ஆற்றைக் கடக்கும் அற்புதம்

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(ஜூலை-ஆகஸ்ட் 2012)

யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய அற்புத செயல் காரணமாக யோர்தான் நதியைக் கடந்து வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்வதை யோசுவா மூன்றாம் அதிகாரம் அறியத்தருகின்றது. யோசுவாவைப் பொறுத்தவரை, இது அவன் இஸ்ரவேல் மக்களின் தலைவனாகிய பின்பு தேவன் செய்த முதலாவது அற்புதமாக உள்ளது. இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதிக்குக் கிழக்கே ஆறு மைல்கள் தொலைவில் சித்தீம் என்னும் பட்டணத்தில் இருந்தனர் (யோசு.3:1). அச்சமயம் அவர்கள் வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்வதற்குப் பெருந்தடையாக யோர்தான் நதி இருந்தது. இது அக்காலத்தில் கடக்கமுடியாத அளவு அதிக ஆழமும் அகலமும் உள்ள நதியாக இருந்தது. ஏனெனில், இஸ்ரவேல் மக்கள் ஆற்றைக் கடந்த காலம் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காலமாகும். யோர்தான் அறுப்புக்காலம் முழுவதும் கரைபுரண்டுபோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது (யோசு.3:15). அச்சமயம் இந்நதி அரை மைல் அகலமும் 150 அடிகள் ஆழமுமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பின்மாரிகால கடும் மழையும், வடபகுதியி லுள்ள எர்மோன் என்னும் மலையிலுள்ள பனி உருகுவதனால் வரும் அதிகளவு தண்ணீரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாத அறுவடை காலத்தில் இந்நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்களாய் இருந்தன. எனவே, இந்நதி அக்காலத்தில் கடக்கமுடியாத பெருந்தடையாகவே இருந்தது. இது கடினமான பணியாக அல்ல, செய்யமுடியாத காரியமாக இருந்தது. இஸ்ரவேல் மக்கள் இந்நதியை வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காலத்தில் கடந்துசென்ற சம்பவம், மனிதரால் செய்ய முடியாததைத் தேவனால் செய்யமுடியும் என்பதைக் காண்பிக்கும் சரித்திரக் குறிப்பாய் உள்ளது. இதைப்போலவே நம் வாழ்விலும் நாம் பல சந்தர்ப்பங்களில் இந்நதியைப் போன்ற கடக்க முடியாத பெருந்தடைகளைச் சந்திக்கின்றோம். ஆனால் நம்மால் செய்ய முடியாத காரியங்களைச் செய்யக்கூடிய தேவன் நம்மோடு இருப்பதனால், எத்தகைய கடலையும் நாம் கடந்து செல்வதற்கான பாதையை அவர் நமக்கு ஏற்படுத்திக் கொடுப்பவராக இருக்கின்றார். இது எப்படி சாத்தியமாகும் என்பதை யோசுவா மூன்றாம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் அற்புதச் சம்பவம் நமக்கு அறியத் தருகின்றது.

யோசுவாவின் தலைமையில் இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்துசெல்வதை அறியத்தரும் மூன்றாம் அதிகாரத்தை நாம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற் பகுதியில் இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடப்பதற்கு மூன்று நாட்கள் அந்நதியின் கரையில் காத்திருக்கின்றனர் (யோசு.3:1). இது இஸ்ரவேல் மக்களுடைய பிரயாணத்தின் ஆரம்பச் செயலாக உள்ளது. இரண்டாவது பகுதியில், அதாவது 2 முதல் 6 வரையிலான வசனங்களில் அவர்கள் யோர்தான் நதியைக் கடப்பதற்காகச் செய்த மூன்று காரியங்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அவர்களது பிரயாணத்தின் ஆயத்தச் செயல்களாக உள்ளன. மூன்றாவது பகுதியில், அதாவது 7 முதல் 17 வரையிலான வசனங்களில் இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்காகத் தேவன் செய்த அற்புதத்தின் மூன்று நல்ல காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

