மஞ்சள் நிறத்தில் இருக்கும்நிலையில் அது உண்பதற்கு உகந்ததாகக் காணப்படுகிறது. ஆனால், மிகவும் கனிந்து நிறம்மாறி அழுகும் நிலையை அடையும்பொழுது, அதைச் சுற்றி ஈ, கொசுக்கள் மொய்க்கும் நிலையை அடைந்துவிடும்.

எனவே, உண்ணுவதற்கு உகந்த நிலையில் வாழைப்பழம் பழுத்த நிலையில் இருப்பது போன்றதுதான் நாம் முதிர்ச்சி அடைதல் என்பதாகும். எனவே நம்மில் தேறினவர்கள் யாவரும் – நமது கிறிஸ்தவ வாழ்க்கையில் கிறிஸ்துவுக்குள் ஒரே சீராய் நடந்துகொண்டு ஒரே சிந்தையாயிருக்கக் கடவோம். எந்த காரியத்திலாவது நீங்கள் வேறேயாயிருந்தால், அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார் (வச.15). NLT வேதாகம மொழி பெயர்ப்பு: ஏதாவது ஒரு காரியத்தில் உங்களுக்கு முரண்பாடு உண்டானால், தேவன் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார் என்று கூறுகிறது. விசுவாசிகளின் உள்ளத்தில் பரிசுத்த ஆவியானவர் வாசம் பண்ணுகிறார். அவர் சத்தியம் இன்னதென்று உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஜெபத்திலும், வேதவாசிப்பிலும், தேவனுக்குகந்த ஆலோசனையிலும் நீங்கள் தரித்திருக்கும்பொழுது, உங்கள் கண்கள், இருதயம், மனம் அனைத்தும் சத்தியத்தை அறிந்துகொள்ளும். இவ்வாறு சத்தியத்தை தேவன் நமக்கு வெளிப்படுத்தும் பொழுது வசனத்தைக் கேட்டு அதன்படி நடக்க வாஞ்சிப்போம் .

6. நல்ல முன்மாதிரியானவர்களை நாம் பின்பற்ற வேண்டும்.

ஆகிலும், நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்து கொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக (பிலி.3: 16) என்று பவுல் தொடர்ந்து எழுதுகிறார்.

ஆகிலும் என்கிற பதம் வேறுவிதமான எண்ணமுடையவர்களுக்கு எதிர்மறையான நோக்கமாக இருக்கலாம். அது மற்றுமோர் காரியமாகவும் இருக்கலாம். அது எப்படியாக இருந்தாலும் நமக்கு முன் நல்ல ஓட்டத்தை ஓடியவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகளையே விசுவாசிகளாகிய நாம் பின்பற்றி ஓடவேண்டும். ஓட்டப்பந்தயத்தில் உங்களுக்கு நியமித்த ஓடுதளத்திலே நிலைத்து ஓடவேண்டும் என்ற கூற்று நமது ஓட்டப்பந்தயத்திற்கு ஓர் மாபெரும் உவமையே ஆகும். நீங்கள் உலகப்பிரகாரமாக வேரூன்றிய இடத்திலிருந்து, வேரோடு பிடுங்கி எடுத்து உங்களை ஓட்டப் பந்தயசாலைக்குள் கொண்டுவந்து நீங்கள் ஓடவேண்டிய ஓடு தளத்தில் ஓட வைத்திருக்கிறார். இது தேவன் கொடுத்த மாபெரும் ஈவு. எனவே உங்கள் ஓடுதளத்திலேயே ஓடுங்கள்.

சகோதரரே, நீங்கள் என்னோடேகூடப் பின் பற்றுகிறவர்களாகி, நாங்கள் உங்களுக்கு வழி காட்டுகிறபடி நடக்கிறவர்களை மாதிரியாக நோக்குங்கள் (பிலி.3:17). பவுல் மீண்டுமாக மீண்டுமாக அன்பொழுகும் சொல்லான சகோதரரே என்ற பதத்தை இங்கு பயன்படுத்துகிறார்.

