ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

Dr.தியோடர்.எச்.எஃப்
(மே-ஜுன் 2012)

பொன் தூபபீடம்

பொன் தூபபீடமும், நமது ஜெப வாழ்க்கையும்

பொன் தூபபீடமும் நம்முடைய ஜெபவாழ்க் கையைக் குறித்துப் பேசுகிறது. தூப பீடத்தில் நெருப்பு எப்போதும் இருந்து கொண்டிருக்கும். குறிப்பிட்ட நேரங்களில் தவறாமல் அதில் தூபவர்க்கம் இடப்பட்டு, தேவனுக்கு உகந்த தூபம் எழுப்பப்படும். அது போலவே நாமும் தொடர்ந்து ஜெபதூபம் ஏறெடுக்கவேண்டும். சிறப்பு விண்ணப்பத்துக்கு தனியான நேரங்களும் உண்டு.

நம்முடைய புதிய ஏற்பாட்டில் இடை விடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று கூறப்பட்டுள்ளது (1தெச.5:17). மூலவார்த்தை இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் என்பது, புதிய ஏற்பாட்டுக் காலங்களில் இடைவிடாத இருமல் உள்ள ஒரு மனிதனோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டது. அவனுடைய இருமல் ஒரு நீளமாக இழுக்கப்பட்ட இருமலாக இல்லாதது போல, நாமும் இடைவிடாமல், தொடர்ந்து ஜெபம் பண்ண வேண்டும் என்பது கருத்தல்ல. இடைவெளியில்லாமல் 24 மணி நேரமும் ஜெபம் பண்ண முடியுமா? எனவே இருமல் விட்டுவிட்டு, தொடர்ந்து வந்துகொண்டிருப்பதுபோல, நாமும் இடைவெளிவிட்டு, ஆனால் தொடர்ந்து ஜெபம் பண்ணிக்கொண்டேயிருக்க வேண்டும். ஜெபநேரம் ஒதுக்கி, அந்த நேரங்களில் தவறாமல், முழு கவனத்துடன் ஜெபங்களை ஏறெடுக்க வேண்டும்.

நம்முடைய சரீரத்துக்கு ஓய்வு தேவை. நாம் ஒரு நாளில் 24 மணி நேரமும் ஜெபம் பண்ணிக் கொண்டிருக்க முடியாது. ஆனால் இயேசு கிறிஸ்து ஆண்டவராய் இருப்பதால், அவர் நமக்காக எல்லா நேரங்களிலும் பரிந்து பேசிக் கொண்டிருக்க முடியும். வேண்டுதல் செய்யும்படிக்கு அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறவராகையால் (எபி.7:25). இயேசுகிறிஸ்து மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்யும் அளவுக்கு நம்மால் மற்றவர்களுக்காக ஜெபிக்க முடியாவிட்டாலும், மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்வது நமது கடமையாகும்.

தேவனுடைய சித்தத்துக்கெதிராக எங்களுக்கு ஒரு இராஜா வேண்டும் என்று நாங்கள் கேட்டோம்; நீங்கள் எங்களுக்காக ஜெபம் பண்ணுங்கள் என்று இஸ்ரவேலர் சாமுவேல் தீர்க்கதரிசியிடம் கேட்டனர். அப்பொழுது அவர் கூறியது என்ன? நானும் உங்களுக்காக விண்ணப்பம் செய்யாதிருப்பேனாகில், கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்கிறவனாயிருப்பேன் (1சாமு.12:23). இஸ்ரவேலருக்காக ஜெபம் பண்ணாமல் இருப்பது பாவம் என்று சாமுவேல் கருதினார். எனவே மற்றவர்களுடைய தேவைகளுக்காக நாம் வேண்டுதல் செய்யாமலிருப்பது பாவம் என்று அறிகிறோம்.

கொலோசே பட்டணத்தில் உள்ள கிறிஸ்தவர்களுக்குப் பவுல் கூறியதிலிருந்து, இதினி மித்தம் நாங்கள் அதைக் கேட்ட நாள்முதல் உங்களுக்காக இடைவிடாமல் ஜெபம் பண்ணுகிறோம் (கொலோ.1:9). இடைவிடாமல் செய்யும் ஜெபத்தின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொள்ளுகிறோம். 1தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் முதல் 4 வசனங்களிலும் நாம் ஒவ்வொருவருக்காகவும் ஜெபம் பண்ணவேண்டும் என்றும், சிறப்பாக நமக்கு மேலே இருக்கும் அதிகாரம் வகிப்பவர்களுக்காகவும் ஜெபம் பண்ணவேண்டும் என்று உபதேசம் தரப்படுகிறது. ஏன் இப்படிக் கூறப்பட்டுள்ளது? நாம் எல்லா பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம் பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே (ஜெபம்) செய்யவேண்டும். (வச.2)

