தேவனுடைய ராஜ்யம்: விதைப்பும் அறுப்பும்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(ஜூலை-ஆகஸ்ட் 2012)

தேவனுடைய ராஜ்யத்தைக் குறித்து ஏராளமான உவமைகளை ஆண்டவர் கூறியிருக்கிறார். தேவனுடைய ராஜ்யத்தை மக்கள் புரிந்துகொள்ளவேண்டுமென்பதற்காக ஒவ்வொரு முறைகளிலும் ஒவ்வொரு கோணத்திலும் பல்வேறு வழிகளிலும் அவர் விளக்கிச்சொல்கிறார். மாற்கு 4ஆம் அதிகாரம் 26-29 இல் சொல்லப்பட்டுள்ள உவமையை இவ்விதழில் தியானிப்போம்.

பின்னும் அவர் அவர்களை நோக்கி: தேவனுடைய ராஜ்யமானது, ஒரு மனுஷன் நிலத்தில் விதையை விதைத்து; இரவில் தூங்கி, பகலில் விழித்திருக்க, அவனுக்குத் தெரியாதவிதமாய், விதை முளைத்துப் பயிராகிறதற்கு ஒப்பாயிருக்கிறது. எப்படியென்றால், நிலமானது முன்பு முளையையும், பின்பு கதிரையும், கதிரிலே நிறைந்த தானியத்தையும் பலனாகத் தானாய்க் கொடுக்கும். பயிர் விளைந்து அறுப்புக்காலம் வந்தவுடனே, அறுக்கிறதற்கு ஆட்களை அனுப்புகிறான் என்றார்.

தேவனுடைய ராஜ்யம் என்பது ஒரு மனிதன் விதையை விதைத்ததற்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு சொன்னார். விதையை விதைக்க வேண்டியது அந்த மனிதனின் வேலையாயிருக்கிறது. ஆனால் விதையை நாமே முளைக்கச் செய்யமுடியாது. விதையை முளைக்கவைக்க அதை வேகப்படுத்த முடியாது. விதையை விதைத்துவிட்டு இரவில் அந்த மனிதன் தூங்கினான். பகலில் எழுந்து பார்த்தால் விதை முளைத்தது. அது பயிராய் வந்தது. ஏற்றகாலத்தில் கதிர்களைக் கொடுத்தது. கதிரிலே தானியங்கள் நிறைந்திருந்தது. அப்பொழுது எஜமான் அறுப்புக்கு வேலையாட்களை அனுப்புகிறான். இப்படிதான் தேவனுடைய ராஜ்யமும் இருக்கிறது என்று இயேசுகிறிஸ்து விளக்குகிறார். தேவராஜ்யத்தை பிரசங்கிப்பதும், தேவராஜ்யத்தை அறிவிப்பதும், தேவராஜ்யத்தின் உண்மைகளை விளக்குவதுமே நம்முடைய வேலையாகும். தேவராஜ்யத்தின் செயற்பாடுகளை துரிதப்படுத்துவது நம்மால் முடியவேமுடியாது. ஜெபத்திற்கு பலனை நாம் உருவாக்கமுடியும் என்று அநேகர் எண்ணிக்கொள்கிறார்கள். ஜெபம் பண்ணுவதுதான் நம்முடைய கடமையாகும். அதற்கு பதில்கொடுப்பது தேவன்தான். நற்செய்தியை அறிவிப்பது நமது கடமையாகும். அதன் பலனை வேகப்படுத்தவோ, உருவாக்கவோ நம்மால் கூடாது.

இந்த உவமையில் ஆண்டவர் கற்றுக் கொடுக்கிற காரியம் என்ன? நாம் செய்ய வேண்டியதை நாம் செய்தால் தேவன் செய்ய வேண்டியதை அவர் செய்வார். நாம் விதைத்துவிட்டு அமைதலாயிருந்தால் விதை முளைத்து செடியாகி அது கதிர்களைக் கொடுத்து தானியங்களைக் கொடுக்கும். அதேபோல தேவராஜ்யத்தின் காரியமானாலும் உலக காரியமானாலும் நாம் செய்யவேண்டியதை நாம் செய்யவேண்டும். தேவன் செய்ய வேண்டியதை அவர் செய்வார்.

இந்த உவமையிலே ஆவியானவர் நமக்கு இரண்டு உண்மைகளைக் கற்றுக் கொடுக்கிறார். ஒன்று கவலையை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவது பொறுமையின்மையை நாம் மேற்கொள்ள வேண்டும்.

விதையை விதைத்தவுடனே அந்த இரவு முழுவதும் விதை பக்கத்திலே அமர்ந்து கொண்டு கவலைப்பட்டால் எப்படியிருக்கும்? அவனைப்போல மூடன் வேறு யாருமில்லை. அவன் விதையை விதைத்துவிட்டு விளக்கைப் பிடித்துக்கொண்டு எப்படி முளைக்கும் என்று இரவு முழுவதும் பார்த்துக்கொண்டே இருப்பானானால் அவனைப் போல் ஒரு முட்டாள் யாரும் இருக்கமுடியாது. விதையை விதைத்தான், அவ்வளவுதான். இரவிலே தூங்கிவிட்டான். பகலிலே எழுந்து பார்த்தால் விதை முளைத்து அது பயிராய் மாறிவிட்டது. அதேபோல ஆண்டவருக்குள் இருந்து கொண்டு, நாம் செய்யவேண்டியதைச் செய்து விட்டு நமது கவலைகளையும் பாரத்தையும் ஆண்டவர் மேல் வைத்துவிட வேண்டும். நாம் அடிக்கடி பிரயாசப்பட்டு, தேவசமுகத்தில் அவைகளை விட்டுவிடாதபடியால்தான், நாம் இரவும் பகலும் கலங்கி ஆண்டவர் கொடுத்த மகிழ்ச்சியை இழந்து தவிக்கிறோம். இந்த உவமையில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்னவெனில், ஆண்டவருக்கென்று நாம் செய்யவேண்டியதை செய்துவிட்டு அவர்மேல் நம்பிக்கையாயிருந்தால் அந்தந்த காரியத்தில் எல்லாமே நேர்த்தியாய் முடியும். கர்த்தர் செய்ய வேண்டியதை நிச்சயமாய் அவர் செய்வார்.

