பிதாவினுடைய சகிப்புத்தன்மையும் பொறுமையும்

Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2013)

கிறிஸ்துவின் பாடு, மரணம் அவரது உயிர்த்தெழுதல் ஆகியவற்றை தியானிக்கும் நாம் இந்த நிகழ்வுகளின்போது பிதாவாகிய தேவனுடைய செயல்பாட்டைப் பற்றி இச்செய்தியில் தியானிப்போம்.

தேவனுடைய ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் மூலமாக நாம் பிதாவாகிய தேவனைப் பற்றி அறிந்துகொள்ள முடியும். சர்வவல்லவராகிய தேவனுடைய பொறுமையை கிறிஸ்துவின் சிலுவைப்பாடு, மரணம் ஆகியவை விளக்குகிறது.

பொறுமை என்பதற்கு தயவு, சகித்தல், தாராளம் என்று பொருள் கொள்ளலாம்.

தேவனுக்கு எதிராக நாம் கலகம்பண்ணி, பாவம் செய்தாலும் அவர் நம்மீது பொறுமையுடன் இருக்கிறார். நம்முடைய பாவத்தன்மையை கருணையுடன் பொறுத்துக்கொள்ளுகிறார். அவரது சகிப்புத் தன்மையானது, தம்முடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவைப் பலியாக ஒப்புக்கொடுக்க சரியான நேரத்துக்கும் சரியான இடத்துக்கும் காத்திருந்தது. சிலுவையில் இயேசுவை ஒப்புக்கொடுத்ததால் பிதாவாகிய தேவன் இரக்கமற்றவர், அன்பற்றவர் என சிலர் குறை கூறலாம். ஆனால் அது உண்மையல்ல என்பதை இத்தியானத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இயேசுவின் சிலுவை மரணம் என்பது வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள பலாத்காரத்துக்கு ஒரு உதாரணமாகும். இன்றைய உலகிலே சிறுவர்களைப் பலாத்காரப் படுத்துவது ஒரு பெரிய பிரச்சனையாகவே உள்ளது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் சுகாதாரம் மற்றும் மனிதவளத்துறையின் ஆய்விலிருந்து அங்கே ஒரு நாளைக்கு நான்கு குழந்தைகள் பலாத்காரத்தினால் மரித்துப் போகிறார்கள் என்று தெரிய வருகிறது. அதில் முக்கால் வாசிப்பேர் நான்கு வயதுக்குக் குறைவானவர்கள். இது எத்தனை பயங்கரம்!

நம்முடைய சமுதாயத்திலே இவ்வித பலாத்காரம் அக்குழந்தையின் வளர்ப்பு தந்தையாலோ, தாயின் நண்பராலோ மற்ற உறவினர்களாலோ நடத்தப்படுகிறது. நம்முடைய குடும்பம் மற்றும் நம்முடைய சமுதாயத்தின் சீரழிவையே இக்காரியம் காட்டுகிறது. உங்களுடைய குழந்தை, உங்களது மனைவியின் உறவினரால் அடிக்கப்படும்பொழுது நீங்கள் என்ன செய்வீர்கள்? அநேகவேளைகளில் குழந்தையின் தகப்பன் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு அவரைப் பழிவாங்குகிறார்.

ஆனால் பரம தகப்பனாகிய தேவனோ அவருடைய குமாரனுக்கு மக்கள் செய்த கொடுமைகளைக் கண்டும் அவர் ஒன்றும் செய்யவில்லை. இயேசு சிலுவையில் மரித்த நாளிலும் பிதாவாகிய தேவன் அனைத்தின் மேலும் கட்டுப்பாடு உடையவராகவே இருந்தார். சர்வவல்ல தேவன் ஒரு கட்டத்தில் இடை மறித்து அனைத்தையும் மாற்றியிருக்கலாம். ஆனால் அவரோ, “இல்லை, இது உலகத் தோற்றத்துக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டது. காலத்தோற்றத்துக்கு முன்னரே இது திட்டமிடப்பட்டது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இவ்வித பாடுகளை அனுபவிக்க வேண்டியிருப்பதால் அதனை நாம் மாற்றக்கூடாது” என்றே கூறியிருப்பார். ஒரு தகப்பனாக இவ்வாறு செய்வது கடினமே. எந்தவொரு தகப்பனும் தனது பிள்ளைகள் வேதனைப்படுவதை சகித்துக்கொள்ள முடியாது.

