Dr.தியோடர் எச்.எஃப்.
(செப்டம்பர்-அக்டோபர் 2021)
தேவனுடைய வார்த்தையைத் தியானிக்கும் அனைவருக்கும், தேவனுடைய பிரமாணங்கள், சமயப்பழக்கவழக்கங்கள், கிறிஸ்தவக் கோட்பாடுகள் மற்றும் தேவனுடைய முழுமையான திட்டங்களைப் பற்றிய சில பிரச்சனைகளை அல்லது குழப்பங்களைச் சந்திக்க நேரிடும். உதாரணமாக வேதத்தின் ஒரு பகுதியில் தேவன் மரண தண்டனை கூடாது என்கிறார். மற்றோரிடத்தில் அது தேவை என்று கூறுவதைப் பார்க்கிறோம்.
இதற்கான நியாயமான பதில் என்னவெனில், இவ்வுலகில் தேவன் மனுக்குலத்தின் வாழ்க்கையைப் பல காலங்கள் அல்லது யுகங்களாகப் பிரித்திருக்கிறார் என்பதுதான் உண்மை. சில காலங்கள் குறுகிய காலங்களாகவும், சில காலங்கள் நீண்ட காலங்களாகவும் காணப்படுகிறது. சில பிரமாணங்கள் அனைத்துக் காலங்களுக்கும் பொருந்துபவையாகவும், சில பிரமாணங்கள் காலத்திற்குக் காலம் மாறுகின்றவையாகவும் காணப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவெனில், தேவன் தம்முடைய நித்திய நித்தியமான தன்மையிலும் நோக்கத்திலும் மாறாதவராக இருக்கும் நிலையில் மனிதனைக் கையாளும் முறைகளில் மாறுபட்ட விதங்களைக் கையாளுகிறார். கிருபையினால் விசுவாசத்தின் மூலம் இரட்சிப்பு என்ற தனிமனித னின் ஆவிக்குரிய சத்தியம் ஒவ்வொரு காலத்திற்கும் பொதுவான சத்தியமாகும். மோசேயின் நியாயப்பிரமாணம் போன்ற அரசாங்க அல்லது தேசீய நியமனங்கள் காலத்திற்கு காலம் மாறுபடுகிறதாகக் காணப்படுகிறது.
வேதம் இந்த மாறுபாடுகளை சில சமயங்களில் தெள்ளத்தெளிவான வார்த்தைகளாலும், சில சமயங்களில் மறைமுகமாகவும் நமக்குப் போதிக்கிறது. காலங்களின் வேறுபாடுகளை அடையாளம் காணுங்கள்; அப்பொழுது வேதத்தை நீங்கள் நன்கு அறிந்துகொள்வீர்கள் என்று அகஸ்டீன் கூறுகிறார் (345-430). அநேக சுவிசேஷம் அறிவிக்கும் போதகர்களாலும், வேத வல்லுனர்களாலும், வேதாகமப் பள்ளிகளிலும் காலங்களைப்பற்றிய சத்தியம் அறிவிக்கப்பட்டும், அறிவிக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.
வேறுவிதமான விளக்கங்களைவிட மேற் கூறப்பட்டுள்ள சத்தியம் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாகக் காணப்படுகிறது என்று உணர்கிறார்கள். இது தவறான உபதேசங்களிலிருந்து தங்களை விடுதலையாக்கி வேதத்தின் உண்மையான சத்தியத்தை அறியவும், மனித வரலாற்றில் காணப்படும் புதிர்களுக்கு விளக்கம் காணவும் உதவுகிறது. எனவே காலங்கள் பற்றிய இந்த ஆராய்ச்சியில் நீங்கள் மனநிறைவு கொண்டு பயனடைய ஜெபிக்கிறோம்.
