Dr.தியோடர் எச்.எஃப்.
(ஜனவரி-பிப்ரவரி 2022)

கபடற்ற தன்மையின் காலம்

பூமி சிருஷ்டிக்கப்பட்ட காலத்தில் துவங்கி ஏதேன் தோட்டத்திலிருந்து ஆதாமும் ஏவாளும் வெளியேற்றப்பட்ட காலத்தில் இக்காலம் முடிவடைகிறது. இதை ஆதி.1:3-3:13 வரை வாசிக்கிறோம். இது எவ்வளவு காலம் நீடித்திருந்தது என்பதை நாம் அறிகிறோம்.

ஆவிக்குரிய விதத்தில் இதை கண்ணோக்குதல்

இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தல், தேவன் வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார் (ஆதி.1:4,5). இருளின் பிள்ளைகளும், வெளிச்சத்தின் பிள்ளைகளும் வேறு பிரிக்கப்படவேண்டும், ஒருவருக்கொருவர் ஒருபோதும், ஐக்கியம் வைத்துக்கொள்ளக் கூடாது (1தெச.5:5-8; 2கொரி.6:14-18; 1யோவான் 2:8,11). வெளிச்சமும் இருளும் ஒருபோதும் ஒன்றிணைந்து வாழவோ அல்லது ஒருவருடன் முழுமையான ஐக்கியம் வைத்துக்கொள்ளவோ முடியாது. வெளிச்சத்தின் பிள்ளைகள் உலகத்தில்தான் வாழ்கிறார்கள், ஆனால், அவர்கள் உலகத்தாரல்ல, அவர்கள் உலகத்துடன் எவ்விதத்திலும் ஐக்கியம் வைத்துக்கொள்ளக் கூடாது.

சூரிய, சந்திர, நட்சத்திரங்கள்:

ஆதியிலே வானம் சிருஷ்டிக்கப்பட்டது (ஆதி. 1:1). ஆனால், நான்காம் நாள்வரை அது ஒளி கொடுக்கவில்லை (வச.14). வெளிச்சம் உண்டாகக்கடவது என்று தேவன் கட்டளையிட்டது, வெளிச்சத்தைக் கொடுக்கும் சுடர்கள் உண்டாகக்கடவது என்பதாகும். அது வெளிச்சம் அல்ல என்பதே உண்மையான அர்த்தமாகும், வசனம் 3இன்படி வெளிச்சம் முதலாம் நாள் சிருஷ்டிக்கப்பட்டது. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று. முதலாம் நாள் சிருஷ்டிக்கப்பட்ட வெளிச்சம் ஒளியாகும். ஆனால், நான்காவது நாள் கூறப்பட்ட சுடர்களுக்கு எபிரெய மொழியில் மஓர் (Maor) என்று கூறப்படுகிறது. இரண்டு எபிரெயப் பதங்கள் பயன்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டு வெவ்வேறு பொருட்களைப்பற்றி பேசப்படுகிறது என்பது தெளிவாகியது: வெளிச்சம் முதல் நாளிலும் சுடர்கள் நான்காவது நாளிலும் சிருஷ்டிக்கப்பட்டது.

அதேபோன்று கிறிஸ்து ஆதியிலே இருந்தார், பழைய ஏற்பாட்டின் காலம் முழுவதும் அவரது வெளிச்சம் பிரகாசித்துக்கொண்டே இருந்தது. ஆனால், தேவன் திட்டம்பண்ணின காலம்வரை கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்படவில்லை. அது போன்று பரம தேவபிதாவின் குமாரனுக்கு சூரியன் ஓர் முன்னுதாரணமாகக் காணப்படுகிறது. அதாவது குமாரனுடைய வெளிச்சம் மாம்சத்தை ஊடுருவிச் சென்று பாவத்தை வெளிக்கொணர்ந்து, அதை வெறுத்து, பரிசுத்தவான்களின் பாதைக்கு வெளிச்சமாயிருக்கிறது (சங்.119:105). சூரியன் உதயமாகும்பொழுது இருள் அகன்றுபோவது போல தேவகுமாரனும் விடிவெள்ளி நட்சத்திரம் போல நம் உள்ளத்தில் உதித்து, அந்தகாரத்தையும் இருளையும் நீக்கிப்போடுகிறார்.