இந்த அன்பொழுகும் சொல்லானது அவர்கள் செவியை கவனத்துடன் ஈர்த்து, நேரடியாக அவர்களுடன் பேசவைக்கிறது. என்னை மாதிரியாகப் பின்பற்றுங்கள் என்று அவர் கூறுவது அவரைப் பார்த்து பொறாமைப்படவோ அல்லது அவரைப் பார்த்து வியப்படைவதற்காகவோ அல்ல. அவர் தன்னைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளவும் இல்லை. அவர் தான் ஓர் பாவி என்பதை நன்கு அறிந்திருந்தார். பவுல், தீமோத்தேயுக்கு எழுதின நிருபத்தில் தன்னை பாவிகளில் பிரதான பாவி (1தீமோத்.1:15) என்று குறிப்பிடுகிறார். ஆனாலும், பவுல் இலக்கை நோக்கி தொடர்ந்து ஓடினார். இயேசுவின் மீது வைத்துள்ள தம் அன்பினால், தேவனுக்குப் பிரியமாகத் தான் வாழவேண்டும் என்ற வாஞ்சையில் தேவகிருபையைச் சார்ந்து வாழ்ந்தார். எப்பொழுதும் கிறிஸ்துவையே முன் மாதிரியாகக் கொண்டு அவர் வாழ்ந்தாலும், அவர் பாவத்தோடு போராடிக் கொண்டிருந்ததால், அது தன்னை சில சமயங்களில் சோர்வுறச் செய்கிறது என்றும் கூறினார். அப்படிப்பட்ட நிலையில்தான், “நீங்கள் என்னோடே கூடப் பின்பற்றுகிறவர்களாகி என்னைப் போலாகுங்கள்” என்று கூறுகிறார்.

பவுல் தன்னைப் பின்பற்றி, அவ்வழியாய் நடப்பவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி வாழவேண்டும் என்று கூறுகிறார். இவ்வாறு பின்பற்றுவது ஆவிக்குரிய விசுவாசிகளின் பண்புகளில் ஒன்றாகக் காணப்படுகிறது.

ஆவிக்குரிய வாழ்க்கையில் நன்கு தேறினவர்களைத் தேடிக் கண்டுபிடித்து. அவர்களைப் போல வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகிறார். பின்பற்றுங்கள் – நாம் யாரைப் பின்பற்ற வேண்டும் என்ற பகுத்தறியும் தன்மை நமக்குத் தேவை. அவர்கள் பேச்சில் காணப்படும் நேர்மைத்தன்மை அவர்கள் செயல்களில் காணப்படுகிறதா என்பதை உற்று நோக்க வேண்டும். சிலர் ஆட்டுத் தோல்களைப் போர்த்துக் கொண்ட ஓநாய்களைப் போலிருப்பார்கள். எனவே பவுல் அப்போஸ்தலன், தீமோத்தேயு, எப்பாப்பி ரோதீத்து போன்று ஊழியஞ்செய்கிற இன்றைய ஊழியர்களை நன்கு ஆராய்ந்து, கண்டுபிடித்து அவர்களைப்போல் வாழ்வது மிக அவசியம்.

எனவே இன்றைய கிறிஸ்தவர்களாகிய நாம் வேதத்தில் காணப்படும் உத்தமமும், உண்மையுமான நம் முன்னோர்களில் ஒருவரைப் போல் வாழ்ந்தால், நம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக வாழுவோம். பவுல், “தான் முற்றிலும் தேறினவன் அல்ல” என்று கூறுவதை மனதில் கொள்ளுங்கள். முற்றிலும் தேறினவர்களை தேவன் பயன்படுத்துபவரல்ல, தேவனையும், அவர் பலத்தையும் சார்ந்து வாழும் ஆவிக்குரிய மக்கள் ஆர்வத்துடன் ஊழியஞ் செய்ய முன்வர வேண்டும் என்றுதான் தேவன் விரும்புகிறார். எனவேதான் என் நண்பரும், போதகருமாக இருப்பவர் ஜெபிக்கிறவர்களாகவும், தேவனால் பயன்படுத்தக் கூடியவர்களாக வாழவேண்டும் என்று என்னையும், தன் சபை மக்களையும் சவால்விட்டு அழைக்கிறார். இவ்வாறு சாவல் விட்டு ஊழியத்தில் பங்கு பெற அழைப்பதும் நாம் நடக்கவேண்டிய வழியைக் காட்டும் ஓர் வழி நடத்துதலாக இருக்கலாம்.

