ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

Dr.தியோடர்.எச்.எஃப்
(ஜூலை-ஆகஸ்ட் 2012)

மகா பரிசுத்த ஸ்தலம்

பரிசுத்த ஸ்தலம் அகலத்தை விட இரண்டு மடங்கு நீளமுள்ளதாக இருந்தது (30′ x 15′) ஆனால் மகா பரிசுத்த ஸ்தலம் ஒரு சதுர அறை. (15′ x 15′)

மகாபரிசுத்த ஸ்தலத்தினுள் இருந்த பொருட்கள்

தேவன் தமது மக்கள் மத்தியில் வாசஞ்செய்யத் தெரிந்துகொண்ட இடமே மகா பரிசுத்த ஸ்தலமாகும். ஆசரிப்புக் கூடாரத்தின் மையமாக இருந்த இந்தச் சிறப்பான அறையில் உடன்படிக்கைப் பெட்டியும், கிருபாசனமும் இருந்தன. உடன்படிக்கைப் பெட்டி, கிறிஸ்துவின் ஆளத்துவத்தைக் குறித்தது. சுத்தப் பொன்னினால் செய்யப்பட்ட கிருபாசனம் தமது மக்கள் மத்தியில் தேவனுடைய சிங்காசனமாய் அமைந்தது.

அந்தக் கிருபாசனம், பாவம் நிறைந்த மக்கள் குறிப்பிட்ட பாதையில் கடந்து வந்து தேவனைச் சேருவார்களானால் அவர்கள் மீது தேவன் இரக்கம் காட்டுவதைக் குறிக்கிறது. ஆசரிப்புக் கூடாரத்தில் இந்த வழி தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

ஒருவன் முதலாவது ஒரு இரத்தபலி செலுத்த வேண்டும். பின்னர் அந்த இரத்தம் கிருபாசனத்தின் மீது தெளிக்கப்பட வேண்டும். இவ்வாறு தேவனுடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.

ரோமர் 3:23 இவ்வாறு கூறுகிறது: எல்லாரும் பாவம் செய்து, தேவ மகிமையற்றவர்களாகிவிட்டார்கள். அடுத்து வரும் வசனங்கள் தேவன் எவ்வாறு திருப்திப்படுத்தப்பட்டார், சாந்தப்படுத்தப்பட்டார் என்று காட்டுகின்றன. இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார் (ரோமர் 3:24-26).

ஒவ்வொருவருடமும் ஈடேற்றத்தின் நாளன்று கிருபாசனத்தின் மேல் இரத்தம் தெளிக்கப்படும். அது இயேசுகிறிஸ்துவின் தியாகத்தின் மூலம் பாவம் விலக்கப்பட்டது குறித்து தேவன் திருப்தியடைந்துள்ளார் என்பதைக் காட்டிற்று.

ஒரு மனிதன் தன்னுடைய சொந்தப் பாவத்துக்காக தேவனைத் திருப்திப்படுத்த முடியாது. எனவே இயேசுகிறிஸ்து அவனை மீட்க, அவனுடைய பாவத்தைப் போக்கச் சிலுவையில் மரித்தார். மனிதன் அனுபவிக்க வேண்டிய பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை, மனிதனை மீட்பதற்காகத் தாமே ஏற்றுக்கொண்டார். நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வ லோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார் (1யோவா.2:2). நம்முடைய பாவங்களுக்காக தேவனுடைய சட்டதிட்டங்களை இயேசுகிறிஸ்து திருப்திப்படுத்த நிறைவேற்றிவிட்டார். கிறிஸ்துவின் மீது விசுவாசம் கொள்ளுகிறவர்களை நீதிமான்களாக்கிவிடுகிறார். தேவன் பாவங்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடவில்லை. அவர் தம்முடைய நீதியை நிறைவேற்றும் பொருட்டு, பாவத்தின் சம்பளம் மரணம் என்னும் நீதியை நிறைவேற்றும்பொருட்டு, அகில உலக மனித குலத்தின் பாவத்தையும் கிறிஸ்துவின் மீது சுமத்தி, பழைய காலத்தில் ஆடுகள் பலியிடப்படுவது போல, இயேசு சிலுவையில் இரத்தம் சிந்திப் பலியிடப்பட்டதன் மூலம், பாவப் பரிகாரம் செய்யப்பட்டு, இவ்வாறு இயேசுகிறிஸ்துவின் மரணத்தின் மூலம் மனுக்குலம் மீட்கப்பட்டு, இரட்சிக்கப்பட்டது.

