இயேசுவின் வருகைக்கு ஆயத்தமாவது எப்படி?

Dr.தியோடர்.எச்.எஃப்
(செப்டம்பர்-அக்டோபர் 2012)

கிறிஸ்துவின் வருகையில் என்னென்ன காரியங்கள் நடக்கும் என்று அறிந்திருப்பதற்கும் அவருடைய வருகைக்கு ஆயத்தமாயிருப்பதற்கும் வித்தியாசமுண்டு. இதைக் குறித்த எச்சரிக்கைகள் பல வேதத்திலுண்டு. அவைகளிலொன்று, “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள் மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப் போல வரும். ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம் பண்ணி விழித்திருங்கள் என்றார்” (லூக்கா 21:34-36).

இது தேவமக்களுக்கொரு திட்டமான எச்சரிப்பாகும். முதலாவது சீஷருக்காக இது கொடுக்கப்பட்டது. இது உலகப்பிரகாரமான கிறிஸ்தவர்களுக்கு அல்ல. உலக மக்களுக்குமல்ல; இரட்சகர் எடுத்துக் கொள்ளப்பட்டபின் அவருடைய சுவிசேஷ ஊழியத்தை செய்யும்படி அவரது மக்களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டதாகும். இது அவிசுவாசிகளுக்கும் உலகப் பிரகாரமான கிறிஸ்தவர்களுக்கும் மட்டுமன்றி, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் கொடுக்கப்பட்ட செய்தியாகும். “நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்” என்றுதான் இரட்சகர் கூறுகிறார். இது ஒரு தனிப்பட்ட எச்சரிக்கையாகும். இந்த எச்சரிக்கை நம் இருதயத்தின் ஆழத்தில் பதியவேண்டும்.

முதலாவது, நாம் பலவிதமான அவசியமில்லாத காரியங்களால் அலையுண்டு போகாதபடிக்கு எச்சரிக்கப்படுகிறோம். “இருதயத்திலிருந்தே ஜீவியத்தின் சகல காரியங்களும் வருகிறபடியால் இருதய மனப்பான்மை மிக முக்கியமானதாகும்”. அது நம் ஆசாபாசங்களுக்கும் மனோ திடத்திற்கும் இருப்பிடமாகும். அது நம் கிரியைகளையும் சகல நடைமுறைகளையும் தோற்றுவிக்கிறது. நம்முடைய வழியில் எதிர்ப்பட்டு நமக்கு விரோதமாகவும் நமக்குத் தீங்கு செய்யவும் மற்றவர்கள் முயலும்போதும் நீதியுள்ள இருதயம் நம்மில் நீதியான காரியங்களை உருவாக்குகிறது.

மிஞ்சிய மனநிலை அல்லது “இருதயத்தின் பெருந்திண்டி”யென்பது நாம் கவலைகளாலும் தொல்லைகளாலும் பாரப்படுவதாகும். உலகக் கவலைகளிலும் குடியிலும் வெறியிலும் நாம் அழுந்தப்பட்டவர்களாக இருப்பதை தேவன் விரும்பவில்லை. வெறியானது களியாட்டுகளில் துவங்கி இச்சைரோகங்களில் முடியும். சரீரப்பிரகாரமாக பெருந்தீனி நாம் நன்றாக வேலை செய்யவும் சிந்திக்கவும் கூடாதபடிக்கு நம்மை மந்த புத்தியுள்ளவர்களாக்கிவிடும்.

இரண்டாவதாக நம் இருதயமும் சிந்தனைகளும் மயங்கிப் போகாதிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். குடிப்பழக்கமில்லாததால் இந்த எச்சரிக்கை எனக்கு அவசியமில்லையென்று இதைப் படிக்கும் நீங்கள் சொல்லலாம். காரியங்களை மிகைப்படுத்துவதும் உண்மைகளைக் குறைத்து அசட்டை செய்வதும் நம்மை மந்தப்படுத்தும் அல்லது மதியீனப்படுத்திவிடும். ஆகையினாலே அவர் வருகையிலே மதியீனப்பட்டுப்போவதற்கு நாம் மதுபானத்தைத் தேடுவதுமாத்திரம் காரணமாக அமைவதில்லை. உண்மைகளைக் குறைத்து மதிப்பீடு செய்து அசட்டைபண்ணுவதே விசுவாசியின் ஜீவியத்தில் மதியீனத்திற்கு அடையாளமாக இருக்கிறது.

