கிறிஸ்துவின் நியாயாசனம்

Dr.உட்ரோ குரோல்

(செப்டம்பர்-அக்டோபர் 2012)

இவ்வையகத்தை நியாயந்தீர்க்க வர விருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் ஒப்பற்ற நாமத்தில் உங்கள் யாவருக்கும் என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.

இயேசுகிறிஸ்து வரப்போகிறார் என்ற செய்தியை நாம் பலவேளைகளில் கேட்டிருக்கிறோம். அவர் எதற்காக வரப்போகிறார்? அவர் வருகையில் நமது நிலை என்ன? என்று நாம் சிந்தித்திருக்கிறோமா? விசுவாசிகளாகிய நாம் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன் நிற்கவேண்டும். இங்கு இரட்சிப்பைக் குறித்து நியாயத்தீர்ப்பு இல்லை. ஏனெனில் இரட்சிப்பு என்பது தேவன் நமக்கு அருளும் இலவச ஈவு. இந்தக் கொடையினைப் பெற்று இயேசுகிறிஸ்துவை இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்கள் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன் நின்று தங்கள் கிரியைகளை மீள்பார்வை செய்யவேண்டும். அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்க பலனைப் பெற்றுக்கொள்ளும் இடம் இந்த கிறிஸ்துவின் நியாயாசனம் ஆகும்.

இவ்வுலகில் நாம் செய்த கிரியைகளுக்கு கிறிஸ்துவின் நியாயாசனத்தில் பலன் அளிக்கப்படும். இரட்சிப்பு வேறு; வெகுமதிகள் வேறு. இரட்சிப்பும் வெகுமதியும் தேவனுடைய கிருபையால் அளிக்கப்படுவன. இரட்சிப்பை நாம் நமது சுயகிரியைகளினால் சம்பாதிக்க முடியாது. ஆனால் கிறிஸ்து தரும் வெகுமதிகளை நாம்தான் ஈட்டிக்கொள்ள வேண்டும். இரட்சிப்பு என்பது நித்திய ஜீவனை அடையும்படிக்கு ஆண்டவரால் நமக்கு அருளப்படும் பரிசு. மற்றது அப்பரிசினால் நாம் சம்பாதித்துக் கொள்வதாகும்.

விசுவாசிகளாகிய நமக்கு, கிறிஸ்துவின் நியாயாசனம் பேருவகையைத் தரும் இடமாகும். அங்கே நமக்கு அநேக வியப்புக்குரிய காரியங்கள் காத்திருக்கும். யாருமே அங்கி கரித்திராத, ஆனால் குறைகூறப்பட்ட நம் செயல்களை, “நான் அதை கவனித்தேன். அது என்னை மகிழ்வித்தது. மனிதர் எவருமே புரிந்து கொள்ளவில்லை எனினும் நான் நன்கு புரிந்து கொண்டேன்” என்று ஆண்டவர் சொல்லி நமக்கு பரிசுகள் அளித்து மகிழ்விப்பார். ஆ! என்ன ஒரு மகிழ்ச்சியின் நேரம் அது!

ஆனால் நமக்கு அதிர்ச்சியளிக்கும் மற்றொரு காரியமும் உண்டு, கிறிஸ்துவின் நியாயாசனம் நமக்கு அதிகமான துக்கத்தையும், அதிகமான வெட்கத்தையும் தரக்கூடியது. நாம் சற்றேனும் சிந்தித்துப் பார்க்க விரும்பாத இச்செய்தி, பரிசுத்த வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளதால் நாம் இதைக்குறித்து அதிக எச்சரிக்கையுள்ளவர்களாயிருக்க வேண்டும். “அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்து போயின என்று விளம்பினது” (வெளி.21:4) கண்ணீரைத் துடைப்பார் என்றால் அங்கே அழுகையும் துக்கமும் இருந்திருக்க வேண்டும் அல்லவா? உண்மைதான்! கிறிஸ்துவின் நியாயாசனத்தில் துக்கிப்பு, புலம்பல் மற்றும் முறையீடுகளும் உண்டு. இது சாத்தியமா என்ற கேள்வி நமக்குள் எழுவது நியாயமே! இதற்கான விடையையும் பரிசுத்த வேதத்திலேயே நாம் கண்டுகொள்ள முடியும். “ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினது போலிருக்கும்” (1கொரி.3:15). அதாவது, தேவன் ஏற்றுக் கொள்ளாத மற்றும் அவருக்குப் பிரியமில்லாத காரியங்கள் நிராகரிக்கப்பட்டுவிடும். அந்த ஊழியங்களுக்கு எந்தவித பலன்களோ, வெகுமதிகளோ, பரிசுகளோ அளிக்கப்படமாட்டாது. அம்மனிதனுக்கு அது நஷ்டமே!