1. மூன்று நாட்கள் காத்திருத்தல் – பிரயாணத்தின் ஆரம்பம் – யோசுவா 3:1

2. மூன்று நடைமுறைக் காரியங்கள் – பிரயாணத் திற்கான ஆயத்தம் – யோசு. 3:2-7

3. மூன்று நல்ல காரணங்கள் – பிரயாணத்தின் அற்புதம் – யோசு. 3:7-17

வாக்குத்தத்த தேசத்தைக் கைப்பற்றுவதற்கான யுத்தத் திட்டங்களை வகுப்பதற்கு அவசியமான விஷயங்களை அறிந்துவருவதற்காக இரண்டாம் அதிகாரத்தில் அனுப்பப்பட்ட இரண்டு வேவுகாரர்களும் திரும்பி வந்தவுடன் யோசுவா தாமதிக்காமல் முதலாம் அதிகாரத்தில் தேவன் கொடுத்த கட்டளையின்படி, அதாவது …இந்த யோர்தானைக் கடந்து, இஸ்ரவேல் புத்திரருக்கு நான் கொடுக்கும் தேசத்துக்குப் போங்கள் (யோசு.1:2) என்னும் அறிவுறுத்தலின்படி, சித்தீம் என்னும் இடத்தில் இருந்த இஸ்ரவேல் மக்களை யோர்தான் நதிக்கரைக்கு அழைத்துச் சென்றான். இதை அறியத்தரும் விதத்தில் மூன்றாம் அதிகாரம் ஆரம்பமாகின்றது:

அதிகாலமே யோசுவா எழுந்திருந்தபின்பு, அவனும் இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் சித்தீமிலிருந்து பிரயாணம்பண்ணி, யோர்தான்மட்டும் வந்து, அதைக் கடந்துபோகுமுன்னே அங்கே இராத் தங்கினார்கள் (யோசுவா 3:1).

யோசுவா அதிகாலையில் எழுந்திருந்தது, அவனும் இஸ்ரவேல் மக்களும் யோர்தானைக் கடந்து வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்வதற்கு அதிக ஆவலுடனும் ஆயத்தத்துடனும் அவசரத்துடனும் இருந்துள்ளதை அறியத் தருகிறது. உண்மையில், யோசுவா தாமதிக்காமல் விரைவாகச் செயல்படும் மனநிலையில் இருந்துள்ளான். இதைப்போலவே தேவனுடைய காரியங்களைச் செய்வதில் நாமும் ஆர்வமுள்ளவர்களாக இருக்கவேண்டும். இன்று செய்யவேண்டிய காரியங்களை நாளை செய்யலாம் என்னும் மனநிலையில் இராமல், அதை இப்பொழுதே செய்து முடித்துவிட வேண்டும் என்னும் ஆவலுடனும் அவசரத்துடனும் நாம் இருக்கவேண்டும். ஏனெனில் இன்று நாம் இழந்துபோகும் அல்லது வீணாக்கும் சந்தர்ப்பங்கள் நாளை நமக்கு கிடைக்காமல் போய்விடும். எனவே கர்த்தருக்காக இன்றே நாம் செயற்பட வேண்டும்.