மூன்றாவதாக நமது இருதயம் உலகக் கவலைகளினால் பாரமடையாதபடிக்கு எச்சரிக்கப்படுகிறோம். நம்முடைய இரட்சகர் வரப்போகிறாரென்பதையும் மறந்துபோகும் அளவுக்கு உலகக்கவலைகளும் சரீர நிறைவுகளும் நம்மை ஆழ்த்திவிடுகிறது. நாம் சந்திக்க வேண்டிய நியாயமான உலகக் கவலைகளும் பொறுப்புகளும் நமக்கு உண்டு. ஆனால் அவைகள் நம்மை அழுத்திவிட நாம் சம்மதிக்கும்போதே அவை நம் ஆவிக்குரிய வளர்ச்சியைப் பாதித்து உள்ளான மனுஷனை பலவீனப்படுத்துகிறது. ஆண்டவருக்குக்கூட நேரத்தை ஒதுக்க முடியாதபடிக்கு நம்முடைய வேலைகள் நம்மை நெருக்கக்கூடும். இல்லாவிட்டால் நம் குடும்பங்களோ பிள்ளைகளோ நமது கவனத்தைக் கவரக்கூடும். நியாயமான காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் அவை முதலிடத்தைப் பிடித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொண்டால் சரி. கிறிஸ்துவை முதலிடத்தில் வைத்தால் மட்டுமே ஆவிக்குரிய ஜீவியத்தின் நமது பொறுப்புகளைப் பூரணமாய் நிறைவேற்ற இயலும். நமக்கு வேலைகளும் அவசியம்; அதற்கேற்ற விகிதத்தில் ஓய்வும் அவசியம். உற்சாகத்தைப் பெறப் பொழுதுபோக்கும் அவசியம். ஆனால் நம்முடைய ஆண்டவருடைய வருகையின் நம்பிக்கையை இழந்து போகாத வண்ணம் நம் ஆவிக்குரிய ஜீவியமும் போஷிக்கப்படுவதில் நாம் ஜாக்கிரதையாயிருக்க வேண்டும்.

இந்த வகையில் ஆபிரகாம் நமக்கு ஒரு நல்ல உதாரணமாகும். உலகப்பிரகாரமாக அதிக ஐசுவரியவானாக இருந்தாலும் மாளிகைகளில் ஜீவிக்கக்கூடிய நிலையை விடுத்து கூடாரவாசத்தைத் தெரிந்துகொண்ட மனுஷன் அவன். நாமும் கூடாரத்தில் வசிக்க வேண்டுமென்று நான் சொல்லவில்லை. ஆண்டவரை அசட்டைபண்ணுமளவுக்கு ஐசுவரியம் தன் இருதயத்தை அழுத்திப்போட அவன் இடங்கொடுக்கவில்லையென்பதை நினைப்பூட்ட விரும்புகிறேன். மத்தேயு 6:33 ஆம் வசனத்தில் “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்” என்று சொல்லும்போது நம் இரட்சகர் நமக்கொரு பெரிய பாடத்தைக் கற்பிக்கிறார்.

