சகோ.பழனிவேல் ஆபிரகாம்
(ஜனவரி-பிப்ரவரி 2022)
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.34:8).
தாவீது பாடின பாடல்களில் 34 ஆம் சங்கீதம் நமக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். விசுவாசிகள் மிகவும் விரும்பி படிக்கும் சங்கீதமாகும். இந்த சங்கீதத்தின் ஒவ்வொரு வசனமும் வார்த்தைகளும் மிகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் நம்பிக்கை அளிப்பதாகவும் இருக்கிறது. இந்த சங்கீதம் துதியின் பாடல் என்றும் விடுதலையின் பாடல் என்றும் நம்பிக்கையின் கீதம் என்றும் கருதப்படுவதுண்டு.
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்ற தீர்மானத்தோடு இந்த பாடலை ஆரம்பிக்கிறார் தாவீது. கர்த்தரை நாம் எக்காலத்திலும் துதிக்க முடியுமா என்ற கேள்வி அநேகருடைய மனதில் எழுவதுண்டு. ஆனால் தாவீது துன்பநேரமாயிருந்தாலும் மகிழ்ச்சியான வேளையாயிருந்தாலும் உயர்விலும் தாழ்விலும் அது எப்பேர்பட்ட சூழலாயிருந்தாலும் நான் கர்த்தரை துதிப்பேன், அவரை உயர்த்தும் துதி என் வாயிலிருக்கும் என்ற தீர்மானத்தோடு வாழ்ந்தார். தேவனைத் துதிப்பதற்கு சூழ்நிலை ஒரு பொருட்டல்ல என்பதை தாவீதின் அனுபவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம்.
34ஆம் சங்கீதம் பாடப்பட்ட பின்னணியைக் குறித்து தலைப்பிலே இவ்வாறு பார்க்கிறோம்: தாவீது அபிமெலேக்குக்கு முன்பாக வேஷம் மாறினபோது அவனால் துரத்திவிடப்படுகையில் பாடின சங்கீதம் என்று. இதைக் குறித்து 1 சாமுவேல் 21:20-25 வேத பகுதியில் இடம் பெற்றுள்ளது. தாவீது சவுலிடமிருந்து தன் ஜீவனைக் காப்பாற்றிக்கொள்ள காத் தேசத்து இராஜா ஆகீஸிடம் அடைக்கலம் தேடிச் செல்கிறார். அங்கு பெலிஸ்தியர் தாவீதை அடையாளம் கண்டு கொள்கின்றனர். ஆகீஸின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.
தன்னைக் குறித்து பெலிஸ்தியர் அறிந்து கொண்டதினால் மிகவும் பயப்பட்டார் தாவீது. அந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து தப்பித்து வெளிவருவதற்கு வேஷம் மாறி ஒரு பைத்தியக்காரனைப்போல தன்னை ஆகீஸ் ராஜாவினிடத்தில் காண்பித்து அங்கிருந்து தப்பினார்.
இப்படிப்பட்ட பயப்படும்படியான சூழ்நிலையிலும் துரத்திவிடப்பட்ட அனுபவத்திலும் தனது விரக்தியையும், வேதனையையும், அவமானத்தையும் வெளிக்காட்டாமல் கர்த்தர்மேல் தனக்கிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வண்ணம், கர்த்தரை நான் எக்காலத்திலும் துதிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும் என்று பாடினார். கர்த்தரை எக்காலத்திலும் துதிப்பதற்கு காரணம் என்ன? கர்த்தர் நல்லவர் என்பதை தாவீது ருசித்தபடியினால் எந்தச் சூழ்நிலையிலும் அவரைத் துதிப்பேன் என்றார் (வச.10). அவர் இராஜாவான பிறகு தேவனுடைய பெட்டி பல தடைகள் மத்தியில் தாவீதின் நகரத்திற்குள் கொண்டு வந்தபோது, கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று பாடினார் (1நாளா-16:34). தாவீது தான் கடந்துவந்த அனைத்து பாதைகளிலும் உயர்விலும் தாழ்விலும் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்த்தார். ஆகையினால்தான் தேவனே தாவீதைக் குறித்து, என் இருதயத்திற்கு ஏற்றவன் என்று சாட்சிகொடுத்தார். தாவீதின் வாழ்க்கையில் தேவனை எவ்வாறு நல்லவராக ருசித்தார் என்பதை இந்த சங்கீதத்தின் வாயிலாக நாம் தியானிப்போம்.
