நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்

கோதுமை மணி – 19
(மே-ஜுன் 2012)

ஹென்றி மார்ட்டின்

ஹென்றி மார்ட்டின் 1781 ஆம் ஆண்டு இங்கிலாந்திலுள்ள கொர்ன்வால் (Cornwall) என்னுமிடத்தில் ஒரு வியாபாரியின் மகனாகப் பிறந்தார். அவருக்கு வசதியில் குறை இருந்தது என்று கூறுவதற்கில்லை. பள்ளி வாழ்வை முடித்தவர் இங்கிலாந்தின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் அதிசிறந்த புள்ளிகளோடு பட்டம் பெற்றார்.

இளம் வயதில் தேவனுக்குப் புறமுதுகு காட்டிய ஹென்றி மார்ட்டினை அவரது தந்தையின் மரணமும், சகோதரியின் ஜெபமும், தேவபக்தியான போதகர் ஒருவருடைய ஆலோசனையும், டேவிட் பிரெய்னார்ட் என்னும் அருட்பணியாளரின் எழுத்துக்களும் தேவனுக்கு அடிபணிய வைத்தது. அதன் பின்பு, நாடுகடந்த அருட்பணி ஊழியங்குறித்து நாட்டங்கொள்ளத் தொடங்கினார்.

டேவிட் பிரெய்னாட்டின் தியாகபூர்வமான முன்மாதிரியும், இந்தியாவில் வில்லியம் கேரியின் முயற்சியும் இவருக்கு பெரும் உந்துதலாயிருந்தது. நாடுகடந்த அருட்பணி ஊழியம், அவரது ஒரே நோக்கமாக உருப்பெற்றது. தன் அருட்பணி நாயகனாகிய டேவிட் பிரெய்னார்ட்டைப்போல மாற விரும்பி, அவரைப்போலவே அதிகநேரம் ஜெபத்திலும் தியானத்திலும் ஈடுபட்டார். சுயத்தை மறுதலிக்கும் பயிற்சிகளிலும் ஈடுபட்டார், அவர் திருமணம் செய்யாமல் ஆண்டவருக்காக திருப்பணிச் செய்ய ஆவல் கொண்டார்.

அழகி லீதியா

அறிவில் சிறந்த ஹென்றி மார்ட்டின் அழகில் குறைந்தவராய்த் தன் கண்களுக்குத் தென்பட்டார். அனைத்தையும் துறந்து ஆண்டவரைச் சேவிக்க ஆர்வம் கொண்ட இம் மனிதனது வாழ்வில் ஓர் அழகி குறுக்கிட்டாள். தன் மச்சானுக்கு மச்சாள் முறையான அப்பெண், அழகில் மட்டுமல்ல, வயதிலும் ஹென்றியைவிட ஆறு வருடங்கள் கூடியவள். லீதியா ஹென்றியின் மனதில் ஆழமாக இடம் பிடித்தாள். காதல் மலர்ந்தது. ஹென்றியின் சிந்தனையெல்லாம் லீதியாவால் நிறைந்தது. ஹென்றி லீதியாவை இதயப்பூர்வமாக மிகவும் நேசித்தார்.

இந்தியாவா? லீதியாவா?

லீதியாவை அதிகமாக நேசித்த ஹென்றி, ஆண்டவரையும் அதிகமாக நேசித்தார். எனவே இந்தியாவுக்கு அருட்பணியாளனாகப் போக ஒரு வருடகாலமாகத் திட்டங்கள் தீட்டி ஆயத்தப்பட்டுக்கொண்டிருந்தார். இந்த ஆயத்த காலத்தில் லீதியாவோடும் தொடர்பு நீடித்தது. லீதியாவை திருமணம் செய்து அவளையும் அழைத்துக்கொண்டு இந்தியா செல்ல ஆசை கொண்டார். ஆனால் லீதியாவோ இந்தியாவுக்கு வர மறுத்தாள். இந்தியாவுக்கு இறைபணி செய்யச் செல்வதா? அல்லது இங்கிலாந்தில் இல்லற வாழ்வில் ஈடுபடுவதா? என்ற போராட்டம் ஹென்றிக்குள் எழுந்தது. இந்தியாவா? லீதியாவா? என்று மார்ட்டின் இரண்டு அன்புக்களுக்கிடையில் சிக்கித் தவித்தார். அவர் உள்ளத்தில் உலக மகாயுத்தமே நடந்தது. இந்தியாவா? லீதியாவா? என்று போராடுகையில் உண்மையில் லீதியாவா? ஆண்டவரா? என்றே ஹென்றி போராடினார் என்று பக்தனொருவர் குறிப்பிட்டார்.

லீதியா இல்லாத வாழ்வை நினைத்துப் பார்க்கவே கஷ்டப்படுமளவிற்கு லீதியாவை நேசித்தவர், அதிலும் அதிகமாக ஆண்டவரை நேசித்ததால் லீதியாவுக்குப் பிரியாவிடை; இல்லை, இல்லை தன் காதலுக்குப் பிரியா விடை சொல்லி 1805 ஆம் ஆண்டு ஆங்கிலிக்கன் போதகராக நியமிக்கப்பட்ட ஹென்றி, அதற்கு அடுத்த மாதம் கிழக்கிந்திய கம்பெனியால் சாப்ளின் ஆக நியமிக்கப்பட்டு, தன் இதயத்தில் இடம் பிடித்தவளை இங்கிலாந்தில் விட்டுவிட்டு, இந்தியா நோக்கிப் பயணமானார். இறையழைப்புக்கு இடையூராக வந்த அந்த இளம்பெண்ணை இறைவன்மேல் வைத்த அன்பினிமித்தம் விட்டுவிட்டு இறைபணி செய்ய இந்தியா நோக்கிப் பயணமானார். அழைப்பை நிறைவேற்றப்போகிறோம் என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும் லீதியாவைப் பிரிகிறோமே என்ற துயரம் மறுபுறம் அவரை விட்டு அகலாதிருந்தது.

