ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

செப்டம்பர்-அக்டோபர் 2012

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

சீக்கிரமாய் இவ்வுலகிற்கு வரவிருக்கும் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

சத்தியவசன ஊழியப் பணியின் வாயிலாக அநேகமாயிரம் ஜனங்களுக்கு வேதத்தைப் போதிக்க தேவன் தந்திருக்கிற நல் வாய்ப்புக்களுக்காகவும், ஆதரவளிக்கும் கரங்களுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். தொடர்ந்து இவ்வூழியத்தின் தேவைகள் சந்திக்கப்படவும் இன்னும் அநேகர் இவ்வூழியத்தின் வாயிலாக ஆசீர்வதிக்கப்படவும் வேண்டுதல் செய்ய அன்பாய் கேட்கிறோம்.

“இலவச தபால் வழி வேதபாடம்” எமது தலைமை அலுவலகத்திலிருந்து ஆங்கிலம் மற்றும் அநேக இந்திய மொழிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் வேதபாடம் கற்க விரும்புவோர் எங்களோடு தொடர்பு கொள்ளலாம். சத்தியவசன வானொலி மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி ஆதரவாளர் திட்டத்தில் இணைந்து இவ்வூழியத்தை தாங்க அன்பாய் கேட்கிறோம். சத்தியவசன ஊழியத்தை தாங்கிவரும் பங்காளர்களுக்கு இவ்வாண்டு அனுப்பவேண்டிய விசேஷித்த புத்தக வெளியீடு விரைவில் அனுப்பி வைப்பதற்கும் ஜெபத்தோடு பிரயாசப்படுகிறோம். இவ்வூழியத்தின் மூலம் தாங்கள் பெற்றுவரும் ஆசீர்வாதங்களை எங்களுக்கு எழுதித் தெரியப்படுத்துங்கள்.

இவ்விதழில், ஆண்டவருடைய வருகைக்கு நாம் எவ்வாறு ஆயத்தமாக வேண்டும் என்பதைக் குறித்து டாக்டர் தியோடர் எப் அவர்கள் எழுதிய சிறப்பு செய்தி இடம் பெற்றுள்ளது. கர்த்தருடைய நியாயசனத்துக்கு முன்பாக நம்முடைய கிரியைகள் எவ்வாறு மதிப்பிடப்படும் என்பதை டாக்டர் உட்ரோ குரோல் அவர்கள் தனது செய்தியில் விளக்கியுள்ளார்கள். நாம் எவ்வாறான உக்கிராண கணக்கை நாம் ஆண்டவருக்கு கொடுக்கவேண்டும் என்பதை கலாநிதி தியோடர் வில்லியம்ஸ் அவர்கள் விளக்கியுள்ளார்கள். மேலும் சகோதரி சாந்தி பொன்னு அவர்கள் எழுதிய விருத்தாப்பியம் இறுதி பாகமும், சகோ.எம்.எஸ்.வசந்தகுமார் அவர்கள் யோசுவாவின் புஸ்தகத்திலிருந்து எழுதிய செய்தியின் இரண்டாவது பகுதியும், சுவிசேஷகர் சுசி பிரபாகரதாஸ் அவர்கள் எழுதிய “தாலந்துகளின் உவமை” என்ற செய்தியும் இடம் பெற்றுள்ளது. இச்செய்திகள் யாவும் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைய வேண்டுதல் செய்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்