7. சிலுவைக்குப் பகைஞர்களாக நாம் இருக்கக்கூடாது.

ஏனெனில், அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன். இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு, அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் (பிலி.3:18,19).

பவுல் பிலிப்பியரின் கவனத்தையும், நமது கவனத்தையும் இவ்வாறு தம் வசமாக ஈர்க்கிறார். ஏனெனில், இது சந்தோஷத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நிருபமாக இருந்தாலும், இப்பகுதியைக் கண்ணீரோடு எழுதுகிறார். அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள் என்பது ஓர் தனிப்பட்ட நிகழ்வு அல்ல. பெரும்பான்மையான மக்கள் “வேறுவிதமாக நடப்பதில்” மிகவும் தீவிரம் காட்டுகிறார்கள் என்பதையே இது குறிக்கிறது. பிலிப்பிய மக்களிடம், இப்படிப்பட்ட மக்களைப் பற்றி மீண்டும் மீண்டும் கூறுவது, அவரைக் கண்ணீர் சிந்தவைக்கிறது; இவ்வாறு கண்ணீர் விடுகிறேன் என்று அவர் கூறுவது ஏதோ ஓரிரு சொட்டுக் கண்ணீர் விடுவதைக் குறிப்பிடவில்லை. அது மனவேதனையுடன் கண்ணீர்விட்டு கதறிக் கதறி புலம்பி அழுவதைக் குறிக்கிறது.

பிலிப்பி சபையில் உள்ள ஒரு தரப்பினர் ஏன் பவுலுக்கு மிகுந்த துக்கத்தை ஏற்படுத்தினார்கள்? ஏனென்றால், அவர்கள் சிலுவைக்குப் பகைஞர்களாக இருந்தார்கள். இவர்கள் எவ்விதத்தில் பகைஞர்களாக இருந்தார்கள் என்று பல வேத ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை நான் வாசித்துப் பார்த்தேன். அவர்கள் கிறிஸ்துவை மாத்திரம் அறிந்திருந்தார்கள். ஆனால், அவர்கள் பேச்சுக்கும் செயலுக்கும் ஒரு சிறிதும் சம்பந்தமில்லாதவர்களாய் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த இழிவான செயல்தான் பவுலை மிகவும் துக்கமடையச் செய்தது. இதனால்தான் அவர்களைச் சிலுவைக்குப் பகைஞர்கள், அவர்கள் தேவன் வயிறு, இலச்சை, மற்றும் அழிவு போன்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்த வேண்டியதாயிருந்தது.

திருச்சபையில் இவ்வாறு வாழ்ந்த மக்களை மூன்று தரப்பினராக பிரிக்கலாம் என்று வேத ஆராய்ச்சி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

முதல் தரப்பினர் பிலிப்பியர் 2:3லும், கலாத்தியர் நிருபத்திலும் குறிப்பிடப்படும் மக்கள். இவர்கள் யூத சமயக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பவர்கள். இப்படிப்பட்டவர்களைப் பவுல் ஏற்கனவே கண்ணியக் குறைவான வார்த்தைகளால் கடிந்து கொண்டிருக்கிறார்,

