பேராசிரியர் S.C.எடிசன்
(ஜனவரி-பிப்ரவரி 2022)
அதற்கு இயேசு: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6).
இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் சத்திய வசனம் நேயர்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். இயேசு: நானே வழி என்று சொல்லியிருக்கிறார். இருக்கிறவராகவே இருக்கிறேன் என்று பழைய ஏற்பாட்டிலே, யேகோவாவாகிய தேவன் மோசேக்கு தன்னை வெளிப்படுத்தினார். நீ வனாந்தரத்திலே போகவேண்டிய வழியை உனக்கு நான் காட்டுவேன் என்றார். ஒரு மேகஸ்தம்பமும் அக்கினி ஸ்தம்பமும் அவர்களுக்கு வழிகாட்ட அவர்களுக்கு முன்னாக சென்றது. அந்த மேகஸ்தம்பம் எப்படிப் போகிறதோ, அதன் பின்னாக இஸ்ரவேலர் எகிப்திலிருந்து கானானுக்கு போனார்கள். அது தங்குமிடத்தில் இவர்கள் தங்குவார்கள். அது ஒரு நாளோ, ஒரு மாதமோ, ஒரு வருடமோ, அது எழும்பும்வரை, அதையே பின்பற்றுவார்கள். அந்த மேகஸ்தம்பமாய் அவர்களுக்கு இருந்தவர்தான் இன்றைக்கு நமக்கு வழியாய் இருக்கிற இயேசு.
மேகஸ்தம்பம் அவர்களை கானானுக்குள் நடத்தினது. இயேசுவோ, நம்மை பரம கானானுக்குள் அழைத்து செல்லும் வழியாக இருக்கிறார். பிதாவானவர் மோசேக்கு நீங்கள் வனாந்தரத்தில் போகவேண்டிய இடம் இது என்றால் என்ன நடந்திருக்கும்? ஆளுக்கு ஒரு வழியாக சென்று இஸ்ரவேலர் ஒருநாளும் கானானுக்குள் நுழைந்திருக்கவே இருக்கமாட்டார்கள். சிதறிப்போகிற இடங்களில் புறஜாதியாருக்கு பிள்ளைகளாய் இருந்திருப்பார்கள். ஆனால், மேகஸ்தம்பம் ஒன்று அவர்களோடிருந்து அவர்களை வழிநடத்தினபோது கானானுக்குள் பத்திரமாய் போய்ச் சேர்ந்தார்கள். அதேவிதமாக இயேசுவும் பிதாவினிடத்திற்கு போவதற்கு “நானே வழி” என்று சொல்லுகிறார். விசுவாசித்தால் அவரைப் பின்பற்றுவீர்கள். விசுவாசிக்கவில்லையென்றால் நீங்கள் ஆளுக்கொரு தத்துவம் பேசிக்கொண்டு ஆளுக்கொரு நியாயம் கற்பித்துக்கொண்டு உங்கள் வழிகளில் அழிவுக்கு நேராக நடப்பீர்கள்.
சாலொமோன் ஞானி சொல்லுவான்: மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரண வழிகள் (நீதி.14:12). மனிதன் ஒரு வழியில் போகவேண்டுமென்று யோசித்து அவன் செம்மையான வழி இதுதான் என்று நினைத்துப் போவான். ஆனால், அதன் முடிவு பலவிதங்களில் அவன் சீரழிவான். சகோதரனே, ‘நானே வழி’ என்றவரை நாம் இன்றைக்கும் பின்பற்றினால், பரம கானானாகிய மோட்சத்திற்குள் போய் சுகமாய் தங்கியிருப்போம். தோமாவுக்கு ஒரு சந்தேகம் வந்தது, இயேசுவிடம், நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான் (யோவான் 14:5).
காட்டிற்குள் இருந்த ஒரு கிராமத்திலே வசித்து வந்த ஒரு சிறுவன், விளையாடிக்கொண்டே அப்படியே காட்டிற்குள் போனான். அப்பொழுது இருண்டுவிட்டது, சூரியன் மறைந்துவிட்டது, இவனுக்கு வழித் தெரியவில்லை. நிறைய ஒத்தயடித் தடங்கள் இருக்கிறது, அதில் போய் போய்ப் பார்க்கிறான், ஒன்றுமே அவன் கிராமத்திற்கு நேராக வரவில்லை. அங்கு ஒரு வெளிச்சம்கூட இல்லை. அந்த நேரத்திலே ஒருவர் வருகிற சத்தம் கேட்கிறது. விறகு வெட்டி, சுமந்துகொண்டு வந்த ஒருவர் இவனைப் பார்த்து: தம்பி ஏன் அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டார். நான் விளையாடிக்கிட்டே வந்தேன்; வீட்டிற்கு போக வழி தெரியவில்லை என்றான்.
