நீங்கள் எருசலேமில் தேற்றப்படுவீர்கள்!

பேராசிரியர் எடிசன்
(மே-ஜுன் 2012)

ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள் (ஏசாயா 66:13).

ஒரு குழந்தை என்னதான் அப்பாவின் பிள்ளையாக இருந்தாலும், அப்பாவோடே விளையாடினாலும் காய்ச்சலோ தலைவலியோ வந்தால் அம்மாவைத்தான் தேடும். தாயின் அன்பும் அரவணைப்பும் தொடுதலும் அத்தனை மென்மையானதும் அமர்த்துகிறது மாயும் இருக்கும். தாய் பக்கத்தில் இருந்தாலே பிள்ளைக்கு ஆறுதல். அதனால் தான் தேவனும் சொன்னார்: ஒரு தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்.

தேவன் பல இடங்களில் தன்னை தாயாகவே அவர் காண்பித்தார். ஒரு தாயும் தகப்பனும் கைவிட்டாலும் நான் உன்னை சேர்த்துக்கொள்வேன் என்றார். ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் கனிக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ, அவள் மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் என்றார், அவர் தாயினும் மேலாக என்னிடத்தில் அன்பு வைக்கிறவர். அவர் என்னைத் தேற்றுவேன் என்கிறார். ஆனாலும் எருசலேமிலே தேற்றுவேன் என்று தேவன் அந்தவொரு வார்த்தையை சேர்த்ததின் நோக்கம் என்ன? பாவியாகிய என்னையும் தேவன் ஒரு தாய்போல் தேற்றுவேன், சுகமளிப்பேன், இளைப்பாறுதல் தருவேன், துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவேன் என்கிறார். ஆனால் எருசலேமில் நீங்கள் தேற்றப்படுவீர்கள் என்று எருசலேமை விசேஷித்துக் கூறியிருப்பது ஏன்? எருசலேமில் தேவன் என்னைத் தேற்ற என்ன வைத்திருக்கிறார்?

முதலாவது, இது நான் தங்கியிருக்கும் இடம் என்று சொன்ன தேவாலயம் எருசலேமில் இருக்கிறது. அது சகல ஜனங்களின் ஜெபவீடு என்னப்படும். இங்கு ஏறெடுக்கப்படும் ஜெபங்களுக்கு தேவனின் செவிகள் திறந்தே இருக்கும். இங்கு அன்னாளின் ஜெபத்தைக் கேட்டு சாமுவேலைக் கொடுத்து அவளை ஆறுதல்படுத்தினார். இங்கு யோசபாத் தேவனை நோக்கி ஜெபித்தபொழுது, அவன் எதிரிகளை அழித்து அவனுக்கொரு விடுதலையைத் தந்தார். எசேக்கியா ஜெபித்த பொழுது, அந்த ரப்சாக்கேயை தேவன் துரத்தி இஸ்ரவேலைக் காத்தார். இந்த ஆலயத்தில்தான் சிமியோனும் இயேசுவைக் கைகளில் ஏந்திக்கொண்டு, உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர் என்று தேற்றப்பட்டவனாய் கீதம் பாடினான்.

அருமையானவர்களே, ஆலயம் தேவன் நம்மைத் தேற்றுகிற இடமாயிருக்கிறது. அது அவருடைய வீடு. ஒழுங்காய் ஆலயம் சென்று உண்மையாய் நம்மைத் தாழ்த்தி ஆராதிப்போம் என்றால் நம்மை தேவன் நீதிமானாக்கி நம் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றி நம்மைத் தேற்றுகிறார், ஆசீர்வதிக்கிறார்.

