Dr.எம்.எஸ்.வசந்தகுமார்
(செப்டம்பர்-அக்டோபர் 2021)
இரண்டாம் பகுதி: கொரோனா தடுப்பு ஊசிகள் அவிசுவாசத்தின் அடையாளமா?
கொரோனா தடுப்பு ஊசிகள் அந்திகிறிஸ்துவின் அடையாளம் அல்ல என்பதை அறிந்துள்ள கிறிஸ்தவர்களிலும் பலர் இதைப்பற்றிய தடுமாற்றத்துடனேயே இருக்கின்றனர். ஏனெனில், இவர்கள் இதை அவிசுவாசத்தின் அடையாளமாகக் கருதுகின்றனர். அதாவது, தேவனே நம்முடைய பரம வைத்தியராக இருப்பதினால், மருந்துகள் அல்ல, தேவனே சுகம் கொடுப்பவர் என்பதினால், கொரோனா தொற்றுவதைத் தடுப்பதற்கு ஊசிகள் போடுவது அவிசுவாசத்தின் அடையாளமாக இருப்பதாக இவர்கள் கருதுகின்றனர். மேலும், கொரோனாவுக்கு மாத்திரமல்ல, எந்த ஒரு வியாதிக்கும் மருந்துகள் எடுப்பதையும் மருத்துவரின் உதவியை நாடுவதையும் இவர்கள் அவிசுவாசத்தின் அறிகுறியாகவே பார்க்கின்றனர். ஆனாலும், இவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எல்லாவிதமான தடுப்பு ஊசிகளையும் போட்டுள்ளனர். மேலும், தங்களுக்குப் பார்வைக் குறைவு ஏற்பட்டால் மூக்குக் கண்ணாடிகளுடன் காணப்படுகின்றனர். இதனால், தேவன் நமக்கு எவ்வாறு சுகம் கொடுக்கின்றார் என்பதையும், தடுப்பு ஊசிகள் போடுவது அல்லது மருந்துகள் எடுப்பது அவிசுவாசத்தின் அடையாளமா? என்பதையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டியது அவசியமாய் உள்ளது.
தேவனே நம்முடைய பரிகாரியாக (வைத்தியராக) இருந்து நமக்கு சுகம் கொடுக்கின்ற போதிலும் (யாத்.15:26), மனிதர்களுக்கு அவர் சுகம் கொடுக்கும் முறைகள் வித்தியாசமாக இருப்பதை வேதாகமம் அறியத்தருகின்றது. ஏனெனில், தேவன் சில நேரங்களில் உடனடியாகவும் முழுமையாகவும் சுகம் கொடுக்கின்ற போதிலும், சில நேரங்களில் படிப்படியாக சுகம் கொடுப்பவராகவும் இருக்கின்றார். இயேசுகிறிஸ்துவும் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உடனடியாகவும் முழுமையாகவும் வியாதியஸ்தரை சுகப்படுத்திய போதிலும், சில நேரங்களில் படிப்படியாக சுகம் கொடுக்கிறவராக இருந்தார். இதனால்தான், பெத்சாயிதா என்னும் பட்டணத்தில் ஒரு குருடனை இயேசுகிறிஸ்து சுகப்படுத்தியபோது, “குருடனுடைய கையைப் பிடித்து, அவனைக் கிராமத்துக்கு வெளியே அழைத்துக்கொண்டுபோய், அவன் கண்களில் உமிழ்ந்து, அவன்மேல் கைகளை வைத்து: எதையாகிலும் காண்கிறாயா என்று கேட்டார். அவன் ஏறிட்டுப் பார்த்து: நடக்கிற மனுஷரை மரங்களைப்போலக் காண்கிறேன் என்றான். பின்பு அவர் மறுபடியும் அவன் கண்களின்மேல் கைகளை வைத்து, அவனை ஏறிட்டுப் பார்க்கும்படி செய்தார்; அப்பொழுது அவன் சொஸ்தமடைந்து, யாவரையும் தெளிவாய்க் கண்டான்” (மாற்.8:22-25). இச்சம்பவத்தில் இயேசுகிறிஸ்து உடனடியாக முழுமையான சுகத்தைக் கொடுக்காமல், இரண்டு கட்டங்களில் சுகத்தைக் கொடுக்கின்றார். இதனால்தான், அக்குருடன் சுகம் பெற்றவுடன் ஆரம்பத்தில் தெளிவற்ற நிலையில் மனிதரை மரங்களைப்போல பார்க்கிறவனாக இருந்தான். ஆனால், அதன் பின்னர் தெளிவாகப் பார்க்கக்கூடியவனானான். இதைப்போலவே, தற்காலத்திலும் சில நேரங்களில் தேவன் வியாதியஸ்தரைப் படிப்படியாக சுகப்படுத்துபவராக இருக்கின்றார். மேலும், சில சந்தர்ப்பங்களில் தேவன் தம்முடைய நேரம் வரும்வரை காத்திருந்து சுகப்படுத்துபவராகவும் இருக்கின்றார். இதனால்தான், பிறவியிலிருந்தே சப்பாணியாயிருந்த ஒருவன் அன்றாடம் ஆலயத்தின் அலங்கார வாசலில் பிச்சைக் கேட்டுக்கொண்டிருந்தாலும் (அப்.3:2), பலதடவைகள் அவ்வாசலைக் கடந்துசென்ற இயேசுகிறிஸ்து அவனை சுகப்படுத்தாமல், பிற்காலத்தில் தம்முடைய சீடர்கள் மூலம் அவனை சுகப்படுத்தினார் (அப்.3:3-8).