இரண்டாவது தரப்பினர் தாராளக் கொள்கை உடையவர்கள் (அன்டி நாமினல்ஸ்). சபையின் சட்டதிட்டங்களுக்குள் கட்டுப்படாதவர்களாய், பாவஞ் செய்வதில் மிகவும் தீவிர முற்போக்காளர்களாக இருத்தார்கள். ஒருமுறை நாம் இரட்சிக்கப்பட்ட பின் பரிசுத்தமாக வாழவேண்டும் என்பது ஓர் கட்டாயமான காரியம் அல்ல, விடுதலையான வாழ்க்கை வாழலாம். பாவத்தில் வாழ்ந்தாலும் அது மன்னிக்கப்படும், பாவம் பெருகிற இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகும் (ரோ.5:20) என்ற மனப்பான்மை உடையவர்களாக வாழ்ந்தார்கள்.

மூன்றாவது தரப்பினர் அவிசுவாசிகள். சில சமயங்களில் கிறிஸ்துவை அறிந்துகொள்ள வாஞ்சிப்பார்கள், ஆனால், தங்கள் விசுவாசத்தில் நிலைத்திருக்க முடியாமல் விசுவாசத்தைவிட்டு விலகிச் சென்று விடுவார்கள்.

இப்படிப்பட்டவர்களை சிலுவைக்குப் பகைஞர்கள் என்றும் அவர்களின் முடிவு அழிவு, அவர்கள் தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்கள் இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள் என்றும், அவர்களுடைய முடிவு அழிவு என்றும் பவுல் அடிக்கடி கூறுகிறார். இது அவர்களுடைய அவிசுவாசத்தை வெளிப்படுத்துகிறது. இப்படிப்பட்ட சரீரப் பிரகாரமான, உலகப்பிரகாரமான அழிவைப்பற்றிய காரியங்கள் சிலவற்றை வேதத்தில் பல இடங்களில் வாசிக்கிறோம். இது சரீரப்பிரகாரமான அழிவைப்பற்றி மாத்திரமோ அல்லது இருவிதமான அழிவைப் பற்றியும் குறிக்கலாம். அவர்கள் தேவன் வயிறு அல்லது இலச்சை என்று குறிப்பிடும் பொழுது, யூதசமயக் கோட்பாடுகளை பின்பற்றுபவர்களை ஆதரிக்கும் வேத ஆராய்ச்சியாளர்களைப் பற்றியும் குறிப்பிடுகிறார். இவர்கள் மோசே கட்டளையிட்டுள்ள உணவு சம்பந்தமான கட்டளையை ஏற்று, அதற்கு உட்பட்டு நடக்கிறார்கள், அதனால் அவர்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள், ஆனால், புதிய ஏற்பாட்டிற்கு இது முரண்பட்டுக் காணப்படுவதால் அவர்கள் தேவன் வயிறு என்று பவுல் கூறுகிறார்.

தாராளக் கொள்கைக்காரர்களையும் ஒரு தரப்பினர் ஆதரிக்கின்றனர். ஆனால், அவர்களது ஆசை இச்சையெல்லாம் உலகத்தையே சார்ந்திருக்கும்: காமவிகார இச்சை, பொறாமை, பெருந்தீனிக்காரர்களாக உலக ஆசைகளில் சிக்குண்டு வாழ்வார்கள். இவற்றை செய்வதற்கு தங்களுக்கு உரிமை உண்டு என்று கூறுவதுடன் அதைப்பற்றி பெருமை பாராட்டுபவர்களாகவும் காணப்படுவார்கள்.

இறுதியாக, இந்தப் பிரச்சனைகள் அனைத்திற்கும் மூலகாரணமாக இருப்பது எது என்று பவுல் கண்டுகொண்டார். அவர்கள் எண்ணங்கள், சிந்தனைகள், நோக்கங்கள் அனைத்தும் பூமிக்குரியவைகளையே மையமாகக் கொண்டிருக்கும், சமயத்துக்கடுத்த காரியங்களாக இருந்தாலும் பாலியல் இச்சைகளுக்கு அடுத்த காரியங்களாக இருந்தாலும் அவர்கள் எண்ணங்கள், நோக்கங்கள் எல்லாம் துர்கிரியைகளையே மையமாகக் கொண்டிருப்பதால் அதிலே மூழ்கிப்போவார்கள், ஆனாலும் தங்கள் செயலில் பெருமைப்பட்டுக் கொண்டார்கள். அதன் விளைவு? நித்திய அழிவு.

