தேவனுடைய கிருபையும் மனதுருக்கமும்!

Dr.உட்ரோ குரோல்

(மே-ஜுன் 2012)

இரக்கம், தயவு, பரிவு, மனதுருக்கம், கருணை போன்ற சொற்களுக்கிடையே உள்ள வேறுபாட்டை நாம் பொதுவாக கூர்ந்து கவனிப்பதில்லை. ஒருவரிடம் நீங்கள் இரக்கப்பட்டீர்கள் எனில், அவருடைய சூழ்நிலையை அறிந்து உங்கள் எண்ணங்களிலும் உணர்வுகளிலும் அசைக்கப்படுகிறீர்கள் என்று பொருளாகும். சில வேளைகளில் நீங்கள் அவருக்காக கண்ணீரும் சிந்தலாம். ஆனால், மனதுருக்கம் அல்லது கருணை என்பது உங்களை செயல்பட வைக்கும். இதுவே மாபெரிய வேறுபாடு. கருணை செயலில் இறங்குகிறது. ஆனால் பரிவும் இரக்கமும் எண்ணங்களிலேயே நின்று விடும். இச்செய்தியில் நம்முடைய கருணைக்கும், தேவனுடைய மனதுருக்கத்துக்கும் உள்ள வேறுபாட்டையும் நாம் மற்றவர்களிடம் எவ்வாறு கருணைகாட்டுவது என்பதையும் ஆராய்வோம்.

என்னை மிகவும் கவர்ந்த சங்கீதங்களில் ஒன்றான 103வது சங்கீதத்தை எடுத்துக் கொள்வோம். சங்கீதக்காரனாகிய தாவீது தேவனைப்பற்றிக் கூறுவதை அதில் நாம் வாசிக்கிறோம். என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் முழு உள்ளமே, அவருடைய பரிசுத்த நாமத்தை ஸ்தோத்திரி, என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே. அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயதுபோலாகிறது. ஒடுக்கப்படுகிற யாவருக்கும், கர்த்தர் நீதியையும் நியாயத்தையும் செய்கிறார். அவர் தமது வழிகளை மோசேக்கும், தமது கிரியைகளை இஸ்ரவேல் புத்திரருக்கும் தெரியப்பண்ணினார். கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துகொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார். அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறது போல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார் (சங்.103:1-14).

இறுதியில் காணப்படும் இரண்டு வசனங்களும் தேவனுடைய இரக்கத்தை விளக்குகிறது. நாம் பலவீனர்கள் என்றும், நாம் மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் என்றும் அவர் அறிவார். பலவேளைகளில் நமது சரீரம் சோர்வும் களைப்புமடைந்து வியாதிக்குள்ளாகிறது. இவை அனைத்துக்கும் அவர் இரங்குகிறார். ஆனால் அவரது மனதுருக்கமோ இந்த இரக்கங்களிலிருந்து மாறுபட்டது.

அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார் (வசனம் 10). இங்குதான் அவரது மனதுருக்கம் விளங்குகிறது. கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர் (வச.8). மனதுருக்கம் என்பது தேவனுடைய கிருபையின் ஒரு பகுதியாகும்.

நம்முடைய பாவங்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனையை நமக்குத் தராமல் இருப்பது அவருடைய கிருபையையும், நமக்குக் கிடைக்கத் தகுதியற்ற பல சிறப்பான நன்மைகளைத் தருவது அவரது மனதுருக்கத்தையும் காட்டுகிறது.

தேவனுடைய மனதுருக்கத்தை விளக்கும் இந்த பழைய ஏற்பாட்டுப் பகுதிக்கு ஒத்த புதிய ஏற்பாட்டுப் பகுதியை நாம் பார்ப்போம். அப். யாக்கோபு தமது நிருபத்தில் இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே (யாக்.5:11) என்று எழுதியுள்ளார். பொறுமை, கிருபை, மனதுருக்கம் இம்மூன்றையும் இந்த வசனத்தில் நாம் வாசிக்கிறோம். நீங்களும் நானும் இரக்கமுடையவர்களாயிருக்க வேண்டுமெனில் யோபின் அனுபவத்துக்குள்ளாக நாம் கடந்து செல்லவேண்டும் என்று அப்.யாக்கோபு எதிர்பார்க்கிறார். ஆனால் நம்மில் எத்தனைபேர் யோபின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறோம்? யோபின் அனுபவம் நமக்கு ஏற்படவேண்டாம் என்றே நான் விரும்புகிறேன். ஏனெனில் அவர் தனக்குப் பிரியமான அனைத்தையுமே இழந்தார். தேவன் நம்மீது சினமடையாமல் இருப்பது அவர் நம்மேல் வைத்த மனதுருக்கம், அன்பு மற்றும் கிருபையை வெளிப்படுத்துகிறது.

