நிலத்தினில் விழுந்த கோதுமை மணிகள்

கோதுமை மணி – 20
(ஜூலை-ஆகஸ்ட் 2012)

சார்லஸ் H.ஸ்பர்ஜன்

இங்கிலாந்தில் எஸ்ஸெக்ஸ் என்னுமிடத்தில் உள்ள கால்வொடன் என்னும் ஊரில் ஜேம்ஸ் என்பவர் ஒரு போதகராயிருந்தார். இவருடைய காலத்துக்குப் பின் இவருடைய மகன் ஜான் ஒரு போதகரானார். இந்த ஜான் போதகரின் மகனாக 1834 ஜுன் 19ஆம் நாள் சார்லஸ் ஹாடன் ஸ்பர்ஜன் பிறந்தார். எனவே இவர் ஒரு போதகர் பரம்பரையில் பிறந்தவர். இவருடைய அப்பாவும், தாத்தாவும் போதகர்கள்.

சார்லஸின் இளமைப் பருவம் அவருடைய ஜேம்ஸ் ஸ்பர்ஜன் தாத்தாவுடனும், பாட்டியுடனும் கடந்தது. ஸ்பர்ஜன் குடும்பத்தில் 17 பேர் இருந்தனர். குழந்தைப் பருவத்திலேயே 9 பேர் இறந்து போயினர். சார்லஸின் அப்பா ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயத்தில் பிரசங்கம் செய்வார். இந்தப் பணியை இவர் 16 வருடங்கள் செய்து வந்தார். வார நாட்களில் அவர் ஒரு நிலக்கரிக் கம்பெனியில் வேலை பார்த்தார். சார்லஸ் 18 மாதம் ஆனபோது தன்னுடைய தாத்தா, பாட்டியுடன் வாழ ஸ்டாம்போர்ன் என்னுமிடத்துக்குச் சென்றுவிட்டார். இவருடைய தாத்தா 54 வருடங்கள் ஒரே சபையில் ஊழியம் செய்தார். சார்லஸின் அத்தை ஆன் சிறுவயதில் அவருக்கு அதிக உதவி செய்தார். எழுதவும், படிக்கவும் மனப்பாடம் பண்ணவும் கற்றுக்கொடுத்தார்.

சார்லஸ் ஏழு வயதானபோது தன் பெற்றோரிடம் வந்துவிட்டார். இருந்தபோதிலும் ஒவ்வொரு விடுமுறை காலத்திலும் தாத்தாவின் வீட்டுக்குச் சென்றுவிடுவார்.

தாத்தா பாட்டியுடன் சார்லஸ் வாழ்ந்த ஆரம்ப ஏழு வருடங்களும் அவருடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவை. அழியாத இடம் பெற்றுவிட்டன. ஆரம்ப காலத்தில் தாத்தாவைவிட்டுப் பிரிவது சார்லஸ்க்கு மிகுந்த மன வேதனையைக் கொடுத்தது. ஏழு வயதில் வீட்டுக்கு வந்த சார்லஸ் அங்கே அவருக்கு இன்னும் இரண்டு சகோதரிகளும், ஒரு தம்பியும் இருப்பதைக் கண்டார். அந்தச் சிறுபிள்ளைகள் மத்தியில் தான் ஒரு வீரன் போல நடந்துகொண்டார்.

முதலில் சார்லஸ் திருமதி குக் என்பவர் நடத்திய பள்ளியில் சேர்ந்து படித்தார். அந்த அம்மையாரிடமிருந்து கற்றுக்கொள்ளக்கூடிய அனைத்தையும் படித்து முடித்தபின் இன்னொரு நல்ல பள்ளியில் சேர்க்கப்பட்டார். சார்லஸ் 10, 11 வயதாகும்போது முதல் வகுப்பு ஆங்கிலப் பரிசு அவருக்குக் கிடைத்தது.

சார்லஸ் 14 வயதானபோது, அவரும் அவரது தம்பியும் மெய்ட்ஸ்டோன் என்னுமிடத்தில் இருந்த தூய அகஸ்டின் பள்ளியில் படிக்கச் சென்றனர். அங்கே அவர்களுடைய மாமா ஒரு ஆசிரியராய் இருந்தார். இங்கேயும் சார்லஸ் மிகத் திறமையாகப் பாடங்களைப் படித்து முடித்தார். சார்லஸ்க்கு 15 வயதாகும் போது படிப்பில் நல்ல முன்னேற்றம் கண்டிருந்தார். வாசித்தல், எழுதுதல், கணிதம், வார்த்தைகளின் எழுத்து அறிவு, கிரேக்க மொழி, லத்தீன் இலக்கணம், தத்துவ சாஸ்திரம் ஆகியவற்றைக் கற்றுத் தேர்ச்சி அடைந்திருந்தார். இவருடைய கணித அறிவு மிகவும் சிறப்பானது. இவர் கண்டுபிடித்த சில கணித முறைகள் லண்டனிலுள்ள ஆயுள் காப்பீட்டுக் கழகங்களில் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன.