தேவன் உடனடியாகவும், படிப்படியாகவும், தமது நேரம் வரும்வரை காத்திருந்து மாத்திரமல்ல, மருந்துகள் மூலமாகவும சுகம் கொடுக்கிறவராக இருக்கின்றார். இதனால், தேவன் நமக்கு சுகத்தைக் கொடுப்பதும் நாம் மருந்துகள் எடுப்ப தும் ஒன்றுக்கொன்று முரணான செயல்கள் அல்ல. ஏனெனில், சில நேரங்களில் நேரடியாக நமக்கு சுகத்தைக் கொடுக்கும் தேவன், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் மருந்துகள் மூலமாகவே நமக்கு சுகத்தைக் கொடுக்கின்றார். இதனால்தான், மரிக்கும்நிலையில் இருந்த எசேக்கியாவுக்கு பதினைந்து வருஷங்களைக் கூட்டிக்கொடுத்த தேவன், அவனுடைய சரீரத்திலிருந்த வியாதி சுகமடைவதற்கு அக்காலத்தில் மருந்தாக உபயோகிக்கப்பட்ட “அத்திப்பழ அடையை” உபயோகிக்கும்படி அறிவுறுத்தினார் (2ராஜா.20:1-7). அதாவது, எசேக்கியா சுகமடைவான் என்னும் தேவ செய்தியை அறிவித்த ஏசாயா, “அத்திப்பழத்து அடையைக் கொண்டுவாருங்கள் என்றான்; அதை அவர்கள் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போட்டபோது அவன் பிழைத்தான்” (2ராஜா.20:7, ஏசா.38:21).
ஏனெனில், “அத்திப்பழ அடை” அக்காலத்தில் ஒரு மருந்தாகவே இருந்தது. உண்மையில், இது மிகப் பழங்கால மருந்தாகும். எனவே, தேவனே எசேக்கியாவுக்கு சுகத்தைக் கொடுத்தபோதிலும் (2ராஜா.20:5), அவர் இதை மருந்தின் மூலமே கொடுத்துள்ளார் (2ராஜா.20:7). ஏனெனில், தேவன் மருந்துகளின் மூலமும் தம்மை விசுவாசிப்பவர்களுக்கு சுகம் கொடுக்கிறவராய் இருக்கின்றார். மேலும், வேதாகம காலத்தில் அத்திப்பழ அடை மாத்திரமல்ல, கீலேயாத் மலையில் வளரும் மரங்களிலிருந்து தயாரிக்கப்படும் தைலமும் மிகவும் பிரபலமான மருந்தாக இருந்தது (எரேமி. 8:22).