இதே கருத்தைத்தான் அப்போஸ்தலராகிய பரி.யோவானும் எழுதியுள்ளார். “இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1யோவான் 2:28). இயேசுகிறிஸ்துவின் வருகை விசுவாசிகளுக்கு மகிழ்ச்சியைமட்டுமே தரும் என்றில்லை. ஆனந்தம், பேரானந்தம் என்று நினைத்துக்கொண்டிருக்கும் நமக்கு அது வெட்கத்தை உண்டுபண்ணும் ஒருநாள் என்று வேதம் ஆணித்தரமாகக் கூறுகிறது. இந்த வெட்கத்துக்குரிய காரணத்தை நாம் ஆராய்ந்து நம்மை சரி செய்துகொள்வது நலம் என்று நான் நினைக்கிறேன்.

இந்த அவமானம் ஏன் வருகிறது? தவறான நோக்கத்துடன் நாம் இவ்வுலகில் செய்யப்பட்ட காரியங்களையும், செய்யத் தவறிய நற்காரியங்களையும், நினைத்துப் பார்க்கும்பொழுது நமக்கு அவமானம் உண்டாகும். இந்த வெட்கம் வெளியிலிருந்து வருவதல்ல, நம்முள்ளிருந்தே புறப்பட்டு வரும். கிறிஸ்துவுடன் உள்ள ஐக்கியம் நிலையாயும் அவருடன் உண்டான உறவு நெருக்கமாயும் இருப்பின் அவருக்கு முன் நிற்கும்பொழுது நமக்கு தைரியம் உண்டாயிருக்கும். கிறிஸ்துவுடன் நெருங்கி ஜீவிக்க வேண்டுமானால் அவருடைய வார்த்தையில் அதிகநேரம் செலவிட வேண்டும். அவருடன் உரையாடுவதில் மகிழ்ச்சியடைய வேண்டும்.

நாம் செய்த ஊழியம் தேவனால் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் அது பாவமாகக் கருதப்படுமா? அப்படியானால் அப்பாவத்தை கிறிஸ்துவின் சிலுவை நீக்கவில்லையா என்ற ஐயம் எழுகிறதல்லவா? இரட்சகராகிய இயேசு கிறிஸ்து நமது பாவத்துக்கான தண்டனையை சிலுவையில் சுமந்து தீர்த்துவிட்டார். எனவே நான் அவைகளுக்காக நியாயந்தீர்க்கப்படுவதில்லை. ஆனால் நாம் பாவத்தின் பிடியிலிருந்தும், பாவத்தின் சூழ்நிலையிலிருந்தும் இன்னும் விடுதலையாகவில்லையே? கடந்த காலத்தில் நாம் செய்த பாவங்களிலிருந்து நாம் மீண்டுவிட்டாலும், ஒவ்வொருநாளும் நம்மை பாவம் செய்யத் தூண்டும் காரணிகள் ஏராளம். ஒவ்வொருநாளும் நாம் இரட்சிக்கப்பட வேண்டியது அவசியமே. நாம் செய்யத் தக்கவைகளை செய்யாமல், செய்யத்தகாதவைகளை செய்துவருகிறோமே. நிர்ப்பந்தமான மனிதர்களாக நாம் இருக்கிறோம்.