சார்லஸ் ஆண்டவருக்கு எதிராக கலகம் செய்தார். புரட்சி செய்தார். போராடினார். ஆண்டவர் என்னை ஜெபம் பண்ணத் தூண்டுவார், நான் ஜெபிக்க மாட்டேன். வேதம் வாசிக்கத் தூண்டுவார், வாசிக்க மாட்டேன். ஆலய ஆராதனை, பிரசங்கம் இவற்றைக் கவனிக்கச் சொல்லுவார், கவனிக்க மாட்டேன். பிரசங்க வார்த்தைகளைக் கேட்டு, என் மனம் கலங்கி, என் கண்களில் கண்ணீர் வரும்போது நான் துடைத்து விடுவேன். ஆண்டவர் என் உள்ளத்தை உருகச் செய்வார். நான் அதைக் கடினப்படுத்திக் கொள்வேன். என்னால் முடிந்திருக்குமானால் நான் இரட்சிக்கப்பட இடங்கொடுத்திருக்க மாட்டேன். நான் கிறிஸ்துவைக் கண்டடைவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே, கிறிஸ்து என்னைக் கண்டுபிடித்துத் தமக்காகத் தெரிந்து கொண்டிருந்தார்.

இளமையில் ஆவிக்குரிய வாழ்க்கையில் இவரை வழிநடத்தியது இவருடைய அம்மாவே. அம்மாவின் ஜெபமும், உபதேசமும் அவருடைய ஆத்துமாவின் மீது கரிசனை கொள்ள வைத்தது. ஒவ்வொரு நாளும் சார்லஸ் ஸ்பர்ஜன் அதிகாலையில் எழுந்து வேதம் வாசிப்பார். ஜெபிப்பார். பிறகு நாள் முழுவதும் படிப்பார். மாலை நேரங்களில் கர்த்தருடைய வார்த்தையை மற்றவர்களுக்குக் கற்பிப்பார்.

சார்லஸ் ஸ்பர்ஜன் தமது 16-ஆவது வயதில் தன்னார்வ ஊழியர்கள் சங்கம் என்னும் ஒரு இயக்கத்தில் சேர்ந்தார். கேம்பிரிட்ஜூக்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற ஜெபக் கூட்டத்தில் ஸ்பர்ஜன் தமது முதல் பிரசங்கத்தைச் செய்தார். சிறுவனாக இருந்து இவ்வளவு அழகாகப் பேசுகிறானே! என்று எல்லாரும் இவரைப் பாராட்டினார்கள். அவருடைய புகழ் பரவியது. கேம்பிரிட்ஜைச் சுற்றியுள்ள கிராமங்களில் 13 மையங்களில் சிற்றாலயங்களிலும், வீட்டுக் கூட்டங்களிலும், வெளிக்கூட்டங்களிலும் ஸ்பர்ஜன் தேவ செய்தியை அளித்தார். பகலில் பள்ளி வேலைகள் முடிந்தபின் மாலையில் இந்த ஊழியம் நடந்தது.

1852இல் கேம்பிரிட்ஜில் இருந்து ஆறு மைல் தூரத்தில் உள்ள வாட்டர் பீச் என்னும் இடத்தில் ஒரு சபையில் பொறுப்பேற்றுப் போதகர் ஆனார். அந்த ஆலயக் கட்டிடம் முன்னால் தானியம் சேமிக்கும் களஞ்சியமாக இருந்தது. அதனுள் பெஞ்சுகளைப் போட்டு, ஒரு பீடத்தையும் பிரசங்க மேடையையும் அமைத்து ஆலயம் ஆக்கியிருந்தார்கள். முதல் ஞாயிறு அவர் ஆராதனை நடத்த வந்தார். சபையாராகப் பன்னிரெண்டு பேர்தான் வந்திருந்தார்கள். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல நிறைய பேர் வந்து கூட ஆரம்பித்தார்கள். இவருடைய சம்பளம் ஒரு வருடத்துக்கு 225 பவுன்ட். இவருக்கு வேண்டிய உணவைச் சபை மக்கள் ஒவ்வொரு நேரமும் கொண்டு வந்து கொடுப்பார்கள். இந்தச் சபையில் ஸ்பர்ஜன் இரண்டரை வருடங்கள் போதகராக ஊழியம் செய்தார்.

