சர்வவல்லமையுள்ள கர்த்தர்

Dr.உட்ரோ குரோல்

(ஜூலை-ஆகஸ்ட் 2012)

தேவன் வல்லமையுள்ளவர், சக்திமிக்கவர் பராக்கிரமர் என்றெல்லாம் நாம் அறிவோம். ஆனால் அவர் சர்வ வல்லவர் என்ற கருத்தை அநேக மக்கள் புரிந்துகொள்ளுவதில்லை. ஏனெனில் பராக்கிரமசாலி என்று நாம் கூறும் பொழுது ஒருவரது சரீர பெலத்தையே நாம் கருத்தில் கொள்ளுகிறோம். தேவனுக்கும் நமக்கும் இடையே உள்ள தூரத்தை குறைக்க முயற்சி செய்வதே மனுக்குலத்தின் ஒரு பாவமாகும். ஆனாலும், அவருடைய வல்லமையை எந்த ஒரு சக்தியாலும் குறைக்க இயலாது. விக்கிரக ஆராதனையானது, தேவனை நமது கட்டுப்பாட்டுக்குள் வைக்கும் ஒரு முயற்சியாகும். வல்லமையுள்ள ஒரு தேவன் நமக்கு வேண்டும்: ஆனால் அவர் நம்முடைய விருப்பத்தின்படி இயங்க வேண்டும் என எதிர்பார்ப்பதே மனுக்குலத்தின் பிரச்சனையாகும்.

ஆனால் சத்திய வேதத்தின் தேவனை நம் விருப்பப்படி இயக்க முடியாது. அவருடைய வல்லமையை நிறுத்துவதும், வெளிப்படுத்த வைப்பதும் நம்மால் இயலாத காரியம். தேவன் பெரியவர்; நம்முடைய ஆண்டவர் பெரியவரும் மகா பெலமுள்ளவருமாயிருக்கிறார்; அவருடைய அறிவு அளவில்லாதது (சங்.147:5) என்று பரிசுத்த வேதாகமம் விளக்குகிறது. சத்திய வேதத்தின் ஒவ்வொரு வசனமும் வல்லமையான காரியங்களைச் செய்யும் தேவனுடைய செயலாண்மையைக் காட்டுகிறது. அதன் மூலம் நாம் தேவனுக்கும் நமக்கும் இடையேயான உறவையும், அவரது பார்வையில் நம்முடைய இயலாமையையும் நாம் அறிந்து கொள்ளமுடியும். உங்களுடைய வாழ்வில் தேவன் எவ்வளவு வல்லமை படைத்தவர்? இந்த இதழில் தேவனுடைய வல்லமையை நாம் ஆராய்வோம்.

சிருஷ்டிப்பின் வல்லமை:

தேவனுடைய வல்லமை எனில் அவரது சிருஷ்டிப்பின் வல்லமையே நம் நினைவுக்கு வருகிறதல்லவா? சத்திய வேதாகமத்தில் தேவனுடைய படைப்பின் வல்லமையைக் கூறும் பகுதி ஆதியாகமத்தின் முதலாம் அதிகாரம் என்போம். ஆனால் பழைய ஏற்பாட்டிலுள்ள யோபின் புத்தகத்தின் 26 ஆம் அதிகாரத்தை நாம் வாசிக்கும்பொழுது தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை அதில் விளக்கமாக இருப்பதை நாம் காணலாம்.

அவர் உத்தரமண்டலத்தை வெட்ட வெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார். அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை. அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின் மேல் தமது மேகத்தை விரிக்கிறார். அவர் தண்ணீர்கள்மேல் சக்கர வட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும். அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும். அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப் பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார். தமது ஆவியினால் வானத்தை அலங்கரித்தார்; அவருடைய கரம் நெளிவான சர்ப்ப நட்சத்திரத்தை உருவாக்கிற்று. இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள், அவரைக்குறித்து நாங்கள் கேட்டது எவ்வளவு கொஞ்சம்; அவருடைய வல்லமையின் இடிமுழக்கத்தை அறிந்தவன் யார் என்றான் (வச.7-14).