நான்காவது நாள் சூரிய, சந்திர நட்சத்திரங்களைப் படைத்து உலகிற்கு ஒளிகொடுக்கக் கட்டளையிட்டார்.

சூரியன் ஒளியைத் தயாரிப்பதாகவும் சந்திரன் அந்த வெளிச்சத்தை பிரதிபலிப்பதாகவும், நட்சத்திரங்கள் வெளிச்சத்தை பகிர்ந்தளிப்பவையாகவும் கூறப்படுகிறது. தேவகுமாரனைப்போல சூரியன்தான் ஒளிக்கதிர்களைப் பரவச்செய்து, சந்திரன் மூலம் பிரதிபலிப்பது என்பது திருச்சபையும் கிறிஸ்தவர்களும் இருள் சூழ்ந்த உலகில் கிறிஸ்துவாகிய ஒளியை பிரதிபலிப்பதைப் போன்றது. தனித்தனியே ஒவ்வொரு நட்சத்திரமும் உலகிற்கு ஒளியைப் பகிர்ந்தளிப்பதுபோல ஒவ்வொரு கிறிஸ்தவனும் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஒளியை உலகிற்கு பகிர்ந்தளிக்க வேண்டும். மனுஷர் நம் நற்கிரியைகளைக் கண்டு பரலோகத்திலிருக்கிற தேவனை மகிமைப்படுத்தும்படி நம் வெளிச்சம் அவர்கள் முன்பாக பிரகாசிக்கவேண்டும். பலசமயங்களில் வெளிச்சம் பரவ தடை ஏற்படும். மேகங்கள் ஒளியை மறைக்க நேரிடும். அப்போது நம் மூலம் கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கும்பொழுது நம்மில் காணப்படும் உலகப்பிரகாரமான வாழ்க்கை அவ்வொளியை மறைக்க நேரிடும். ஓர் சுய பூர்த்தியடைந்த சபை தற்பெருமையும், ஆணவமும் கொண்டதாக மாறும்பொழுது, தேவகுமாரனாகிய கிறிஸ்து திருச்சபையைவிட்டு புறம்பாக்கப்படுவதால், அச்சபையால் கிறிஸ்துவாகிய ஒளியை பிரதிபலிக்க முடியாது. வெளிப்படுத்தல் காலத்தில் வாழ்ந்த லவோதிக்கேயா சபையில் காணப்பட்ட இப்பண்புகள் நாம் வாழுகின்ற தற்கால சபைகளிலும் காணப்படுகிறது என்பதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை.

மனிதன்

தேவனின் படைப்பில் மனிதனின் சிருஷ்டிப்பு தேவனின் மிகச்சிறந்த சிருஷ்டிப்பின் கைவண்ணமாகும்.

ஆதாம் கிறிஸ்துவுக்கு முன்னடையாளம். ஏனெனில் அவனுக்கு உலகத்தையும் ஆளும் அதிகாரம் கொடுக்கப்பட்டது. முதல் ஆதாம் தன் ஆளுமையை இழந்தான். ஆனால் கடைசி ஆதாம் அவன் இழந்ததை மீண்டும் பெற வருவார்.

ஆதாம் தனிமையாக விடப்படவில்லை, அவனுக்கு ஏற்றதுணையாக ஏவாள் கொடுக்கப்பட்டாள். அதேபோன்று கிறிஸ்துவும் தனித்து விடப்படவில்லை. அவருக்கு ஊழியத்தில் பங்கு பெற ஏற்றதுணையாக திருச்சபை கொடுக்கப்பட்டுள்ளது (2கொரி.5:18-20).

ஆதாம் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் பொழுது ஏவாள் உருவாக்கப்பட்டாள். அதே போன்று சபை கிறிஸ்துவில் உருவானது. சபை உருவாவதற்கு அயர்ந்த நித்திரையாகிய மரணம், பரிசுத்த ஆவியின் மூலம் இயேசுவுக்கு தேவைப்பட்டது (எபேசி.5:30). ஸ்திரீயின்மீது அதிகாரம் செலுத்த ஆதாமுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. கிறிஸ்து சபைக்குத் தலை. அவரிடமிருந்து அனைத்து ஆணைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும் (எபே.1:22, 5:25-32).

ஏவாள் ஆதாமுடன் ஒன்றாயும், அவனுக்குள் அனைத்திற்கும் உரியவளாயிருந்ததுபோல நாமும் அவருக்குள் ஒன்றாகவும், தலையாகிய அவருக்குள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறோம் (கொலோ.2:9,10).