மத்தேயு நற்செய்தி நூலில் 26 மற்றும் 27 ஆகிய அதிகாரங்களில் எழுதியுள்ள நிகழ்வுகளை நாம் இந்த இதழில் ஆராய்வோம். தேவன் நடக்க வேண்டுமென நினைத்திருந்தபடியே யாவும் நடந்தேறியது.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கு நடந்த யாவையும் அவை நடக்கும் முன்னரே சர்வ வியாபியாகிய தேவனுக்குத் தெரிந்திருந்தது. அவரது முகத்தில் இரண்டுமுறை துப்புவார்கள், அவரை இருமுறை அடிப்பார்கள், அவரை சிலுவை மரத்தை சுமக்க வைத்து, சிலுவையில் அறையப்படும் இடம் வரைக்கும் தெருக்களில் நடக்க வைப்பார்கள். இவை யாவையும் சர்வ ஞானியான தேவன் அறிவார். ஆயினும் அவர் தமது கண்காணிப்பை சிலுவையிலிருந்து அகற்றிவிடவில்லை.

அடுத்ததாக, சர்வ ஞானியான தேவன் சர்வ வல்லவர். அச்சிலுவை மரணத்தை தடுத்து விட அதிகாரமும் அவருக்கு உண்டு. அப்படியிருந்தும் தம்முடைய குமாரன் இவ்வாறு கொடூரமாக அடிக்கப்பட்டு கொல்லப்பட அவர் ஏன் அனுமதித்தார்?

கெத்செமனே தோட்டத்தில் பிரதான ஆசாரியனின் வேலைக்காரனுடைய காதை பேதுரு பட்டயத்தால் வெட்டினார் என்று மத்தேயு 26:52-54இல் எழுதப்பட்டுள்ளது. அப்பொழுது பேதுருவை நோக்கி, இயேசு கிறிஸ்து, “உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று கூறினார்.

அதாவது, “தேவன் இதைத் தடுத்திருக்க முடியும், கல்வாரி நிகழ்வையும் அவரால் தடுத்திருக்க முடியும். ஆனால் இது நிறைவேற வேண்டும் என்பது அவரது திட்டத்தில் உள்ளது. இதனைத் தடுக்க அவர் விரும்பவில்லை”. உண்மையிலேயே இதனைக் கண்ணோக்க தேவனுக்கு கடினமாம். ஆயினும் இதற்காகவே கிறிஸ்து மனிதனாக வந்தார். தன்னை விடுவிக்க “…அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?” என்று பேதுருவிடம் இயேசு வினவினார்.

லேகியோன் என்பது 6,000 வீரர்களைக் கொண்ட படையாகும். அதாவது, “நான் 72,000 தூதர்களை அழைக்க முடியும்” என்ற பொருள்பட கூறினார். நீங்களும் நானும் 72,000 தூதர்களைக் கண்டதில்லை. கெத்செமனே தோட்டத்தில் இயேசுவைப் பிடிக்க வந்தவர்களின் எண்ணிக்கையும் நமக்குத் தெரியாது. நான் அநேகமுறை, இத்தோட்டத்துக்கு சென்றிருக்கிறபடியால் அங்கே நிச்சயமாக 72,000 தூதர்களுக்கு இடமில்லை. மேலும் அந்த இரவில் தோட்டத்தில் வந்தவர்கள் 20, 30, 50 அதிகமாக 200 மனிதர்களே இருந்திருப்பர். அம்மனிதர்களைவிட தூதர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்திருக்கும்.

“தேவன் எனக்கு இந்நிகழ்வை நிறுத்த அதிகாரம் கொடுத்திருக்கிறார். நடக்க இருப்பதை தேவன் அறிவார். இப்பொழுதே 72,000 தூதர்களை அனுப்பி என்னை இந்த இடத்திலிருந்து தப்பிக்க வழிசெய்வார். ஆனால் அதுவல்ல தேவ திட்டம்”. நித்தியத்தில் தீர்மானித்ததை, காலங்கள் மாறும் பொழுது, தேவன் மாற்றிக்கொள்ளுபவரல்லர்.

இவ்வேளையில் தேவனுடைய சுயக்கட்டுப்பாடு மிகவும் ஆச்சரியமானது. என்னுடைய உணர்வுகள் என்னை மேற்கொள்ளும்பொழுது என்னுடைய கட்டுப்பாட்டை நான் இழந்துவிடலாம். நடக்கவிருந்ததை நான் தடுத்திருப்பேன். ஆனால் தேவனோ மக்கள் தம்முடைய குமாரனுக்கு செய்தவைகளுக்காக நீடிய பொறுமையுடன் இருந்தார்.