செய்யுள் நடையில் எழுதப்பட்ட இப் பகுதியில், தேவனுடைய மெல்லிய சத்தத்தை நாம் கேட்கமுடியும், ஆனால் தேவன் வல்லமையாய் முழங்கினால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது என்கிறார் பக்தர் யோபு.

வெட்டவெளியிலே உத்தரமண்டலத்தை விரித்து பூமியை அந்தரத்திலே தொங்க வைக்கிறார் என்று வசனம் கூறுகிறது. தேவனே சகலத்தையும் படைத்தவர் என்பதைத் தெளிவாக நாம் காணலாம். நான் பூமியையும் மனுஷனையும் பூமியின்மேலுள்ள மிருக ஜீவன்களையும் என் மகா பலத்தினாலும் ஓங்கிய என் புயத்தினாலும் உண்டாக்கினேன்; (எரே.27:5) என்று தேவன் கூறுகிறார்.

பரிணாமக்கொள்கையில் நீங்கள் ஒரு வேளை நம்பிக்கை வைத்திருப்பீர்களானால் அது உங்களுடைய தெரிந்தெடுப்பு. ஆனால் வேதாகமத்தை நீங்கள் விசுவாசிப்பீர்கள் எனில் பரிணாமக்கொள்கையாளராய் இருக்க முடியாது. ஏனெனில் காலாகாலமாக சிருஷ்டிப்பு தேவனுடையது என்றே திருமறை பறைசாற்றுகிறது. அதுவே மாறாத உண்மை.

மேலும் அவர் பூமியைத் தமது வல்லமையினால் உண்டாக்கி, பூச்சக்கரத்தைத் தமது ஞானத்தினால் படைத்து, வானத்தைத் தமது பேரறிவினால் விரித்தார் என்று எரேமியா 51:15இல் நாம் வாசிக்கிறோம். இங்கு உயிரியலோ மரபியலோ முக்கியப்படுத்தப்படவில்லை. தேவன் சொன்னார், அது அப்படியே ஆயிற்று என்றே எழுதப்பட்டுள்ளது. தேவனுடைய வல்லமையைப் பற்றி நாம் முதலாவது அறிவது, இவ்வுலகைப் படைத்த அவருடைய உருவாக்கும் வல்லமையே. அது மாத்திரமல்ல, அவர் இந்த உலகைப் பராமரிக்கவும், பாதுகாக்கவும் சர்வ வல்லமை படைத்தவர்.

பராமரிக்கும் வல்லமை:

நாம் மற்றுமொரு பழைய ஏற்பாட்டுப் பகுதியை பார்ப்போம். இங்கே நாகூம் தீர்க்கதரிசி தேவனுடைய வல்லமையையும் அவருடைய சிருஷ்டிப்பின் வல்லமையையும் கூறுகிறார்: கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. அவர் சமுத்திரத்தை அதட்டி, அதை வற்றிப்போகப்பண்ணி, சகல ஆறுகளையும் வறட்சியாக்குகிறார்; பாசானும் கர்மேலும் சோர்ந்து, லீபனோனின் செழிப்பு வாடிப்போகும். அவர் சமுகத்தில் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்துபோகும்; அவர் பிரசன்னத்தினால் பூமியும் பூச்சக்கரமும் அதில் குடியிருக்கிற அனைவரோடும் எடுபட்டுப்போம் (நாகூம் 1:3-5).