பயத்தின் மத்தியில் தேவன் நமக்கு நல்லவராக இருக்கிறார்.
நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்குச் செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார் (சங்.34:4). சிங்கத்தையும் கரடியையும் கோலியாத்தையும் வீழ்த்திய தாவீதிற்கும் பயப்படும்படியான சூழ்நிலை வந்தது. ஆனால் தாவீது, நான் கர்த்தரைத் தேடினபோது அவர் என்னை எல்லா பயத்துக்கும் நீங்கலாக்கினார் என்று சாட்சி கொடுக்கிறார். ஒரு பயமல்ல, இரண்டு பயமல்ல எல்லா பயத்திற்கும் அவர் என்னை நீங்கலாக்கி விட்டார்; இனி என் வாழ்வில் பயம் என்பதே இல்லையென்கிறார். காரணம் நாம் ஆராதிக்கிற தேவன் நல்லவர்! அன்பானவர்களே, இப்படியான அனுபவத்தை நம் வாழ்வில் பெற்றிருக்கிறோமா? இவ்வுலக வாழ்க்கையில் உண்மையிலே அநேக பயங்கள் நமக்கு உண்டு; அதை யாரும் மறுக்க முடியாது. நிகழ்காலத்தைக் குறித்தும் எதிர்காலத்தைக் குறித்தும் பயங்கள் உண்டு. நமது குடும்ப வாழ்வில் சில காரியத்தை நினைத்துப் பார்த்தாலே நம்மை அறியாமல் பயம் நம்மை ஆட்கொண்டுவிடும்.
பயம் வேதனையுள்ளது என்றும் அந்த பயத்தோடு நாம் வாழவேண்டிய அவசியமில்லையென்றும் வேதம் கூறுகிறது. தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார் (2தீமோ-1:7). எல்லாவிதமான பயத்திலிருந்து தாவீதை நீங்கலாக்கி இரட்சித்தவர் நமது வாழ்வில் நம்மை வேதனைப்படுத்தும் எல்லா பயங்களுக்கும் விடுவிக்க வல்லவராயிருக்கிறார். எனவே கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பார்ப்போம். அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை (வச.5).
இடுக்கண்கள் மத்தியில் கர்த்தர் நமக்கு நல்லவராயிருக்கிறார்.
இந்த ஏழை கூப்பிட்டான், கர்த்தர் கேட்டு, அவனை அவன் இடுக்கண்களுக்கெல்லாம் நீங்கலாக்கி இரட்சித்தார் (சங்.34:6). இடுக்கண்கள் பொல்லாத மனிதர்களாலும் சத்துருவினாலும் நமக்கு ஏற்படும் அனுபவமாகும். தாவீதின் வாழ்விலும் சத்துருவினால் உண்டான இடுக்கண்கள் அநேகமாயிருந்தது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தாவீது தன்னை தாழ்த்தி கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார். இந்த இடத்தில் பெலவானான தாவீது தேவனிடத்தில் தன்னை ஏழையென்று தாழ்த்துகிறதைப் பார்க்கிறோம். தாழ்மையுள்ளவர்களுக்கு கர்த்தர் கிருபை அளிக்கிறார். தான் சிக்கிக்கொண்டிருந்த இடுக்கண்கள் எல்லாவற்றிலுமிருந்து தேவன் தாவீதை நீங்கலாக்கினார். தாவீதை அவரது இடுக்கண்களிலிருந்து விடுவிக்கும்படியாக தமது தூதனை அனுப்பினார் என்று பாடுகிறார். கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார் (சங். 34:7). இதைப்போன்று தானியேலை விடுவிக்க தேவன் தமது தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார் (தானி.6:22).