விழிப்புடனிருத்தல் அவசியம்

சிலருக்கு கிறிஸ்துவின் வருகை கண்ணியில் விழுவதைப் போலிருக்கும். அது அவர்களை சடுதியில் பிடிக்கும். தமது மக்களுக்கு அப்படி நேரிடுவதை கர்த்தர் விரும்புகிறதில்லை. மத்.24:38-39ஆம் வசனங்களிலே “எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்” என்று எச்சரிக்கையாகச் சொல்லப் பட்டிருக்கிறது. நியாயத்தீர்ப்பு வந்தபோது அதைச் சந்திக்க ஆயத்தமில்லாதவர்களாக நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்கள் காணப்பட்டனர். அந்த நாட்களில் விழித்திருக்கிறவர்களாகச் சிலரே காணப்பட்டதுபோல இந்தக் காலத்திலும் வெகு சிலரே விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிறார்கள்.

கிறிஸ்து முதல்முறை வந்தபோது இஸ்ரவேலர் அவருக்குக் காத்திராதபடியினாலே அவரை சிலுவையிலறைந்து போட்டார்கள். அவர்கள் சொந்தக் காரியங்களிலே மூழ்கியிருந்தபடியினாலே அவரையும் அவர் ஊழியத்தையும் குறித்து சிந்திக்கவோ அறிந்துகொள்ளவோ அவர்களுக்குச் சமயமில்லாமற்போயிற்று. சிலரே புத்தியுள்ளவர்களாயிருந்தார்கள். இந்த உண்மையை விளக்க நமக்கு பத்துக் கன்னியர்கள் உவமை உண்டு. மத்.25:1-13ஆம் வசனங்களில் சொல்லியிருக்கிறபடி அந்தப் பத்துப் பேரில் ஐந்துபேரே புத்தியுள்ளவராயிருந்தனர். மணவாளன் வருகையில் சத்தம் கேட்கையில் இவர்களே ஆயத்தமாகக் காணப்பட்டனர். ஆண்டவருடைய இரண்டாம் வருகை சடுதியில் ஏற்படும். பூமியின் மேலிருக்கும் எல்லார் பேரிலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். நம் ஆண்டவர் எச்சரித்தபடியே, “ஆகையால் நீ கேட்டுப் பெற்றுக்கொண்ட வகையை நினைவு கூர்ந்து, அதைக் கைக்கொண்டு மனந்திரும்பு. நீ விழித்திராவிட்டால், திருடனைப்போல் உன்மேல் வருவேன்; நான் உன்மேல் வரும் வேளையை அறியாதிருப்பாய்” (வெளி.3:3).

அவரது வருகை வானத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனைமட்டும் இடி இடிக்கு முன்னே காணும் மின்னலைப் போலவும், இரவில் வரும் திருடனைப்போலவும் அறிவிக்கப்படாமல் ஒரு நொடிப்பொழுதில் சம்பவிக்கும். அவருடைய வருகையின் சரியான நேரம் தேவனால் மறைக்கப்பட்டிருக்கிறது. அந்த நாளையோ நாழிகையையோ ஒரு மனுஷனும் அறியான் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. என்றாலும் வேதம் ஒரு காரியத்தைத் திட்டமாய்த் தெரிவிக்கிறது. அவருடைய வருகை திடீரென்றும் எதிர்பாராத தாயுமிருக்கும். உலகம் தன் வழியிலே போய்க்கொண்டிருக்கிற வேளையாயிருக்கும். ஜலப்பிரளயத்துக்கு முன்னும் சோதோம் கொமோராவின் நாட்களிலும் இருந்ததுபோல கிறிஸ்துவைப் பற்றியும் அவர் பூமியின்மேல் வரப்போகிறதைப் பற்றியும் சிந்திக்காத உலகம் தன் வழக்கமான காரியங்களில் ஈடுபட்டிருக்கும்.

ஊழியம் செய்தலும் காத்திருத்தலும்

தேவ ஊழியனைப் பொறுத்தவரை அவன் தேவனைத் திருப்திப்படுத்தவும் அவர் வருகையை எதிர்நோக்கி அதற்காகப் பிரயாசப்படும் மனநிலையை உடையவனாயும் இருக்கவேண்டும். அவர் வருகை சமீபமானதால் நாம் சகலத்தையும்விட்டு துறவிகளாக மாறவேண்டுமென்று தேவன் சொல்லவில்லை. ஆனால் எந்நேரமும் அவர் வரப்போகிறபடியால் சுறுசுறுப்பாகவும் தேவசித்தத்தின்படியும் உழைக்கவேண்டுமென்று சொல்லுகிறார்.