அப்போ அவர் சொன்னார்; நான் உனக்கு வழிச் சொல்லுவேன். ஆனால், நீ கொஞ்சம் தூரம் போகிறதற்குள்ளே எந்த வழியில் செல்லுவதென்று தெரியாமல், மறுபடியும் திசை மாறி போய்விடுவாய். ஆகவே என் பின்னால் வா, நான் போகின்ற இடத்திற்கு நீ வா. நான் உன்னை உங்க வீட்டில் கொண்டு சேர்ப்பேன் என்றார். அந்த சிறுவனுக்கு ரொம்ப சந்தோஷம். சரிங்க ஐயா என்று அவர் பின்னாலேயே போனான். அவருடைய அடிச் சுவடுகளிலேயே காலை வைத்துவைத்து அவன் போனான். அவர் அவனை அவனது வீட்டிற்கு கொண்டு வந்தார். இந்த பையன் நீங்க போங்க, எனக்கு வழியை மட்டும் சொல்லுங்கனு என்று கேட்டிருந்தால் என்னவாயிருக்கும்? இவனால வீட்டிற்கு போய் சேர்ந்திருக்க முடியாது. அதே தான் நாமும் செய்கிறோம். தப்புச் செய்யாம ஒரு வாழ்க்கை வாழனும் அவ்வளவுதானே என்பார்கள். ஆனால், தப்புத்தான் செய்வோம். எல்லா தப்பிதத்திலும் மாட்டி நம்முடைய பரிசுத்தத்தை கெடுத்து, கடைசியிலே நரகத்திற்கு நேராக செல்லுவோம்.
வேதம் சொல்லுகிறது: இரண்டே வழிகள் தான் உண்டு, ஒன்று, ஜீவனுக்கு போகும் வழி. இன்னொன்று, மரணத்திற்கு போகும் வழி. இந்த மரண வழியானது நரகம் செல்லும். ஜீவனுக்கு போகிற வழி மோட்சத்திற்கு செல்லும். இயேசுவானவர் சொன்னார்; “உங்களுக்கு வழியை சொல்லி இருக்கிறேன்; ஆனாலும், என்னைப் பின்பற்றுங்கள்; நான் உங்களுக்கு மாதிரியை வைத்துப் போனேன்” என்றும் சொல்லுகிறார். 1பேதுருவில், அவர் நமக்கு அடிச்சுவடுகளைவிட்டு சென்றிருக்கிறார் என்று பேதுரு சொன்னார். அந்த அடிச்சுவடுகளில் நாம் நடக்கும்பொழுது, அவரிருக்கிற பரலோகத்திற்கு நிச்சயமாக போவோம். எனவேதான், பரிசுத்தமாய் இருங்கள் என்று பேதுரு சொன்னார்.
சகோதரனே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். நீங்களே உங்களுக்கு வழியாய் இருக்கலாம் என்று நினைக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் வழியாய் இருக்கிறீர்களா? நீங்க இயேசுவைப் பின்பற்றினால், உங்கள் பிள்ளைகளும் இயேசுவை பின்பற்றுவார்கள். அவர்களும் பரலோகத்திற்கு வருவார்கள். நீங்கள் உங்கள் சொந்த இஷ்டப்படி வாழ்ந்தால், மனதும் மாமிசமும் விரும்பினவைகளைச் செய்து வாழ்ந்தால், உங்கள் பிள்ளைகளும் அப்படியே செய்வார்கள், அவர்களை இரட்சிக்க ஒருவராலும் கூடாது. எனவே உங்களுக்கு அதிக பொறுப்பு உண்டு. நீங்கள் சரியான வழியைத் தெரிந்தெடுக்கவில்லையென்றால் அநேகரை அழிவுக்குள்ளாய் நடத்திவிடுவீர்கள்.
இதனால்தான், இயேசு சொன்னார்: நானே வழி; என்னைப் பின்பற்று! ஆனால், இயேசுவைப் பின்பற்றும் வழி ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல. லூக்கா.9:23இல் அவர் சொன்னார்: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக் கடவன் என்றார். நான் சுமக்க வேண்டிய சிலுவை என்னவென்றால், என் ஆசை, இச்சைகள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, “ஆண்டவரே, நான் என்ன செய்யவேண்டும்” என்று நான் இயேசுவிடம் கேட்கவேண்டும். அவர் சொல்வதைச் செய்வதுதான் நான் சுமக்க வேண்டிய சிலுவையாகும். சகோதரனே! அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையைத்தான் ஆண்டவர் சொல்லுகிறார்: உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன் கொள்ளுங்கள்; நான் உலகத்தைச் ஜெயித்தேன் என்று. பாடுகளற்ற வாழ்க்கையை இயேசு நமக்கு வாக்கு பண்ணவில்லை. பாடுகளும், உபத்திரவங்களும் நிறைந்த வாழ்க்கையைத்தான் அவர் வாக்குப்பண்ணியிருக்கிறார். ஆனால், பாடுகளுக்குப் பின்னால் ஒரு பெரிய கிருபையும் ஒரு பெரிய ஆசீர்வாதமும் இருக்கிறது. பாடுகளைச் சகிக்கும்பொழுது நாம் பரலோகத்திற்கு பாத்திரவான்கள் ஆகிறோம். லீஸ்திராப் பட்டணத்திலே, பவுலை கல்லெறிந்து செத்துப்போனான் என்று நினைத்து இழுத்துப் பட்டணத்திற்கு வெளியே போட்டார்கள். அவனோ எழுந்திருந்து பட்டணத்திற்குள் வந்திருந்து, சீஷர்களை நோக்கி: அவர்களிடத்தில் நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்திற்குள் பிரவேசிக்க வேண்டும் என்று சொல்லி சீஷருடைய மனதைத் திடப்படுத்தினான்.