மேலும், தேவன் நமக்கு அளித்த சில வாய்ப்புகளை நாம் வேண்டாம் என்று மறுத்திருக்கலாம். அடிபட்டுக்கிடந்தவனைக் கண்டு விலகிப்போன லேவியனைப் போலவோ, ஆசாரியனைப் போலவோ நாம் பல நேரங்களில் செயல்பட்டிருக்கலாம். இக்காரியங்களுக்காக நமக்கு எந்த ஒரு பிரதிபலனும் கிடைக்காது. இயேசுகிறிஸ்து நம் பாவங்களுக்காக சிலுவையில் மாண்டுவிட்டதினால் நாம் பாவ தண்டனையிலிருந்து இரட்சிக்கப்பட்டுவிட்டோம். ஆனால் நியாயாசனத்தின் முன், ஆண்டவருடைய ஊழியத்தில் நாம் நிராகரித்த காரியங்களுக்கும் விசாரணை நடக்கும். இவ்வுலகில் மாபெரும் வெற்றியுள்ள ஊழியங்களாகக் காணப்பட்டாலும், கிறிஸ்துவின் நியாயாசனத்தில் அவை ஏற்றுக்கொள்ளப்படாமல், சில வெகுமதிகளும் மறுக்கப்படும்.

நான் தேவனுடைய ஊழியத்தை செய்து வருகிறேன். எனக்கு அநேக வெகுமதிகள் நித்தியத்தில் உண்டு என்ற நம்பிக்கையுடையவர்கள் அநேகர். ஆனால் நமக்குரிய அன்பளிப்புகளை நாம் இழந்துவிடுவதற்கும் இரு சாத்தியங்கள் உண்டு. முதலாவதாக தேவன் நமக்கு ஒருசில காரியங்களைச் செய்வதற்கு வாய்ப்புகள் அளித்திருப்பார். ஆனால் நாமோ பல்வேறு காரணங்களைச் சொல்லி அவைகளை மறுத்திருப்போம். எனவே அவ்வாய்ப்பு பிறருக்குப் போயிருக்கும். தேவன் நம்மிடம் எதிர்பார்த்ததை வேறொருவர் செய்து முடித்தபடியால் அவருக்கு அதற்குரிய வெகுமதியைக் கொடுத்துவிடுவார். நமக்கு அது பேரிழப்பு. எடுத்துக்காட்டாக, இயேசுகிறிஸ்துவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ்காரியோத்துக்கு நித்திய வாழ்வு காத்திருந்தது. ஆனால் அவனோ அதனை உதறித் தள்ளிவிட்டான். நான்று கொண்டு செத்தான். யூதாசுக்குப் பதிலாக மத்தியா தேர்ந்தெடுக்கப்பட்டார். எனக்கு தரப்பட்ட ஆண்டவருடைய ஊழிய வாய்ப்புகளை நான் நிராகரித்தால் அது வேறொருவருக்குத் தரப்படும். அதற்கான வெகுமதி அவர்களைச் சேரும்.

இரண்டாவதாக, நான் ஒரு காரியத்தைச் செய்ய வாய்ப்பு கிடைத்தும் அதனைத் தவறான வழியில் செய்ததால் அதற்கான பலனை இழக்க நேரிடும். எனவே நமது ஊழியத்தைக் குறித்து நாம் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தேவன் நம்முடைய வாழ்வில் எதிர்பார்ப்பதை நாம் அறிவோம் எனில், குறையுள்ள நமது ஜீவியம் மற்றும் நாம் செய்யும் ஊழியங்கள் ஆகியவற்றை சரிப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையெனில் கிறிஸ்துவின் நியாயாசனத்துக்குமுன் நாம் தலைகுனிந்து நிற்க நேரிடலாம். “உன்னிடத்தில் சில குறைகள் உண்டு, அவற்றை நீயும் அறிவாய். ஆனால் நீ அவற்றைக் குறித்து கவலைகொள்ளவில்லை; அவற்றைக் களையவும் இல்லை. எனக்கு நீ செய்த ஊழியத்தில் குறைகள் உண்டு. நான் அதனை அங்கிகரிக்கவில்லை. எனவே அதற்கான அன்பளிப்பை நீ இழக்கிறாய்” என்று கிறிஸ்து கூறுவார். ஒருவன் மல்யுத்தம் பண்ணினாலும் சட்டத்தின்படி பண்ணாவிட்டால் முடிசூட்டப்படமாட்டான் அல்லவா?.

