இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மகத்துவம்!

Prof.எடிசன்
(மார்ச்-ஏப்ரல் 2013)

சிலுவையில் இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மகத்துவத்தைக் குறித்து இந்த செய்தியில் நாம் கற்றுக்கொள்ளப் போகிறோம்.

1.பரிசுத்த இரத்தம்:

முதலாவது இயேசுகிறிஸ்து நமக்காக சிலுவையில் சிந்தின இரத்தமானது பரிசுத்தமாயிருக்கிறது. அது மைந்தனின் இரத்தமாகும். அவர் இந்த பூமியில் வாழ்ந்தபொழுது “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக் கூடும்?” (யோவா.8:46) என்று கேட்டார். அவரை விசாரித்த பிலாத்துவும், ‘இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்’ (லூக்.23:4). அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் ‘குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக் கொடுத்ததினால் பாவஞ்செய்தேன்’ (மத்.27:4) என்று அறிக்கையிட்டான். அது குற்றமற்றதும் பரிசுத்தமுமான இரத்தமாகும். அந்த இரத்தம் எவ்வளவு பரிசுத்தமுள்ளது என்பதையும், அந்த பரிசுத்தத்தின் வல்லமை என்ன என்பதையும் நாம் ஒருநாளும் பூரணமாய் அறிந்துகொள்ள முடியாது. அதை நாம் விளங்கிக்கொள்ளவும் முடியாது. ஆனால் விசுவாசத்தால் நாம் அதை அனுபவிக்க முடியும். இந்த பூமியில் இதுவரை பிறந்தவர்கள், இனிமேல் பிறக்கப்போகிறவர்கள் எல்லாருடைய பாவங்களையும் போக்க இந்தப் பரிசுத்தமான இரத்தம் போதுமானதாக இருப்பது மனுக்குலத்துக்கு கிடைத்த ஒரு பெரிய ஆசீர்வாதம்!

என்னுடைய வாழ்க்கையில் இயேசுவின் இரத்தத்தின் வல்லமையை நான் அறியவுமில்லை, அந்த இரத்தத்தின் மாசற்ற தன்மையை பெரிதாய் நினைக்கவுமில்லை. ஆனால் என் குடும்பத்தில் பிரச்சனைகள் பெரிதாகி என் கைக்கு அடங்காததாய் போன பொழுது ஒருகணம் திகைத்தேன், நான் செய்வதறியாது நின்றேன். இதற்கெல்லாம் காரணம் உன்னுடைய பாவமே என்று இயேசு எனக்கு உணர்த்தினார். உடனே நான் பாவத்திற்காக மனங்கசந்து அழுதேன். என்னுடைய பாவங்களையெல்லாம் நான் அறிக்கையிட்டேன். என் தவறுகளை தேவன் எனக்கு சுட்டிக்காட்டி அவைகளை சரி செய் என்றார். உடனே அதற்குக் கீழ்ப்படிந்து சரிசெய்தேன். என்ன ஆச்சரியம்! எனக்குள் ஒரு பெரிய சமாதானம் உண்டாயிற்று. எல்லாம்வல்ல இயேசுகிறிஸ்துவின் இரத்தம் மாசற்ற இரத்தமாயிருப்பதால் என் பாவம் கழுவப்பட்டது என்ற நிச்சயமும், என் குடும்பம் தழைக்கும் என்ற நம்பிக்கையும் எனக்கு கிடைத்தது. அந்த இரத்தத்தின் மேன்மையை அனுபவித்தேன், அறிந்தேன், அதை இப்பொழுது அறிவிக்கிறேன்.

“இரத்தஞ் சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22) என்று வேதம் திட்டமாய்ச் சொல்கிறது. காளை, வெள்ளாட்டுக்கடா ஆகிய இவைகளின் இரத்தம் ஒருநாளும் பாவத்தைப் போக்க முடியாது. இயேசுகிறிஸ்துவின் பரிசுத்த இரத்தம் மட்டுமே பாவத்தை அகற்றும். நமக்காக பரிசுத்த ஊற்று எருசலேமில் சிலுவையில் திறக்கப்பட்டது. நம்பி வருகிற யாவருக்கும் பாவத்திலிருந்து விடுதலை உண்டாகிறது.