இன்றைக்கும் நமக்கும் பாடுகள் உண்டு. இக்காலத்து பாடுகள் இனி வரும் மகிமைக்கு ஒப்பானது அல்ல. ஆகவேதான் பவுல்: இக் காலத்தில் அனுபவிக்கிற இலேசான நம்முடைய உபத்திரவம் மிகுந்த அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது (2கொரி.4:17) என்றார். எனவே உபத்திரவங்களிலே நாம் சோர்ந்து போகா திருப்போம். சகோதரனே, இயேசுவை நீங்கள் பின்பற்ற வேண்டுமென்றால் இது ஒன்றே வழி; வேறு வழியே எதுவும் கிடையாது. ஆகவே, உபத்திரவங்கள், கஷ்டங்கள், பாடுகள், அவமானங்கள். நிந்தைகள் ஆகியவற்றை சகிக்கவேண்டியது அவசியம். இயேசுவுக்காக வாழும்பொழுது இவைகளெல்லாம் நமக்கு வந்து நேரிடும். ஆனாலும், இயேசு கூறுகிறார்: திடன்கொள்ளுங்கள், உலகத்தை நான் ஜெயித்தேன் என்று. ஒன்றும் உங்களை மேற்கொள்ள இயேசு விடமாட்டார். இறுதி வெற்றி நமக்குத்தான். உலகத்தை நேசிக்கிறவர்கள் அழிந்துபோவார்கள். ஆனால், நீங்களோ தேவனோடு பரலோகத்தில் பரம வாழ்வை நீங்கள் அனுபவித்துக் கொண்டிருப்பீர்கள்.
சகோதரனே, இயேசு சொன்னார்: நானே வழி என்று. எதற்கெல்லாம் அவர் வழி? பரலோகத்திற்கு அவர் வழி, பிதாவினிடத்தில் வந்து அவருடைய அன்பை ருசிப்பதற்கு இயேசுதான் வழி. என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6) என்றார். ஆகவே பிதா வினிடத்திற்கு போவதற்கும் அவரே வழி. எனக்கு இரட்சிப்பைக் கொடுப்பதற்கும் இயேசுவே வழி. சிலுவையில் சிந்தின இரத்தத்தால் என் பாவங்களை மன்னித்து. பாவமன்னிப்பாகிய இரட்சிப்பை எனக்கு தந்து, என்னைப் பரிசுத்தப்படுத்துகிறார். இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் என்று 1யோவான் 1:7 ஆம் வசனத்திலே யோவான் சொல்லுகிறார். ஆகவே அவருடைய இரத்தம் எனக்கு இரட்சிப்பைத் தருவதோடு, எனக்குப் பரிசுத்தத்தையும் பரலோக வாழ்வையும் தருகிறது.
அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான். அதற்கு நான்: ஆண்டவனே, அது உமக்கே தெரியும் என்றேன். அப்பொழுது அவன்: இவர்கள் மிகுந்த உபத்திரவத்திலிருந்து வந்தவர்கள்; இவர்கள் தங்கள் அங்கிகளை ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்திலே தோய்த்து வெளுத்தவர்கள் (வெளி.7:13-14) என்றான். இதன் அர்த்தம் என்ன? தங்கள் பாவ அங்கிகளை இயேசுவின் இரத்தத்தில் தோய்த்து, பரிசுத்தம், நீதியின் வஸ்திரத்தை தரித்திருக்கிறார்கள்.
சகோதரனே, உங்களுக்கு இந்த ஆசை உண்டா? பரலோகத்திற்கு செல்லவேண்டும், எண்ணமுடியாத திரளான கூட்டத்தாரோடு சேர்ந்து அந்த முடிவில்லாத சந்தோஷமான திருப்தியான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற ஒரு வாஞ்சை உங்களுக்கு உண்டா? அப்படியானால், இப்பொழுதே உங்களை இயேசுவுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். அவரே இம்மையிலும் மறுமையிலும் உங்களைப் பாதுகாத்து, போஷித்து, கனம் பண்ணி மகிமைப்படுத்த வல்லவர். அவரை பின் தொடருவோருக்கு நித்தியம் நிச்சயம்!