இவ்வாறாக இழந்துபோன பரிசுகளை மீண்டும் பெற்றுக்கொள்ள வாய்ப்பு உண்டா? கிறிஸ்து அவற்றைத் திரும்பவும் அளிப்பாரா அல்லது தர மறுத்துவிடுவாரா? “நான் உனக்கு அநேக பரிசுகள் அளித்தேன், ஆனால் இப்போது அவற்றை உன் கையிலிருந்து பிடுங்கிக்கொண்டேன்” என்று கிறிஸ்து ஒருபொழுதும் சொல்லமாட்டார் என நான் எண்ணுகிறேன். இவ்வுலக வாழ்வை நாம் முடித்தபின்னர், இயேசுகிறிஸ்து நமக்கு பரலோக அன்பளிப்புகளைத் தருவார். “மனுஷ குமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார்” (மத்.16:27) என்று கிறிஸ்து கூறியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு பலன் அளிப்பது என்பது அந்த மனிதனுக்கு வெகுமதி தருவதேயாகும். அவர் நம்மை விசாரணை செய்து, இவற்றில் சில உனக்குரியது அல்ல. இன்னும் நீ பெற்றுக் கொண்டிருக்க வேண்டியது அநேகம் என்று கூறுவார். வெகுமதிகளை இழப்பது என்பது அவற்றைத் திருப்பித்தருவது என்று பொருள்படாது. அதாவது பரிசுகளைப் பெறும் வாய்ப்பினை இழப்பது என்றே பொருள்படும்.

இதனை சத்திய வசனத்தின் வார்த்தைகள் மூலமாக ஆராய்வோம். அப். யோவான் தமது முதலாம் நிருபத்திலே, “இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப் போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படிக்கு அவரில் நிலைத்திருங்கள்” (1யோவா. 2:28) என்று எழுதியுள்ளார். இப்பொழுது செவ்வையான காரியங்களைச் செய்யுங்கள், அப்பொழுது ஆண்டவர் வருகையில் செவ்வையாய்ச் செய்தோம் என்ற தைரியம் உங்களுக்கு உண்டாயிருக்கும். கிறிஸ்துவின் நியாயாசனத்தில் தலைகுனிவு அடைய வேண்டாம் என்று பொருள்பட அவர் கூறியுள்ளார்.

நீங்களும் நானும் கிறிஸ்துவின் நியாயாசனத்தின் முன்நிற்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதற்காக இவ்வுலகில் இருந்துகொண்டு கவலைப்பட வேண்டாம். நம்முடைய ஆவி, ஆத்துமா சரீரம் யாவிலும் மாசற்றவர்களாய் அவருக்கு முன் நிற்க நாம் தைரியமாய் இருக்க வேண்டும். நாம் செய்த காரியம், அதன் நோக்கம், அது செய்யப்பட்ட விதம் இவற்றைக் குறித்து நம்பிக்கையுடன் நாம் இருப்போமானால், இவ்வுலகில் எவருமே அதைப் பாராட்டாவிட்டாலும், அந்த நாளை நாம் மகிழ்ச்சியுடன் எதிர்நோக்கியிருப்போம்.

