ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

ஜூலை-ஆகஸ்ட் 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

கிருபையும் சத்தியமும் நிறைந்தவராயிருக்கிற அன்பின் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

இந்த நாட்கள் வரைக்கும் நம்மை வழிநடத்தி வந்த தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். தேவன் இவ்வூழியத்திற்கு பாராட்டின கிருபைகளுக்காகவும் ஒத்தாசைகளுக்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறோம். சத்தியவசன வானொலி நிகழ்ச்சிகள் தற்போது திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் காலை 6.00 மணிக்கு மத்திய அலைவரிசை MW 1125 Khz இல் ஒலிபரப்பாகி வருவதை வாசகர்கள் கவனத்தில் கொள்ள அன்பாய் கேட்கிறோம்.

அனுதினமும் கிறிஸ்துவுடன் தியானநூல் சென்னை, கோவை, பெங்களுர் ஆகிய நகர்களில் தபாலில் மிகவும் தாமதமாக கிடைப்பதை அநேக பங்காளர்கள் வேதனையுடன் எங்களுக்கு தெரிவித்து வருகின்றனர். இக்குறை நீங்கவும், தபால் அலுவலகத்தினர் உடனுக்குடன் பட்டுவாடா செய்யவும் வேண்டுதல் செய்கிறோம். மற்றும் தியானநூல் தாமதமாக பெறுவோர் தயவுசெய்து தங்கள் தபால் அலுவலகங்களில் எழுத்து மூலம் புகார் செய்ய அன்பாய் கேட்கிறோம்.

இவ்விதழில் கர்த்தருடைய சர்வ வல்லமையைக் குறித்து Dr.உட்ரோ குரோல் அவர்கள் எழுதியுள்ள சிறப்பு கட்டுரை இடம் பெற்றுள்ளது. சகோ.M.S.வசந்தகுமார் அவர்கள் ஆற்றை கடக்கும் அற்புதம் என்ற தலைப்பில் யோசுவாவைக் கொண்டு தேவன் செய்த அற்புத செயல்களைக்குறித்து எழுதியுள்ளார்கள். சகோ.வஷ்னி ஏர்னஸ்ட் அவர்கள் பலவான் கையிலுள்ள அம்புகள் என்ற தலைப்பில் வாலிபர்களுக்கென சிறப்புச் செய்திளை தொகுத்தளித்துள்ளார்கள். சகோதரி சாந்திபொன்னு அவர்கள் முதியோர்களைக் குறித்த இன்றைய கண்ணோட்டத்தைப் பற்றியும் அவர்களை பராமரிக்கிறவர்களுக்கான சிறந்த ஆலோசனைகளையும் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். Dr.தியோடர் எச்.எப் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தைப் பற்றி எழுதியுள்ள பழைய ஏற்பாட்டு வேதபாடமும், சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்கள் உவமைகளிலிருந்து எழுதிய புதிய ஏற்பாட்டு வேதபாடமும், சார்லஸ் ஸ்பர்ஜனின் மிஷனரி வாழ்க்கையும் இடம்பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் வாசகர்களுக்கு ஆசீர்வாதமாக இருக்க ஜெபிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்