“பழைய ஏற்பாட்டில் தேவனே மக்களை சுகப்படுத்துகிறவராக இருந்தாலும், அவர் அருளும் சுகம் மருந்துகளின் உபயோகத்தையும் உள்ளடக்கியதாயிருந்தது”. இதனால்தான், எசேக்கியாவுக்கு சுகம் கொடுப்பதற்கு அத்திப்பழ அடையை உபயோகிக்கும்படி அறிவுறுத்திய தேவன், இருவருக்கு இடையில் ஏற்படும் சண்டையில் ஒருவனுக்கு காயம் ஏற்பட்டால், காயப்பட்டவனுக்கு நஷ்ட ஈட்டையும் காயத்தை மருத்துவர் மூலம் குணப்படுத்துவதற்கான செலவையும் காயத்தை ஏற்படுத்தியவன் கொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார் (யாத்.21:18-19). எனினும், இக்கட்டளையில், அவனை நன்றாய்க் குணமாக்குவிக்கக்கடவன்” என்னும் சொற்பிரயோகம், அவனை சுகப்படுத்துவதற்கு அவசியமான காரியங்களை செய்யும்படியான அறிவுறுத்தலாக, அதாவது, அவனுக்கு ஏற்படும் மருத்துவ செலவைக் கொடுக்கும்படியான கட்டளையாகவே உள்ளது.
மேலும், அக்காலத்தில் காயங்களுக்கு மருந்துகள் போட்டு சுகப்படுத்தும் முறை இருந்ததினால் தான், காயப்பட்டவனை நான் சுகப்படுத்துவேன் என்று தேவன் கூறாமல், காயத்தை ஏற்படுத்தியவனிடம்,”அவனைக் குணப்படுத்தும்படி” கட்டளையிட்டுள்ளார். மேலும், தேவனே இவ்வாறு கூறுவதினால், அவர் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த மருத்துவ சிகிச்சைகளை அங்கீகரித்தவராகவே அதன்மூலம் காயத்தைச் சுகப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளார். இதைப் போலவே, ஏசாயா தீர்க்கதரிசியின்மூலம் இஸ்ரவேல் மக்களோடு பேசும்போதும், அவர்களுடைய காயம் “சீழ் பிதுக்கப்படாமலும், கட்டப்படாமலும், எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார் (ஏசா.1:6). உண்மையில், இது இஸ்ரவேலைப்பற்றிய விவரணமாய் இருந்தாலும், இதுவே அக்காலத்தில் காயங்கள் ஆற்றப்படும் முறையாக இருந்தது. மேலும், தேவன் இதை எதிர்ப்பவராக அல்ல, இவ்விதமாகவே காயம் ஆற்றப்படவேண்டும் என்பதை அறிவுறுத்துபவராகப் பேசியுள்ளார். அதாவது, இஸ்ரவேல் எவ்வித மருத்துவ சிகிச்சையும் இல்லாமல் கொடிய புண்களுடன் இருப்பதாகத் தேவன் தெரிவித்துள்ளார். எனவே, நாம் மருந்துகள் உபயோகிப்பதற்கும் மருத்துவ சிகிச்சைகள் செய்வதற்கும் தேவன் எதிரானவர் என்று கூறமுடியாது.
தேவன் மருந்துகள் மூலமும் சுகம் கொடுக்கிறவராய் இருப்பதினால்தான், பழைய ஏற்பாட்டுத் தீர்க்கதரிசிகள் வியாதியஸ்தருக்காக ஜெபிக்கும்போது அக்கால மருத்துவ சிகிச்சை முறைகளையும் செய்துள்ளதை வேதாகமம் அறியத்தருகின்றது. உதாரணத்திற்கு, மரித்துப் போன பிள்ளையை உயிர்ப்பித்த எலிசா, ஆரம்பத்தில் தன்னிடத்தில் இருக்கும் தேவவல்லமையை அடை யாளப்படுத்தும் விதத்தில், தன்னுடைய கோலை அப்பிள்ளையின்மீது வைத்தார். ஆனால் இதில் எவ்வித பலனும் கிடைக்கவில்லை (2இரா.4:29-32). இதனால் அவர் “கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்து, கிட்டேபோய், தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின் மேலும் படும்படியாக