2. விலையேறப்பெற்ற இரத்தம்:

இரண்டாவது இயேசுகிறிஸ்து நமக்காக சிலுவையில் சிந்தின இரத்தம் விலையேறப் பெற்ற இரத்தமாகும். பூமியில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும் விலை உண்டு. செவ்வாய் கிரகத்திலுள்ள இடத்தைக்கூட ஒரு மனிதன் விலை பேசினான். சூரியனுக்குக்கூட அதன் எரிபொருள் சக்தி இவற்றை வைத்து விலை நிர்ணயிக்கலாம். ஆனால் பாவமற்ற பரிசுத்த இரத்தத்திற்கு எவ்வாறு விலை நிர்ணயம் பண்ணமுடியும்? கல்வாரியைத்தவிர எங்குமே கிடைக்காத ஒன்று. அதனால்தான் அது விலையேறப்பெற்றது. எனவேதான் இயேசுவும் இந்த பரிசுத்த இரத்தத்தையே பரலோகத்திலுள்ளவைகளில் மேன்மையான பலியாக பிதாவுக்கு ஒப்புக்கொடுத்தார். சாலமோன் ஞானி இந்த பரிசுத்த இரத்தத்தின் விலையேறப்பெற்ற தன்மையையும் மேன்மையையும் உணர்ந்திருந்தான். அதனால்தான் அவன் ஆலயத்தை பிரதிஷ்டை பண்ணும் பொழுது பாவமன்னிப்பிற்காக 22,000 மாடுகளையும், 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான். பாவத்திற்கு கிரயம் செலுத்த வேண்டுமென்றால் ஒருவனாலும், எந்த அரசாங்கத்தாலும் ஒரு வேளை உலகமனைத்தும் ஒன்று கூடினாலும் கிரயம் செலுத்தமுடியாது. இயேசுகிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம் ஒன்றே மனுக்குலத்தின் பாவத்தை நீக்கும் வழியாகும்.

3. பாதுகாக்கும் இரத்தம்:

ரோட் ரன்னர் என்பது ஒரு பறவை. இந்த பறவைக்கு எதிரி கொடிய விஷமுள்ள ராடில் சிநேக் (Roddle Snake). இந்த பாம்பு சுருண்டு படுத்து தூங்கும்போது அந்த பறவை கொடிய முட்களுள்ள கத்தாழை முட்களை வேலிபோல் இடைவெளி இல்லாமல் பாம்பை சுற்றி போட்டுவிடும். இந்த பாம்பு அந்த முட்களைத் தாண்ட முயற்சித்தால் புண்ணாகிவிடும் என்ற பயத்தில் தாண்டாது. ஆனால் கோபமூண்டு தன்னையே கடித்துக்கொள்ளும். அப்படியே செத்தும் போய்விடும். பிசாசோடும் அவன் தந்திரங்களோடும்தான் நமக்கு பெரிய போராட்டம் உண்டு. நம்முடைய மனதில் தவறான ஆசைகள் இச்சைகளை உண்டாக்குவதும் இந்த சத்துருவாகிய பிசாசுதான். ராடில் சிநேக் தூங்கும், எனவே மாட்டிக்கொள்ளும். நம்முடைய எதிராளியோ எவனை விழுங்கலாமென்று சுற்றித் திரிகிறவன். ஆனால் அவனால் தாண்ட முடியாத எல்லை ஒன்று உண்டென்றால் அது இயேசுவின் இரத்தம் மாத்திரமே. எனவே கிறிஸ்து இயேசுவின் இரத்தம் ஒன்றே வஞ்சக பிசாசின் கிரியைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

எகிப்தில் சங்காரத் தூதன் தலைப் பிள்ளைகள் யாவரையும் சங்கரித்தபோது பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்ட வீடுகளை கடந்துசென்றான். இன்று நமக்கு அதைவிட வல்லமையான இரத்தம் உண்டு. தேவ ஆட்டுக்குட்டியாகிய இயேசுவின் இரத்தத்துக்குள் உங்களை ஒப்புக்கொடுங்கள். நீங்கள் அந்த இரத்தத்திற்குள் மறைந்திருக்கும்வரை சாத்தான் உங்களை நெருங்கவோ மேற்கொள்ளவோ முடியாது. “நீங்கள் .. கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது” (ரோம.6:14). சிலுவையில்லையேல் இரத்தமில்லை. இரத்தமில்லையேல் பாதுகாப்பில்லை. பாதுகாப்பில்லையேல் பரலோகமில்லை. பரலோக வாசலாகிய சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தமே உங்களை முடிவுவரை பாதுகாக்கும்.

4. புதிய உடன்படிக்கையின் இரத்தம்:

மனிதர் மனிதரோடு உடன்படிக்கை செய்வதுண்டு. அவ்வாறு செய்யப்படும் உடன்படிக்கையானது எழுதப்பட்டு அரசாங்க முத்திரையிடப்பட்டு உறுதிப்படுத்தப்படும். யாராவது ஒருவர் அந்த உடன்படிக்கையை மீறினால் தண்டனைக்குரியவராவர். தேவனும் இஸ்ரவேலரோடு ஒரு உடன்படிக்கை பண்ணினார். எகிப்திலிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி வனாந்தரத்திலே நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார். மோசே அதை எழுதினார். யாத்தி.24:7,8 இல் அதைக் குறித்து வாசிக்கிறோம். உடன்படிக்கையின் புஸ்தகத்தை எடுத்து ