ஆற்றைக் கடக்கும் அற்புதம்

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(செப்டம்பர்-அக்டோபர் 2012)

மூன்று நடைமுறைக் காரியங்கள்

யோர்தான் நதிக்கரையில் மூன்று நாட்கள் தங்கியிருந்த காலத்தில், நதியைக் கடப்பதற்கான ஆயத்த செயல்களில் யோசுவா ஈடுபட்டான். வெள்ளம் கரைபுரண்டு ஓடிய அரை மைல் வரை அகலமாயிருந்த ஆற்றை எவ்வாறு கடப்பது என்பதை அறியாதிருந்தாலும், தேவனுடைய உதவியுடன் அதை எப்படியும் கடந்து விடலாம் என்னும் நம்பிக்கை யோசுவாவுக்கு இருந்ததினாலேயே அவன் ஆற்றைக் கடப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தான். இத்தகைய நம்பிக்கை இல்லாதிருந்தால் அவன் எதுவும் செய்யாமல் பேசாமல் இருந்திருப்பான். யோசுவாவைப் போல கர்த்தர் செயல்படுவதற்காக நாம் காத்திருக்கும் காலத்தில் நாம் செய்யவேண்டிய காரியங்களைச் செய்ய வேண்டும். பிரச்சனை தீர்க்கமுடியாத அளவு பெரிதாக இருக்கும்போது, எதிரிடையான மனதுடன் சோர்வடைந்துபோய் நாம் செய்ய வேண்டியவைகளைச் செய்யாமல் இருந்து விடக்கூடாது. யோர்தான் நதியைக் கடப்பதற்காகக் காத்திருந்த காலத்தில் யோசுவா மூன்று காரியங்களைச் செய்யும்படி மக்களுக்கு கூறுகின்றான். இவை யோர்தான் நதியைக் கடப்பதற்காக இஸ்ரவேல் மக்கள் செய்ய வேண்டிய ஆயத்த செயல்களாக இருந்தன.

(அ) மக்களின் பார்வை (யோசு.3:2-4)

யோர்தான் நதியைக் கடப்பதற்கு இஸ்ரவேல் மக்கள் செய்யவேண்டியிருந்த முதலாவது ஆயத்த செயல் அவர்களுடைய பார்வையுடன் தொடர்புடையது. அதாவது, அவர்கள் “தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைப்” பார்த்தவாறு யோர்தான் நதியைக் கடக்கவேண்டியவர்களாக இருந்தனர். 4.5 அடிகள் நீளமும், 2.5 அடிகள் அகலமும், 2.5 அடிகள் உயரமுமான இப்பெட்டியைப் பற்றி யாத்திராகமம் 25:10-22ல் நாம் வாசிக்கலாம். ஆரம்பத்தில் ஆசரிப்புக் கூடாரத்திலும் பின்னர் ஆலயத்திலும் வைக்கப்பட்டிருந்த இப்பெட்டி அக்காலத்தில் தேவனுடைய பிரசன்னத்திற்கான அடையாளமாக இருந்தது (எண். 7:89, 10:35-36, யாத்.25:22, 1சாமு.4:4). இப்பெட்டியின் மேற்பகுதியில் இரு புறத்திலும் இருக்கும் சேராபீன்களுக்கு நடுவில் மனிதருடைய கண்களுக்குப் புலப்படாத விதத்தில் தேவன் வாசமாயிருந்தார் (1சாமு.4:4, 2சாமு. 6:2, சங்.80:1, 99:1). ஆசாரியர்கள் இப்பெட்டியைச் சுமந்து செல்லும்போது மக்கள் இதைப் பார்த்தவாறு யோர்தான் நதியைக் கடக்கும் தங்களுடைய பிரயாணத்தை ஆரம்பிக்க வேண்டியவர்களாய் இருந்தனர்.

“மூன்றுநாள் சென்றபின்பு, அதிபதிகள் பாளயம் எங்கும் போய், ஜனங்களை நோக்கி: நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் அதைச் சுமக்கிற லேவியராகிய ஆசாரியர்களையும் கண்டவுடனே, நீங்களும் உங்கள் இடத்தைவிட்டுப் பிரயாணப்பட்டு, அதற்குப் பின்செல்லுங்கள். உங்களுக்கும் அதற்கும் இடையிலே இரண்டாயிரம் முழத் தூரமான இடம் இருக்கவேண்டும்; நீங்கள் நடக்க வேண்டிய வழியை அறியும்படிக்கு, அதற்குச் சமீபமாய் வராதிருப்பீர்களாக; இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்து போகவில்லை என்று சொல்லி கட்டளையிட்டார்கள்” (யோசு. 3:2-4).

இவ்வசனங்களில் ஜனங்களின் அதிபதிகள் மக்களுக்கு கொடுக்கும் அறிவுறுத்தல், யோசுவா அதிபதிகளுக்குக் கொடுத்த கட்டளையாய் உள்ளது. அதாவது, யோசுவா அதிபதிகளுக்கு கொடுத்த கட்டளையையே அவர்கள் மக்களுக்கு கொடுத்தனர். இதே விதமான செயல்முறையை நாம் யோசுவா 1: 10-11லும் பார்க்கலாம். இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடப்பதற்காகச் செல்லும் போது முதலில் ஆசாரியர்கள் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்ல வேண்டும் என்றும், ஜனங்கள் இவர்களை இரண்டாயிரம் முழத் தூரத்தில் பின்தொடர்ந்து செல்லவேண்டும் என்றும் இஸ்ரவேல் மக்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒரு முழம் 18 அங்குலங்களாகும். எனவே, இரண்டாயிரம் முழங்கள் 3000 அடிகளாக, ஏறக்குறைய அரை மைல் தூரமாக இருந்தது.

தேவனே இஸ்ரவேல் மக்களை வழி நடத்திச் செல்லப்போவதனால் அவருடைய பிரசன்னத்திற்கு அடையாளமாய் இருக்கும் உடன்படிக்கைப் பெட்டியை அவர்கள் பின் தொடர்ந்து செல்லவேண்டியவர்களாய் இருந்தனர். உண்மையில், “உடன்படிக்கைப் பெட்டியின் அசைவானது தேவனுடைய அசைவாக, அதாவது, அது ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்குச் செல்வது தேவன் ஓரிடத்திலிருந்து இன்னுமொரு இடத்திற்குச் செல்வதாகவே இருந்தது (எண்.10:35)”. எனவே, மக்கள் அனைவரும் உடன்படிக்கைப் பெட்டியைப் பார்க்கக்கூடிய விதத்தில் இரண்டாயிரம் முழத்தூரத்தில் அதைப் பின்தொடரும்படி அறிவுறுத்தப்பட்டனர். இதனால்தான், “நீங்கள் நடக்கவேண்டிய வழியை அறியும்படி அதற்கு சமீபமாய் வராதிருப்பீர்களாக” என்னும் அறிவுறுத்தல் மக்களுக்கு கொடுக்கப்பட்டது. அக்காலத்தில் இஸ்ரவேல் மக்களின் தொகை 2 மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததினால், மக்கள் உடன்படிக்கைப் பெட்டிக்கு அருகில் சென்றால் எல்லோராலும் அதைப் பார்க்க முடியாமல் இருந்திருக்கும். இதனால், எல்லாரும் உடன்படிக்கைப் பெட்டியைப் பார்த்தவாறு செல்லக்கூடிய அளவு தூரத்தில் அதைப் பின் தொடர்ந்து செல்லும்படி அவர்களுக்கு கூறப்பட்டது. உண்மையில், உடன்படிக்கைப் பெட்டியைப் பார்த்தவாறு சென்றால் மாத்திரமே தாங்கள் செல்லவேண்டிய வழியை அவர்கள் அறிந்துகொள்ளக்கூடியவர்களாக இருந்தனர். இதைப்போலவே, நம் வழிகள் எல்லாவற்றிலும் நாம் தேவனைப் பார்த்தவாறு சென்றால் மாத்திரமே நம்மால் இவ்வுலக வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்திட முடியும். இதனால் தான், “உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக் கொள்; அப்பொழுது அவர் உன் பாதையைச் செவ்வைப்படுத்துவார்” என்று நீதி.3:6 அறிவுறுத்துகிறது.

யோசுவாவின் காலத்தில் உடன்படிக்கைப் பெட்டி தேவனுடைய பிரசன்னத்துக்கான அடையாளமாக இருந்ததுபோல தற்காலத்தில் தேவனுடைய பிரசன்னத்தை அடையாளப் படுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை. ஆனாலும் தேவன் நம்மோடு எப்பொழுதும் இருக்கின்றார் (எபி. 13:5). இதனால், நாம் நம் வழிகள் எல்லாவற்றிலும் அவரையே நோக்கிப் பார்த்தவர்களாகச் செல்லவேண்டும். “…விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” என்று வேதாகமம் அறிவுறுத்துகிறது (எபி.12:1). எனவே புதிய ஏற்பாட்டுக் காலத்தில் வாழும் நாம் எப்பொழுதும் எல்லாச் சூழ்நிலைகளிலும் இயேசுகிறிஸ்துவை நோக்கிப்பார்த்தவர்களாக வாழவேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகளில் நாம் அச்சூழ் நிலையைப் பார்த்து பயந்துபோய் விடக்கூடாது. இயேசுவை நோக்கிப் பார்த்தவனாக கடலின்மீது நடந்துசென்ற பேதுரு, எச்சந்தர்ப்பத்தில் இயேசுவின் மீதிருந்த தன்னுடைய பார்வையைக் கொந்தளிக்கும் கடலின்மீது திருப்பினானோ, அச்சந்தர்ப்பத்தில் அவன் கடலில் அமிழ்ந்துபோகத் தொடங்கினான். இதைப்போலவே, நாமும் இயேசுவின் மீதிருக்கும் நம்முடைய பார்வையை வாழ்வின் நெருக்கடிகளின் பக்கம் திருப்பினால் நாமும் வாழ்வில் முன்னோக்கிச் செல்ல முடியாதவர்களாக விழுந்துபோவோம். எனவே, நாம் எப்பொழுதும், எல்லாச் சூழ்நிலைகளிலும் இயேசுவை நோக்கிப்பார்த்தவர்களாக நம்முடைய வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்ந்திட வேண்டும்.

இஸ்ரவேல் மக்களுக்கு யோசுவாவின் அறிவுறுத்தலைக் கொடுக்கும் அதிபதிகள், “இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்த வழியாய் நடந்துபோகவில்லை” என்றும் கூறுகின்றனர். உண்மையில், யோர்தான் நதியைக் கடந்து செல்லும் பாதையில் எவருமே அதுவரையில் சென்றிருக்கவில்லை. வாக்குத்தத்த பூமிக்குள் செல்வதற்கு வேறு பாதைகள் அக்காலத்தில் இருந்தபோதிலும், எவரும் செல்லாத ஆற்றின் நடுவில் பாதையை உருவாக்கி தேவன் அவர்களை வாக்குத்தத்த தேசத்திற்குள் அழைத்துச் செல்கின்றார். இதைப்போலவே, நாம் செல்வதற்குப் பாதைகளே இல்லாத இடத்திலும் தேவன் அற்புதமாகப் பாதைகளை உருவாக்கி நம்மை வழிநடத்திச் செல்பவராக இருக்கின்றார். “அவர் நம்மைத் தனியே எங்கும் அனுப்புவதில்லை. நம்மை வழிநடத்திச் செல்லும் அவர் எப்பொழுதும் நம்முடனே வருகின்றார். எனவே, நாம் தனியாகப் பிரயாணம் செய்து தடுமாறுகிறவர்களாக அல்ல, பாதைகள் இல்லாத இடத்திலும் நமக்குப் பாதைகள் தெரியாத வழிகளிலும் நாம் செல்வதற்கான பாதையை உரு வாக்கித் தந்து நம்முன்னே செல்லும் தேவனுடன் நாம் பயணம் செய்கிறவர்களாக இருக்கின்றோம்.”