இதை வாசிக்கும் அன்பானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலும் எத்தனையோவிதமான இடுக்கண்களில் நாம் சிக்கி தவிக்கிறோம். இவைகளிலிருந்து யார் காப்பாற்ற முடியுமென்று அங்கலாய்க்கிற நம்மை அதிலிருந்து விடுவிக்கிற தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தாவீதைப் போன்று நாமும் நம்மை தாழ்த்தி அவரைக் கூப்பிடும்போது அவர் தமது தூதனை அனுப்பி நமது எல்லா இடுக்கண்களிலுமிருந்து நீங்கலாக்க வல்லவராயிருக்கிறார். ஜனத்தில் சிறுமைப்படுகிறவர்களை அவர் நியாயம் விசாரித்து, ஏழையின் பிள்ளைகளை இரட்சித்து, இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார் (சங்-72:4).
உபத்திரவங்கள் மத்தியிலே தேவன் நமக்கு நல்லவராயிருக்கிறார்.
நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார் (சங்.34:17). உபத்திரவம் இல்லாத வாழ்க்கை என்பது இவ்வுலகில் இல்லை. நமது வாழ்க்கை பயணத்தில் பல விதமான உபத்திரவங்களை நாம் கடந்துசெல்ல வேண்டிய கட்டாயம் உண்டு. எனவேதான் இயேசு கூறும்போது, உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.
தனக்கு நேரிட்ட உபத்திரவங்களில் தாவீது கூப்பிட்டபோது கர்த்தர் கேட்டு, அவரை எல்லா உபத்திரவங்களிலிருந்தும் நீங்கலாக்கிவிட்டார். தனது உபத்திரவத்தின் மத்தியில் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்தார் தாவீது. நமக்கு நேரிடுகிற உபத்திரவங்கள், எதுவாயினும் நாம் திடன் கொண்டு தாவீதைப் போன்று கர்த்தரை நோக்கி கூப்பிடும்போது அவர் அவைகள் எல்லாவற்றிலிருந்து நீங்கலாக்கி இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். அன்று எகிப்திலே இஸ்ரவேல் ஜனங்கள் பட்ட உபத்திரவங்களைப் பார்க்கவே பார்த்து அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டு அவர்கள் படுகிற வேதனைகளைக் கண்ட தேவன் அவர்களை பார்வோனுடைய அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவித்தார். இன்றைக்கு நாம் படுகிற உபத்திரவத்தையும் தேவன் அற்பமாய் எண்ணாமல் அதிலிருந்து நம்மை விடுவிக்கிறார்.
துன்பங்கள் மத்தியில் கர்த்தர் நமக்கு நல்லவராயிருக்கிறார்.
நீதிமானுக்கு வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கும், கர்த்தர் அவைகளெல்லாவற்றிலும் நின்று அவனை விடுவிப்பார் (சங்.34:19). தாவீது கர்த்தரையே நம்பி வாழ்ந்தார். தேவன் தமது கரங்களில் எடுத்து உபயோகப்படுத்துகிற பாத்திரமாயிருந்தார். தாவீதைக் கொண்டு தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு பெலிஸ்தியருக்கு எதிராக மாபெரும் இரட்சிப்பையும் ஜெயத்தையும் ஏற்படுத்தினார். ஆனால், எந்தவொரு காரணமுமின்றி சவுல் தாவீதைப் பகைத்தான். இதைப்போன்று தாவீதை அநேகர் முகாந்தரமின்றி பகைத்தனர். நீதியினிமித்தம் தாவீது துன்பத்தைச் சந்தித்தார். அந்த துன்பத்தின் பாதையில் கர்த்தர் நல்லவர் என்று ருசி பார்த்தார். நீதிமானுக்கும் பரிசுத்தவான்களுக்கும் நேர்மையாக ஜீவிக்கிறவர்களுக்கும் வரும் துன்பங்கள் அநேகமாயிருக்கலாம். ஆனால், அவைகள் எல்லாவற்றிலும் கர்த்தரே அவர்களோடு நின்று விடுவிப்பார் என்று பாடுகிறார் தாவீது. பவுல் அப்போஸ்தலன் தீமோத்தேயுவிற்கு எழுதும்போது, அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவ பக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் (2தீமோ -3:12) என்றார். மேலும் பவுல் தான் பட்ட துன்பங்களைப் பற்றிக் கூறும்போது, இவையெல்லாவற்றினின்றும் கர்த்தர் என்னை நீங்கலாக்கிவிட்டார் என்று சாட்சியாக கூறுவதைப் பார்க்கிறோம் (2 தீமோ.3:11).
