முதியோர் ஆசீர்வாதத்தின் பாத்திரங்கள்!

சகோதரி சாந்தி பொன்னு
விருத்தாப்பியம் (செப்டம்பர்-அக்டோபர் 2012)

(கடந்த இதழின் தொடர்ச்சி)

பிரியமானவர்களே! சுருக்கம் விழுந்த உங்கள் தாயின் முகத்தை உற்றுப்பார்த்திருக்கிறீர்களா! அவருடைய இளவயதின் பொலிவு, பத்து மாதங்கள் உங்களைத் தன் வயிற்றில் சுமக்கையில் அவர் அடைந்த சுகதுக்கங்கள், நோவெடுத்து அவதியுற்று உங்களைப் பெற்றுக் கைகளில் ஏந்தியபோது உங்கள் பிஞ்சு முகத்தைப் பார்த்து மலர்ந்த அந்தத் தாய் முகம், கண்கள் மூடிப் பால் உமிழும் உங்கள் முகத்தை ரசித்து ரசித்து, முதல் முளைத்த உங்கள் தலைமயிரை வருடிவிட்ட அழகான விரல்கள் இவற்றையெல்லாம் நாம் நினைத்துப் பார்க்காமல் இருப்பது எப்படி? நீங்கள் தவழ ஆரம்பித்த நாள், தத்தித் தத்தி நடந்த நாள், முதன் முதல் பாடசாலை சென்ற நாள் என்று உங்கள் ஒவ்வொரு மைல் கல்லிலும் உங்கள் பெற்றோர் அடைந்த பூரிப்பை என்ன சொல்ல! தன் பிள்ளையைப் பார்க்கும்போதும் நினைக்கும்போதும், அத்தாய் முகத்தில் மின்னி மறைந்த ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் சொல்லி முடியாது. வயது சென்றாலும் தாய்க்கு அதே எதிர்பார்ப்பும் ஏக்கமும் இருக்கத்தான் செய்யும். ஆனால், பிள்ளை அதை நினைப்பானா?.

படுக்கையில் இருக்கும் அம்மா, அப்பா அருகில், அதிகம் வேண்டாம், ஒரு சில மணித் துளிகள் அருகில்போய் உட்கார்ந்து அவர்கள் கண்களை உற்றுப்பாருங்கள். அது ஆயிரம் கதை பேசும். என் தாயார் ஒரு ஐந்து மாதங்கள்தான் படுக்கையில் கிடந்தார்கள். இறுதியில் மிகவும் பெலவீனமடைந்து, பேச்சும் குறைந்தது. கண்களும் சிறுத்து, ஒரு சிறு கீறலாகவே தெரியும். நான் அருகில் சென்று உட்கார்ந்ததும், அந்தக் கீறலுக்கூடாக அம்மாவின் கருவிழிகள் வேகமாகச் சுழலுவது தெரியும். தன் கண்களை என் கண்களுடன் இணைத்துக்கொண்டு, இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பார்களே, அது ஆயிரம் கதை சொல்லும். வாழ்நாட்கள் முழுவதும் அவர் என்னுடன் பேசியதைப் பார்க்கிலும், அந்தக் கடைசி நாட்களில் அந்தக் கண்கள் பேசிய மெளன வார்த்தைகள் ஏராளம். இன்றும் அது என் கண்களுக்குள் இருக்கின்றது.

என் தகப்பனாருடன் எனக்குக் கிடைத்த அனுபவங்களோ ஏராளம். அதிகம் பேசாத இறுதி ஆண்டுகளில், முக்கியமாக இரவு வேளைகளில் தூக்கமின்றி முனங்குவார்கள். பயந்தது போல சத்தம் எழுப்புவார்கள். என் கைகளால் அவரது கைகளைத் தொட்டதுதான் தாமதம், இறுகப் பிடித்துக்கொண்டு, ஒரு குழந்தையைப்போலத் தூங்கிவிடுவார்கள். அவர் தூங்குவதை நான் சில மணிநேரம் தூங்காமல் விழித்திருந்து பார்த்து ரசிப்பேன். இவையெல்லாம் நமது வாழ்வுக்கு வலுவூட்டும் அனுபவங்கள் என்று நான் உறுதியாகக் கூறுவேன்.

இன்று முதியோர் இல்லங்களிலும், உயர்தராதரத்திலுள்ள சில வீடுகளிலும் பல முதியோர்கள், உள்ளத்தில் சோகமும், கண்களில் கண்ணீரும் நிறைந்த நிலையில், மெளனத்தில் தவித்திருப்பது ஏன்? முன்னர் சில முதியோர்தான், ஆனால் இப்போது பல முதியோர் ‘Senile Dementia’ (முதியோர் நிலையில் சிந்தனையில் ஏற்படும் மாறாட்டம்) என்று சொல்லப்படும் பலவீனத்தால் அதிகம் பாதிப்படைவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த நிலையில் இவர்கள் அவ்வப்போது நடக்கின்ற சம்பவங்களை அதாவது சமீபத்தில் நடந்த காரியங்களை, முந்தினதினம் நடந்ததைக்கூட மறந்து விடுவார்கள். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தவைகளை ஞாபகப்படுத்திப் பேசுவார்கள். சிலசமயம் அதற்கேற்றாற்போல செயற்படவும் செய்வார்கள். இந்த சிந்தனை மாறாட்ட நிலைக்குத் தள்ளப்படுகின்ற முதியோர், வீட்டிலுள்ளவர்களுக்கு பல அசெளகரியங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதை மறுக்க முடியாது. ஆனால், நாம் அதைப் பொறுத்துத்தான் ஆகவேண்டும்.

எனது தகப்பனாருக்கு இந்தப் பிரச்சனை இருந்தது. தாயார் பிழைக்கமாட்டார் என்றதுமே, அவருடைய மனநிலை குழம்பிவிட்டது. அம்மாவை அவர் மறந்தேபோனார். அம்மா மரித்தபோதுகூட அவருக்கு அதைக் குறித்து எந்தவித உணர்வும் இருக்கவில்லை. பின்னர், அவர் சுகமடைந்து, அம்மாவின் பிரிவை ஏற்றுக்கொண்டு சில மாதங்கள் சுகமாக வாழ்ந்தபோதும், திரும்பவும் சரீரத்தில் உண்டான பெலவீனங்கள் நிமித்தம் திரும்பவும் மறதி நிலைக்குத் தள்ளப்பட்டார். அதிலும், பகல் வேளைகளைப் பார்க்கிலும், இரவு வேளைகளில் குழம்பியேவிடுவார். படுக்கையில் இருந்தபடியே தன்னை தலைமை ஆசிரியர் போலவும், பாடசாலையில் படிப்பிப்பது போலவும் மிகுந்த சத்தமிட்டுப் பேசுவார். எப்படியிருக்கும்!!! ஆனால், விடிந்ததும், இரவு நடந்தது எதுவுமே அவருக்குத் தெரியாதிருக்கும்.

இப்படிப்பட்ட முதியோரைப் பராமரிக்க அன்பு, பரிவு, பொறுமை, ஞானம் எல்லாமே அவசியம். என்னிடம் அவை மிகவும் குறைவு தான். தகப்பனாரின் இந்த நிலைமை, தூங்காத இரவுகள், என் பலவீனம் எல்லாமே சேர்ந்து எனக்கு எரிச்சலைக் கொடுத்தது. ஒரு இரவு நடந்த சம்பவம் மிகவும் சுவாரசியமானது. ‘நான்காம் வகுப்புப் பிள்ளைகள் எழும்பு’ என்று திடீரென ஆரம்பித்து விட்டார். பதிவேட்டைக் (Register) கேட்டார். வேறுவழியின்றி நானும் பாசாங்கு செய்தேன். அவர் ஆரம்பித்தார். ‘ஆறுமுகம்’, நானும் அந்நாட்களின் வழக்கப்படி, ‘வந்தேன்’ என்றேன். ‘சின்னத்தம்பி’ என்றார்! நானும் தூங்கிவழிந்தபடி ‘வந்தேன்’ என்றேன். ஆனால், விழிப்புடன் இருந்த அவரோ, ‘டேய், ஆறுமுகம், நீ ஏன் அவனுக்காக வந்தேன் சொல்லுகிறாய்’ என்று சத்தம் போட்டதுதான், நான் திடுக்கிட்டு விழித்துக் கொண்டு எனது குரலை மாற்றிப் பேசினேன். ‘நல்லபிள்ளை’ என்றார். பின்னர் கணக்குக் கேட்டார். சாதாரணமாக இப்படிப்பட்ட நேரங்களில் நான் அவரிடம் பேசுவேன், அமைதியாகப் படுக்கும்படி சொல்லுவேன். அப்போ இரண்டு மடங்காக சத்தம்போடுவார். ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளில், 2+2 எத்தனை என்று அவர் கேட்க, நானும் 4 என்று பதில் சொல்ல, ‘கெட்டிக்காரன், இன்றைக்குத்தான் நீ நல்ல பிள்ளை. நீயும் படுத்துக்கொள், நானும் படுக்கிறேன்’ என்று சொல்லி அவர் அமைதியாகிப் படுக்க, அன்றுதான் எனக்கு மனதிலே ஒரு வெளிச்சம் தெரிந்தது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும் முதியோரை நாம் கடினமாக நடத்தக் கூடாது. அவர்களுடைய வழியில்தான் நாமும் நின்று அவர்களுக்கு மனஅமைதி கொடுக்கவேண்டும். ஆனால், அவசர உலகில் அல்லல்படும் பிள்ளைகளுக்கு இதெற்கெல்லாம் எங்கே நேரம்?

இது மனஅழுத்தமா? மாறாட்டமா?

நமது முதியோரைப் பார்த்து, இவர்கள் ‘Secondary Childhood’ல் இருக்கிறார்கள் என்று ஆங்கிலத்தில் அழகாகச் சொல்லி விடுகிறோம். ஆனால் இது ஒரு மனிதனுடைய குழந்தை நிலைக்கு மிகவும் வேறுபட்டது.

ஒரு குழந்தையை, அது ஆதரவற்ற குழந்தை என்றாலும் அதை வளர்ப்பது இலகு என்று சொல்லலாம். ஏனெனில், அக்குழந்தைக்கு வாழ்க்கையைத் தெரியாது. அதற்கென்று ஒரு வாழ்க்கைமுறை கிடையாது. 2 அல்லது 3 மாதங்கள் வரைக்கும் தாய்முகமே தெரியாது. அன்பு, பாசம், அரவணைப்புக்காக ஏங்குவது ஒரு குழந்தையின் இயல்பு. அது எப்படி எந்தவிதத்தில் கிடைக்கிறது என்பது, அந்தக் குழந்தையின் குணாதிசயம் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது.

ஆனால், ஒரு முதியவரின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது. அவருக்கு வாழ்க்கையைத் தெரியும். அவருக்கென்று ஒரு வாழ்க்கைமுறை உண்டு. விருப்பு வெறுப்புகள் உண்டு. தன் விருப்பங்களைத் தானே நிறை வேற்றி வாழ்ந்த அவர், இப்போது இன்னொருவர் தயவில் வாழ நேரிடும்போது, அதன் பாதிப்பு மிகக் கொடுமை. தன் கையால் உழைத்து, தானே பிறருக்கும் கொடுத்து, தன் குடும்பத்தையும் நடத்தி, இப்படியாக வாழ்ந்த ஒருவர், தன் தேவைக்குப் பிறர் கையை எதிர் நோக்கும்போது, பசி தாகம் எடுக்கும்போது, தனது பசியைத் தீர்க்க யார் வருவார் என்று ஏங்கிநிற்கும் நிலையில், அவரால் தாங்கிக் கொள்ள முடியாது என்பது யதார்த்தம். இவருடைய ஆலோசனையிலே வெற்றி நடைபோட்ட குடும்ப வாழ்வு, இப்போ, பிள்ளைகளின் ஆதிக்கத்திலே இவரும் அகப்பட்டிருக்கும் நிலை ஏற்படும்போது, ‘விரக்தி’ ஏற்படாமல் இருக்குமா?

இவற்றைப் பிள்ளைகள் உணர்ந்து, முதிர் நிலையிலுள்ள தங்கள் பெற்றோரைப் புண் படுத்தாமல், ஞானமாக நடத்தவேண்டும். அது ஒருவித கலை என்று சொல்லலாம். சமீபத்தில் ஒரு இல்லத்திற்குப் போயிருந்தேன். அங்கிருந்த எந்தவொரு தாயின் தகப்பனின் முகத்திலும் ஒரு புன்சிரிப்பைக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. அவர்கள் யாவரின் முகங்களையும் சோகம் கவ்வியிருந்ததைப் பார்க்க மிகவும் வேதனையாக இருந்தது. அவர்களில் பலருடைய பிள்ளைகள் வெளிநாடுகளில்; அவர்கள் அனுப்பும் பணத்தைக்கொண்டு இவர்கள் இந்த இல்லத்தில், நேரத்திற்குக் கொடுக்கும் உணவை தட்டிலே வாங்கி, கொடுக்கும் தேனீரை விரும்பியோ விரும்பாமலோ குடித்து விரக்தி நிலையிலே வாழுகிறார்கள்.

அடுத்தது, சிறு குழந்தைகளைப் பராமரிப்பதும் இலகு. அழுதால் தூக்கலாம்; தோளில் போட்டுத் தாலாட்டலாம். மலம், ஜலம் போனால் இலகுவாக சுத்தம் செய்யலாம். அடம்பிடித்தால் நிலாவைக் காட்டியாவது உணவு ஊட்டலாம். விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து அமைதிப்படுத்தலாம். ஆனால், ஒரு முதியவரை, அதிலும் படுக்கையிலுள்ள முதியவரைப் பராமரிப்பது என்பது இலகுவான விஷயமல்ல. அதிலும் படுக்கையிலுள்ளவர்கள் நமக்கு எந்தவிதத்திலும் தாங்கள் உதவி செய்யமாட்டார்கள். தூக்கும் போது அவர்களுடைய முழுப்பாரமும் நம்மீது விழுந்துவிடும். அவர்களைத் துடைத்து, சுத்தம்செய்து, வியாதிப்பட்டால் உரிய கவனம் எடுத்து, மருந்து குடிக்க மறுக்கும்போது தந்திரமாகக் குடிக்க வைத்து, அன்பாய் பேசி, அவர்களோடு வேதம் வாசித்து ஜெபித்து…. இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகும். மேலும், படுக்கையிலுள்ள முதியோருக்கு படுக்கைப் புண்கள் வெகு இலகுவில் வந்து விடும். அதற்குரிய பராமரிப்பை வைத்திய ஆலோசனையுடன் செய்தே ஆகவேண்டும். இல்லாவிட்டால், படுக்கைப் புண்கள் ஆழமாகி, அதற்குள் புழுக்கள் தோன்ற அதிக வாய்ப்புண்டு. அதிலும் நீரிழிவு நோயுள்ள முதியோரை, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட முதியோரைப் பராமரிப்பது உண்மையிலேயே மிகவும் கடினம். ஆனாலும் தேவன் துணைசெய்வார்.

ஆக, ஒரு மனிதனுக்கு மனஅழுத்தம் (Depression) ஏற்படுவதற்கு முன்னர், அவன் விரக்தி (Frustration) நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பது உண்மை. விரக்தி நிலை சரிப்படாவிட்டால் அவன் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறான். இந்த மனஅழுத்தம் கவனிக்கப்படாவிட்டால், முக்கியமாக முதிர்நிலையில் அது சிந்தனையில் மாறாட்ட நிலையை ஏற்படுத்தாமல் விடாது என்பதற்கு எந்தவித உறுதிப்பாடும் இல்லை. சிலருக்கு இயல்பாகவே இந்த மாறாட்ட நிலைமை வந்து விடுகிறது. இந்த நிலைக்குத் தள்ளப்படாத முதியோர் உண்மையில் பாக்கியசாலிகள்தான்.

முதிர் நிலைமை பாவமா?

முதிர்நிலையில் இருக்கிற ஒரு அம்மாவைப் பார்ப்பதற்குச் சென்றிருந்தேன். டீச்சர் தொழில் பார்க்கும் அவருடைய ஒரே மகள், அன்பான மருமகன் அத் தாயாரை மிகவும் அன்போடு பராமரிப்பதைக் கண்டேன். ஆனால் மகள் கேட்ட கேள்வி, மகளின் புண்பட்டிருக்கும் மனநிலையை வெளிக்காட்டியது. “எங்கள் அம்மா பக்தியுள்ளவர். ஜெபமும் வேதமுமே அவருடைய தியானம். இப்படிப்பட்டவருக்கு இப்படி ஆகலாமா?” இதே டீச்சர் இந்தக் கேள்வியைக் கேட்டதற்கு முன்பு இன்னொரு கேள்வியையும் கேட்டிருந்தாள். “நமக்கு நேரிடும் துன்பங்களுக்கு நமது பாவம்தான் காரணமா?”

அருமை வாசகர்களே, இதற்கு பதில் உங்களுக்கே தெரியும். பாதகமான சூழ்நிலைகளுக்குள் தள்ளப்படும்போது ஏற்படும் விரக்தி நிலைதான் இப்படிப்பட்ட கேள்விகளை எழுப்புகிறது. நமது பாவங்களையெல்லாம் எண்ணி எண்ணப்பட்டு, அதற்குச் சமமாக துன்பம் நேரிடுமானால் நாம் இன்று எங்கே? தேவன் பொல்லாதவர் அல்லவே.

‘சிந்தனையில் மாறாட்டம்’ இளவயதில் வருமானால் அது கட்டாயம் உடனடியாகவே கவனிக்கப்படவேண்டும். முதிர்நிலையில் ஏற்படும்பட்சத்தில் அவர்களை அமைதிப்படுத்த வைத்திய உதவிகள் உண்டு. அவற்றையும் கடைப்பிடிப்பது நல்லது.

வேதாகம முதியோர்கள்

‘இந்த உலகத்தைவிட்டுப் போய்விட வேண்டும்’ என்று சொல்லுகிறவர்கள் அநேகர். ஆனால், மரணநேரம் கிட்டும்போது, அதே வார்த்தைகளை யார்தான் சொல்கிறார்கள்? நீடித்த நாட்கள் தேவனுடைய ஈவு. கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள்…. ‘..முதிர்வயதிலும் கனிதந்து, புஷ்டியும் பசுமையுமாயிருப்பார்கள்’ (சங்.92:15). பத்துக் கற்பனைகளில் ஒரேயொரு கற்பனையே வாக்குத் தத்தத்துடன் இணைந்து நிற்கிறது. “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கிற தேசத்திலே உன் நாட்கள் நீடித்திருப்பதற்கு, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக” (யாத்.20:12). ஆக, முதிர்நிலை பாவமுமல்ல; சாபமுமல்ல. மோசேயோ, ஆயுசு 70 வருடங்கள் என்றும், மிகுதி 80 வரை வருத்தமும் சஞ்சலமுமே என்கிறார். எது எப்படியோ, நீடித்த ஆயுசை ஆசீர்வாதமாகத் தந்த தேவன், அதற்குரிய காரியங்களையும் நமக்கு ஒழுங்காக்கிக் கொடுக்கமாட்டாரா? என் தகப்பனார் இறக்கும் போது 100 வயதும் 5 மாதங்களும். 104 வயதிலும் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மூதாட்டியையும் அறிவேன்.

இந்த முதுமைக்கு மகுடம் வைத்தாற் போன்ற நிலைதான் ‘விருத்தாப்பியம்’. இதனை ‘பூரண ஆயுசு’ என்றும் சொல்லலாம். யோபு பக்தனின் காலத்திலும் இந்த முதியோர் பிரச்சனை இருக்கத்தான் செய்தது. யோபு 30:1-8வரையிலான பகுதியை வாசித்துப் பாருங்கள். யோபுவைப் பரிகாசம்பண்ணிய யோபுவின் வயதிலும் இளமையானவர்களின் பிதாக்களுடைய நிலைமையை யோபு எடுத்துச் சொல்லுகிறார். விருத்தாப்பியத்தினாலே பெலனற்றுப்போயிருந்த அவர்கள் பசியினால் வாடினார்கள். மனுஷர் நடுவிலிருந்து துரத்தப்பட்டார்கள். இப்படியாகத் தங்கள் பிதாக்களை நடத்தியவர்கள் இப்பொழுது தன்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள் என்று யோபு புலம்பினார். அன்றும் அப்படியென்றால், இன்று நாகரீகமான முறையில் இதுவேதான் நடக்கிறது. அன்றும் இன்றும் மனுஷன் மாறவேயில்லை. ஆனால் தேவன் தம்முடைய பிள்ளைகளைக் கைவிடவில்லை.

ஆபிரகாம்: ‘…ஆபிரகாம் நல்ல நரைவயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான்’ (ஆதி.25:7,8)

ஈசாக்கு: ‘ஈசாக்கு விருத்தாப்பியமும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, நூற்றெண்பது வருஷம் ஜீவித்திருந்து, பிராணன்போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டான். அவன் குமாரராகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம் பண்ணினார்கள்’ (ஆதி.35:28,29). இந்த சம்பவத்தில் நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பகைவர்களாக இருந்த இரண்டு சகோதரரும் தகப்பனின் அடக்கநேரத்தில் ஒன்றுசேர்ந்தார்கள். நமது சமூகத்திலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. பெற்றோர் நமது குடும்ப உறவுக்குப் பாலமாக இருக்கிறவர்கள். அவர்கள் இருக்குமட்டும் சகோதர உறவு எப்படியோ காப்பாற்றப்படுகிறது.

ஆனால், ஈசாக்கின் சாப்பாட்டுப் பிரியமும், மூத்தவனில் ஈசாக்கு கொண்டிருந்த பாரபட்சமான பாசமும், ஈசாக்கின் முதிர்வயதில் அவருக்கு மிகுந்த மனமடிவைக் கொடுத்தது என்பதையும் மறுக்கமுடியாது. அவருடைய கண்கள் பார்வை இழந்துபோனதை சாதகமாக்கி, மனைவியும் இளையவனும் ஈசாக்கை தந்திரமாக திட்டமிட்டு ஏமாற்றினார்கள். தான் ஏமாற்றப்பட்டுவிட்டதை உணர்ந்தபோது, அவர் பிரமித்து, நடுங்கி கலங்கிப்போனார் என்று வாசிக்கிறோம். (ஆதி.25:28; 27:1-33) ஈசாக்கின் நாவின் ருசி அவருடைய கலக்கத்திற்குக் காரணமாயிற்று.

யாக்கோபு: யாக்கோபு இளவயதில் தகப்பனையும், மாமனையும் ஏமாற்றிய ஒருவர். அவர் முதிர்வயதான காலத்தில், அவருக்குப் பிரியமான யோசேப்பு செத்துவிட்டான் என்று பொய்சொல்லி நம்பவைத்து பிள்ளைகளே யாக்கோபை ஏமாற்றிவிட்டார்கள். ஆனால், அவரது கடைசிக்காலங்கள் மிகுந்த ஆசீர்வாதமாக இருந்தது. தன்னை அழைத்துவரும்படி யோசேப்பு சொல்லியனுப்பிய வார்த்தைகளைக் கேட்டபோதும், அதற்காக யோசேப்பு அனுப்பிவைத்த வண்டிகளைக் கண்டபோதும் யாக்கோபின் ஆவி உயிர்த்தது என்று வாசிக்கிறோம் (ஆதி.45:25-28). அவர் யோசேப்பை மீண்டும் கண்டார்.

தன் இஷ்டப்படி வாழ்ந்த யாக்கோபு, இஸ்ரவேலாகி தேவ வழிநடத்துதலை அறிந்து வாழ்ந்ததைக் காண்கிறோம். (ஆதி.46:1-7). யோசேப்பின் இரண்டு பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாக்கி மனமறிந்து அவர்களை ஆசீர்வதித்ததையும், தான் மரணமடையப் போவதை அறிந்து, யோசேப்பை ஆசீர்வதித்து, தன் பிள்ளைகளுக்கு நேரிடப்போகும் காரியங்களைச் சொன்னதையும் வாசிக்கிறோம். (ஆதி.48ஆம்,49ஆம் அதிகாரங்கள்) யாக்கோபு தான் மரணமடையப்போவதை நன்கு உணர்ந்திருந்தார். தன் காரியங்கள் யாவையும் செவ்வனே முடித்த யாக்கோபு, அமைதலான தொரு மரணத்தைச் சந்தித்தார். தன் கால் களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு ஜீவித்துப்போய், தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டார் (ஆதி.49:33). ‘யோசேப்பு தன் கைகளால் உன் கண்களை மூடுவான்’ என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியே, யோசேப்பு தன் தகப்பன் யாக்கோபின் இறுதிக் காரியங்களை நேர்த்தியாகச் செய்தார். மிக அருமையானதொரு அடக்க நிகழ்வு நடந்தது.

ரூத்: ரூத்தின் முதிர்வயதிலே அவளை ஆதரிக்க ஒரு பேரன் பிறந்தான். (ரூத் 4:13)

தாவீது: தாவீதுராஜா வயதுசென்று விருத்தாப்பியனான போது அவரது வீட்டார், அந்நாட்களின் வழக்கத்தின்படி அவரை அன்போடு பராமரித்தார்கள். அவன் தீர்க்காயுசும் ஐசுவரியமும் மகிமையுள்ளவனாய், நல்ல முதிர்வயதிலே மரணமடைந்தான். (1நாளா.29:28)

கிதியோன்: இஸ்ரவேலின் நியாயாதிபதியாயிருந்த ‘கிதியோன் நல்ல விருத்தாப்பியத்திலே மரித்து, ஒப்ராவிலே தன் தகப்பனாகிய யோவாஸ் என்னும் அபியேஸ்ரியனுடைய கல்லறையில் அடக்கம்பண்ணப்பட்டான்’ (நியா.8:32)

நன்மைகள் ஏராளம்:

என் வாழ்க்கை அனுபவத்திலே முதிர் வயதிலே என் தாய் தகப்பன் இருவரையும் பராமரிக்கும் உன்னத பொறுப்பை தேவன் என்னிடம் கொடுத்திருந்தார். சகோதரரின் ஒத்தாசையுடன், நேரடியாக இருந்து பராமரித்த அந்த நாட்களில் என்னிடமிருந்து அவர்கள் பெற்ற நன்மையைப்பார்க்கிலும், அவர்களிடமிருந்து நான் பெற்ற நன்மைகள் ஏராளம் ஏராளம். முக்கியமாக, தேவன் அவர்களை வைத்தே என்னை அதிகமாகப் புடமிட்டார் என்பேன். என் குணாதிசயத்தில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்பட்டன. சில சந்தர்ப்பங்களில் தவறுகள் நேர்ந்தபோதும், உணர்ந்து, மனந்திரும்பி, அறிக்கையிட்டு, முன்பு இருந்ததைக்காட்டிலும், இன்னும் அதிக அன்புடனும் கரிசனையுடனும் அவர்களைப் பராமரிக்கக் கர்த்தர் கிருபை செய்தார். இருவருடைய கண்களையும் மூடிவிட்ட அனுபவம் இருக்கிறதே, அது ஒரு பெரிய பாக்கியம்! என்பேன். அந்த நாட்களில்தான் தேவனுடைய நேரத்திற்கும் காலத்திற்கும் அமர்ந்திருக்கவும் காத்திருக்கவும் கற்றுக்கொண்டேன். பிறரைக் குற்றப்படுத்தாமல், நம்மை நம்பிக் கொடுத்த பொறுப்பை நாம் ஏற்று நடத்தும்போது தேவனுடைய ஒத்தாசை நிறைவாயிருக்கும் என்ற பாடத்தையும் கற்றுக்கொண்டேன்.

உங்களை நம்பித்தான்….:

இப்படியிருக்க, முதியோரைப் புறக்கணிக்கலாமா? அவர்களது உணர்வுகளை அலட்சியப்படுத்தலாமா? இன்று முதியோரின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணமாகவே இருக்கிறது. யுத்தம் என்றும், வீதி விபத்து என்றும் இளவயதிலே பிள்ளைகள் மாண்டு போக, உயிர்ப்பாதுகாப்பு என்றும், உழைப்பு என்றும் சொல்லி வெளி நாடுகளுக்குப் பிள்ளைகள் பறந்துபோக, நாட்டிலே முதியோர் பெருகிவிட்டனர். பணம் அனுப்பும் பிள்ளைகளும், இவர்களைப் பராமரிக்கும் இல்லங்களும், இந்தப் புண்ணியத்தைச் செய்து கொண்டு பணம் சம்பாதிப்பவர்களும்கூட இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும் தேவன்தாமே இவர்களை ஆசீர்வதிப்பாராக!

முதியோர் பெலனற்றவர்கள்; கட்டாயம் பராமரிக்கப்படவேண்டியவர்கள். அன்பு, பாசத்துக்கு ஏங்குகிறவர்கள். நாம் கலங்கி நின்ற வேளையில், தனித்து தவித்து நின்ற வேளையில், அன்புக்காக ஏங்கி நின்ற வேளையில் ஆண்டவர் தமது நேசத்தை நமக்குத் தந்தாரல்லவா! அப்படியிருக்க நமது பெற்றோரை நாம் தள்ளிவைக்க முடியாதே!

அன்பு பிள்ளைகளே, பெரியோரே, உற்றார் உறவினரே, உங்கள் குடும்ப அங்கத்தவர்களாகிய முதியோருக்குரிய கனத்தைக் கொடுக்கத் தவறவேண்டாம். சற்று எழுந்து போய் அவர்களுடைய முகத்தை உயர்த்தி, அன்பான ஒரு பார்வையை வீசிப்பாருங்கள். அதுவே அவர்களுக்குப் பால் வார்த்தது போலாகி விடுவதைக் காண்பீர்கள். ‘நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனம்பண்ணி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் கர்த்தர்’ (லேவி.19:32)

நாம் என்ன செய்யப்போகிறோம்? முதியோராகிய பெற்றோரை மாத்திரமல்ல, எவரையும் கனம் பண்ணிப் பாருங்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பது நிச்சயம். பாட்டி லேவிசாளுக்குள் நிலைத்திருந்த விசுவாசம் பேரன் தீமோத்தேயுவுக்குள் காணப்பட்டதுபோல, நமது முதியோரும் நமக்கு ஆசீர்வாதமான பாத்திரங்களே தவிர, அவர்கள் பாரமான பாத்திரங்கள் அல்ல. தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!

சத்தியவசனம்