(ஆ). மக்களின் பரிசுத்தம் (யோசுவா 3:5)

இரண்டாவதாக, இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடப்பதற்காகத் தேவன் அற்புதம் செய்வதற்கு அவர்கள் தங்களைப் பரிசுத்தப்படுத்த வேண்டியவர்களாய் இருந்தனர். “யோசுவா ஜனங்களை நோக்கி: உங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொள்ளுங்கள்; நாளைக்குக் கர்த்தர் உங்கள் நடுவிலே அற்புதங்களைச் செய்வார் என்றான்” (யோசு. 3:5).

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பரிசுத்தம் செய்வது வெளிப்பிரகாரமான செயல்களாக இருந்தன. இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையடிவாரத்தில் இருக்கும் காலத்தில் தேவன் அவர்கள் மத்தியில் பிரசன்னமாவதற்கு முன்னர் அவர்களைப் பரிசுத்தம்பண்ணிக் கொள்ளும்படி அறிவுறுத்தியபோது, அவர்கள் தங்கள் வஸ்திரங்களைத் தோய்த்து சுத்தம் பண்ணுவதும் பாலுறவில் ஈடுபடாதிருப்பதும் தங்களைப் பரிசுத்தம்பண்ணும் செயல்களாக இருந்தன (யாத்.19:10, 19:14-15). எனவே, இங்கும் இதேவிதமான அறிவுறுத்தலே மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கவேண்டும் என்று வேத ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். லேவியராகமம் 14ஆம் 15ஆம் அதிகாரங்களைக் கருத்திற்கொள்ளும்போது, சரீரத்தைக் கழுவி சுத்திகரிப்பதையும் (அதாவது குளிப்பதையும்) பரிசுத்தப்படுத்துதல் உள்ளடக்கியதாய் இருந்திருக்க வேண்டும். பழைய ஏற்பாட்டுக்காலத்தில் இத்தகைய வெளிப்பிரகாரமான சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தாலும், “பரிசுத்தம்” என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் “வேறுபிரிக்கப்பட்டிருத்தல்” அல்லது “வித்தியாசமாயிருத்தல்” என்னும் அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அதாவது, “அசுத்தமானதும், தேவனுக்கு அருவருப்பானதுமான காரியங்களில் இருந்து ஒருவன் தன்னைப் பிரித்தெடுத்து, அவருடைய அறிவுறுத்தல்களின்படி வாழ்வதற்கு அர்ப்பணிப்பதே பரிசுத்தமான வாழ்வாக இருந்தது.” எனவே, தேவனுடைய பார்வையில் பரிசுத்தமாயிருப்பவன் மற்றவர்களிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டவனாகவும், மற்றவர்களைப் போல வாழாதவனாகத் தேவனுடைய கட்டளைகளைக் கைக்கொண்டு வாழ்பவனாகவும் இருப்பான். அதேசமயம், இது உள்ளான ஆவிக்குரிய சுத்திகரிப்பையும் உள்ளடக்கிய பரிசுத்தமாயுள்ளது. எனவே, “அவர்கள் தங்கள் உள்ளத்தை ஆராய்ந்து பார்த்து, தங்கள் வாழ்விலுள்ள பாவங்களைத் தேவனிடம் அறிக்கையிட்டு, அவருடன் சரியான உறவுக்குள் வரவேண்டியவர்களாகவும் இருந்தனர்.”