அடுத்து 2 கொரி.1:3-4 பகுதியானது நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின் பிதாவும், சகல விதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள் ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும் அவரே எங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் என்று கூறுகிறது. இதில் ஆறுதல் என்ற சொல் பலமுறை கூறப்பட்டுள்ளது. தேவன் நமக்கு தம்முடைய மனதுருக்கத்தை அருளுகிறார் எனில், நாளை நாம் மற்றொருவருக்குக் கருணைகாட்ட அவர் நமக்கு கற்றுத்தருகிறார் என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். மனதுருக்கத்தைக் கற்றுக்கொள்ள எனக்கு யோபுவின் அனுபவங்கள் தேவைப்பட்டாலும், தேவனுடைய மனதுருக்கத்தை என் வாழ்வில் நான் கண்டுகொள்ளவும், மற்றொருவருக்கு அவ்வுருக்கத்தைக் காட்டவும் அவை எனக்கு உதவும்.

தேவனிடம் இரக்கமும் மனதுருக்கமும் உண்டு. அவ்வுருக்கமும் இரக்கமும் நமக்குத் தேவையானால் தேவனுடன் நம்முடைய உறவை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்பொழுது மட்டுமே நாம் மற்றவர்களிடம் இரக்கம் காட்ட முடியும். மனதுருக்கம் காட்டுவது அவ்வளவு எளிதானதல்ல. பிறரைக் காயப்படுத்தக்கூடிய நிலையில் இருப்பவர்களுடனும், தனிமையிலும், மனவேதனையின் மத்தியில் வருந்துபவர்களுடனும் நாம் இரக்கம் கொள்ளுவது இலகுவல்ல. அதற்கு வலிமையான மனநிலை வேண்டும். நாம் பாடுபடுவதினால் பிறர்பால் மனதுருக்கம் தானாக வந்துவிடாது. நமக்கு பாடுகள் வரும்போது அதை விட்டு லிலக எண்ணுவதும், அதற்கு துரிதமான வழிகளைக் காண்பதுமே மனித இயல்பு என்று வேதவல்லுநர் ஹென்றி நியூமென் கூறுகின்றார்.

நமக்கு தலைவலி உள்ளது என்று வைத்துக்கொள்வோம். உடனே அது நீங்குவதற்கான முயற்சிகளை எடுப்போம் அல்லவா? அதுபோலவே மனதுருக்கமடைய வேண்டிய வேளையில் உடனடியாக அங்கிருந்து விலகிச் செல்லவே நாம் முயற்சிப்போம். ஏனெனில் தேவனுடைய மனதுருக்கம் நம்மில் எவருக்கும் கிடையாது. ஆயினும் தேவனுடன் உறவு கொள்வது என்பது அவர் யார் என்பதைக் கண்டறிவதும் அவருக்குப் பிரியமான வாழ்வு வாழ்வதுமே.

அறிஞர் நியூமெனின் கூற்று மிகத் தெளிவானதாக இருக்கிறது. தேவனைப்போல் இருப்பது என்பது அவரைப் போன்ற மனதுருக்கம் நம்மில் இருக்கவேண்டும். மனதுருக்கம் நம்மை பலவீனமான இடங்களுக்கும், தாக்குதல் நிறைந்த இடங்களுக்கும், நமக்குப் பிரியமில்லாத இடங்களுக்கும் அழைத்துச் செல்லுகிறது. மனதுருக்கம் காட்டுவது கடினம் எனினும், அது இயலாத காரியமல்ல. தேவன் நம்மீது மனதுருக்கமாயிருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்பு எனில், நாமும் அவரைப்போல மாறும்போது மற்றவர்களிடம் மனதுருக்கமாயிருப்போம்.

தேவனுடைய மனதுருக்கம் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நமக்கு வெளிப்பட்டது. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் காட்டிய மனதுருக்கத்தை வேதத்தின் பல பகுதிகளில் நாம் காணமுடியும். மத்தேயு 9ஆம் அதிகாரத்தில் அவ்வாறான ஒரு நிகழ்ச்சியை நாம் வாசிக்கிறோம்.

இயேசுகிறிஸ்து கலிலேயாவில் இருந்த பொழுது தமது சீஷர்களைத் தெரிந்தெடுத்து அழைத்தார். தம்மைச் சுற்றிலும் இருந்த மக்களுக்கு நன்மை செய்து தமது மனதுருக்கத்தை வெளிப்படுத்தினார். 27ஆம் வசனத்தில் இயேசு அவ்விடம் விட்டுப்போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள் என்று வாசிக்கிறோம். இந்த இரண்டு குருடர்களும் நீதியைப் பற்றிக் கேட்கவில்லை; தேவனுடைய இரக்கத்தையே வேண்டினார்கள். அவர்கள் இயேசு கிறிஸ்துவின் மனதுருக்கத்தையே வாஞ்சித்தார்கள்.