மூன்று நாள் சென்ற பின்பு என்று இரண்டாம் வசனம் ஆரம்பமாவதனால், இஸ்ரவேல் மக்கள் மூன்று நாட்கள் யோர்தான் நதிக்கரையில் இருந்துள்ளதை அறிந்துகொள்கின்றோம். அக்காலத்தில் யோர்தான் நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடியதினால், எப்படி நதியைக் கடப்பது என்பதை அறியாதவர்களாக யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் மூன்று நாட்கள் ஆற்றங்கரையில் இருந்துள்ளனர். எனினும், எப்படி ஆற்றைக் கடப்பது என்பதை அவர்கள் அறியாதவர்களாக இருந்தாலும், எப்படியும் ஆற்றைக் கடப்போம் என்னும் நம்பிக்கையுடன் அவர்கள் ஆற்றங்கரையில் இருந்துள்ளதைத் தொடர்ந்து வரும் வசனங்கள் அறியத்தருகின்றன. இதனால்தான், ஆற்றைக் கடக்கும் தங்களுடைய பிரயாணத்தை ஆரம்பித்த அவர்கள், அதற்கான ஆயத்த செயல்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் செய்கின்றனர். இதைப் போலவே, யோர்தானைப் போல கடக்க முடியாத தடைகள் நம்முடைய வாழ்வில் வரும்போது தேவன் எப்படி நம் வாழ்வில் செயல்படுவார் என்பதை நாம் அறியாதிருந்தாலும், அவர் எப்படியும் நம் வாழ்வில் செயல்படுவார் என்னும் நம்பிக்கையுடன் நாம் இருக்கவேண்டும். அப்பொழுது அவர் அற்புதமாக நம்முடைய வாழ்வில் செயல்படுவதை அறிந்து கொள்வோம்.

இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதிக்கரையில் காத்திருந்த மூன்று நாட்களும் அவர்கள் அந்த ஆற்றின் நிலைமையை அறிந்து கொள்ளும் காலமாகவும், அதைக் கடப்பதற்கு தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பமாகவும் இருந்தது. அச்சமயம் யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியதனாலும், அது ஏறக்குறைய அரை மைல் அளவு அகலமுடையதாக இருந்ததினாலும், தங்களால் சுயமாக அதைக் கடக்கமுடியாது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். தேவன் முதல் நாளிலேயே அவர்கள் யோர்தான் நதியைக் கடப்பதற்கான பாதையை உருவாக்கவில்லை. ஏனெனில், மக்கள் தங்களுக்கு முன் இருக்கும் தடை எவ்வளவு பெரியது என்பதை அறிந்துகொள்ள வேண்டியவர்களாக இருந்தார்கள். இதைப்போலவே, நாம் நெருக்கடியான சூழ்நிலைகளில் இருக்கும் போது நமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை எவ்வளவு பெரியது என்பதை நாம் அறிந்து கொள்ளும்வரை தேவன் மவுனமாக இருப்பது வழக்கம். அவர் உடனடியாக அற்புதம் செய்தால் நம்முடைய பிரச்சனை எவ்வளவு பெரியதாய், மனிதரால் தீர்க்கமுடியாததாய் இருந்தது என்பதை நாம் அறிந்துகொள்ள மாட்டோம். அதுமாத்திரமல்ல, பிரச்சனையை நம்மால் சுயமாகத் தீர்க்கமுடியாது என்பதை அறிந்து கொள்ளாதவரை, நமக்கு தேவனுடைய உதவி தேவை என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளமாட்டோம். இதனால் நமது நெருக்கடியான சூழ்நிலையை முழுமையாக அறிந்து கொண்டு, நம்மால் எதுவும் செய்யமுடியாது என்பதையும், நமக்குத் தேவனுடைய உதவி தேவை என்பதையும் உணர்ந்து அவரிடம் சரணடையும்வரை அவர் மவுனமாக இருக்கின்றார். எனவே, தேவன் மவுனமாக இருக்கும் காலத்தில் நம்முடைய பிரச்சனையைப் பற்றி மனக்குழப்பமும் கலக்கமும் அடையாமல் தேவன் நிச்சயமாய் நம்முடைய வாழ்வில் இடைபடுவார் என்னும் நம்பிக்கையுடன் நாம் பொறுமையாக இருக்கவேண்டும்.