மகாபரிசுத்த ஸ்தலத்தின் வாசல் ஒரு தொங்கு திரையினால் கவனமாகத் தடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கனமான திரை மகா பிரதான ஆசாரியன் தவிர வேறு எவரும் உள்ளே நுழையாதபடி தடுக்கிறது. மகா பிரதான ஆசாரியனும் வருடத்துக்கு ஒருமுறை மட்டும், ஈடேற்றத்தின் நாளன்று உள்ளே பிரவேசிப்பார். அவர் மகா பரிசுத்த நிலையில் பல நிபந்தனைகளை நிறைவேற்றி, பலி இரத்தத்துடன் உள்ளே பயபக்தியாய்ப் பிரவேசிக்க வேண்டும். வேறு எவராவது இதற்குள் பிரவேசிக்க முயற்சித்தால் இறந்து போவான். மகா பிரதான ஆசாரியனும் பரிசுத்தமில்லாமல் நுழைந்திருந்தாலோ, அந்தக் குறிப்பிட்ட நாள் தவிர வேறு நாட்களில் பிரவேசிக்க முயற்சித்தாலோ மரணமடைவது நிச்சயம்.

ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள மற்ற இரண்டு திரைகளும் மக்களை உள்ளே அழைப்பவை. ஆசரிப்புக் கூடாரத்துக்கு வெளியே இருக்கும் மக்கள், உள்ளே வருவதற்கு வழிவிடும், கிழக்குப் புறத்திலுள்ள வாசல் திரை, பரிசுத்த ஸ்தலத்தினுள் ஆசாரியன் நுழைவதற்கு வழிவிடும் திரை ஆகிய இவை இரண்டும் உள்ளே வாருங்கள் என்று அழைப்பவை. அவை பலியிடப்படும் இடத்துக்கும், தேவனோடு ஐக்கியம் கொள்ளும் இடத்துக்கும் மக்களை அழைக்கின்றன. இந்த இரண்டு திரைகளும் நமக்கு இயேசுவை நினைவூட்டுகின்றன. வருத்தப்பட்டுப் பாரஞ் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார் இயேசு (மத்.11:28-30).

முதல் இரண்டு திரைகளும் உள்ளே அழைத்தது போல, மகா பரிசுத்த ஸ்தலத்தின் தொங்குதிரை மக்களை உள்ளே அழைப்பதில்லை. தேவனுடைய சமுகத்தில் வர ஆசாரியர்களைக்கூட அனுமதிப்பதில்லை. இயேசு கிறிஸ்துவின் மூலம் எவரும் தேவனிடத்தில் வரலாம் என்னும் சிலாக்கியம் பெறப்படாததால் இப்படித் தடுக்கப்பட்டது. எனவே நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தையும், உடன் படிக்கைப்பெட்டியினுள் கற்பனைப் பலகைகளையும் கொண்டிருக்கும் மகா பரிசுத்த ஸ்தலம் பயங்கரம் நிறைந்த தேவனுடைய சமுகமாயிருந்தது. எவரும் நெருங்கவே பயப்படும் இடமாம்.

உடன்படிக்கைப் பெட்டியைப் பற்றி யாத். 25:10-16 இல் கூறப்பட்டுள்ளது. இப்பகுதியில் தேவன் தெளிவாக அப்பெட்டியைச் செய்வதற்குக் குறிப்புரை கூறியது தெரிகிறது. சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டி செய்யப்பட்டு அது தங்கத் தகட்டால் மூடப்பட வேண்டும் (வச.10,11).

இந்த உடன்படிக்கைப் பெட்டியானது தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாக மக்கள் மத்தியில் வாசம் செய்வதற்கு அடையாளமாயிருக்கிறது. இது அவருடைய சிங்காசனத்தின் அடித்தளம். எனவே அது மிகவும் பரிசுத்தமும், மகிமையும் நிறைந்த ஒரு பொருளாக ஆசரிப்புக் கூடாரத்தில் கருதப்பட்டது. உண்மையில் ஆசரிப்புக் கூடாரம், தம்முடைய மக்கள் மத்தியில் வாசம் செய்ய விரும்பிய தேவன் தங்குவதற்காக இந்த உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென்றே செய்யப்பட்டது. தேவன் மோசேயிடம் ஆசரிப்புக் கூடாரம் செய்யச்சொன்னபோது, உள்ளே வைக்கும் பொருளாக முதலில் செய்யச் சொன்னது தாம் வாசம் செய்ய, உடன்படிக்கைப்பெட்டியாகும். அவர்கள் நடுவிலே நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக (வச.8). இதிலிருந்து இயேசுகிறிஸ்துவே உலகமக்கள் மத்தியில் தேவன் வாசம்பண்ண தேவன் தெரிந்து கொண்ட பாத்திரம் என்று அறிகிறோம் (யோவா.1:14). இதுபோன்ற பூரணமான கருத்தை வேதத்தில் வேறு எங்கும் காண முடியாது.