எனவே நாம் சென்றுகொண்டிருக்கும் துன்பத்தின் பாதையைக் குறித்து எவ்வளவேனும் கலங்காதபடிக்கு நம்பிக்கையோடிருப்போம். அவர் எல்லாவற்றிலிருந்தும் நம்மை நீங்கலாக்கி விடுவிப்பார். … துன்பப்படவேண்டியது அவசியமானதால், இப்பொழுது கொஞ்சக்காலம் பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிறீர்கள். அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும் (1 பேதுரு 1:6-7).
இவ்வாறு நமது வாழ்வின் அனுபவங்களில் நாம் சோர்ந்து போகாதபடிக்கு தாவீதைப்போல கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்ப்போம்.
சுவிசேஷப் பணியில் கூட்டுறவு!
அமெரிக்கா தேசத்திலுள்ள நெப்ராஸ்காவின் வடபகுதியின் மத்தியில் உள்ள ஒரு சிறு பட்டணத்தில் ஹெர்மன் ஆஸ்ட்ரே என்பவருக்குச் சொந்தமான ஒரு தானியக் களஞ்சியம் இருந்தது. அதற்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டது. அங்கு ஏற்பட்ட ஒரு விரிசலினால் 29 அங்குல தண்ணீருக்குள் அந்தக் களஞ்சியம் இருந்தது. அதன் உரிமையாளர் அதை அங்கிருந்து பெயர்த்து வேறொரு உயரமான இடத்தில் வைக்க விரும்பினார். அதன் எடை 17000 பவுண்டு. அவருடைய மகன் மைக் அந்தக் களஞ்சியத்தின் பக்கவாட்டிலும், உள் பக்கத்திலும் நூற்றுக்கணக்கான கைப்பிடிகளை வைத்து இணைத்தார். பலர் சேர்ந்து அதை ஒருமுறை தூக்கிப் பார்த்தனர். பின்னர் 344 தொண்டர்கள் ஒரே நேரத்தில் ஒத்துழைத்து அந்த 17000 பவுண்டு எடையுள்ள களஞ்சியத்தைத் தூக்கி மெதுவாக கடத்திச் சென்று 143 அடி தூரம் தள்ளி அதற்கென்று அமைக்கப்பட்டிருந்த புதிய மேடையில் வைத்துவிட்டனர். அவர்களில் ஒவ்வொரு வரும் 50 பவுண்டு எடையைத்தான் தாங்கினர். மூன்று நிமிடத்திற்குள் அவர்களுடைய கூட்டுமுயற்சியால் இந்தப் பெரிய வேலையைச் செய்ய முடிந்தது. இதுதான் கூட்டுறவு!
கிறிஸ்துவின் சரீரமாம் திருச்சபையில் நம்மிடம் பல்வேறு வேறுபாடுகள் இருந்த போதிலும், நம்மிடம் ஒற்றுமையும், ஒத்துழைப்பும் இருந்தால் நாம் எவ்வளவு பெரிய காரியங்களைச் சாதிக்க முடியும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! அந்த களஞ்சியத்தின் 17000 பவுண்டு எடையில் நாம் ஒவ்வொருவரும் ஒரு சில பவுண்டு எடையை எடுத்துக்கொள்வோமானால் நம்மாலும் அதைத் தூக்கிச் செல்ல முடியும்.
இதைப்போலவே நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருடைய நற்செய்தியை நம் அயலாருக்கோ, அடுத்த குடும்பத்தில் ஒருவருக்கோ எடுத்துக் கூறுவோமானால், உலகம் முழுவதிலும் கர்த்தருடைய நற்செய்தி எவ்வளவு விரைவாய் பரவ முடியும்! “முப்புரி நூல் சீக்கிரமாய் அறாது” (பிரசங்கி.4:12).