கனடாவிலிருந்து ஒரு வாலிபன் எனக்கு இவ்வாறு ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதில் “நுண்ணிய ஒரு கிருமியால் உண்டான வியாதியால் நான் பாதிப்புக்குள்ளானேன். எட்டு வாரங்கள் படுக்கையிலிருந்தேன். அவ்வேளையில் எனது பழைய ஜீவியத்தை விட்டுவிடும்படி தேவன் உணர்த்தினார். அவர் விரும்பிய புதிதும் வித்தியாசமுமான தமது வழியை எனக்குக் காண்பித்தார். தினமும் மூன்று முறை ஒலிபரப்பான வேதாகமத்திற்குத் திரும்புக வானொலி நிகழ்ச்சியை எனது அறையிலிருந்து கேட்பேன். இந்நிகழ்ச்சி மூலம் தேவன் என்னோடு பேசினார்.

நான் மின்சாரயியலில் பட்டம்பெற்று ஒருவருடம் ஒரு கம்பெனியில் என் எதிர்காலம் திடப்படும்படியாக உழைத்தேன். இப்போதோ எல்லாக் காரியங்களையும் இயேசுகிறிஸ்துவை என் ஆண்டவராக அறியும் அறிவின் மேன்மைக்காக நஷ்டமென்று எண்ணுகிறேன். நான் கிறிஸ்து இயேசுவுக்காக நல்ல போர்வீரனாக மாறும்படியாக இப்பொழுது வேதாகமக் கல்லூரியில் சேருகிறேன். இதைச் செய்யும்படியாகத் தேவஅன்பு என்னை நெருக்கி ஏவுகிறது. உங்கள் நிகழ்ச்சியின் மூலமாக என்னை இத்தீர்மானத்திற்குள் கொண்டுவந்த அவருக்கு நன்றி செலுத்துகிறேன்” என்று எழுதப்பட்டிருந்தது.

எல்லா மனுஷரும் முழுநேர ஊழியத்துக்குள் இவ்வாலிபனைப் போல பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை. அவன் உலகப்பிரகாரமான செல்வப் பாதுகாப்பைப் பார்க்கிலும் அதிக உன்னதமான ஒரு இலக்கை தெரிந்தெடுத்தான் என்பதே விசேஷமாகும். முதலாவதாக கிறிஸ்துவுக்காக ஜீவிப்பதும் பின்பு நம்மால் கூடுமானவரையில் அவருக்காக உழைப்பதும் அவரது வருகையைச் சந்திக்க ஆயத்தமாவதும் நமக்கு இருக்கும் இலட்சியமாகும்.

கிறிஸ்துவின் வருகையின் அடையாளங்கள்

அவர் வருகையின் சமீபத்தைக் குறித்துச் சில முக்கியமான அடையாளங்கள் உண்டென்று நான் நம்புகிறேன். ஐரோப்பிய ஆசிய நிலைமைகளை நாம் கவனிக்குமிடத்து, அவை நூதனமானதாகவும் அதேசமயத்தில் தீர்க்கதரிசன வெளிப்பாடுகளுக்கு, முக்கியம் வாய்ந்தனவாகவும் உள்ளன. காரியங்கள் தொடர்ந்தேர்ச்சியாய் மாறிக்கொண்டே இருந்தாலும் ஒரு நீண்ட புதிருக்கான விடை, பகுதி பகுதியாக ஆங்காங்கே தோன்றி இருப்பதைக் கவனிக்கத்தக்கதாய் உள்ளது. இந்தத் தீர்க்க தரிசனப் புதிருக்கேற்ற அடையாளங்கள் நாடுகளிடையே தோன்றுவதை மட்டுமல்ல, மனுஷருடைய காரியங்களில் சாத்தானுடைய வல்லமையும் திடமான முன்னேற்றம் அடைந்து வருவதற்குரிய அறிகுறிகளையும் காணக்கூடியதாய் இருக்கிறது. தனது நேரம் குறைந்ததென்று அறிந்த சாத்தானும் தன்னுடைய திட்டங்களைக் கிறிஸ்துவுக்கும் அவருடைய மக்களுக்கும் விரோதமாக துரிதப்படுத்துவான்.