அவன் மேல் குப்புறப் படுத்துக்கொண்டான். அப்பொழுது பிள்ளையின் உடல் அனல் கொண்டது. அவன் எழுந்து, அறைவீட்டில் இங்கும் அங்கும் உலாவி, திரும்பக் கிட்டப் போய் அவன்மேல் குப்புறப்படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான் (2ராஜா.4: 32-35). இச்சம்பவத்தில், மரித்துப்போன பிள்ளையின்மீது எலிசா படுத்துக்கொண்டு செய்தவைகள், அக்காலத்தில் இருதயம் நின்றுபோனவர்களுக்கு அதை மறுபடியும் இயங்க வைப்பதற்காகச் செய்யும் மருத்துவ சிகிச்சை முறையாகும். பிள்ளை உயிர்பெறுவதற்காக எலிசா ஜெபித்த போதிலும், அவர் ஜெபத்தோடு அக்கால மருத்துவ சிகிச்சையையும் செய்துள்ளார். இதனால்தான், “எலிசா அவன்மேல் குப்புறப் படுத்தான்; அப்பொழுது அந்தப் பிள்ளை ஏழுதரம் தும்மித் தன் கண்களைத் திறந்தான்” என்று வேதாகமம் கூறுகிறது (2ராஜா.4:35). இதைப்போலவே எலியா தீர்க்கதரிசியும் ஒரு பிள்ளையை உயிர்ப்பித்தார் (1ராஜா.17:17-24). எலியா பிள்ளையின் உயிர் அவனுக்குள் திரும்பிவரும்படி ஜெபித்தது உண்மை என்றாலும், அவர் “அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்த” செயல் முறை அக்கால மருத்துவ சிகிச்சையாகவே உள்ளது. அப்போஸ்தலனாகிய பவுலும் இத்தகைய சிகிச்சையின் மூலம் ஒருவனை சுகப்படுத்தியுள்ளார். இதனால்தான், அவர் “செத்தவன்மீது விழுந்து அவனை அணைத்துக்கொண்டு, அவன் உயிருடனிருப்பதாகத் தெரிவித்தார்” (அப். 20:9-10). எனவே, ஜெபமும் மருத்துவ சிகிச்சையும் இணைந்து செயல்படுவதும் தேவன் மனிதர்களைச் சுகப்படுத்தும் வழிமுறைகளில் ஒன்றாக இருப்பதை வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இச்சம்பவங்கள் அறியத்தருகின்றன.
புதிய ஏற்பாட்டுக்காலத்தில், “உங்களில் ஒருவன் வியாதிப்பட்டால், அவன் சபையின் மூப்பர்களை வரவழைப்பானாக” என்று அறிவுறுத்தும் வேதாகமம், “அவர்கள் கர்த்தருடைய நாமத்தினாலே அவனுக்கு எண்ணெய் பூசி, அவனுக்காக ஜெபம் பண்ணக்கடவர்கள்” என்று கூறுகிறது (யாக்.5:14). இவ்வசனத்தில் “எண்ணெய் பூசும் செயல் முறை” மருத்துவ ரீதியான சிகிச்சையாகவே உள்ளது. ஏனெனில், அக்காலத்தில் உபயோகிக்கப்பட்ட ஒலிவ எண்ணெய் பலதரப்பட்ட வியாதிகளுக்கான மருந்தாக இருந்தது. இதனால்தான், நல்ல சமாரியனைப்பற்றிய உவமையில், காயப்பட்டுக் கிடந்தவனுடைய காயங்களில் எண்ணெய் வார்க்கப்பட்டது (லூக்.10:34). இதைப் போலவே, ஏசாயா 1:6இல் “காயங்கள் எண்ணெயினால் ஆற்றப்படாமலும் இருக்கிறது” என்னும் குறிப்பும், அக்காலத்தில் எண்ணெயே காயங்களுக்கான மருந்தாக இருந்துள்ளதை அறியத் தருகின்றது. மேலும், ஏரோது என்னும் அரசன் வியாதியாய் இருந்தபோது, அவனுக்கு சுகம் கிடைப்பதற்காக அவனை எண்ணெயில் குளிப்பாட்டியதாக யூத வரலாற்றாசிரியர் ஜோசீப்பஸ் குறிப்பிட்டுள்ளார். அக்கால மருத்துவர்கள், பல் வலியிலிருந்து திமிர்வாதம்வரை சகல வியாதிகளுக்கும் எண்ணெயை சிறந்த மருந்தாகக் கருதினார்கள்.