இப்பகுதியில் தேவன் தமது படைப்பின் வழியாக செய்யக்கூடிய காரியங்களை தீர்க்கதரிசி விவரித்துள்ளார். இவ்வுலகில் நிகழும் காரியங்கள் அனைத்தும் தேவனுடைய பராக்கிரமத்தையே வெளிப்படுத்துகிறது. ஞானமாய் தாம் படைத்தவற்றை அதே ஞானமாய் பராமரித்தும் பாதுகாத்தும் வர அவர் வல்லமையுடையவர். கர்த்தருடைய வழி சுழல் காற்றில் இருக்கிறது அவர் அதட்டுகிறார். தம்மைச் சுற்றிலும் உள்ளவற்றை வற்றிப்போகச் செய்கிறார், வறட்சியாக்குகிறார். தேவன் சமுத்திரத்தின் மேலும் அதிகாரம் உடையவராய் இருக்கிறார். சமுத்திரமும் அவருக்குக் கீழ்ப்படிகிறது. செங்கடலின் நீரை அவர் அதட்டியபோது அது பிளந்து, இஸ்ரவேல் மக்கள் உலர்ந்த தரை வழியாக நடந்து செல்ல வழி உண்டானது. கடலை அவர் அதட்டுகிறார். அதற்குக் கட்டளையிடுகிறார். இதுதான் தேவவல்லமை!

வசனம் 5இல் பர்வதங்கள் அதிர்ந்து மலைகள் கரைந்து போகிறது என்று நாம் வாசிக்கிறோம். காற்றில் நெற்கதிர்கள் அலை போல அசைவது போல உலகம் அசைவதுதான் பூமியதிர்ச்சி என்கின்றனர். மலைகள் கரைவது என்பது அவை உருகி காணாமல் போவதை அல்ல, அவை இடிந்து போவதையே குறிக்கும். கூம்பு ஐஸ்கிரீமை ஒரு பாத்திரத்தில் போட்டு விட்டு ஒருமணி நேரம் கழித்து அதைப் பார்த்தால் ஐஸ்கிரீம் அப்பாத்திரத்தில் இருக்கும்; ஆனால், அதன் உருவம் குலைந்து போயிருக்கும் அல்லவா? அதுபோலவே புவியதிர்ச்சியில் மலைகள் உருமாறியிருக்கும் என்கிறார்.

தேவன் உலகை எவ்வாறு படைத்தார் என்பதை நம்மால் விளங்கிக்கொள்ள முடியுமா? அது கடினமானதே. நமது அறிவு குறைவானது. ஏனெனில் அவர் சொன்னார் அவை உண்டாயிற்று என்று பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். இதை அறிவியல் மூலமாகவும், நம்மால் விளங்கிக்கொள்ள முடியாது. அதுபோலவே இந்த உலகத்தை அவர் பராமரிக்கும் விதமும் நமது அறிவுக்கு அப்பாற்பட்டது. தேவன் உலகை சிருஷ்டிக்க மட்டுமல்ல, அதனை பராமரிக்கவும் வல்லமையுள்ளவர் என்று நாம் அறிவோம். இனி, நம்முடைய வாழ்வில் தேவனுடைய வல்லமை எவ்வாறு வெளிப்படுகிறது என நாம் ஆராய்வோம். அவர் உலகத்திற்கு என்ன செய்தார் என்பதல்ல, உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் அவரது வல்லமையை அறிந்திருக்கிறீர்களா?

இரட்சிப்பின் வல்லமை:

