ஆசிரியரிடமிருந்து…

சத்தியவசனம் பங்காளர் மடல்

மார்ச்-ஏப்ரல் 2013

கிறிஸ்துவுக்குள் பிரியமுள்ள பங்காளர்களுக்கு,

உயிர்த்தெழுந்த இயேசுவின் இனிய நாமத்தில் அன்பின் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

தேவனுடைய இராஜ்ஜியத்தை விரிவாக்கும் பணியில் எங்களோடு இணைக்கரம் தந்து இவ்வூழியத்தைத் தாங்கி வருகிற உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம். வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்கள் வாயிலாக அநேகமாயிரம் மக்களுக்கு வேத வசனத்தைப் போதிக்கும் இப்பணிக்காக தொடர்ந்து ஜெபியுங்கள். கர்த்தர் உங்களை ஏவுவாரானால் ஆதரவாளர்கள் திட்டத்தில் இணைந்து வானொலி மற்றும் தொலைகாட்சி ஊழியங்களைத் தாங்க அன்பாய் அழைக்கிறோம்.

தேவனுடைய பெரிதான கிருபையால் மார்ச் 1,2,3 ஆகிய நாட்களில் கோவை CSI இம்மானுவேல் ஆலயத்திலும், மார்ச் 8,9,10 ஆகிய நாட்களில் ஈரோடு CSI பிரப் ஆலயத்திலும் நடைபெற்ற லெந்துகால சிறப்புக் கூட்டங்கள் ஆசீர்வாதமாக நடைபெற தேவன் உதவி செய்தார். இக்கூட்டங்களை ஒழுங்கு செய்து தந்து உதவிய ஈரோட்டிலுள்ள சத்தியவசன பிரதிநிதி சகோதரர்.சாம் ஜெயசிங் அவர்களுக்கு எங்கள் நன்றியை தெரிவிக்கிறோம்.

இவ்விதழில் நமக்காக கெத்செமனேயில் தன்னைப் பிழியும்படிக்கு ஒப்புக்கொடுத்த இயேசு கிறிஸ்துவின் கெத்செமனேயின் அனுபவத்தை சகோதரி.சாந்திபொன்னு அவர்கள் விளக்கியுள்ளார்கள். கல்வாரி பாடுகளின்போது தேவன் காட்டிய சகிப்புத் தன்மையையும் பொறுமையையும் டாக்டர்.உட்ரோ குரோல் அவர்கள் தனது செய்தியில் எடுத்துரைத்துள்ளார்கள். பேராசிரியர் எடிசன் அவர்கள் இயேசு சிந்தின இரத்தத்தின் மகத்துவத்தைக் குறித்த செய்தியும், தேவாலயத்தின் திரை இரண்டாக கிழிந்ததினால் நாம் பெற்ற ஆசீர்வாதங்களைக் குறித்து திருமதி.மெடோஸ் அம்மையார் எழுதிய செய்தியும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளது. கலாநிதி.தியோடர் வில்லியம்ஸ் அவர்களும், சுவி.சுசி பிரபாகரதாஸ் அவர்களும் தந்துள்ள இயேசுவின் உயிர்த்தெழுதலைப் பற்றிய விசேஷித்த செய்திகள் பயத்தின் பிடியிலிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஆசீர்வாதமாக அமைகிறது. இச்செய்திகள் வாயிலாக நீங்கள் ஒவ்வொருவரும் ஆசீர்வதிக்கப்படும் படியாக வேண்டுதல் செய்கிறோம்.

உங்கள் அனைவருக்கும் உயிர்த்தெழுதலின் முதற்பேறானவரான இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஈஸ்டர் நல் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

கே.ப.ஆபிரகாம்
சத்தியவசனம்