எனவே, எண்ணெய் பூசி ஜெபிக்கும்படியான கட்டளை மருந்துடனான ஜெபமாகவே உள்ளது. சில ஆராய்ச்சியாளர்கள் “எண்ணெய் பூசுவதை” எண்ணெயினால் அபிஷேகிக்கப்படுவதாகக் கருதுகின்றனர். ஆனால், அபிஷேகிக்கப்படுவதற்கு வழக்கமாக உபயோகிக்கப்படும் “கிரீயோ” (chrio) என்னும் கிரேக்கச் சொல்லை யாக்கோபு இவ்வசனத்தில் உபயோகிக்கவில்லை. அவர் குறிப்பிட்டுள்ள “அலெய்ஃபோ” (aleipho) என்னும் கிரேக்கச் சொல், தமிழ் வேதாகமத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள விதமாகப் “பூசுதல்” என்னும் அர்த்தமுடையது. எனவே, எண்ணெயை மருந்தாகப் பூசுவதைப்பற்றியே யாக்கோபு இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால், கிறிஸ்தவர்களாகிய நாம் மருந்துகள் உபயோகிப்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டுள்ள செயல்முறையாகவே உள்ளது.
எண்ணெய் பூசி ஜெபிக்கும்படியான கட்டளையைத் தொடர்ந்து, “விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்” (யாக்.5:15) என்று குறிப்பிடப்பட்டுள்ளதினால், மருந்தாகப் பூசப்படும் எண்ணெய் அல்ல, விசுவாசமுள்ள ஜெபமே வியாதியஸ்தனைக் குணப்படுத்தும் என்றும், இதனால் எண்ணெயின் மருத்துவ உபயோகத்தைப்பற்றி இவ்வசனம் எதுவும் கூறவில்லை என்றும் சிலர் கருதுகின்றனர். இவ்வசனத்தின் படி, விசுவாசமுள்ள ஜெபமே வியாதியஸ்தருக்கு சுகத்தைக் கொடுக்கிறது என்பது உண்மை என்றாலும், இந்த ஜெபம் எண்ணெய் பூசி ஏறெடுக்கப்படும் ஜெபமாகவே உள்ளது. ஏனெனில், நாம் ஏற்கனவே பார்த்தபடி, எண்ணெய் அக்காலத்தில் மருந்தாக உபயோகிக்கப்பட்டதினால், இது மருந்தையும் உபயோகித்து விசுவாசத்துடன் ஏறெடுக்கப்படும் ஜெபமாகவே உள்ளது. உண்மையில், நமக்கு சுகம் கொடுப்பது தேவனே. நாம் மருந்துகளை உபயோகித்தாலும், தேவனாலேயே நமக்கு சுகத்தைக் கொடுக்கமுடியும் என்னும் விசுவாசம் நமக்கிராவிட்டால் நம்முடைய மருந்தும் ஜெபமும் பலனளிக்காது. ஏனெனில், நாம் உபயோகிக்கும் மருந்துகள் மூலம் நமக்கு சுகத்தைக் கொடுப்பது தேவனே. இதனால்தான், மருந்துகள் தயாரிக்கக்கூடிய பலதரப்பட்ட கனிப்பொருட்களையும் தாவரங்களையும் தேவன் சிருஷ்டித்துள்ளார்.
வேதாகம காலத்தில் திராட்ச ரசமும் மருந்தாக உபயோகிக்கப்பட்டது. இதனால்தான், நல்ல சமாரியன் உவமையில் எண்ணெயுடன் சேர்த்து திராட்ச ரசமும் கள்ளர்களினால் தாக்கப்பட்டவனுடைய காயங்களுக்கு வார்க்கப்பட்டது (லூக்.10: 34). ஏனெனில், திராட்ச ரசத்துக்கு கிருமிகளை அழிக்கக்கூடிய ஆற்றல் இருப்பதினால், காயங்கள் ஏற்படும்போது அது புண்ணாக மாறாமல் இருப்பதற்காக காயத்தைக் கழுவுவதற்கு அக்காலத்தில் திராட்ச ரசம் உபயோகிக்கப்பட்டது. மேலும், அக்காலத்தில் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கும் திராட்ச ரசமே உபயோகிக்கப்பட்டது. இதனால்தான், சுத்தமற்ற தண்ணீரைக் குடித்து அடிக்கடி வியாதிப்பட்ட தீமோத்தேயுவுக்குத் “தண்ணீர் மாத்திரம் குடிக்காமல் அதனோடு கொஞ்சம் திராட்ச ரசமும் சேர்த்துக்கொள்ளும்படி” பவுல் அறிவுறுத்தியுள்ளார் (1தீமோ.5:23). சில கிறிஸ்தவர்கள் மதுபானத்திற்கு வேதாகமம் அனுமதி கொடுத்துள்ளது என்னும் தங்களது தவறான கருத்துக்கு