வேதாகமத்தில் உள்ள இத்தகைய வேண்டுதல்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று யாத்.32:10 முதல் 14 வசனங்களில் உள்ளது. மோசே ஜனங்களுக்காக தேவனிடத்தில் வேண்டுதல் செய்தான். தேவன் மோசேயினிடத்தில், என் கோபம் இவர்கள் மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப் போடவும், நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார். இருந்த போதிலும் மோசே தேவனிடத்தில் அந்த ஜனங்களுக்காக மன்றாடி, தேவனிடத்தில் அவர் அவர்கள்மேல் கொண்டிருந்த கரிசனையையும், உதவிகளையும் சுட்டிக்காட்டி தேவனுடைய கோபத்தைத் தணியச்செய்து, அவருடைய மனம் மாறவும், மக்கள்மேல் கிருபை கூரவும் வகை செய்தான். தேவன் ஜனங்களை விடுதலை செய்தார்.

தேவனோடு அதிகநேரம் செலவிடுவதன் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும் மார்த்தாள், மரியாளின் வீட்டில் காண்கிறோம் (லூக்.10:38-42). அவர்களுடைய வீட்டில் இயேசு இருக்கும்போது, இயேசு அவர்களுடைய விருந்தினர். ஆகையால் அவருக்கு நல்ல உணவு தயாரிப்பதிலும், உபசரிப்பதிலும் மார்த்தாள் அதிக அக்கறை செலுத்தினாள். தீவிரமாக வேலைகளில் ஈடுபட்டிருந்தாள். ஆனால் மரியாளோ, தன் சகோதரிக்கு வேலைகளில் உதவி செய்யாமல், இயேசுவின் பாதத்தருகே அமர்ந்து, அவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மார்த்தாள் இதைக்கண்டு, இயேசுவிடம் மரியாள் எனக்குவந்து வேலைகளில் உதவிசெய்யக் கூறுங்கள் என்றாள். அப்பொழுது இயேசு, மார்த்தாளே, மார்த்தாளே, நீ அநேக காரியங்களைக் குறித்துக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே. மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார் (லூக். 10:41,42) இதிலிருந்து கர்த்தருடைய சமுகத்தில் அதிக நேரம் செலவழிப்பதே நம் வாழ்வில் மிகவும் முக்கியமானது என்று அறிகிறோம். இன்று அவர் நம்முடன் மாம்ச சரீரத்தில் இல்லை. ஆனால் நாம் ஜெபத் தியானத்தில் அவருடன் நேரம் செலவிடலாம்.

ஆபிரகாமுக்கு இடைவிடாமல் செய்யும் மன்றாட்டு ஜெபத்தில் நம்பிக்கை இருந்தது. சோதோம் பட்டணத்தில் அதன் அக்கிரமமும், பொல்லாப்பும் அதிகரித்தபோது, தேவன் அதை அழிக்க நினைத்தார். அப்பொழுது தேவனிடம் ஆபிரகாம் இடைவிடாமல் மன்றாடினான் (ஆதி.18:23-33). ஆபிரகாம் தேவனிடத்தில் அந்த நகரத்தில் 50 நீதிமான்கள் இருந்தால் அழிப்பீரோ? என்று தேவனிடத்தில் கேட்டான் (வச.24). அப்படி இருந்தால் அழிக்கமாட்டேன் என்றார் தேவன். ஆபிரகாம் மீண்டும் தேவனிடம், 45 பேர் இருந்தால் அழிப்பீரோ? என்று கேட்டான் (வச.28). தேவன், அழிக்கமாட்டேன் என்றார். இப்படியே ஆபிரகாம் தொடர்ந்து மன்றாடிக் கடைசியில் 10 நீதிமான்கள் இருந்தால் அந்த நகரத்தை அழிக்காமல் விட்டுவிடும் என்றான். தேவன் அதற்கும் சம்மதித்தார். ஆனால் இறுதியில் சோதோம் பட்டணம் அழிக்கப்பட்டது என்று அறிகிறோம். இருந்த போதிலும் ஆபிரகாமுக்கு மன்றாட்டு ஜெபத்தில் நம்பிக்கை குறையவில்லை.

ஒரு விசுவாசியின் உயர்ந்த பணி

இடைவிடாமல் மன்றாட்டு ஜெபம் ஏறெடுப்பதே ஒரு விசுவாசியின் மிக உயர்ந்த பணியாகும். நாம் செய்யும் சேவையைவிட, அப்பா, பிதாவே என்று அழைத்து அவரிடம் ஜெபித்து, மன்றாடி, வேண்டுதல் செய்து ஆராதனை செய்வதையே தேவன் விரும்புகிறார். நம்முடைய ஜெபம், மன்றாட்டு இவற்றுடன் தொடர்புள்ள சேவை ஏற்றுக்கொள்ளத் தக்கது. சேவை முக்கியமானதுதான். ஆனால் ஆவிக்குரிய போராட்டம் ஜெபத்தின் மூலம்தான் வெற்றி காணப்படுகிறது. ஊழியத்தின் மூலம் அல்ல.