ஜனங்கள் இயேசுவுக்கு செய்தவைகளை நாம் கவனிப்போம். முதலாவது தோட்டத்தில் இயேசு கொண்டிருந்த வேதனையை ஆராய்வோம். கெத்செமனே தோட்டத்தில் இயேசு பிதாவை நோக்கி ஜெபித்தார். ஆனால் பிதாவோ அங்கும் நீடிய பொறுமையைக் கடைப்பிடித்தார். இயேசுவின் ஆத்துமா அதிகமான துக்கமடைந்திருந்தது. “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக் கூடுமானால் நீங்கும்படி செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின் படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக் கடவது என்று ஜெபம் பண்ணினார்” (மத். 26:39).

நான் தகப்பனாக இருந்திருந்தால், “சரி, நீர் அதிகமாக பாடுபட்டுவிட்டீர், சிலுவை மரணத்தை எண்ணிப்பார்ப்பதே கொடியது. எனவே நான் இத்திட்டத்தை மாற்றி மற்றொரு திட்டத்தைத் தருகிறேன்” என்றே சொல்லியிருப்பேன். ஆனால், “என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது” என்று இயேசு ஜெபித்தபொழுது, பிதா ஒரு வார்த்தையும் பேசவில்லை. திட்டத்தை மாற்றக்கூடிய திறனை அவர் உபயோகிக்கவில்லை. மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிகழ்ச்சியை மாற்றக்கூறி உங்கள் மகன் உங்களிடம் கெஞ்சும்பொழுது, உங்களைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்ள முடியாதல்லவா? நிச்சயமாகவே என் மகனுக்காக எந்த மோசமான சூழலையும் ஒரு தந்தையாக மாற்ற நான் முயற்சிப்பேன்.

உங்களுக்கும் எனக்கும் இரட்சிப்புக்கான வழி இதுவே என்பதை பிதா அறிந்திருந்தார். ஒரு தகப்பனாக அவர் இயேசுவை இந்த பாடுகளுக்கும் வேதனைகளுக்கும் விலக்கியிருந்தால் நமக்கு இரட்சகர் கிடைத்திருக்கமாட்டார். அவர் தம்முடைய குமாரனை நேசிப்பதைப் போலவே நம்மையும் நேசிக்கிறார். கெத்செமனே தோட்டத்தில் வேதனைக்குள்ளாக இயேசு செல்லும்பொழுது பிதா அவரிடம், “பரலோகத் திட்டத்தை நாம் மாற்றவேண்டாம்” என்றே கூறியிருப்பார்.

இதுதான் தேவனுடைய பொறுமை! என்னுடைய இரட்சிப்புக்காக, தமது பாசத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, குமாரனாகிய இயேசுவை சிலுவை மரணத்திலிருந்து அவர் விடுவிக்கவில்லை. இப்பொழுது நான் “பிதாவே, என்னில் காணப்படாத பொறுமை உம்மில் காணப்பட்டதே, அதை நான் அறிந்துகொண்டேன். காரியங்கள் கடினமாகத் தோன்றினாலும், நீர் அதை நன்மையாய் எண்ணி உமது திட்டத்தில் நிலையாய் இருக்கிறீர். உமக்கு நன்றி என்றே கூறுவேன்”.

தேவனுடைய திட்டத்தில் நம்முடைய இரட்சிப்பு உள்ளது என்று அறிந்து கொள்வது ஓர் ஆறுதலான காரியமாகும். நம்மை எந்த சூழ்நிலையிலும் அவர் கைவிடமாட்டார். இதை நாம் எவ்வாறு அறிந்துகொள்வது? நமது பிள்ளைகளிடத்திலும், நண்பர்களிடத்திலும் தேவைப்படும் பிற மக்களிடமும் நாம் எவ்வாறு தேவனைப்போல பொறுமையுடன் இருக்க முடியும்?

கெத்செமனே தோட்டத்தின் துயரம், சிலுவையின் பாடுகள், வேதனைகள் இவற்றை நாம் பிதாவின் கண்ணோட்டத்திலிருந்து நோக்கினால் ஒரு பெரிய இரட்சிப்பின் திட்டம் அதில் விரிவடைவதை நாம் காணமுடியும். அத்திட்டத்தின் ஒரு சிறு நிகழ்வுதான் சிலுவை மரணம். ஏதேன் தோட்டத்திலிருந்தே சாத்தான் பிதாவினுடனான ஒரு யுத்தத்தில் ஈடுபட்டு வருகிறான். நம்முடைய இரட்சிப்புக்காக தேவன் செயல்படுத்திய ஒவ்வொரு திட்டத்தையும் முறியடிக்க முயற்சித்தான். இறுதியில் இயேசு பாடுபடுவதையும் அவர் சிலுவையில் மரிப்பதையும் காண காத்திருந்தான். ஏனெனில் அந்த யுத்தத்தில் அதுவே தேவன் ஜெயித்த வேளை.

இயேசு சிலுவை மரணத்தின்பொழுது அநேக கொடூரமான செயல்கள் நடைபெற்றன. அதில் பல சரீர தொடர்பானது, சில உணர்வுகள் மற்றும் சிந்தை தொடர்பானவை. உதாரணமாக அவர் பெற்ற அடிகள்; அவை சரீர சம்பந்தமானது. தோட்டத்தில் அவரடைந்த துயரங்கள் மனதையும் சிந்தனையையும் பாதித்தன. அவரை சிலுவையில் அறைந்தது மிகவும் அவமானத்துக்குரியது. மனதில் துன்பத்தை அனுபவிப்பதைவிட சரீரத்தில் அடிபடுவதை நான் தாங்கிக்கொள்ளுவேன். என்மீது அநேக வெட்கத்துக்குரிய காரியங்களை செயல்படுத்துவதைவிட மனத்துயரங்களை நான் சகித்துக் கொள்ளுவேன். நீங்களும் அவ்விதமாகவே எண்ணுவீர்கள் என்று நினைக்கிறேன். நம்மில் யாருமே அவமானப்படுவதை விரும்பமாட்டோம். இயேசுவின் முகத்தில் காறி உமிழ்ந்தது ஒரு அவமானப்படுத்தும் செயலே.

பிரதான ஆசாரியர்கள் அந்த இரவில் கூடி வந்தனர். அவர்கள் சனகெரிப் சங்கக்கூட்டத்தை அவசரமாகக் கூட்டினர். மாற்கு 14:65 இவ்விதமாகக் கூறுகிறது: “அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவரது முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்”. இதுவே சனகெரிப் சங்கத்தின் கூட்டமாகும். இந்த நீதிமன்றத்தின் சட்டம் அநீதியாக இருந்தது.

அடுத்ததாக அவர் ரோமப் போர்ச் சேவகர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். போர்ச்சேவகர்களும் அவருடைய முகத்தில் துப்பினார்கள் என்று மாற்கு 15ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். சாந்த சொரூபியான அவரது புன்னகை தவழும் முகத்திலே, சிறுபிள்ளைகளை அன்புடன் அழைத்து அவர்களை ஆசீர்வதித்த கள்ளமற்ற முகத்திலே துப்பினார்கள். வரிவசூலிக்கும் ஆயக்காரர்கள் மற்றும் பாவிகளை அன்புடன் ஏற்றுக்கொண்ட அருள்முகத்திலே துப்பினார்கள். தங்களுக்காக மரிக்க இருந்த, தேவனுடைய குமாரனின் மகிமைப் பிரகாசமான முகத்திலே துப்பினார்கள். அவரை அவமானப்படுத்தும்படிக்கே அப்படி செய்தார்கள். ஆனால் இம்மக்கள் பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: “நீங்கள் எங்கள் மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்” என்று ஒருநாளில் கதறப்போகிறார்கள். இது வெளி.6:16இல் கூறப்பட்டுள்ளது.

இந்த வேளையில் பிதாவாகிய தேவன் எங்கே இருந்தார்? தம்முடைய குமாரன் முகத்தில் மக்கள் துப்பினதை அறியாமல் அவர் இருந்தாரா? இல்லவே இல்லை. அவர் அதை கவனித்துக்கொண்டுதான் இருந்தார். இந்த அதிசயமான பொறுமையை உங்களால் கற்பனை செய்துபார்க்க முடிகிறதா? தேவன் அங்கே இடைமறித்து இயேசுவின் முகத்தில் துப்புவதையும், அவரைக் கன்னத்தில் அறைவதையும் சிலுவையில் அறையப்படுவதையும் தடுத்து நிறுத்தியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்திருந்தால் இவ்வுலகுக்கு இரட்சிப்பு இல்லை. பிதாவாகிய தேவனும் குமாரனாகிய இயேசுவும் இந்த சிலுவை மரணம் என்கிற திட்டத்துக்கு தங்களை ஒப்புக் கொடுத்திருந்தார்கள்.