ஜீவனும் மரணமும்:

அனைத்து ஜீவராசிகளும் ஜீவனோடு இருக்கும்பொழுது தேவன் மரணத்தைக் குறித்து பேசி எச்சரித்தார் (ஆதி.2:16-17). இப்பொழுது அனைத்து மனுக்குலமும் மரணத்தை சந்திக்கும் நிலையில், தேவன் நித்திய ஜீவனைப்பற்றிப் பேசுகிறார் (யோவான் 11:25-26).

சாத்தான் தேவனுக்கு முற்றிலும் எதிரானவன். தனது பொய்யினால் மரணத்தைப்பற்றி தேவன் கூறிய காரியத்தை ஒன்றுமில்லாமல் பொய்யாக்கிவிட்டான். இப்பொழுது மகிமையான சுவிசேஷத்தின் ஒளியைக் காணக்கூடாதபடிக்கு சாத்தான் மக்களின் கண்ளைக் குருடாக்கிப்போட்டான் (2கொரி.3:4,5).

தேவனின் ஓய்வு நாள்

தேவன் ஓய்ந்திருந்த நாளைப் பற்றி ஆதி.2:1-3இல் வாசிக்கிறோம். ஓய்வு என்ற வார்த்தை செய்கிற ஓர் பணியை நிறுத்துவதாகும். நாம் களைப்படையும்பொழுது நாம் செய்யும் பணியிலிருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளும் நமது வழக்கமான ஓய்வைக் குறித்து இங்கு கூறப்படவில்லை. தாம் செய்த பணியாகிய சிருஷ்டிப்பு முற்றுப்பெற்றதால் தம்டைய சிருஷ்டிப்பின் தொழிலை முடித்துக் கொண்டார்.

தேவன் தனது பணியை முடித்தபின்பே தம்முடைய பணியை நிறைவு செய்தார். மனிதன் ஆறாம் நாள் சிருஷ்டிக்கப்பட்டான், பின்பு தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்து மகிழ்ந்து பூரித்தான். இவ்வாறே மனிதனும் தேவனுடைய குடும்பத்தில் தேவபிள்ளையாக மாறும்பொழுது உடனே தேவனுடைய இளைப்பாறுதலுக்குள் பிரவேசிக்க முடியும் (எபி.4:9,10).

மனிதனின் வீழ்ச்சியினால் தேவனுக்குள் இளைப்பாறுதல் முறிவடைந்தது. ஆனால், இயேசு கிறிஸ்துவின் மூலம் அவன் தன் பணியை நிறைவேற்றி முடித்ததால் மீண்டும் சீர்செய்யப்பட்டது அதாவது, மீட்டெடுக்கப்பட்டது (யோவா.17:4; மத். 11:28). இப்பொழுது இயேசு கல்வாரியில் இரட்சிப்பின் வேலையை முடித்ததால் அதில் மனிதன் இளைப்பாற காத்திருக்கிறார்.

திரித்துவ தேவனின் சாயல் முப்பரிமாணங் கொண்ட மனிதனில் பிரதிபலிக்கப்பட்டுள்ளது.

பலவிதங்களில் திரித்துவ தேவனின் சாயல் மனிதனில் பிரதிபலிக்கிறது, ஆனால் மிக முக்கியமாக தமது கவனத்தை ஈர்ப்பது 1தெச. 5:23இல் குறிப்பிடப்பட்டுள்ள மனிதனின் முப்பரிமாணமாகும். நித்திய தேவன் திரித்துவர்; மூன்று ஆள் தன்மையுடையவர். ஆனால் மூன்றில் ஒன்றானவர். தேவத்துவத்தில் காணப்படும் மூன்று பேருக்கும் மூன்றுவித பணிகள் உண்டு. ஆனால், மூவரும் ஒரே தேவன். மனிதனும் சரீரம் – ஆத்துமா – ஆவி என்ற மூன்று பகுதிகளைக் கொண்டவன். இம்மூன்றுக்கும் தனித்தனி செயல்பாடுகள் உண்டு. ஆனால், இம்மூன்றும் சேர்ந்ததே மனிதன்.