சில ஊழியர்கள் அறைவீட்டுக்குள் பூட்டிக் கொண்டு மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்து, ஆசீர்வாதங்களைப் பெற்று வெற்றிகரமாக ஊழியம் செய்வதைக் காணும் பிற ஊழியர்கள் சிலர் பொறாமை கொள்கின்றனர். தங்களுக்கு தேவனுடைய ஊழியத்தில் இடம் இல்லை என்று நினைக்கிறார்கள். இப்படி அறைகளை அடைத்துக்கொண்டு, உள்ளிருந்து மற்றவர்களுக்காக மன்றாட்டு ஏறெடுப்பவர்களுக்கு இன்னும் அதிகமான பொறுப்பு உண்டு. மற்றவர்களின் தேவைகளுக்காக தேவனிடம் மன்றாடுதல். இது நற்செய்தி அறிவிப்பதைவிட முக்கியமானது. நற்செய்தியை நல்லமுறையில் அறிவிப்பதன் மூலம் மட்டும் ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திவிட முடியாது. அதற்கு ஜெபமும் வேண்டும்.

பொன் தூபபீடம், கிறிஸ்து விசுவாசிகளுக்காக மன்றாட்டு ஜெபம் ஏறெடுப்பதைக் காட்டுகிறது. இது விசுவாசிகளை மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிப்பதன் அவசியத்தை வெளிப் படுத்துகிறது.

வெண்கலப் பலிபீடம், தியாகபலிகள் செலுத்துமிடம் இது நமது இரட்சிப்பைக் காட்டுகிறது.

பொன் தூபபீடம், இது மன்றாட்டு ஏறெடுக்குமிடம். இது விசுவாசத்தினால் நாம் தேவனுக்குள் நிலைத்திருக்கிறோம் என்று காட்டுகிறது. கடைசிக்காலத்திலே வெளிப்பட ஆயத்தமாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்புக்கு ஏதுவாக விசுவாசத்தைக் கொண்டு, தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிற உங்களுக்கு அந்தச்சுதந்தரம் பரலோகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. (1பேது.1:5)

மற்றவர்களுக்காக ஏறெடுக்கும் மன்றாட்டு ஜெபத்தை முக்கியக் கடமையாக ஏற்றுச் செயல்பட்டவர்களை நினைக்கும்போது பல ஆண்டுகளுக்கு முன் மரித்து, இப்போது ஆண்டவரோடு இருக்கிற ஒரு அம்மா என் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் கிட்டத்தட்ட 15 வருடங்கள் படுக்கையோடு படுக்கையாய் படுத்திருந்து அவதிப்பட்டார்கள். ஒவ்வொரு தடவையும் நான் அவரைப் பார்த்து விட்டுத்திரும்பும்போது, மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிக்கும் அவர்களுடைய, ஆர்வத்தைக் கண்டு வியந்து பாராட்டியிருக்கிறேன். படுக்கையில் சுகவீனமான, பலவீனமான நிலையில் படுத்திருந்தாலும், தேவன் அவரை இப்படி மற்றவர்களுக்காக மன்றாடி ஜெபிக்கும் பணிக்காகத் தெரிந்தெடுத்திருந்தார்.

இடைவிடாத மன்றாட்டு ஜெபத்திற்கு ஒரு நல்ல உதாரணம் யாத்.17:8-16 வசனங்களில் உண்டு. இஸ்ரவேலர், அமலேக்கியரோடு யுத்தம் செய்தல். ஒரு பள்ளத்தாக்கில் இருந்த அமலேக்கியரோடு இஸ்ரவேலர் யுத்தம் செய்யும்போது, மலை உச்சியில் இருந்து கொண்டு மோசே மன்றாட்டு ஜெபம் ஏறெடுத்து கொண்டிருந்தார். அப்போது நடந்த வேடிக்கையான அனுபவம்.

மோசேயின் கை உயர்த்தப்பட்டிருந்த போது இஸ்ரவேலர் வெற்றியுடன் முன்னேறினார்கள். மோசேயின் கைகள் தாழ்ந்தபோது அமலேக்கியர் மேற்கொண்டு, இஸ்ரவேலரைப் பின் வாங்கச்செய்தார்கள். ஆரோனும், ஊரும் மோசேயின் கைகள் தாழ்ந்துவிடாதபடி தாங்கிக் கொண்டபோது, இஸ்ரவேலர் முன்னேறிப் போரில் வெற்றி கண்டார்கள்.

இயேசுகிறிஸ்துவை அறிந்திருக்கிற நாம், அவரை இரட்சகராக ஏற்றுக்கொண்டு, உண்மையுடன் மற்றவர்களின் தேவைகளுக்காக இடைவிடாமல் மன்றாட்டு ஏறெடுப்போமா?

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்