ஆண்டவராகிய இயேசுவை அவமானப்படுத்த அவருடைய முகத்தில் துப்பினார்கள். அதுமாத்திரமல்ல, அவரை வாரினால் அடித்தார்கள். இயேசுவின் பாடுகளில் எதுவும் திடீரென்று நிகழவில்லை. இயேசுகிறிஸ்துவும் தனக்கு நடக்கவிருப்பதைத் தமது சீடர்களிடம் முன்னதாகவே அறிவித்தார். “இதோ, எருசலேமுக்குப் போகிறோம்; மனுஷகுமாரன் பிரதான ஆசாரியரிடத்திலும் வேதபாரகரிடத்திலும் ஒப்புக்கொடுக்கப்படுவார்; அவர்கள் அவரை மரண ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்து, அவரைப் பரியாசம் பண்ணவும், வாரினால் அடிக்கவும், சிலுவையில் அறையவும் புறஜாதியாரிடத்தில் ஒப்புக்கொடுப்பார்கள்; ஆகிலும் மூன்றாம் நாளிலே அவர் உயிரோடே எழுந்திருப்பார் என்றார்” (மத்.20:18-19).

“ஒரு இராஜ்யத்தை நிறுவ நாம் எருசலேமுக்குப் போகிறோம், நமக்கு முக்கியமான பதவிகள் கிடைக்கும்; பேதுரு, நீர் இந்த இராஜ்யத்தின் சாலைகளுக்குப் பொறுப்பு, அந்திரேயா, நீர் கால்நடைகளுக்குப் பொறுப்பு; எவ்வளவு மகிழ்ச்சியான வேளை” என்று அவர் கூறவில்லை.

மாறாக, “நாம் எருசலேமுக்குப் போகிறோம். அங்கே மக்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள். என்னுடைய முகத்தில் துப்புவார்கள், என்னை அதிகாரிகள் கரங்களில் ஒப்புக் கொடுப்பார்கள். அவர்கள் என்னை பரியாசம் பண்ணி, வாரினால் அடித்து, சிலுவையில் அறைவார்கள்” என்று அறிவித்தார். இயேசு முன் அறிவித்தபடியே அவருக்கு சம்பவித்தது. “அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான். போர்ச் சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தினார்கள்” (யோவான் 19:1-2). இவ்வேளையில் பிதா இடைமறிக்காது, அமைதியுடன் நீண்ட பொறுமையைக் கடை பிடித்தார். “அந்த முள்முடியை அவரிடமிருந்து அகற்றுங்கள். யாருடைய சிரசில் நீங்கள் வைக்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா? அவருக்கு முள்முடியல்ல, வரலாறு காணாத பெரிய, பிரகாசமான கிரீடம் சூட்டப்பட வேண்டும்” என்று சொல்லவில்லை. அவர் நடந்துகொண்டிருந்ததைப் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

அக்காலத்தில் ரோமர்கள் குற்றவாளிகளை வாரினால் அடிப்பார்கள். அது சித்திரவதை செய்ய உபயோகிக்கப்படும் ஓர் ஆயுதம். அதற்கு ஒரு சிறிய மரக் கைப்பிடி உண்டு. அதிலிருந்து நீண்ட தோலினால் செய்யப்பட்ட வார்கள் தொங்கும். அத்தோல் வார்களின் இறுதியில் ஈயக் குண்டுகள், அல்லது கண்ணாடித் துண்டுகள் அல்லது கூரான எலும்புத் துண்டுகள் இவற்றை இறுக்கிக் கட்டியிருப்பார்கள். குற்றவாளியின் இருபுறமும் போர்ச்சேவகர்கள் நின்று அவனை மாறி மாறி அடிப்பார்கள். நீளமான வாராக இருப்பதினாலே, அது சரீரத்தைச் சுற்றிக்கொள்ளும். அது முதுகை மட்டுமல்ல, மார்பு பகுதியையும் சிராய்க்கும். முதுகுப் புறத்தைவிட முன்பகுதியிலிருந்து சீக்கிரமாய் இரத்தம் வரும். இது போலவே இந்த போர்வீரர்கள் இயேசுவுக்கு இருபுறமும் நின்று மாறிமாறி அடித்து அவரை பெலவீனமாக்கி, உலகின் ஒரே இரட்சகரைக் கொல்லவும் துணிந்தனர்.