சரீரம்:

மனிதனின் சரீரம் களிமண்ணினால் உண்டானது (ஆதி.2:7). இது பவுல் அப்போஸ்தலனால் பூமிக்குரிய கூடாரமாகிய தம்முடைய வீடு என்று கூறப்படுகிறது (2கொரி.5:1). சரீரம் அனைவருக்கும் புலப்படும் பகுதி. இதன்மூலம் உலகத்தோடு தொடர்பு கொள்கிறோம். இது ஆத்துமா வாசம் செய்யும் வீடு (ஆதி.35:18).

ஆத்துமா:

இருதயம், ஆத்துமா என்ற இரு சொற்களும் மாறிமாறி வேதத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆத்துமா தன்னில்தானே ஜீவனுள்ளது. சரீரத் திற்கு உயிரைக் கொடுத்து, சரீரத்தின் மூலம் செயல்படுகிறது. அது தான் நீ – அதாவது சரீரத்தில் அல்லது களிமண்ணில் வாசஞ்செய்யும் ஆள்தன்மை. கூறப்போனால் பிராணிகளுக்கும் ஆத்துமா உண்டு. ஏனென்றால் அவற்றிற்கும் சுயஉணர்வுள்ள வாழ்க்கை உண்டு. ஆனால், மனிதனின் ஆத்துமா அழிவில்லாத ஜீவனைத் தன்னகத்தே பெற்றுள்ளது. ஆனால், பிராணிகளின் ஆத்துமாவில் இத்தன்மை இல்லை. மனிதன் மரிக்கும் பொழுது அவன் சரீரமும் ஆத்துமாவும் பிரிகிறது. சரீரம் ஒன்றுமில்லாததாக மாறி மீண்டும் தான் முதலில் உருவாக்கப்பட்ட களிமண்ணிற்குத் திரும்புகிறது (வசனம் 18).

அன்பு, கவலை, ஆசை இச்சைகள் போன்ற நன்மை தீமையான அனைத்து உணர்வுகளும் ஆத்துமாவில் தோன்றி சரீரத்தின் மூலம் செயலாக்கம் ஆகிறது.

ஆவி:

மனிதனின் ஆவி என்ற பகுதிதான் தேவனோடு தொடர்பு கொள்ளக்கூடியதாக இருக்கிறது (1கொரி.3:1; 6:20; கலா.6:1). தேவனாகிய கர்த்தர் தமது ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதிய பொழுது மனிதன் ஜீவாத்துமாவானான் (ஆதி. 2:7). தேவன் மனிதனில் மனநிம்மதியைப் பெறுவதற்கான வாஞ்சையைக் கொடுப்பதற்காக இறைவனின் மீது நாட்டம் கொள்ளும் ஓர் மனோ வாஞ்சையையும் கொடுத்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் மூலம் இழுக்கப்படும்பொழுது மனிதன் தேவனை வாஞ்சிப்பான் (யோவான் 12:32). ஆனால், இயற்கையாக ஜென்ம சுபாவம் தேவனைத் தேட வாஞ்சிப்பது இல்லை (ரோமர் 3:11).

வேதத்தில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை நம் உள்ளத்தில் வரும்பொழுது, அவர் முற்றிலுமாக நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் ஆட்கொள்ளுகிறார் என்று விசுவாசிக்கிறோம் (யோவான் 7:37-39 ; 1கொரி. 6:19,20).

பரிசுத்த ஆவியானவர் ஓர் மனிதனில் வாசம் செய்யும்பொழுது மாத்திரமே அவனுடைய ஆவி பரிசுத்த ஆவியின் ஒளியைப் பெற்று, ஆவிக்குரிய காரியங்களை அறிந்துகொள்ள முடியும். அவற் றை வியாக்கியானம் செய்யவும் முடியும் (1கொரி. 2:14).

எனவேதான், மறுபிறப்பை அடையாதவனால் ஆவிக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ள முடியாது.