உடன்படிக்கைப் பெட்டி, மரத்தால் செய்யப்பட்டு, உள்ளும், புறம்பும் பொன்தகட்டால் மூடப்பட்டதால் அது இயேசுவின் இருவகைத் தன்மையையும் காட்டிற்று. இயேசு தெய்வீகமானவர் (பொன்). இயேசு மனுஷீகமானவர் (மரம்). ஆசரிப்புக் கூடாரத்தினுள் இருக்கும் மற்ற பொருட்களெல்லாம் உடன்படிக்கைப் பெட்டியை விட வித்தியாசமானவை. ஏனெனில் அவையெல்லாம் கிறிஸ்து செய்யும் பணிகளைச் சுட்டிக்காட்டுகின்றன. உடன்படிக்கைப் பெட்டிமட்டுமே கிறிஸ்துவின் ஆளத்துவத்தைக் காட்டிற்று.

வெண்கலப் பலிபீடம் – கிறிஸ்துவின் தியாக மரணத்தைச் சுட்டிக் காட்டிற்று.

தண்ணீர்த் தொட்டி – கர்த்தருடைய வசனத்தின் மூலம் கிறிஸ்து செய்யும் சுத்திகரிப்புப் பணியைக் குறிக்கிறது.

சமுகத்தப்ப மேஜை – கிறிஸ்துவே ஜீவ அப்பம் என்றது.

பொன் குத்துவிளக்கு – கிறிஸ்துவே உலகுக்கு ஒளி காட்டுபவர் என்று காட்டியது.

பொன்தூபபீடம் கிறிஸ்துவே நமக்காகப் பிதாவிடம் மன்றாடுபவர் என்று தெரிவித்தது.

உடன்படிக்கைப் பெட்டி மட்டுமே அவர் செய்தது என்ன என்பதைக் குறிக்காமல் அவர் யார்? எப்படிப்பட்டவர்? என்பதைக் காட்டிற்று. இயேசு யார்? என்றும், எப்படிப்பட்டவர்? என்றும் அறிந்துகொள்வோமானால், அவர் செய்யும் பணிகளை மதிப்பிட அறிந்து கொள்ளுவோம்.

இன்று கிறிஸ்து யார்? என்பதைக் காட்டிலும் அவர் செய்வது என்ன? என்பதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்று காண்கிறோம். கிறிஸ்து செய்வது என்ன? என்பது முக்கியமானதுதான். ஆனால் கிறிஸ்து யார்? என்பது அதைவிட அதிகம் முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான், பவுல் இப்படிக் கூறினார்: இப்படி நான் அவரையும், அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையையும், அவருடைய பாடுகளின் ஐக்கியத்தையும் அறிகிறதற்கும், அவருடைய மரணத்திற்கொப்பான மரணத்திற்குள்ளாகி, எப்படியாயினும் நான் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்திருப்பதற்குத் தகுதியாகும்படிக்கும், அவருக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று விட்டேன்; குப்பையுமாக எண்ணுகிறேன் (பிலி.3:10,11). பவுல் கிறிஸ்துவைப் பற்றி அறிய விரும்பவில்லை, கிறிஸ்துவையே அறிய விரும்பினார்.

கிறிஸ்து செய்வது என்ன? கிறிஸ்து யார்? இரண்டையும் ஒன்றைவிட்டு ஒன்றைப் பிரிக்க முடியாது. இது மகாபரிசுத்த ஸ்தலத்திலும் தெரிகிறது. ஏனெனில் உடன்படிக்கைப் பெட்டி கிறிஸ்துவின் ஆளத்துவத்தைக் குறிக்கிறது. கிருபாசனம் கிறிஸ்துவின் பணியைக் குறிக்கிறது.

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்