தம்முடைய குமாரனை இரண்டு முறை அறைந்ததையும், இரண்டு முறை துப்பியதையும் பரியாசம் பண்ணினதையும் தேவன் கண்டார். ரோமப் போர்ச்சேவகர்கள் அங்கிருந்த சில முட்களை எடுத்து, தங்கள் கைகளில் குத்தாமல் கவனமாக அதனை வளைத்து ஒரு கிரீடம் போல செய்து, இயேசுவின் தலையில் அழுத்தி வைத்தனர். வாரினால் அடிக்கும் பொழுது அவருடைய முதுகையும் மார்பையும் சிதைத்தனர். இவை யாவையும் பிதாவாகிய தேவன் கண்டார். அவர் அனைத்தையும் அறிந்திருந்தார்.

இந்த சிலுவைப் பாடுகள் வழியாக பிதாவை நீங்கள் நோக்கும்பொழுது, “எப்படி அவரால் அதனைத் தடுத்து நிறுத்தாமல் பொறுத்துக் கொள்ள முடிந்தது? ஒரு தகப்பனாக அச்செயல்களை அவர் நிகழவொட்டாதிருக்கலாமே” என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இந்த கேள்விக்கு நாம் விடை கூறுவோமானால் அது “ஆம்” என்றே அமையும். ஆனால் தேவன் “கிருபை” என்ற பதிலைத் தருவார். “கிருபையைப் பற்றி நீங்கள் அறியவேண்டுமெனில் இதுதான் கிருபை. ஏனெனில் உங்களுடைய இரட்சிப்புக்கு நான் செலுத்த வேண்டிய கிரயம் என்னுடைய குமாரனை சிலுவையில் பலியாக ஒப்புக் கொடுப்பதே” என்பார்.

இரட்சிப்பு இலவசம் என்று நாம் சொல்லுகிறோம். அது மனிதர்களாகிய நமக்கு மாத்திரமே. ஆனால் தேவனுக்கு அது இலவசமல்ல. குமாரனுக்கும் அது இலவசமல்ல. சிலுவைப்பாடுகளையும் மரணத்தையும் தேவன் நிறுத்தியிருந்தால் மனுக்குலத்துக்கு இரட்சகர் இல்லை. நீங்களும் நானும் கிருபையைப் பெற்றிட பிதாவும் குமாரனும் அந்த வேதனைகளைப் பொறுத்துக்கொள்ள ஆயத்தமாயிருந்தனர்.

இனி நம்முடைய கடமை என்ன? ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய வாழ்வில் தேவனுடைய பொறுமையைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். பலவேளைகளில் நாம் அவரைக் கேள்வி கேட்கிறோம்; அவரைத் துக்கப்படுத்துகிறோம்; சிலர் தேவன் இல்லை என்றும் சொல்லுகின்றனர். ஆயினும் அவர் நம்மைத் தண்டிப்பதில்லை. அவர் நம்மிடம் மனதுருக்கமாயிருக்கிறார். நாம் துணிகரமாகப் பாவம் செய்யும்பொழுதும், அவருடைய கட்டளைகளை அவமதிக்கும்பொழுதும் அவர் நம்மைப் பொறுத்துக்கொள்ளுகிறார். அவர் நம்மைக் கொல்லவோ அழிப்பதோ இல்லை. “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்” (1யோவான் 1:9) என்ற மன்னிப்பின் கொள்கையைத் தேவன் தந்திருக்கிறார்.

தேவனுடைய பொறுமைக்கு நம்முடைய மறுமொழி என்ன? நன்றியுடைமை, பணிவுடைமை, உண்மையான அன்புடமை ஆகியவற்றை நாம் தேவனிடம் காட்டவேண்டும். தேவனுடைய அன்பை நம்மிடம் காட்டாத நமது உறவினர்களிடமும், நண்பர்களிடமும்கூட நாம் அவரது அன்பைக் காட்டவேண்டும். இதுதான் கிறிஸ்துவின் சாயல்! தேவனுடைய பொறுமையை அறிந்த நாம், மற்ற மக்களை நடத்துகின்ற விதத்தில் அதனை வெளிப்படுத்த வேண்டும். இதுவே நாம் தேவனுக்கு காட்டும் நன்றியாகும்!

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை
சத்தியவசனம்