உலகவரலாற்றில் ஒவ்வொரு காலமும் அறத்தை காலஅளவாகக் கொண்டு பிரத்தியேகமான நியாயந்தீர்ப்பில் முடிவடைகிறது. ஏழு காலங்களின் பிரிவின் ஒவ்வொரு பிரிவிலும் தேவன் எப்பொழுதும் வெவ்வேறு விதங்களில் தம் மக்களுக்கோ அல்லது உலகிற்குத் தம்மை வெளிப்படுத்தினார். ஆனால் ஒவ்வொரு காலத்திலும் வரலாற்றுக் காலவரைகளில் மனிதனோடு தேவன் வெவ்வேறு விதங்களில் செயல்பட்டாலும், தேவனின் இரட்சிப்பின் திட்டம் ஒரேவிதமாகவே செயல் பட்டது. அந்த ஏழு காலங்களாவன:
1. கபடற்ற காலம்
2. மனச்சாட்சியின் காலம்
3. மானுட அரசாங்கத்தின் காலம்
4. வாக்குத்தத்தம் அல்லது குடும்பத்தின் காலம்
5. நியாயப்பிரமாணத்தின் காலம்
6. கிருபையின் காலம் அல்லது திருச்சபையின் காலம்
7. ராஜ்யத்தின் காலம்.

தேவனின் மூன்று விதமான சிருஷ்டிப்பின் வல்லமையான செயல்கள்
ஆதியாகமம் 1ஆம் அதிகாரத்தை வாசிப்பதிலிருந்து தேவன் ஒன்றுமில்லாமையிலிருந்து சிலவற்றைச் சிருஷ்டித்தார் என்பது தெளிவாகிறது. தேவனால் மாத்திரம்தான் இச்செயலை செயல்படுத்த முடியும். மனிதனுக்குப் பயன்படும் சிலவற்றைப் புதிதாக உருவாக்க விஞ்ஞானத்தால் முடியும் (அறிவியலால்); ஆனால் அதை உருவாக்குவதற்கு ஏதாவது ஒரு பொருள் அவசியம் தேவை. பரிணாமக் கொள்கையாளர்கள்கூட ஆதியில் பொருளும் சக்தியும் இருந்ததென்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.
1.வானமும் பூமியும்:
ஆதியாகமம் 1:1இல் பயன்படுத்தப்பட்ட சிருஷ்டிப்பு என்ற பதம் தேவனின் மூன்று விதமான சிருஷ்டிப்பின் வல்லமையான செயல்களைக் குறிப்பிடுகிறது. முதலாவதாக, இது வானம் சிருஷ்டிக்கப் பட்டதைக் குறிப்பிடுகிறது; எபிரெய மொழியில் இது வானங்கள் என்பதையும் பின் பூமியையும் குறிப்பிடுகிறது. முதலாவது குறிப்பிடப்பட்டுள்ள வானம் ஆகாயவிரிவு என்பதையும் (ஆதி.1:8, 7:11, 8:2), இரண்டாவதாக, கிரகங்களை உடைய வானம் என்றும் குறிப்பிடப்படுகிறது (1:17, 15:5), மூன்றாவது வானம் என்பது தேவனின் வாசஸ்தலமாகும். சில சமயங்களில் பரதீசு எனப்படும் (2கொரி.12:2-4). இந்த வானங்கள் அனைத்தையும் தேவன் ஒன்றுமில்லாமையிலிருந்து சிருஷ்டித்தார்.
2.மிருகங்கள் சிருஷ்டிக்கப்படல்:
ஆதியாகமம் 1:21 இல் தேவன் நடமாடும் ஒவ்வொரு ஜீவஜந்துக்களையும் சிருஷ்டித்தார் என்று வாசிக்கிறோம். தேவன் மாபெரும் சிருஷ்டிப்பின் வல்லமையால் அனைத்து மிருகங்களையும் சிருஷ்டித்தார் (வச.21,24).