மோசேயினால் வனாந்தரத்தில் உருவாக்கப் பட்ட கூடாரத்தில் முப்பரிணாமத்தை நாம் பார்க்க முடியும். முதலாவது உலகத்தோடு தொடர்புடைய வெளிப்பிரகாரம், இது மனிதனின் சரீரத்திற்கு ஒத்திருக்கிறது. பின்பு பரிசுத்த ஸ்தலம், இது ஜக்கியம் கொள்ளும் ஸ்தலமாகும். இது மனிதனின் ஆத்துமாவிற்கு ஒத்திருக்கிறது. மனிதன் தன் ஆத்துமாவின் மூலம் சர்வவல்லமையுள்ள தேவனுடன் ஜக்கியம் கொள்ளும் ஒரு பகுதியாகக் காணப்படுகிறது. பின் மகா பரிசுத்த ஸ்தலம் காணப்படுகிறது. அங்கு தேவனே வந்து மனிதனுடன் வசிக்கும் கூடாரமாகக் காணப்படுகிறது. இது மனிதனின் ஆவிக்கு அல்லது உள்ளான மனிதனுக்கு ஒத்ததாகக் காணப்படுகிறது. எனவே விசுவாசியின் உள்ளத்தில் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரின் சிம்மாசனமாக அமைந்து நமது ஆத்துமாவையும், சரீரத்தையும் ஆட்கொண்டு அதன் மூலம் ஆளுகை செய்ய விரும்புகிறார்.

மனிதன் பாவத்தில் விழுந்தபொழுது நிகழ்ந்தது என்ன? மனிதனின் ஆவியில் அரசாட்சி செய்த தேவன் புறம்பாக்கப்பட்டார். மனிதனின் ஆவியை அந்தகாரமும், மரணமும் ஆட்கொண்டது. மனிதனின் ஆவியை ஓர் அறைக்கு ஒப்பிட்டார். அந்த அறை இருளடைந்தது என்று கூறலாம். இதே விதத்தில்தான் இஸ்ரவேல் ராஜாக்கள் பாவம் செய்தபொழுது, தேவனுடைய மகிமையான ஷெகினா ஆலயத்தைவிட்டு நீங்கியது. தேவன் தேவாலயத்தை விட்டு வெளியேறினார். இதே நிலைதான் மனிதன் ஆதாமின் மூலம் பாவத்தில் விழும்பொழுது அவனுக்கு நிகழ்கிறது. பரிசுத்த ஆவியாகிய தேவனை, மனிதன் தன் ஆவியை அரசாட்சி செய்து ஆட்கொள்ள அனுமதிப்பது என்பதுதான் மறுபடியும் பிறப்பது ஆகும். இவ்வாறு பரிசுத்த ஆவி மனிதனின் ஆவியின் அரியணையில் அமர்ந்து ஆளுகை செய்யும்பொழுது அவனது ஆத்துமாவையும் முழு சரீரத்தையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர விளைகிறார்.

மனிதனின் வீழ்ச்சி

சோதனை: ஏதேன் தோட்டத்தில் மனிதனுக்கு நேர்ந்த சோதனைகள் மூன்று தன்மைகளைக் கொண்டது. அச்சோதனை அவனுடைய சரீரம், ஆத்துமா, ஆவிக்கு நேரிட்டது, மாம்ச இச்சையைத் தாக்கியது (சரீரம்). மனக்கண்ணாகிய ஆத்துமத்தின் இச்சையைத் தாக்கியது. அவளின் ஜீவனத்தின் பெருமையைத் (ஆவியை) தாக்கியது (1யோவான் 2:16).

ஏவாள் தான் வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டார் (1தீமோ.2:14). அவள் அந்த விருட்சத்தைப் பார்த்தபொழுது அது புசிப்புக்கு நல்லது என்று அறிந்தாள். அவள் சரீர அளவில் சோதிக்கப்பட்டாள். அது பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதுமாயிருக்கிறது என்று சொல்லப்பட்டபொழுது சோதனை அவள் ஆத்துமாவையும், அறிவையும் சோதித்தது. அவள் தேவன் தன் உள்ளத்தில் அரசாட்சி செய்வதில் மனதிருப்தியடையாமல், தேவனைப்போல் தான் மாறவேண்டும் என்று இச்சித்து அவள் ஆவியில் சோதிக்கப்பட்டாள்.

ஏவாள் சோதிக்கப்பட்டதுபோல் அதேவிதத்தில் கிறிஸ்துவும் சோதிக்கப்பட்டார் (எபி.4:16). கல்லை அப்பமாக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டபொழுது, அவர் சரீரத்தில் அல்லது மாம்சத்தில் சோதிக்கப்பட்டார் (லூக்.4:3). நீர் என்னைப் பணிந்துகொண்டால் இவ்வுலகத்தின் சகல அதிகாரத்தையும் ஆளுகையையும் உனக்குத் தருவேன் என்று கூறி சாத்தான், இயேசுவை சோதித்தபொழுது (வச. 6,7) இயேசு ஆத்துமாவிலும், அவரில் அறிவுப் பூர்வமான வாழ்க்கையிலும் சோதிக்கப்பட்டார். உமக்கு எவ்விதமான தீங்கோ, இடறலோ நேரிடாது என்று சாத்தான் கூறியபொழுது, ஆவிக்குரிய பெருமை ஏற்படும்விதத்தில் சோதிக்கப்பட்டார் (வச.9-11).