இதற்கு இயேசுகிறிஸ்துவின் பதில் என்ன? அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார் (வச.28-30).

ஏன் இவ்வாறு கட்டளையிட்டார்? தாம் இவ்வுலகிற்கு மேசியாவாக வந்த நோக்கத்தை அவ்வளவு விரைவில் மக்களுக்கு வெளிப்படுத்த அவர் விரும்பவில்லை. எனவேதான் நான் செய்த காரியத்தை நீங்கள் மக்களுக்குத் தெரிவிக்கவேண்டாம் என்றார். ஆனால், அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினார்கள். அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். பிசாசு துரத்தப்பட்டபின்பு ஊமையன் பேசினான், ஜனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள். பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள் (மத்,9:31-34). பரிசேயர்கள் இயேசுவினுடைய வல்லமையை பிசாசின் வல்லமையாகப் பேசினார்கள். பிசாசின் மீது பிசாசால் அதிகாரம் செய்வது கடினமான காரியம் என்பதும் அவர்களுக்குத் தெரியாதிருந்தது.

பின்பு, இயசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கி, அவர்களைச் சொஸ்தமாக்கினார். அவர் திரளான ஜனங்களைக் கண்டபொழுது, (இவர்கள் செவிடர்களோ, ஊமையர்களோ அல்லது குருடர்களோ அல்லர். நம்மைப் போல சாதராண மக்களே) அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போலத் தொய்ந்துபோனவர்களும் சிதறப்பட்டவர்களுமாய் இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி, தம்முடைய சீஷர்களை நோக்கி: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார் (35-38).

அடுத்த வசனத்தில், (அது அடுத்த அதிகாரத்தில் இருந்தாலும்) தமது சீஷர்களைத் தெரிந்தெடுத்து அறுப்புக்கான வேலைக்கு அழைத்தார். இந்த வேதபகுதியில் இரக்கத்துக்கும் மனதுருக்கத்துக்கும், தயவுக்கும் உண்மையான மனதுருக்கத்துக்கும் உள்ள வேறுபாட்டை நாம் அறிந்துகொள்ளுகிறோம். குருடரான இரண்டுபேர் தங்களுக்கு இரங்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர். எனவே அவர்களுக்கு மனதுருக்கத்தை அவர் வெளிப்படுத்தினார். அது மாத்திரமல்ல, அவர் ஊமையான ஒரு மனிதனையும் குணப்படுத்தினார். இவை எல்லாவற்றையும் அவர் தமது மனதுருக்கத்தினாலே செய்தார். மக்களுடைய சரீரத்தேவைகள் இல்லாத பொழுதும் அவரது உண்மையான மனதுருக்கம் வெளிப்பட்டது.

அம்மக்கள் நம்மைப்போல ஆறறிவு கொண்டவர்கள். அவர்களுக்கு ஓர் இரட்சகர் தேவைப்பட்டார். எனவேதான் திரளான ஜனங்களைக் கண்டபொழுது மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல இருந்ததைக் கண்டு மனதுருகினார். மக்கள் மெய்யான தேவனை அறியவில்லையே என்று அவர்களுக்காக நீங்களும் நானும் மனதுருக வேண்டும்.

காது கேளாத சகோதரனிடம் உங்களுக்குப் பரிவு ஏற்படலாம். ஆனால், அவர் இரட்சகரை அறியவில்லை என்று நாம் கவலைப்படும் போது, மனதுருக்கமடைகிறோம். இரட்சகரை அறியாத மக்களைக் காணும்பொழுது உங்கள் உள்ளம் உடையுமானால், நீங்கள் உண்மையான மனதுருக்கம் அடைகிறீர்கள்.

இரண்டாவதாக, உங்கள் இருதயத்தில் கண்ணீர் வடித்தீர்கள் எனில், அந்த உணர்வு உங்கள் முகத்தில் வெளிப்படும். இதயத்தில் உண்டான மனதுருக்கம் கண்களில் கண்ணீரை வரவழைக்கும். கண்ணீரே மனதுருக்கத்தின் வெளிப்பாடு.

நாம் அடிக்கடி அழுவதில்லை, ஒரு சிலர் ஒருபொழுதும் அழுவதில்லை. ஆனால் உண்மையான மனதுருக்கம் உண்டாகும்பொழுது அது அனைத்து தடைகளையும் உடைத்து அனைவரையும் கண்ணீரைச் சிந்தவைக்கும்.