இரண்டாவதாக, எருசலேமில்தான் நம் நேசர் நமக்காக பலியான கல்வாரி இருக்கிறது. அந்நாளிலே பாவத்தையும் அழுக்கையும் நீக்க, தாவீதின் குடும்பத்தாருக்கும் எருசலேமின் குடிகளுக்கும் திறக்கப்பட்ட ஒரு ஊற்று உண்டாயிருக்கும் (சகரியா 13:1). இவ்வாறு தீர்க்கதரிசனமாக சகரியா இயேசுவின் மரணத்தைக் கூறினார். எருசலேமிலே இயேசு சிலுவையில் ஈட்டியால் பிளக்கப்பட்டு இரத்தம் சிந்தி நமக்கு பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை சம்பாதித்தார். நமக்குப் பதிலாக அங்கு அவர் மரித்தார், நாம் தண்டனையை அனுபவிக்கிறதற்குப் பதிலாக அன்பினால் அவர் தண்டனையை ஏற்றுக் கொண்டார். அதனால்தான் நாம் குற்றமற்றவர்களாக பாவமே செய்யாதவர்களாக சந்தோஷமாக இருக்கிறோம். அவர் நமது பாவத்தின் பலனை தன்மேல் ஏற்றுக் கொண்டு நம்மை இளைப்பாறப்பண்ணி தேற்றுகிறார். இந்த சிலுவை மரணத்தின் மூலம்தான் நமக்கு மீட்பின் கிரயம் செலுத்தப்பட்டு நாம் விடுதலையானோம். விசுவாசிக்கிற நாம் இரட்சிக்கப்பட்டு பரிசுத்தமாகி பரலோக ராஜ்ஜியத்திற்குப் பங்குள்ளவர்கள் ஆனோம். தேவன் நம்மை இரட்சிப்பினால் தேற்றுகிறார். இரட்சிப்பின் சந்தோஷத்தைத் தந்து தேற்றுகிறார்.

மூன்றாவதாக, எருசலேமில் நம்மை தேற்ற தேவன் ஒரு மேலறையை வைத்திருக்கிறார். இங்குதான் சீஷர்கள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். இந்த உன்னதத்தின் பெலத்தினால் தரிப்பிக்கப்பட்டு உத்தம சாட்சிகளாய் வாழ்ந்து, இரத்த சாட்சியாய் மரித்தார்கள். இந்த பரிசுத்த ஆவியானவரே தேற்றரவாளன். நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன் … (யோவா. 14:16-18) என்று சொல்லி தமது ஆவியைத் தந்து நம்மைத் தேற்றுகிறார். பெந்தெகொஸ்தே நாளிலே சீஷர்கள் இந்த பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டபொழுது அவர்களுடைய கொந்தளிக்கிற மனம் அங்கே அமைதலடைந்து அவர்கள் தேற்றப்பட்டனர். பரிசுத்த ஆவியானவர் நமக்குள் வாசம்பண்ணி, வழிநடத்தி தேவராஜ்ஜியத்தில் சேர்த்து நம்மைத் தேற்றுகிறார். அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும் நிறைந்த இராஜ்ஜியம். மேலறையினால் தேற்றப்படுகிறோம்.

நான்காவதாக, நம்மை தேற்றும்படியாக தேவன் பெதஸ்தா என்னும் ஒரு குளத்தையும் எருசலேமில் வைத்திருக்கிறார். அதற்கு ஐந்து மண்டபங்கள் உண்டு. இங்கு சுகம் பெறுவதற்காக வியாதியஸ்தர்கள் தங்கினர். அந்த ஐந்து மண்டபங்களும் நேசரின் ஐந்து காயங்களைக் குறிக்கிறது. அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.

எனவே எருசலேமிலே ஆலயம், கல்வாரி, மேலறை, பெதஸ்தா ஆகியவை இருக்கிறது. இதன்மூலமாக தேவன் நமது ஆவி, ஆத்துமா, சரீரத்தை தேற்றுகிறார். இதனால்தான் அவர் சொன்னார்: ஒருவனை அவன் தாய் தேற்றுவது போல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள் (ஏசா. 66:13).

சகோதரனே இந்த இரட்சிப்பைப் பெற்றிருக்கிறீர்களா? ஒழுங்காய் தேவனுடைய ஆலயத்திற்குச் சென்று ஆராதிக்கிறீர்களா? இல்லையென்றால் இன்றைக்கே ஆலயத்திற்குச் செல்ல ஆயத்தமாகுங்கள்.

சத்தியவசனம்