இவ்வாறு நியாயப் பிரமாணங்களையே முதன்மையாகக் கொள்பவர்கள், தம் சுய இச்சைகளின் படி நடப்பவர்கள், தங்கள் விசுவாசத்தை இழந்தவர்கள் போன்ற மூன்று தரப்பினரைத்தான் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர்கள் என்று பவுல் குறிப்பிடுகிறார்.

இரட்சிப்பின் வேலையை இயேசுகிறிஸ்து சிலுவையில் முடித்தநிலையில், இரட்சிப்படைவதற்கு தங்களின் பங்கும் அவசியம் என்று கருதுபவர்கள் சுவிசேஷப் புரட்டர்கள். பாவச்செயல்களை ஊக்குவித்து அதைத் தாராளமாய் செய்பவர்கள் சுவிசேஷப் புரட்டர்கள். இவ்வித தாராளக் கொள்கைகளை மையமாகக் கொண்டவர்களை பவுல் கடுமையாகக் தாக்குகிறார்.

ஆகையால் என்ன சொல்லுவோம்? கிருபை பெருகும்படிக்குப் பாவத்திலே நிலைநிற்கலாம் என்று சொல்லுவோமா? கூடாதே. பாவத்திற்கு மரித்த நாம் இனி அதிலே எப்படிப் பிழைப்போம்? (ரோமர் 6:1,2).

கிருபையைக் காரணங்காட்டி பாவத்தில் மூழ்கிக் கிடப்பவர்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது என்று பவுல் ஆணித்தரமாகக் கூறுகிறார். சுவிசேஷத்திற்கு முரண்பாடாக வாழ்பவர்களும், கள்ள உபதேசங்களினால் வழிதவறிப்போனவர்களும் அழுது புலம்புவார்கள்.

8. இவ்வுலகில் வாழ்ந்தாலும் நாம் பரலோக வாசிகளாக வாழ வேண்டும்.

பிலிப்பியர் 3: 20 – 21 வசனங்கள் கூறுவதை வாசிப்போம். “நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.”

பிலிப்பிப்பட்டணத்து குடிமக்கள் வெளிநாட்டுக் குடியுரிமையைப்பற்றி நன்கு அறிந்திருந்தார்கள். அவர்கள் மக்கெதோனியாவில் வசித்து வந்தாலும், அவர்கள் ரோமக்குடியிருப்பைச் சேர்ந்தவர்கள். அதாவது ரோமைவிட்டு வேற்று இடத்தில் ரோமப் பிரஜைகளாக வாழ்ந்து வந்தனர். ரோமச் சட்ட திட்டங்களையேப் பின்பற்றி வந்தனர். அவர் களை பரலோக வாசிகள் என்று பவுல் கூறுகிறார்.

நீங்கள் சரீரப்பிரகாரமாக எங்கு வாழ்ந்து, பணிபுரிந்து, குடும்பவாழ்க்கை நடத்தினாலும், நீங்கள் பரலோகவாசிகள். இன்றோ, நாளையோ, அல்லது எதிர்காலத்திலோ எங்கு வாழ்ந்தாலும் – உங்கள் குடியிருப்பு பரலோகத்தில் இருக்கிறது. இதுவே ஆவிக்குரிய மக்களிடம் இறுதியாகக் காணப்பட வேண்டிய பண்பாகும் – அவர்கள் பரலோகவாசிகளாக வாழ்கிறார்கள்.