யோர்தான் நதியை எப்படி கடப்பது என்பதை அறியாதவர்களாக நதிக்கரையில் மூன்று நாட்கள் இஸ்ரவேல் மக்கள் தங்கியிருந்தாலும், அவர்கள் ஆற்றைக் கடப்பதற்குத் தேவன் எப்படியும் உதவி செய்வார் என்னும் நம்பிக்கையுடன் இருந்தனர். இதனால்தான் காத்திருந்த காலத்தில் எவரும் அவிசுவாசத்தினால் முறுமுறுக்கவுமில்லை, அதைரியமடையவும் இல்லை. அவர்கள் பொறுமையுடன் காத்திருந்தனர். ஆற்றைக் கடக்கமுடியாத நிலையில் இஸ்ரவேல் மக்கள் இருந்தாலும் அவர்கள் தேவனுடைய வழிநடத்துதலுக்காகக் காத்திருந்தனர். இதைப் போலவே நாமும் யோர்தான் நதிபோன்ற பெருந்தடைகளைச் சந்தித்து என்ன செய்வது என்பதை அறியாமல் திகைக்கும்போது தேவனுடைய வழிநடத்துதலுக்காகப் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். நம்மால் எதுவும் செய்யமுடியாது என்பதை நாம் உணர்ந்திடும்வரை தேவன் மவுனமாய் இருப்பது வழக்கம் என்பதனால், நெருக்கடியான சூழ்நிலைகளில் அவிசுவாசத்தினால் முறுமுறுக்காமல் நம்பிக்கையோடு நாம் காத்திருக்கவேண்டும். கர்த்தரை நோக்கி அமர்ந்து, அவருக்குக் காத்திரு (சங்.37:7) என்று அறிவுறுத்தும் வேதாகமம், உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணுவார் (சங்.37:5) என்று கூறுகிறது.

வாக்குத்தத்த தேசத்திற்குள் செல்வதற்கு வேறு பாதைகள் அக்காலத்தில் இருந்த போதிலும், தேவன் அப்பாதைகளில் இஸ்ரவேல் மக்களை அழைத்துச் செல்லாமல், பெருந்தடையாக இருந்த யோர்தான் நதியைக் கடந்துசெல்லும் பாதையில் அவர்களை வழி நடத்திச் செல்கின்றார். இலகுவான வேறு வழிகள் இருந்தாலும், யோர்தானைக் கடக்கும் கடினமான பாதையிலேயே தேவனுடைய பிரசன்னமும் வழிநடத்துதலும் இருந்தது. பொதுவாக மனிதர் இலகுவான வழிகளைத் தேடுபவர்களாக இருந்தாலும், தேவன் சுற்றுவழியிலும் கடினமான பாதையிலும் தம் மக்களை வழி நடத்திச் செல்வதற்குக் காரணம், மனிதருக்குக் கடினமாகத் தோன்றும் காரியங்களை அவர் எவ்வாறு இலகுவானதாக மாற்றுகிறார் என்பதை நாம் அறிந்துகொள்வதற்கேயாகும்.

எனவே, நெருக்கடியான சூழ்நிலைகளில் நாம் இலகுவான வழிகளில் பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வதற்கான வழிமுறைகளைத் தேடி அலையாமல், தேவன் நம்மை அழைத்துச் செல்லும் கடினமான பாதையில் செல்லும்போது மாத்திரமே அவரது அற்புதமான வழி நடத்துதலை நாம் அறிந்துகொள்வோம்.

தேவன் அழைத்துச் செல்லும் பாதை கடினமானதாக இருந்தாலும், அவர் நம்மோடு இருப்பதனால் அது நமக்குக் கடினமானதாக இராது. நமக்குக் கடினமானதாய் இருக்கும் காரியங்கள் தேவனுக்கு மிகவும் இலகுவானவைகளாகவே உள்ளன. இதனால் நமது வாழ்வில் வரும் எத்தகைய கடினமான பிரச்சனையையும் அவரால் இலகுவாகத் தீர்க்கமுடியும்.

(தொடரும்)

சத்தியவசனம்