ஒருமுறை மணவாட்டி சபை சேர்க்கப் படுவதைக்குறித்து ஒரு ஆலயத்தில் பிரசங்கம் செய்தேன். அன்று இரவு வீடு திரும்ப பல நூறு மைல்கள் காரில் நானும் சில வாலிபர்களும் வந்துகொண்டிருக்கும்போது வடக்கிலே தோன்றிய ஒரு காட்சி என் கவனத்தைக் கவர்ந்தது. அது பிரகாசமான வெளிச்சமாயிருந்தபடியால் எங்களைத் திடுக்கிடப் பண்ணிற்று. நாங்கள் இதுதான் ஆண்டவருடைய வருகையாயிருக்குமோ என்றும் முதலில் நினைத்தோம். நான் காரை நிறுத்தினேன், பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த ஒரு வாலிபன் மிகவும் பயந்தவனாக “இது ஆண்டவருடைய வருகையாயிருந்தால் நான் மிகவும் வெட்கப்படுகிறேன். ஏனெனில் நான் இதுவரை கிறிஸ்துவிடம் ஒரு ஆத்துமாவையும் சேர்க்கவில்லையே. என் இரட்சகருக்காக நான் ஒன்றுமே செய்யவில்லையே” என்று சொல்லி உடனே தன் ஜீவியத்தை அவருக்கு அர்ப்பணித்தான். அவனுடைய அந்த மாசற்ற தீர்மானம் பிற்காலத்திலே வெளிநாட்டில் ஊழியம் செய்யவும் ஏதுவாயிருந்தது. சிறிது நேரம் கழிந்த பின்பு மற்றொரு வாலிபன் “எக்காளம் எங்கே எப்பொழுது தொனிக்கும்” என்று கேட்டான்.

வடதுருவ சூரியன் பிரதிபலிப்பு பிம்பங்களை (ஒரே சமயத்தில் பல சூரியன்கள் வானத்திலே தோன்றுவது போன்ற காட்சி) ஆண்டவருடைய வருகையின் அறிவிப்பு என்று எண்ணி அவசரப்பட்டுவிட்டோம். ஆனால் இந்தச் சம்பவம் இரண்டு காரியங்களைத் தெளிவுபடுத்திவிட்டது. அதாவது, நாங்கள் அவர் வருகையை விசுவாசிக்கிறோமென்பதையும் அவரைக் கனப்படுத்த விரும்புகிறோமென்பதையும் தெளிவுப்படுத்தியது. விழித்திருக்கும்படியான எச்சரிக்கை வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதையல்ல; நமது சூழலில் காலத்தின் அடையாளங்களைக் கவனிப்பதையே குறிக்கிறது. இவ்விதமான அடையாளங்கள் இடைவிடாமல் உற்சாகத்தோடு ஊழியம் செய்வதற்கு நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும்.

என் படுக்கையறையில் ஒரு வாசகம் எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அதில் “ஒரு வேளை இன்று” என்று எழுதியிருக்கிறது. எச்சமயத்திலே எக்காரணம் கொண்டு அதை நான் பார்க்க வேண்டிவந்தாலும் அது எனக்கு “ஒரு வேளை இன்று” என்ற அதே செய்தியைக் கொடுத்து என் இரட்சகரின் வருகைக்கு என்னை விழிப்புள்ளவனாக்குகிறது. என் செயல்களை ஆராயச் செய்கிறது. கர்த்தரை முன்னிட்டு ஜீவியம் செய்யத் தூண்டுகிறது.