பேதுரு அப்போஸ்தலன் கூறுவதுபோல விசுவாசிகளாகிய நாம் இவ்வுலகில் வேற்றுகிரகவாசிகளாகவே வாழ்கிறோம். நாம் இவ்வுலகத்தின் வழியாகக் கடந்துபோகும் யாத்ரீகர்கள், அவ்வளவுதான். ஆனால், நாம் இவ்வுலகில் வாழும்பொழுது, கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக (தூதுவர்களாக) வாழ வேண்டும். ஸ்தானாபதிகள் ஒருவருடைய பிரதிநிதியாக செயல்படுகிறவர்கள். கிறிஸ்துவின் ஸ்தானாபதிகளாக நீங்கள் செயல்படும்பொழுது நீங்கள் மிகவும் தாழ்மையாகவும், கவனத்துட னும் செயல்படவேண்டும். முற்றிலும் தேறினவர்களாகவும், ஞானத்திலும், நற்பண்புகளிலும் சிறந்து விளங்கவேண்டும். கிறிஸ்துவுக்கு ஸ்தானாபதிகளாக வாழ்வது என்பது ஒரு லேசான காரியமல்ல. யாருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு வாழவேண்டும் என்பதில் பேதுருவும், பிற அப்போஸ்தலர்களும் மிகவும் தெளிவான எண்ணமுடையவர்களாக இருந்தார்கள். மனுஷனுக்கு அல்ல; தேவனுக்கே நாம் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பரலோகத்தில் பிரஜைகளாக மாறுவதையே இலக்காகக் கொண்ட நாம் நமது ஓட்டத்தில் கிறிஸ்துவையே பிரதிபலிக்கிறவர்களாக ஓடி பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவாகிய நம் இரட்சகர் வருகைக்கு நாம் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம் என்று பவுல் கூறுகிறார். நாமும் இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். இரண்டாயிரம் வருடங்களுக்குமுன் பவுல் இவ்வாறு வாஞ்சையுடன் காத்திருந்தார். இன்றும் கிறிஸ்தவர்களாகிய நாம் அவர் வருகைக்காக ஆவலுடன் காத்துக்கொண்டே இருக்கிறோம். நிச்சயமாகக் கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும் என்பது உறுதி, நிச்சயமாக கிறிஸ்து வருவார்.

கிறிஸ்து மீண்டும் வரும்பொழுது என்ன நடக்கும்? அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார் என்று பவுல் பிலி. 3:21இல் கூறுகிறார். பரலோக வாசிகளாகிய நாம் ஒரு சிறிதும் சிந்தித்துப்பார்க்க இயலாத நித்திய நித்திய காலமான எதிர்காலத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம். நமது அற்பமான, பெலவீனமான உடைந்த, காயப்பட்ட, சோர்வுற்ற, முதுமை நிலையை அடைந்த சாவுக்குள்ளான சரீரத்தை முற்றிலும் புதிதாக்குவார். கிறிஸ்துவின் மகிமையின் சரீரத்துக்கு ஒப்பான சரீரமாக நம் சரீரம் மாற்றமடையும். இறுதியாக, பவுல் எதற்காக ஓடினாரோ அதைப் பெற்றுக்கொள்வார், அதை அடைவார். இயேசுகிறிஸ்துவின் வல்லமையினாலும், அவர் நிறைவேற்றி முடித்த செயலினாலும் மேற் கூறிய அனைத்தையும் கிறிஸ்துவினிடமிருந்து பெற்றுக்கொள்வார்.

இதைத்தான் கிறிஸ்து எல்லாவற்றையும் தனக்குள் கீழ்படுத்துவார் என்று பவுல் கூறுகிறார். அவர் எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி அவரவர் தரத்திற்கு ஏற்ற அந்தஸ்த்தைக் கொடுப்பார். இவ்வாறு எல்லாவற்றையும் சீர்ப்படுத்தி ஸ்திரப்படுத்துவார்.