இயேசுகிறிஸ்து அந்த இரண்டு பேர்களுக்கும் பார்வை தேவை என்றும், ஊமையானவனுக்கு பேச்சுத்திறன் வேண்டும் என்றும், அந்த ஜனங்களுக்கும் இரட்சகர் தேவை என்றும் உணர்ந்திருந்தார். அறிந்தது மாத்திரமல்ல, அதனை செயலிலும் வெளிப்படுத்தினார்.

மியாமிலிருந்து நாஷ்வில்லி என்ற இடத்துக்குச் சென்ற ஓர் விமானத்தில் 64 மன நல வல்லுநர்கள் பயணம் செய்தனர். அப்பொழுது அவ்விமானத்தில் பயணித்த ஒரு பெண்மணி சற்றே மனநலம் பாதிக்கப்பட்டார். விமான பணிப்பெண்கள் அந்த பெண்மணிக்கு உதவி செய்தனர். அந்த 64 மனநல வல்லுநர்களும் அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். ஆம், அவர்கள் அனைவரும் சூழ்நிலையை ஆராய்ந்தனரே தவிர ஒருவரும் அந்த பெண்மணிக்கு உதவும் வழிமுறைகளில் ஈடுபடவில்லை.

மனதுருக்கம் என்பது செயலில் வெளிப்பட வேண்டும். ஐயோ பாவம், அந்தோ பரிதாபம் போன்ற இரக்க சொற்களைக் கூறிவிடுவதுடன் நின்றுவிடாது அதனை செயல்வடிவத்தில் காட்ட வேண்டும். ஒருவேளை உங்கள் மனதுருக்கத்தை செயலில் காட்டுவதற்கு தேவையான வாய்ப்புகள் கிடைக்காமலிருக்கலாம். அல்லது அதற்குரிய ஆதார வளங்கள் உங்களிடம் இல்லாமலிருக்கலாம். உங்கள் வளங்கள் உங்களது திறமைகளைக் கட்டுப்படுத்தலாம்; ஆயினும் உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் உங்கள் செயல் திறமைகளை வளர்க்கும்.

உங்கள் வாழ்வை பாழாக்கிவிட்டுப் பிரிந்து சென்ற மகனோ மகளோ உங்களுடைய மனதுருக்கம் தேவைப்படுபவர்களாக இருக்கலாம். அவர்களுடைய இருப்பிடத்தை நீங்கள் அறியாமலும் இருக்கலாம். உங்களுடைய மனதுருக்கத்தை எப்படி அவர்களுக்கு வெளிப்படுத்துவது? நீங்கள் செய்யக்கூடிய காரியம் ஒன்று உண்டு. அது அவர்களுக்காக ஜெபிப்பதுதான். நாம் ஜெபித்த பின்னர் எவ்வளவோ செயல்களைச் செய்தாலும், ஜெபிக்கும்வரை ஒன்றும் செய்ய இயலாது. நீங்களும் நானும் மக்களுக்கு செய்யக்கூடிய மேலான காரியம் அவர்களுக்காக ஜெபிப்பதேயாகும். சிலவேளைகளில் நமது பொறுப்புகளைக் கழித்துக்கட்ட நான் ஜெபிப்பதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறோம்.

ஆனால் நாம் அத்தகைய மக்களை ஜெபத்தில் தாங்கி தேவனுடைய கிருபை அவருடைய மனதுருக்கத்தைக் காட்டி தேவனிடம் இழுத்துக்கொள்ள இடைவிடாது மன்றாட வேண்டும். உங்களுடைய மனதுருக்கமே அவர்களை தேவனிடம் வரவழைத்தது என்பதை ஒருநாளில் அவர்கள் அறிந்துகொள்ளுவார்கள். மக்களிடம் நாம் காட்டும் மனதுருக்கத்தை வெளிப்படுத்தும் செயல்களே நாம் தேவனிடம் கொண்டிருக்கும் உறவை வெளிப்படுத்தும். நம் தேசத்து மக்களுக்கு இரட்சகர் தேவை என்ற மனதுருக்கம் உங்களிடம் உண்டா?

நம் நாட்டு மக்களுக்காக மன்றாடி ஜெபிக்கிறீர்களா? நாட்டுக்காக ஜெபிக்காவிட்டாலும் இரட்சகரை அறியாத உங்களுடைய நண்பர்களுக்காக, உறவினர்களுக்காக அயல் வீட்டாருக்காக ஜெபிப்பதுண்டா?

சிந்திப்போம்! செயல்படுவோம்!!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்