ஆதாரமாகத் தீமோத்தேயுவுக்குப் பவுல் கூறிய அறிவுறுத்தலை உபயோகிக்கின்ற போதிலும், இது மதுபானத்திற்கான அனுமதி அல்ல. ஏனெனில், திராட்ச ரசத்தை முழுமையாகத் தவிர்த்து வந்த தீமோத்தேயு, வழக்கமாகத் தண்ணீர் அருந்தும்போது அதற்கு சேர்க்கப்படும் சிறிதளவு திராட்ச ரசத்தையும் தவிர்த்து வந்ததினால், அடிக்கடி வியாதிப்பட்டான். இதனால்தான், “நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்ச ரசமும் கூட்டிக்கொள்” என்று பவுல் அறிவுறுத்தியுள்ளார் (1தீமோ.5:23). தற்காலத்தில் தண்ணீரைச் சுத்திகரிப்பதற்கு குளோரின் உபயோகிக்கப்படுவதுபோல, அக்காலத்தில் திராட்ச ரசம் உபயோகிக்கப்பட்டது. எனவே, திராட்ச ரசத்தைத் தண்ணீரைச் சுத்திகரிக்கும் மருந்தாக உபயோகிக்கும் படியே பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தியதினால், தற்காலத்திலும் சரீரப்பிரகாரமான பலவீனங்களுக்கும் வியாதிகளுக்கும் நாம் மருந்துகளை உபயோகிப்பதில் எவ்வித தவறும் இல்லை. இதனால்தான், “ஜெபத்தின் மூலம் தீமோத்தேயுவின் வியாதியை சுகப்படுத்தாமல், மருந்தை உபயோகிக்கும்படி பவுல் தீமோத்தேயுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.”
கிறிஸ்தவர்களாகிய நாம் மருந்துகள் எடுப்பதற்கும், மருத்துவரின் உதவியை நாடுவதற்கும் வேதாகமம் அனுமதி கொடுத்துள்ளபோதிலும், இதை முழுமையாக ஏற்றுக்கொள்ளாதவர்கள் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் ஆசா என்னும் அரசன் வைத்தியரைத் தேடியது தவறான செயலாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டுவது வழக்கம். ஏனெனில், 2நாளாகமம் 16:12இல், “ஆசா அரசாண்ட முப்பத்தொன்பதாம் வருஷத்திலே தன் கால்களில் வியாதி கண்டு, அவன் நோவு மிகவும் உக்கிரமாயிருந்தது; அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல, பரிகாரிகளையே தேடினான்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஆசா மருத்துவரின் உதவியை நாடியதை அல்ல, அவன் தேவனைத் தேடாதவனாக இருந்துள்ளதையே நாளாகம ஆசிரியர் இவ்வசனத்தில் குற்றமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். இதனால்தான், “அவன் தன் வியாதியிலும் கர்த்தரைத் தேடாமல் பரிகாரிகளையே தேடினான்” என்று நாளாகம ஆசிரியர் கூறுகிறார். அதாவது, “அவன் வைத்தியரை மாத்திரம் தேடியதே நாளாகமப் புத்தக ஆசிரியரால் தவறான செயலாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.” மேலும், “வியாதியிலும்” என்னும் சொல், அவன் வியாதியாயிருந்தபோது மாத்திரமல்ல, அதற்கு முன்பும் தேவனைத் தேடாதவனாக இருந்துள்ளதை அறியத்தருகின்றது. உண்மையில், ஆசா தன்னுடைய ஆட்சியின் ஆரம்பத்தில் தேவனைத் தேடுகிறவனாகவே இருந்தான் (2நாளா.14:2-5). இதனால்தான், எத்தியோப்பியருடன் ஏற்பட்ட யுத்தத்தின்போது, அவன் தேவ உதவியை நாடி வெற்றி பெற்றான் (2நாளா.14:10-12). அதன்பின்பும் முப்பத்தைந்து வருஷங்கள் அவன் தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தான் (2நாளா.15:8-9). ஆனால், 36ஆம் வருஷத்தில், இஸ்ரவேலின் அரசன் பாஷா யூதேயாவைத் தாக்க வந்தபோது, ஆசா தேவனைத் தேடாமல் சீரியா அரசனின் உதவியை நாடினான் (2நாளா.16:1-4).