இரட்சிப்பும் வெகுமதியும் ஒன்றல்ல என்பதை நாம் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம். எபேசியர் 2:8,9ல் இரட்சிப்பு என்பது “கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல;” என்றும், வெகுமதி என்பது “ஏனெனில், நற்கிரியைகளைச் செய்கிறதற்கு நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்கப்பட்டு, தேவனுடைய செய்கையாயிருக்கிறோம்; அவைகளில் நாம் நடக்கும்படி அவர் முன்னதாக அவைகளை ஆயத்தம்பண்ணியிருக்கிறார்” (எபே.2:10) என்றும் பரி.பவுலடிகளார் எழுதியிருக்கிறார். நற்கிரியைகளைச் செய்யவே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம்.

கிறிஸ்துவின் நியாயாசனத்திலே நமக்கு வெகுமதிகள் கொடுக்கப்பட்டு, நம்முடைய வாழ்வு நியாயந்தீர்க்கப்படும். அங்கே இரட்சிப்பைக் குறித்த கேள்வி எழாது. அதாவது எனக்கு வெகுமதி இல்லை என்றாலும் எனக்கு இரட்சிப்பு அதாவது நித்திய ஜீவன் உண்டு. அங்கே என்னுடைய வாழ்வின் கிரியைகளே விசாரிக்கப்படும்.

1கொரி.3:15 இல் “ஒருவன் கட்டினது வெந்துபோனால், அவன் நஷ்டமடைவான்; அவனோ இரட்சிக்கப்படுவான்; அதுவும் அக்கினியிலகப்பட்டுத் தப்பினதுபோலிருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது. இதனை பின்வருமாறு நாம் விளக்கலாம். உங்களுடைய வீடு தீ பற்றிக்கொண்டது என வைத்துக்கொள்வோம். தீ வேகமாகப் பரவுகிறது. நீங்கள் வேகமாக வெளியேற வேண்டும். உங்கள் உடைமைகள் அனைத்தையும் எடுத்துக்கொள்ள நேரமில்லை. ஆனால் உங்களுக்கு மிகமிக அவசியமான பொருட்களைமட்டும் எடுத்துக் கொண்டு உங்களுடைய உயிர் தப்ப வெளியேறிவிடுவீர்கள் அல்லவா? உங்களுடைய பொருட்கள் அனைத்தையும் இழக்க நேரிட்டாலும், நீங்கள் உயிருடன் இருப்பது ஆறுதலுக்குரியது அல்லவா?

நான் சொல்ல வருவது என்னவென்றால், கிறிஸ்துவின் நியாயாசனத்துக்கு முன், அநேக காரியங்கள் எரிந்துபோய்விடும். நாம் அருமையானது என எண்ணின அநேகம் சோதனையில் நிற்கமாட்டாது. ஆனால் நம்முடைய ஜீவன் அழிந்துபோகாது. நான் என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் கரத்தினில் இருக்கிறேன். அவர் என்னை தமது கரங்களில் இறுகப்பற்றிக் கொண்டிருக்கிறார் என்பதே மகிழ்ச்சியான செய்தி!

இந்த நவீன உலகில் திருச்சபைகளில் நடைபெறும் ஆராதனை நிகழ்வுகளும், தேவனுடன் ஐக்கியம் கொள்வதற்கு பதிலாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்குபெறுவதும், வெறும் சடங்காசாரங்களைப் பின்பற்றுவதுமாகவே உள்ளன. தேவனுக்கு ஊழியம் செய்வதைப் பற்றியும் எது நிலையானது, எது மாயையானது என்பதைப் பற்றி வேதம் தெளிவாகக் காட்டுவதால் நாம் வேதாகமத்துக்குத் திரும்ப வேண்டும். தேவனுடைய வார்த்தையை வாசித்து, தியானித்து, ஆராய்ந்து தேவன் எவைகளுக்கு வெகுமதிகளை அளிக்கிறார் என்பதைத் தெரிந்து அதனை செய்ய அவருடைய ஞானத்தையும், ஆலோசனையையும் கிருபையையும் பெற்றுக்கொள்வோமா?

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்