அறிக்கை செய்யப்படாத பாவங்கள் உண்டா? நாம் நம்முடைய அயலாரோடும் கிறிஸ்துவுக்குள்ளும் நம் சகோதரரோடும் நல்ல உறவில் காணப்படுகிறோமா? இன்று உலகில் நம் கடைசி நாளாயிருந்தால் நம் ஆண்டவர் சமூகத்திற்கு மற்றொரு சகோதரருடன் உனக்குள்ள விரோதத்துடன் போகவிரும்புவாயா? சுகபோகமாக இங்கேயே வாழப்போவது போல ஏதோ ஒரு நாளைக்குத் தீர்க்கலாமென்று மூட்டை கட்டி வைக்கக்கூடாது. ஞானத்தோடும் தேவநடத்துதலோடும் இவைகளை கர்த்தருக்கென்று விட்டுக்கொடுப்போமாக.

தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தைத் தரிக்கவும்:

நம்முடைய ஆவியின் கவசத்தோடு நாம் விழித்திருக்க வேண்டும். எபேசியர் 6:10ஆம் வசனத்திலிருந்து வரும் வசனங்களை மீண்டும் மீண்டும் வாசிக்கவேண்டும். தேவ மக்களிடத்தில் சாத்தானின் தாக்குதல்கள் அதிகரிக்கிறது. ஆகையால் நாம் இக்கவசத்தை அணியவேண்டும். நெருக்கடியான சமயங்களில் மனுஷர் எப்படி நடந்துகொள்வார்களென்று நாமறிவோம். அமெரிக்க ஜனாதிபதிகளைக் கவனிப்போமானால் ஒரு பதவிக் காலத்திலேயே அவர்களில் நாம் மாற்றங் காணலாம். இரண்டு பதவிக்காலம் முடியும்போது அவர்களிலே அதிக மாற்றங்கள் ஏற்படுகிறது. ஏனென்றால் அவர்கள் அதிக அரசியல், தேசிய பிரச்சனைகளால் நெருக்கப்பட்ட மனநிலையில் ஜீவிக்கிறார்கள். கிறிஸ்தவனும் சாத்தானின் நெருக்கத்தில் சில சமயம் ஜீவிக்கிறான். சிலசமயம் அவசியமில்லாமலே அந்த நெருக்கம் நம்மில் உண்டாகவோ அதிகரிக்கவோ நாம் இடங்கொடுக்கிறோம். நாம் விழித்திருந்து ஜெபித்தால் இவைகளினின்று தப்புவிக்கப் படுவோம்.

ஆண்டவர் வருகையில் நாம் காணப்பட தொடர்ச்சியாக நமது இருதயம் எதிர்பார்த்திருப்பதும் சோர்ந்துபோகாமல் ஜெபிப்பதும் அவசியம். லூக்.18:1ஆம் வசனத்தில் நாம் வாசிக்கிறபடியே “சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்”. அநேகர் சோர்ந்துபோகிறது மிகவும் துக்கமானதாகும்.

மக்கள் என்றுமில்லாத அளவு மிகுந்த நெருக்கடியின் மத்தியில் இந்நாட்களில் காணப்படுகிறார்கள். அப்படியானால் ஆண்டவர் வருகைக்கு காத்திருப்பவர்களைப்போல விழித்திருந்து ஜெபம்பண்ணக் கடவோம். எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம், நம் சிந்தனைகளையும் நம் இருதயத்தையும் அவருக்கு முன்னாகக் காத்துக்கொள்வதை அவரோடு நாம் ஜீவிக்கும்போது காண்போம்.

“ஆகையால் இனிச் சம்பவிக்கப்போகிற இவைகளுக்கெல்லாம் நீங்கள் தப்பி, மனுஷ குமாரனுக்கு முன்பாக நிற்கப் பாத்திரவான்களாக எண்ணப்படுவதற்கு, எப்பொழுதும் ஜெபம்பண்ணி விழித்திருங்கள்…” (லூக்.21:36).

சத்தியவசனம்