ஆசாவின் இச்செயலைத் தேவனுடைய தீர்க்க தரிசி கண்டித்தபோது, ஆசா அவனுடைய வார்த்தைகளுக்கு செவிகொடுக்காமல் அவனை சிறையில் அடைத்தான் (2நாளா.16:7-10). இதனால், ஆசாவின் இத்தகைய செயல்களுக்கான தேவ தண்டனையின் எச்சரிப்பாகவே அவனுக்கு வியாதி ஏற்பட்டது என்னும் அர்த்தத்திலேயே நாளாகம ஆசிரியர் அவனுடைய வியாதியைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். இதனால்தான் “அவன் தன் வியாதியிலும் கர்த்தரை அல்ல; பரிகாரிகளையே தேடினான்” என்று நாளாகம ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையில், நாளாகமப் புத்தகம் எழுதப்பட்ட காலத்தில் யூதர்கள் மருந்துகள் உபயோகிப்பதையும் மருத்துவரின் உதவியை நாடுவதையும் தவறான செயல்களாகக் கருதவில்லை. ஏனெனில், மருத்துவர்களும் மருந்துகளும் தேவனுடைய ஈவாகவே மனிதருக்கு அருளப்பட்டுள்ளன என்பதே அக்கால யூதர்களின் நம்பிக்கையாக இருந்தது. புதிய ஏற்பாட்டுக் காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவைத் தங்களுக்கு சுகம் கொடுக்கும் வைத்தியராகக் கருதினாலும், மருத்துவர்களையும் கனப்படுத்துகிறவர்களாகவே இருந்தனர். இதனால்தான், லூக்காவைப் பவுல் “பிரியமான வைத்தியன்” என்று குறிப்பிட்டுள்ளார் (கொலோ.4:14). ஏனெனில், “பிணியாளிக்கு வைத்தியர் தேவை” (மத்.9:12) என்று இயேசு கிறிஸ்துவே தெரிவித்துள்ளார். மேலும், மனிதனுக்கு சரீரசுகத்தைக் கொடுப்பது தேவனே என்பதை உறுதியாக நம்பிய ஆதிசபையினர் மருந்துகள் உபயோகிப்பதற்கு எவ்வித தடையையும் விதித்திருக்கவில்லை. இதனால்தான், ரோம அரசாங்கத்தின் மூலமான உபத்திரவங்கள் கி.பி.4ஆம் நூற்றாண்டில் நிறுத்தப்பட்டவுடன் வைத்தியசாலைகளை ஆரம்பிக்கும் பணிகளில் கிறிஸ்தவ சபை ஈடுபட்டது. எனவே, தேவன் சுகம் கொடுப்பார் என்னும் நம்பிக்கையுடன் மருந்துகள் எடுப்பதில் எவ்வித தவறும் இல்லை. ஏனெனில், தேவன் மருந்துகள் மூலமும் சுகம் கொடுக்கிறவராக இருப்பதினால், அவரை விசுவாசித்தவர்களாக மருந்துகளை உபயோகிக்கும்போது, அவர் மருந்துகள் மூலம் நமக்கு சுகத்தைக் கொடுக்கிறவராக இருக்கின்றார். எனவே, மருந்துகள் எடுப்பது அவிசுவாசத்தின் அடையாளம் அல்ல.