மனிதனின் வீழ்ச்சியினால் ஏற்பட்ட விளைவுகள்:
மனிதனின் ஆவியை அல்லது இருதயத்தில் ஆவிக்குரிய மரணமும், இருளும் ஆட்கொண்டது (ஆதி.3:7). இதனால் தேவனின் சிம்மாசனம் இருந்து ஆளுகை செய்ய மனிதனின் இருதயம் இருண்ட பகுதியாக மாறியது.

சாபத்தின் ஒரு பகுதியாக மாம்சத்தில் சரீர மரணமும் ஏற்பட்டது (வச.19). அந்த நிமிடத்திலிருந்து சரீரம் அழிந்துபோகும் நிலையை அடைந்தது. அழியாமையைப் பெற்றிருந்த ஆத்துமாவும் தேவனைவிட்டு பிரிந்து சிருஷ்டிப்பின் நீதியையும் இழந்தது.

  • பூமி சபிக்கப்பட்டது (வச.17-19).
  • ஸ்திரீ நியாயந்தீர்க்கப்பட்டாள் (வச 16).
  • சர்ப்பம் சபிக்கப்பட்டது (வச.14).

தேவனால் நியமிக்கப்பட்ட இயற்கை நியதிப் படி அவனவன் செய்த செயலுக்கு ஏற்றபடி ஆதாம் செய்த பாவத்தினால் மரணம் மனுக்குலத்தில் பரம்பரை பரம்பரையாக அனைத்திற்கும் கடத்தப்பட்டது (ரோமர் 5:12-14; கலா.6:7,8).

இவ்வாறு மனிதன் ஆவியில் செத்த தன் வாழ்க்கையைத் தன் வழித்தோன்றல்களுக்குக் கடத்தினான். மனிதன் பாவத்தில் விழுந்து, வீழ்ச்சியுற்ற நிலையில் ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து புசித்து என்றென்றைக்கும் உயிரோடிராதபடிக்கு தம் மிகுந்த இரக்கத்தால் ஏதேன் தோட்டத்திற்குப் போகும் வழியை தேவன் அடைத்துப்போட்டார் (ஆதி.3:22-24).

வீழ்ச்சியின்பொழுது தன்தன் விருப்பப்படி செயல்படும் (Free will) திறனையும் சற்று இழந்துவிட்டான். தன் பழைய நிலைக்கு அவன் திரும்ப இயலவில்லை. தன் சுயமுயற்சியினால் தன்னை இரட்சித்துக்கொள்ள முடியாது (ரோ.9:6). தேவன் ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்ப வேண்டுமென்றே விரும்புகிறார் (2பேது. 3:9). தான் தன் பழையநிலையை அடைவதற்கு சுயமுயற்சியின் பலத்தைப் பயன்படுத்தி அதை அடைய முடியாத நிலையில் அவன் தேவனால் அவர் பக்கம் இழுக்கப்பட வேண்டும் (யோவான் 6:44). தேவன் அவன் இரட்சிக்கப்படவேண்டும் என்ற வாஞ்சையை உருவாக்கவேண்டும். கிறிஸ்து நிறைவேற்றி முடித்த இரட்சிப்பைப் பெற்றுக்கொள்வதற்கான விசுவாசத்தை மனிதனுக்குக் கொடுத்திருக்கிறார் (எபே.2:8,9).

தேவனால் இரட்சிப்பு உண்டாயிருக்கிறது:
மனிதனின் வீழ்ச்சிக்குப்பின், உடனே தேவன் அவனை மீட்டெடுப்பதற்கான முன்னேற்பாடுகளை ஆயத்தம் பண்ணினார் (ஆதி.3:15). அவனை உடனே நியாயந்தீர்ப்பதைத் தவிர்த்து, தற்காலிகமாக அவன் பாவத்தை மறைக்க, மிருகத்தின் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார். இங்கு மிருகத்தின் இரத்தம் சிந்தப்பட்டதைக் குறிக்கிறது (வச.21).