கிறிஸ்தவ வாழ்வில் பரிசுத்தமாயிருப்பது மிகவும் முக்கியமானதாய் உள்ளது. “….நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக” (லேவி.11:45) என்று தேவன் தெரிவித்துள்ளார். “நீங்கள் (நாம்) பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது” (1தெச.4:3). நாம் பரிசுத்தமாயிருப்பதற்கே அழைக்கப்பட்டுள்ளோம் (1தெச.4:7). இதனால், “உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்” (1பேதுரு 1:15) என்று வேதாகமம் கூறுகிறது. எனவே, நாம் இவ்வுலக மக்களுடைய வழிமுறைகளின்படி வாழாமல், தேவனுடைய வார்த்தையான வேதாகமம் காண்பிக்கும் வழியில் வாழவேண்டும் (ரோ.12:2). அதாவது, வேதாகமம் செய்யச் சொல்கின்ற காரியங்களை நாம் செய்கிறவர்களாகவும், வேதாகமம் தடைசெய்துள்ள காரியங்களை நாம் தவிர்த்துக் கொள்கிறவர்களாகவும் இருக்கவேண்டும். இதுவே, நாம் பரிசுத்தமாய் வாழ்வதற்கான ஒரேயொரு வழிமுறையாக உள்ளது. இதனால்தான், “வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்?” என்று கேட்கும் சங்கீதக்காரன், “உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக் கொள்ளுகிறதினால்தானே.” (சங்.119:9) என்று பதிலளித்துள்ளான். எனவே, தேவனுடைய வார்த்தையின்படி நாம் வாழும்போது அவருடைய அற்புதமான வழிநடத்துதலை நம்முடைய வாழ்வில் நாம் காணலாம். “தேவன் நம்முடைய வாழ்வில் அற்புதம் செய்வதற்கு நமக்கு ஆவிக்குரிய ஆயத்தம் அவசியமாயுள்ளது”. ஏனெனில், “மக்களின் பரிசுத்தமே தேவன் அவர்களுக்காக அற்புதம் செய்வதற்கான அடிப்படையாய் உள்ளது.” எனவே “….மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்” (2கொரி.7:1).

(இ) மக்களின் பயணம் (யோசு.3:6)

இஸ்ரவேல் மக்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வதற்கான மூன்றாவது ஆயத்த செயலாக, ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்துகொண்டு ஜனங்களுக்கு முன்னே செல்வது இருந்தது. இதனால் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு செல்லும்படி யோசுவா அவர்களுக்குக் கட்டளையிட்டான்.

“பின்பு யோசுவா ஆசாரியர்களை நோக்கி: நீங்கள் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு, ஜனங்களுக்கு முன்னே நடந்து போங்கள் என்றான்; அப்படியே உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக்கொண்டு ஜனங்களுக்கு முன்னே போனார்கள்” (யோசுவா 3:6).

யோசுவா ஆசாரியர்களுக்கு கொடுத்த இக்கட்டளை அவனுடைய விசுவாச வார்த்தைகளாக உள்ளன. ஏனெனில், யோசுவா ஆசாரியர்களைப் புறப்பட்டுப் போகச் சொன்ன பின்பே தேவன் யோசுவாவுடன் பேசத் தொடங்கி அவன் என்ன செய்யவேண்டும் என்று கூறுகின்றார் (யோசு.3:7-8). எனவே தேவன் பேசும் வரைக்கும் எப்படி ஆற்றைக் கடப்போம் என்பதை அறியாதிருந்த போதிலும், எப்படியும் ஆற்றைக் கடக்க தேவன் உதவிசெய்வார் என்பதை அறிந்திருந்த யோசுவா, ஆற்றைக் கடப்பதற்கான ஆயத்தங்களைச் செய்தவனாக, ஆசாரியர்களைப் புறப்படும்படி கூறுகின்றான். கடக்க முடியாத நிலையில் யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், 40 வருஷங்களுக்கு முன்பு அற்புதமான விதத்தில் செங்கடலின் நடுவே வழியை உண்டாக்கிய தேவன், யோர்தான் நதியிலும் வழியை உண்டாக்குவார் என்னும் நம்பிக்கையில் யோசுவா இவ்வாறு கூறியுள்ளான். இதைப்போலவே கடந்த காலத்தில் தேவன் நம்முடைய வாழ்வில் செய்தவற்றை நினைத்துப் பார்க்கும்போது, அவர் நிகழ்காலத்திலும் நம்முடைய வாழ்வில் அற்புதமாகச் செயல்படுவார் என்னும் நம்பிக்கை நமக்கு ஏற்படும். இதனால் நிகழ்கால நெருக்கடியின்போது தேவன் கடந்த காலத்தில் நம்முடைய வாழ்வில் செய்த காரியங்களை நாம் ஒருபோதும் மறக்கலாகாது. அது மாத்திரமல்ல, யோசுவாவைப் போல, தேவன் நிச்சயமாய் செயல்படுவார் என்னும் நம்பிக்கையில், நாம் செய்யவேண்டிய காரியங்களைச் செய்கிறவர்களாக இருக்கவேண்டும்.

(தொடரும்)

சத்தியவசனம்