தேவன் மருந்துகள் மூலமும் நமக்கு சுகம் கொடுப்பவராக இருப்பதினால், நோய்கள் வராமலிருப்பதற்குத் தடுப்பூசிகள் போடுவதும் எவ்விதத்திலும் ஒரு தவறான செயல் அல்ல. ஏனெனில், நோய்கள் பரவுவதைத் தடை செய்யும் விதத்தில் பல கட்டளைகளையும் தேவன் வேதாகமத்தில் கொடுத்துள்ளார். உண்மையில், பழைய ஏற்பாட்டிலுள்ள உணவுச் சட்டமும் (லேவி.11, உபா.14), லேவியராகமத்திலுள்ள சுத்திகரிப்பு முறைகளும், மருத்துவத்துறை அதிகமாக வளர்ச்சியடையாத காலத்தில் நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்காகத் தேவன் கொடுத்த அறிவுறுத்தல்களாகவே உள்ளன (லேவி.11-16). இதனால்தான், பழைய ஏற்பாட்டில் புசிக்கக் கூடாதவை என்று தேவனால் அறிவிக்கப்பட்டுள்ள மிருகங்கள் பறவைகள் மீனினங்களின் மாம்சத்தில் மனிதருக்கு நோய்களை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் அதிகமாக இருப்பதைத் தற்காலத்தில் மருத்துவர்கள் கண்டு பிடித்துள்ளனர். ஏனெனில், எகிப்தியருக்கு வந்த எந்தவொரு வியாதியும் இஸ்ரவேல் மக்களுக்கு வராது என்று வாக்களித்த தேவன் (யாத். 15:26), அவர்கள் ஆரோக்கியமாக இருப்பதற்காக அதிக நோய்க் கிருமிகள் உள்ள மிருகங்கள் பறவைகள் மீனினங்களைப் புசிப்பதற்குத் தடை விதித்திருந்தார். எனினும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் இத்தடை நீக்கப்பட்டதினால் (மாற்.7:19, 1தீமோ. 4:3-4, அப்.10:9-17), பழைய ஏற்பாட்டு உணவுச் சட்டம் நோய்த் தடுப்புக்கானதல்ல என்று சிலர் கருதுகின்றனர். ஆனால், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் மருத்துவத் துறையின் வளர்ச்சியும், சமையல் முறைகளின் முன்னேற்றமும் மிருகங்கள் பறவைகளின் இறைச்சியிலுள்ள நோய்க் கிருமிகளை அதிகளவில் அழிக்கக்கூடியதாயிருந்தது. மேலும், புதிய ஏற்பாட்டுக் காலத்தில் யூதர்கள் உணவுச் சட்டத்தைத் தங்களுடைய இனத்தின் மேன்மையைக் குறிக்கும் அடையாளமாக்கி, இச்சட்டத்தைக் கைக்கொள்ளாத புறஜாதி மக்களை அசுத்தமானவர்களாகவும் தீண்டத்தகாதவர்களாகவும் கருதியதினால் புதிய ஏற்பாட்டில் உணவுச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்டது உண்மை என்றாலும், ஆரம்பத்தில் தேவன் இச்சட்டத்தைக் கொடுக்கும்போது மக்களின் சரீர ஆரோக்கியத்தைக் கருத்திற்கொண்டவராகவே, எவைகளைப் புசிக்கலாம் எவைகளைப் புசிக்கக்கூடாது என்பதை அறிவித்திருந்தார்.
பழைய ஏற்பாட்டின் உணவுச் சட்டம் மாத்திரமல்ல, லேவியராகமத்தில் உள்ள சுத்திகரிப்பு சம்பந்தமான கட்டளைகள் அனைத்தும், மனிதனுடைய சரீர ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு கொடுக்கப்பட்ட சுகாதாரக் கட்டளைகளாகவே உள்ளன. இதனால்தான், பிள்ளைப் பேற்றின் பின்பான தாயின் சுத்திகரிப்பு முறைகளும் (லேவி.12), சரீரத்தில் ஏற்படும் வியாதிகளின் போது, குறிப்பாக குஷ்டரோகம் போன்ற தோல்வியாதிகள் ஏற்பட்டால் மனிதர் நடந்துகொள்ள வேண்டிய முறைகளும் (லேவி. 13:1-46), ஆடைகளிலும் வீடுகளிலும் பூஞ்சனங்கள் ஏற்படும்போது செய்ய வேண்டியவைகளைப் பற்றிய விளக்கங்களும் (லேவி.13:47-59, 14:33-53), மனித சரீரத்திலிருந்து வெளியேறுபவைகளைக் கழுவிச் சுத்திகரிக்கும் முறைகளும் (லேவி.15) லேவியராகமப் புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளன (லேவி.12-15). தற்காலத்தில் மருத்துவத்துறை வளர்ச்சியடைந்திருப்பதனால், இத்தகைய சுத்திகரிப்புகளை நாம் வித்தியாசமான முறைகளில் செய்கின்றோம். எனவே, வியாதிகள் வருவதைத் தடுக்கும் வழிமுறைகளைக் கையாள்வது தேவன் நமக்குக் கற்றுக்கொடுத்துள்ள சுகாதாரப் பாடங்களாய் இருப்பதினால், தற்காலத்தில் கிறிஸ்தவர்களாகிய நாம் நோய்கள் தொற்றுவதைத் தடுப்பதற்காகத் தடுப்பூசிகள் போடுவது எவ்விதத்திலும் தவறான ஒரு செயல் அல்ல.