அந்தச் சபையில் மக்களிடம் மதுபானம் குடிக்கும் பழக்கம் இருந்ததைக் கண்டார். மக்கள் பக்தியற்றவர்களாக, பாவம் நிறைந்தவர்களாக இருந்தனர். ஆனால் இந்த நிலை விரைவில் மாறியது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஆலயம் நிரம்பி வழிந்தது. மக்கள் முன்வந்து தங்கள் பாவங்களை அறிக்கையிட்டார்கள். ஆண்டவரோடு ஒப்புரவானார்கள். தீய பழக்கங்களை விட்டு விட்டார்கள். நல்வாழ்வு வாழ ஆரம்பித்தார்கள். ஆண்டவருக்கு நிறைய காணிக்கை கொடுத்தார்கள்.

சார்லஸ் ஸ்பர்ஜனின் ஊழியத்தில் முதன் முதலில் மனந்திரும்பியது ஒரு தொழிலாளியின் மனைவியான ஒரு பெண்மணி. அவர் அந்த ஆத்துமாவைச் சபையில் அதன் பின் மனந்திரும்பிய அத்தனை பேரைக் காட்டிலும் அதிகமாக நேசித்தார். தன் உணர்வுகளை அவர் கூறுகிறார் பாருங்கள்: ஒரு சிறுவன் தான் கஷ்டப்பட்டு வேலை செய்து சம்பளமாக ஒரு கினி நாணயத்தைச் சம்பாதித்தது போலவும், ஒருவன் கடலில் ஆழமான இடத்தில் மூழ்கிச் சென்று ஒரு அபூர்வமான முத்தைக் கண்டெடுத்தது போலவும் நான் சந்தோஷம் அடைந்தேன்.

ஸ்பர்ஜனுக்கு 19 வயதானபோது கேம் பிரிட்ஜ் வட்டாரத்தில் உள்ள அனைத்து ஓய்வு நாள் பள்ளிகளின் ஐக்கியம் நடத்திய ஒரு கூட்டத்தில் பேசினார். இவ்வளவு பெரிய கூட்டத்தில் 19 வயதான ஸ்பர்ஜன் பேசியதைப் பெரியவர்கள் கண்டனம் செய்தார்கள். அவர்கள் வயதில் குறைந்த இவன், தன்னைக் காட்டிலும் வயதில் பெரியவர்களுக்குப் பிரசங்கமும், உபதேசமும் பண்ணக்கூடாது என்றார்கள். அவர்கள் ஸ்பர்ஜனைப் பார்த்துக் கிண்டலாக, நீ உனக்குத் தாடி முளைக்கும் வரையிலாவது உனது சபையில் இருந்திருக்க வேண்டும் என்றனர். இருந்தபோதிலும் ஸ்பர்ஜன் அன்று பேசிய பிரசங்கத்தைக் கேட்ட ஒருவர் லண்டனுக்குச் சென்று அங்குள்ள ஒரு சபையில் போதகராகப் பணி செய்யச் செல்லுமாறு அழைப்பு அனுப்பினார்.

லண்டனில் சார்லஸ் ஸ்பர்ஜனை அழைத்த சபை ஒரு பெரிய சபை. பாப்டிஸ்டு பிரிவைச் சேர்ந்தது. லண்டனில் 300க்கும் மேல் அங்கத்தினர்கள் உள்ள 6 சபைகளில் இது ஒன்று. இது தரத்தில் ஒரு கெளரவமான இடத்தில் இருந்தது. அந்த ஆலயம் மிகவும் மோசமான ஒரு இடத்தில் அமைந்திருந்தது. எனவே சபைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. மூன்று மாதங்களாக அந்த ஆலயத்தில் போதகர் இடம் காலியாக இருந்தது. இந்தச் சபையில் உள்ள பிரதானிகளில் ஒருவர்தான் ஸ்பர்ஜனின் பிரசங்கத்தைக் கேட்டவர். அவர் தன் சபையாரிடம் வந்து, உங்கள் சபையில் உள்ள எல்லா ஆசனங்களும் நிரம்பி வழிய வேண்டுமானால், கேம்பிரிட்ஜில் இருக்கும் ஸ்பர்ஜன் என்ற போதகரை அழையுங்கள் என்றார்.

(தொடரும்)

மொழியாக்கம்: சகோ.G.வில்சன்
சத்தியவசனம்