பவுல் ஆவிக்குள்ளான மனிதன் என்பது நாம் யாவரும் அறிந்ததே. தேவன் எப்படிப் பார்க்கிறாரோ, அவ்வண்ணமாகவே பார்க்க பவுல் கற்றுக் கொண்டார், ஏனெனில், கிறிஸ்துவையே முற்றிலும் சார்ந்து, அவரையே பற்றிக்கொண்டார். கிறிஸ்துவின்றி தான் ஒன்றுமில்லை என்றும் தான் அழிவுக்கு வைக்கப்பட்டவன் என்பதையும் முற்றிலும் அறிந்திருந்தார். கிறிஸ்துவே தன்னுடைய நம்பிக்கைக்கும், மகிழ்ச்சிக்கும் மூல காரணர் என்பதை உணர்ந்திருந்தார். இதுவே அவரை அனுதினமும் ஓடும் கிறிஸ்தவ ஓட்டத்தை வெற்றியுடன் ஓடிமுடிக்க உற்சாகப்படுத்தியது. இவ்வாறு அவர் ஓடியது இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்காக ஓடும் ஒட்டமல்ல. அந்த இரட்சிப்பு அவருக்கே உரித்தானது என்று ஏற்கனவே கையெழுத்திடப் பட்டு முத்திரிக்கப்பட்டு அவர் பெற்றுக்கொண்ட ஒன்றாகும்.

பின் எதற்காக ஓடினார்? அவர் பரிசைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று ஓடினார். மேலும் கிறிஸ்துவைப்போல தானும் மகிமைப்பட வேண்டுமென்றும், முற்றிலும் தேறினவனாக மாறி பூரணப்படவேண்டும் என்றும் விரும்பி ஓடினார்.

“பரலோக பாக்கியத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு வாழும் சில கிறிஸ்தவர்கள், பூமிக்குரியவர்களாகக் காணப்படமாட்டார்கள்” என்று D.L.மூடி கூறியதாக நம்பப்படுகிறது. அநேக காரியங்களில் D.L.மூடி கூறிய கருத்துக்களைக் கனப்படுத்தி அவற்றை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், மேற்கூறிய கருத்தை நான் ஒரு சிறிதேனும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று மிகத் தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன். ஆனால் உண்மை என்னவென்றால், சில கிறிஸ்தவர்கள் பூமிக்கடுத்தவைகளையே நோக்குகிறவர்களாகவும், பரமராஜ்யத்திற்கு தகுதியற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். தேவனுடைய சிந்தையை உடையவர்கள், தேவனைப்போல பரலோக சிந்தை உடையவர்களாகவே காணப்படுவர். மேலான சிந்தை உடையவர்களாக, உபத்திரவமோ, சோதனையோ, கடினமான காரியமோ, வியாதியோ எதுவாக இருந்தாலும், “இவை அனைத்தும் பரலோகத்தில் பெற்றனுபவிக்கப் போகிற நித்திய நித்தியமான ஆனந்த பாக்கியத்தின் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல” என்ற சிந்தையுடன் வாழ்வார்கள். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை என்று வெளிப்படுத்தல் 21:4இல் வாசிக்கிறோம். ஒருநாள் வருகிறது, அப்பொழுது நமது சஞ்சலமும், தவிப்பும் ஓடிப்போம். நம்முடைய சரீரம் மகிமையை அடையும். நித்திய நித்திய காலமாய் கிறிஸ்துவுடன் சேர்ந்து அரசாளுவோம்.

எனக்கு அருமையானவர்களே, நாம் ஆவிக்குரிய கண்ணோட்டமுள்ளவர்களாக இருந்தால் நம் நோக்கமும் சரியானதாக இருக்கும். எனவே நமக்குள்ளான யாவற்றோடும், அந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுவோம்.

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan


உங்களுக்குத் தெரியுமா?

தேவனிடத்தில் நாம் மன்னிப்பு பெற்றுக்கொண்டது மெய்யானால் மற்றவர்களை மன்னிப்பது நமக்கு கடினமாக இருக்காது.