இரண்டாவதாக, அடிக்கடி மனித வாழ்க்கையிலே பொறுமையின்மை வந்துவிடுகிறது. வேகம், ஆத்திரம், நிதானமில்லாமை, அவசரம் இப்படிப்பட்ட காரியம் வந்துவிடுகிறது. விதையை விதைக்கிறவன் விதைக்கதான் முடியுமே தவிர அதை விளைவிக்க முடியாது. எவ்வாறு ஒரு விவசாயி முன்மாரி, பின்மாரி காலத்திற்காக காத்திருக்கிறானோ, அதே விவசாயி விதையை விதைத்துவிட்டு அது முளைக்கும்வரை பொறுமையோடு இருக்கிறான் அல்லவா. அவன் தனது வேகத்தை கூட்டுவதில்லை, நிதானமில்லாமல் இருப்பதில்லை. பொறுமையின்மையை நாம் விட்டு விடவும், பொறுமையோடு அந்த விதை விதைத்தவன் இருந்ததுபோல நாமும் இருக்கவேண்டும். ஏற்றகாலம் வரும்போது அந்த விதை முளைத்து செடியாகி பின்பு கதிர்களை விட்டு தானியங்களைக் கொடுக்கும். பிறகு எஜமான் வேலைக்காரனை அனுப்புவான். பரலோக ராஜ்யம் இப்படித்தான் இருக்கிறது. ஊழியர்களாகிய நாம், தேவபிள்ளைகளான நாம், நற்செய்தியை பரப்புகிறவர்களாகிய நாம், ஆண்டவரின் திருச்சபையாகிய நாம் ஒவ்வொரு இடத்திலும் வசனத்தை விதைக்கவேண்டும். சுவிசேஷத்தைச் சொல்ல வேண்டும். இது நமது மேல் விழுந்த கடமை! பின்பு ஆண்டவர் அறுவடைக்கு ஏற்ற ஆட்களை அனுப்புவார்.

டேவிட் லிவிங்ஸ்டன் ஆப்பிரிக்காவிற்கு சென்று அவர் மரித்தபோது இரண்டு ஆப்பிரிக்கர்கள் ஆண்டவரை ஏற்றுக்கொண்டனர். வேறு ஒருவரும் கிடையாது. டேவிட் லிவிங்ஸ்டன் சரீரம் இங்கிலாந்தில் அடக்கம் பண்ணப்பட்டபோது ஒரு ஊழியர் பிரசங்கித்தார். அந்த வேளையிலே அநேகர் தங்களை அர்ப்பணித்தார்கள். ஆப்பிரிக்காவிற்கு அருட் பணியாளர்களாகச் சென்றார்கள். என்ன நடந்தது தெரியுமா? டேவிட் லிவிங்ஸ்டன் விதைத்த விதை முளைத்து செடியாகிய கதிர்களைக் கொண்டுவருகிற அளவுக்கு ஆத்தும அறுவடை நடந்தது.

நற்செய்திப் பணியில் நற்செய்தியாகிய தேவராஜ்யத்தின் விதையை விதைக்க வேண்டியது நமது கடமையாகும். வளர செய்வது அவருடைய காரியமாகும். ஏற்ற காலத்தில் எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாய் செய்வார். எனவே நாம் கவலையையும் பொறுமையின்மையையும் விட்டுவிட வேண்டும். இதுதான் இந்த உவமையின் பொருளாகும்.

அருமையான தேவபிள்ளையே, எத்தனை சமயத்தில் ஆண்டவர் எனக்கு உடனே பதில் தரவில்லை, எனக்கு இதைச் செய்யவில்லை, என் தேவைகளைச் சந்திக்கவில்லை, என் காரியத்திலே எனக்காக யுத்தம் செய்யவில்லை, நான் தேவனை நோக்கிக் கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்துப்போனேனே, நான் என் பொறுமையை இழந்துபோகிறேனே என்று நீ அங்கலாய்க்கிறாய் அல்லவா? நீ உன் குடும்பம், உன் பிள்ளைகள், உன் சபைக்காக, உன் ஊழியத்திற்காக, உன் தொழிலுக்காக, எதிர்காலத்திற்காக நீ படுகிற கவலையைக் காட்டிலும் ஆண்டவர் பெரிதாய் கவலைபட்டு, உன்மேல் கரிசனையுள்ளவராய் உனக்கு உதவிசெய்கிறார்.

ஆதலால் பொறுமையின்மையை விட்டுவிடுவோம், தேவனிடம் நம்பிக்கையோடு நமது வாழ்க்கையை விட்டுக்கொடுப்போம், அர்ப்பணிப்போம். அவர் ஆச்சரியமாய் நம்மை நடத்துவார்.

சத்தியவசனம்