உலகைப் படைக்க மாத்திரமல்ல, தேவனுக்கு விரோதமாக இவ்வுலகம் பாவம் செய்தபொழுது, அந்த பிரச்சனையைத் தீர்க்கவும் அவர் வல்லமையுள்ளவராயிருந்தார். அவர் சிருஷ்டிகர்த்தர், பராமரிப்பவர் மாத்திரமல்ல; இரட்சிக்கும் தேவனும் ஆனவர். தேவ வல்லமை என்னுடைய வாழ்விலும் எனது தேவையிலும் இடைபடும்பொழுது என்னுடைய பாவத்திலிருந்து என்னை விடுவிக்க வல்லமையுள்ள தேவன் ஒருவர் உண்டு என்று நான் சாட்சி கூறமுடியும். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தம்முடைய ஜனங்களான இஸ்ரவேலரை மீட்ட நிகழ்வை நாம் யாத்.15:6,7 என்ற பகுதியில் வாசிக்கிறோம். செங்கடலைக் கடந்தபின்னர் மோசே கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பலத்தினால் மகத்துவம் சிறந்திருக்கிறது; கர்த்தாவே, உம்முடைய வலதுகரம் பகைஞனை நொறுக்கிவிட்டது. உமக்கு விரோதமாய் எழும்பினவர்களை உமது முக்கியத்தின் மகத்துவத்தினாலே நிர்மூலமாக்கினீர்; உம்முடைய கோபாக்கினியை அனுப்பினீர், அது அவர்களைத் தாளடியைப் போலப் பட்சித்தது. என்று பாடினார். இதுவே இரட்சிப்பு, இதுவே தேவனுடைய மீட்பின் வல்லமை. வேதாகமம் முழுவதையும் நீங்கள் வாசித்தீர்களானால் தம்முடைய பிள்ளைகளை இக்கட்டான பலவித சூழ்நிலைகளிலிருந்து தேவன் மாத்திரமே விடுவித்த நம்பமுடியாத அநேக நிகழ்ச்சிகளை நாம் காணமுடியும்.

மரியாள் கர்ப்பவதியானதை அறிந்த யோசேப்பு, அக்குழந்தைக்கு தான் தகப்பனாக முடியாது என்று தெரிந்ததும் மிக எளிதாக தள்ளுதற்சீட்டைக் கொடுத்து விலக்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யாமல் தடுத்தது தேவனுடைய இரட்சிப்பின் வல்லமையாகும். யோசேப்பு மரியாளை விவாகம் பண்ணாதிருந்தால், மரியாளுக்கு ஓர் அவப்பெயரும், தவறான வழியில் பிறந்த குழந்தையாக இயேசுவும் கருதப்பட்டிருப்பார். தேவாதி தேவனின் இரட்சிப்பின் திட்டம் நிறைவேறியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் தேவன் தமது அநாதி திட்டத்தை ஆச்சரியமாய் நிறைவேற்றினார்.

தண்ணீரைப் பிளந்து ஜனங்கள் நடந்து செல்ல வழியுண்டாக்கியது மாத்திரம் இரட்சிப்பின் வல்லமையல்ல; பெத்லெகேமிலுள்ள இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஏரோது கொல்லும்பொழுதும் தேவனுடைய இரட்சிப்பின் வல்லமை காணப்பட்டது. மரியாளையும் யோசேப்பையும் எகிப்துக்குச் செல்ல ஏற்கனவே தேவன் எச்சரித்துவிட்டார். குழந்தை இயேசு மரணத்திலிருந்து தப்பினார். கல்வாரி சிலுவையில் தமது மரணத்தை எதிர்கொள்ளவிருந்த சில மணி நேரங்களுக்கு முன்னர் அவர் கெத்செமனே தோட்டத்தில் தமது பிதாவை நோக்கி கண்ணீருடன் ஜெபித்தார்: பிதாவே உமக்கு சித்தமானால் இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கும்படி செய்யும். ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல; உம்முடைய சித்தப்படியே ஆகக்கடவது. இதுவே அவரது இரட்சிப்பின் வல்லமை!

சிலுவை மரணத்திலிருந்து இயேசுவை நீக்கிவிட்டால், பிசாசு வெற்றி பெற்றிருப்பான். ஆனால் தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் தோல்வியடையுமா? இன்று, நேற்றல்ல, வரலாற்றின் துவக்கமுதலே தேவனுடைய வல்லமை அவரது ஜனங்களை இரட்சித்துக் கொண்டே வந்துள்ளது. இயேசு பிறப்பதற்கும், அவர் பூரண பலியாவதற்கு பாவமில்லாத வாழ்வு வாழவும், மூன்றாம் நாளில் உயிரோடு எழும்பவும், தமது பிதாவினிடத்துக்கு ஏறிப் போகவும், நமக்காக பரிந்து பேசவும் அவருடைய வல்லமையே உதவியது.