3.மனிதனை சிருஷ்டித்தல்:
தேவன் மனிதனை சிருஷ்டித்தார் என்று ஆதி. 1:27 கூறுகிறது. தேவன் ஜீவாத்துமாவை சிருஷ்டித்து அதை மண்ணான சரீரத்தில் வைத்தார். இந்தத் தெளிவான முப்பரிமாண சிருஷ்டிப்பு பரிணாமக் கொள்கை முற்றிலும் தவறு என்பதை வெளிக்காட்டுவது கவனிக்கத்தக்கது. இப்பரிணாமக் கொள்கையில் ஒரு சங்கிலித் தொடர்பு தேவைப்படுகிறது. ஆனால், இந்தச் சங்கிலித்தொடர்பு இதுவரை காணப்படவே இல்லை. பிளாஸ்டர் ஆப் பாரிஸ் சாந்தினால் (Plastor of Paris) பல சோதனை மாதிரிகளைத் தனித்தனியே வைக்கப்பட்டுள்ள சில எலும்புகளைச் சுற்றிக் கட்டி சங்கிலித் தொடருக்கு மாதிரிகளாக சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், மனிதனுக்கும், மிருகங்களுக்கும் இடையே உள்ள இணைப்புக்கான உண்மையான ஆதாரம் கிட்டவில்லை. பரிணாமம் ஒரு தத்துவமாகவும், ஆதாரமற்ற அனுமானமாகவே காணப்படுகிறது.
இப்படிப்பட்ட சங்கிலித்தொடர்களே இல்லாத நிலையில், மிருகத்திற்கும் மனிதனுக்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டுபிடிக்கவே முடியாது. தேவன் ஜாதிஜாதியாக ஜீவஜந்துகள், ஜாதிஜாதியாகப் பிறப்பிக்கக்கடவது என்று கட்டளையிட்டபொழுது, அதனதன் தன்மையின்படி பிறப்பிக்கக்கடவது என்ற அர்த்தத்தில்தான் கூறினார். ஒரேயொரு இடைவெளிதான் இணைக்கப்பட்டுள்ளது. அதுதான் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையில் விடப்பட்ட சங்கிலித் தொடர்பு. அதை தேவன் தம் குமாரன் இயேசுகிறிஸ்துவின் மூலம் ஒப்புரவாக்கி, பாவமுள்ள மனிதனை பரிசுத்தமுள்ள தேவன் நேசிக்கும் புது மனிதனாக மாற்றினார்.
தேவன் சிருஷ்டித்த பிற (நியமனங்கள்) சிருஷ்டிகள்
1. வெளிச்சம்: வசனம் 3இல் முதலில் வெளிச்சத்தைச் சிருஷ்டித்தார். ஏனென்றால் தேவன் வெளிச்சமாய் (ஒளியாய்) இருக்கிறார்.
2. ஆகாயவிரிவு: 6ஆம் வசனத்தில், பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
3. வெட்டாந்தரையையும், சமுத்திரத்தையும் 9,10 ஆம் வசனங்களில் சிருஷ்டித்தார். தாவரங்கள் சிருஷ்டிக்கப்பட்ட பொழுது விதையுள்ள தாவரங்களை உருவாக்கி மீண்டும் உற்பத்தி செய்யக்கூடிய திறமையுள்ள முதிர்ச்சியடைந்த தாவரங்களை சிருஷ்டித்தார் என்று வெளியானது. இவ்வாறு இவை பரிணாமத்தால் தேறியவைகள் அல்ல. தேவன் சிருஷ்டித்த முழு வளர்ச்சியடைந்த தாவரங்கள் விதைகள் மூலம் தாவரங்கள் இன்றுவரை வாழ்கின்றன.
4. சூரிய சந்திர நட்சத்திரங்கள்: முதல் நாளிலேயே சிருஷ்டிக்கப்பட்டது (வச.1). நான்காம் நாள் வரைக்கும் அவைகள் ஒளிகொடுக்கும் பிரகாசிகளாகச் செயல்படவில்லை (வச.14).
(தொடரும்)
மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan
நினைவுகூருங்கள்!
நாம் சோர்ந்துபோகும் வேளையிலும் பெலனற்றுப் போகும் வேளையிலும் நாம் அவரது கரத்தில் வரையப்பட்டுள்ளோம் என்று எண்ணும்போது அவருடைய அனுமதியின்றி எதுவுமே நம்மை அணுகாது!