இரத்தம் சிந்துதலின் மூலம் இரட்சிப்பு உண்டாகிறது. இரத்தம் சிந்துதலில்லாமல் பாவமன்னிப்பு உண்டாகாது (எபி.9:22). பழைய ஏற்பாட்டின் காலத்தில் மிருகத்தின் இரத்தத்தினால் பாவப்பரிகாரம் செய்யப்பட்டு மனிதனின் பாவம் நிவிர்த்தி செய்யப்பட்டது. புதிய ஏற்பாட்டில் தேவகுமாரனாகிய இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே ஏகபலியாக ஒப்புக்கொடுத்து தம் இரத்தத்தை சிந்தி மனிதனுக்கு இலவசமாக இரட்சிப்பை உண்டாக்கினார் (ரோமர் 6:23; எபேசி.3:8-10). தேவனால் ஈவாகக் கொடுக்கப்பட்ட அந்த இரட்சிப்பை மனிதன் தன் சுய விருப்பத்தின்படி ஏற்றுக்கொள்ளவோ அல்லது புறக்கணிக்கவோ முடியும் (யோவா.3:16-18).

இவ்வாறு இலவசமாக தேவனால் அருளப்படும் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும்பொழுது அவனுடைய சித்தம் தேவனுடன் இரண்டறக் கலந்து ஒன்றாக ஜக்கியமாகிறது. அந்த நிமிடத்திலிருந்து தன் சுய சித்தத்தின்படி கிரியை செய்யாமல் அவனுடைய சுயசித்தம் தேவனுடைய சித்தமாக மாறிவிடுகிறது. இவ்வாறு தேவனே தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் மனிதனில் உண்டாக்குகிறவராயிருக்கிறார் (பிலி.2:13).

இது, தன் விருப்பப்படி தெரிந்தெடுக்கும் அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதைப் பற்றியதான ஆராய்ச்சிக்கு ஓர் முற்றுப்புள்ளி வைக்கிறது. தேவன் இறையாண்மையுள்ளவர்; அவர் மனிதனை இறையாண்மை உள்ளவனாகவே சிருஷ்டித்தார். தன்னை சிருஷ்டித்த சிருஷ்டிகர்த்தாவிடமே இல்லை என்று தன் சுய விருப்பத்தை அவனால் கூறமுடியும்.

ஆதாம் ஏதேன் தோட்டத்தில் தன் சுயசித்தத்தை அதிகாரத்தைப் பயன்படுத்தி தேவனுக்குக் கீழ்ப்படியாமையைத் தெரிந்துகொண்டான். அதன் விளைவாக அவன் மீண்டும் அத்தோட்டத்திற்குள் நுழையாதபடி அங்கிருந்து வெளியேற்றப்பட்டான். அவனிடத்தில் அவன் சுயசித்தம் மேலோங்கியே இருந்தது. விலக்கப்பட்ட அந்த எல்லைக்குள் அவன் பிரவேசிக்கக் கூடாதபடிக்கு தேவனுடைய ஆணை அவனைத் தடுத்து நிறுத்தியது. தேவன் இப்படிச் செய்ததால் மனிதனின் இறையாண்மையை அவர் நீக்கிவிடவில்லை. இன்றும் மனிதன் தன் சுயசித்தத்தைப் பயன்படுத்தி நன்மையை அல்லது தீமையை, தேவனை அல்லது சாத்தானை தெரிந்தெடுக்கும் உரிமை அவனுக்கு உண்டு.

இரட்சிப்பை தேவன் அருளுகிறார், தன் சுய விருப்பு, வெறுப்பை மனிதன் பயன்படுத்தி அவன் அதை ஏற்றுக்கொள்ளவேண்டும். யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள் (யோசுவா 24:15). கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட் சிக்கப்படுவீர்கள் (அப்.16:31).

ஒருமுறை நாம் இரட்சிப்பை ஏற்றுக்கொள்ளும்பொழுது தேவன் ஏதேன் தோட்டத்தில் கிரியை செய்ததுபோல, அந்த இரட்சிப்படைந்த ஆத்துமா மீண்டும் தான் இழந்த பழைய நிலைக்குத் திரும்பாவண்ணம், வழியை அடைத்துப் போடுகிறார்.

(தொடரும்)

மொழியாக்கம்: Mrs.Jeya Suseelan