தேவனுடைய வல்லமை அவருடைய செயலில் மாத்திரமல்ல, அவருடைய அளவிட முடியாத ஞானத்திலும் வெளிப்படுகிறது. ….அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல், குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே (1பேதுரு 1:18,19). ஆம், இவை யாவும் தேவனுடைய இரட்சிப்பின் வல்லமையினாலேயே நடந்தது.

நான் ஐந்து வயது சிறுவனாக இருந்த பொழுது தேவனுடைய இரட்சிப்பின் வல்லமையை அறிந்துகொண்டேன். அது என்னுடைய வாழ்க்கையை மாற்றியது. இன்றும் நான் இரட்சிக்கப்பட்டவனாக வாழ்கிறேன் என்றால் அது எனது ஞானத்தினாலோ பெலத்தினாலோ அல்ல, அது தேவனுடைய ஞானத்தையும் வல்லமையையுமே சார்ந்துள்ளது. தேவனுடைய சிருஷ்டிப்பின் வல்லமை, அவரது இரட்சிப்பின் வல்லமையைக் கொண்டுவருகிறது. நான் இரட்சிப்பின் வாழ்வில் தொடர்ந்து வாழ, வளர அவரது பராமரிப்பின் வல்லமை உதவுகிறது. நான் சோதனையில் விழாமல் பாவத்தின் பிரசன்னத்துக்கு நீங்கி, நித்திய வீட்டை அடையும்வரை தேவன் தம்முடைய வல்லமையினால் நடத்தி வருகிறார்.

தேவன் எனக்குப் பலத்த அரணானவர்; அவர் என் வழியைச் செவ்வைப்படுத்துகிறவர் (2சாமு.22:33) என்று தாவீது கூறுகிறார். தாவீது செவ்வையானவரா? நிச்சயமாக இல்லை என்பதை நாம் அறிவோம். தேவனுடைய வல்லமையானது குறைவுள்ள தனக்கு தேவன் ஒரு பூரணமான எதிர்காலத்தை வைத்திருக்கிறார் என்பதையே அவர் இவ்வாறு கூறுகிறார். தேவன் தம்முடைய பிள்ளைகளை இரட்சிப்பது மாத்திரமல்ல, அவர்களைத் தொடர்ந்து காப்பாற்றியும் வருகிறார். தேவன் இவ்வுலகை சிருஷ்டித்துவிட்டு, அதனைக் காப்பாற்ற சக்தியில்லாமையால் கைவிட்டுவிட்டார் என யாராவது கூறினால் அதனை ஒரு வினாடி கூட நம்பாதீர்கள். ஒருசிலர் இத்தகைய நம்பிக்கை உடையவர்களாயிருக்கிறார்கள். தேவனால் உலகைக் காப்பாற்ற இயலவில்லை எனில், அது தேவனுடைய சக்தியல்லவே. சத்திய வேதத்தின் தேவன் அப்படிப்பட்டவரல்லர்.

உயிர்த்தெழுதலின் வல்லமை

பரி.பேதுரு தேவனைப் பற்றிக் கூறும் பொழுது, இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்ததினாலே ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி அவர் நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார். நாம் விசுவாசத்தைக்கொண்டு தேவனுடைய பலத்தினாலே காக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுகிறார். உலகை உருவாக்கி அதனை இரட்சித்த அதே வல்லமைதான் நம்மையும் மகிமைக்குள் கொண்டு செல்லும்வரை நம்மைக் காத்து வருகிறது. என்னுடைய தாத்தா, பாட்டி இன்று உயிருடன் இல்லை. அதற்காக தேவனுக்கு மரணத்தைத் தடுக்க வல்லமையில்லை என்று சொல்லி விடலாமா? நம்முடைய அனுபவத்தைக் கொண்டு தேவனை எடைபோடுவது மிக மோசமான காரியம்.