இந்திய மண்ணில் இறை ஊழியன்

இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த அவர் நான் இப்பொழுது ஆண்டவருக்காக எரிந்து பிரகாசிக்கட்டும் என்று தனது தினக் குறிப்பில் எழுதினார். இந்திய மண்ணில் வந்திறங்கியதும் அருட்பணியின் இன்னொரு கதாநாயகனான வில்லியம் கேரியையும், ஏனைய செரம்பூர் அருட்பணியாளர்களையும் சந்தித்தார். அவர்கள் ஹென்றி மார்ட்டினின் புத்திக் கூர்மையைக் கண்டு வேதாகம மொழிபெயர்ப்பில் ஈடுபடுமாறு இவரை ஊக்குவித்தனர். கிழக்கிந்திய கம்பெனியின் சாப்ளினாக நியமிக்கப்பட்ட ஹென்றி மார்ட்டினின் பொறுப்பு கிழக்கிந்திய கம்பெனியில் தொழில் புரிந்தவர்களினதும் அவர்கள் குடும்பத்தினதும் ஆவிக்குரிய தேவைகளைச் சந்திப்பதாயிருந்தாலும் இவரது இதயம் அருட்பணி ஊழியத்திலேயே இருந்தது. ஆயிரக்கணக்கான ஆசியா நாட்டவர்களுக்கு வேதாகமத்தை மொழிபெயர்த்துக் கொடுக்க பேராவல் கொண்டார். ஐரோப்பியர்களுக்கும் ஆசிய நாட்டவர்களுக்கும் சுவிசேஷத்தை அறிவித்து, பாடசாலைகளையும் ஆரம்பித்துக் கொண்டிருந்த அதேசமயம் இந்துஸ்தானி, பெர்சிய, அரபிக் மொழிகளில் புதிய ஏற்பாட்டை மொழி பெயர்க்கும் நடவடிக்கையிலும் மும்முரமாக ஈடுபட்டார்.

இந்தியா வந்தபின்பும் அவர் லீதியாவை மறந்துவிடவில்லை. ஒருநாள் அவர் லீதியாவோடு பேசிக்கொண்டிருக்கிறார். திடீரென விழித்து, அது கனவு என்று உணர்ந்து அழுதார். லீதியாவோடு கடிதத் தொடர்பு வைத்திருந்த அவர், இந்தியாவுக்கு வந்து, தன்னை மணந்துகொள்ளுமாறு அழைத்தும் லீதியா மறுத்துவிட்டாள். ஆனாலும் அழைப்பை மறந்து இங்கிலாந்துக்குப் போய் இல்லற வாழ்வில் ஈடுபட அவர் விரும்பவில்லை. தனக்கு வேதனையாயிருந்தாலும் ஆண்டவரை வேதனைப்படுத்த விரும்பாத ஒரு தேவ மனிதன் அவர். இந்துஸ்தானி மொழிபெயர்ப்பு அச்சிடுவதற்குத் தயாரான நிலையிலிருக்கையில் தன் சரீர நோயின் மத்தியிலும் பெர்சியாவுக்குச் சென்று பெர்சிய விற்பன்னர்களின் உதவியோடு தன் பெர்சிய மொழி பெயர்ப்பை பூரணப்படுத்தினார்.

1812 இல் ஹென்றி மார்ட்டினின் உடல் நிலை மோசமாகியது. இங்கிலாந்துக்குப்போய் மருத்துவம் செய்வதே இதற்கு ஒரே தீர்வாயிருந்தது. இங்கிலாந்துக்குப்போனால் லீதியாவோடு தன் உறவைப் புதுப்பிக்கவும், ஒரு தருணமாக அது அமையும்; தான் ஆறு வருடங்களாகக் கடிதங்களில் லீதியாவுக்கு விபரித்து வந்த தன் ஊழியம் எப்படிப்பட்டது என்று நேரடியாகவே அவளிடம் சொல்லவும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கும். ஆனால் அச்சந்தர்ப்பம் அவருக்குக் கிட்டவில்லை. 31 வயதுடைய ஹென்றி மார்ட்டின் சின்ன ஆசியாவில் 1812 இல் இறைவனடி சேர்ந்தார்.

இதனை வாசிக்கும் நண்பர்களே! ஆண்டவர் உங்களையும் அருட்பணி ஊழியம் செய்ய அழைத்துள்ளாரா? அவ்வழைப்பை நிறைவேற்ற முடியாதபடி உங்களைத் தடுக்க இடங்கொடுத்துவிட்டீர்களா? பணம், பதவி, பாதுகாப்பு, பாசம் என்று பலதரப்பட்ட லீதியாக்கள் உங்களைத் தடுத்துவிட்டனரா? ஒரு வேளை அருட்பணி ஊழியத்திற்கான அறை கூவல் இந்த அருட்பணியாளனுடைய வாழ்விற்கூடாக இன்று உங்களை வந்துடைந்துள்ளதா? அப்படியாயின் அதற்கு உங்கள் மாறுத்தரம் என்ன? சற்று சிந்திப்பீர்களா?

தொகுத்து வழங்கியவர்: சகோ.பிரேம்குமார், இலங்கை.
சத்தியவசனம்