பாவத்தின் மீதும் மரணத்தின் மீதும் தேவனுக்கு வல்லமையுண்டு. இதுவே அவரது உயிர்த்தெழுதலின் வல்லமை. இயேசு கிறிஸ்துவின் மரணமானது பிசாசின் வல்லமையையும் அவனது கருவியான மரணத்தின் வல்லமையையும் அழித்துப் போட்டது. மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,… என்று எபிரெயர் 2:14 நாம் வாசிக்கிறோம். எனவேதான் அப்போஸ்தலர் பவுல் கொரிந்தியர் முதலாம் நிருபத்திலே மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? மரணத்தின் கூர் பாவம், பாவத்தின் பெலன் நியாயப்பிரமாணம். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (1கொரி.15:55-57) என்று கெர்ச்சிக்கிறார். இதுவே உயிர்த்தெழுதலின் வல்லமை!

உங்களுக்கு மரணம் இல்லை என்று தேவன் வாக்குப்பண்ணவில்லை. ஆனால் நித்திய வாழ்வு உண்டு என்று வாக்களித்திருக்கிறார். பாவம் நமது வாழ்வை பாதிக்கும் பொழுது, பாவத்தின் சம்பளம் மரணம் நமக்கு நியமிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த மரணத்திலிருந்து தேவன் நம்மை உயிர்ப்பிக்க வல்லவர். தேவனுடைய வல்லமையானது அவர் மாத்திரமே உங்கள் வாழ்வில் செய்யக்கூடிய காரியங்களுடன் தொடர்புடையது.

பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் மிகச் சிறந்த பேராசிரியர்களுள் ஒருவர் இராபர்ட் டிக் வில்சன். அவர் ஏறக்குறைய பன்னிரண்டு மொழிகளில் பேசும் திறமை வாய்ந்தவர். அக்கல்லூரியில் படித்த பழைய மாணவர் ஒருவர் பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டுமாக அக்கல்லூரியின் ஆலயத்தில் பேசுவதற்கு வாய்ப்பினைப் பெற்று அங்கு வந்தார். இராபர்ட் டிக் வில்சன் அந்த ஆலயத்துக்கு அவரை அழைத்துச் சென்றார். செய்தி முடிந்தபின்னர் அவர் அவ்விளைஞனைப் பாராட்டிவிட்டு மீண்டும் ஒருமுறை வந்து செய்தி கொடுக்க அழைப்பு விடுத்தார். அவ்விளைஞரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். நான் ஒரே ஒருமுறை மட்டுமே எனது மாணவர்களின் செய்தியைக் கேட்பதுண்டு. அவர்கள் தேவனைப் பற்றிக் கொடுக்கும் செய்தியை அறியவே வருவேன். அம்மாணவன் வல்லமையான ஒரு தேவனைப் பற்றிய பிரசங்கத்தைக் கொடுத்தபடியால் பேராசிரியரான என்னுடைய கடமை முடிந்தது என்று இராபர்ட் டிக் வில்சன் கூறினார்.

அன்பானவர்களே, நீங்கள் விசுவாசிக்கும் தேவன் எப்படிப்பட்டவர்? சில காரியங்களை மட்டுமே செய்யவல்லவரா? அவர் அனைத்தையும் செய்யும் சர்வ வல்லவரா? வேதாகமத்தை ஆராய்ந்து படியுங்கள். உங்களுடைய கற்பனைக்கும் மேலான ஒரு சர்வ வல்ல தேவனைக் கண்டுகொள்ளுவீர்கள். சர்வ வல்ல தேவனை நாம் அறிந்துகொள்ள, நம்மைத் தெரிந்துகொண்ட தேவனுக்கு நமது துதி, கனம், மகிமையை செலுத்துவோமா?

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்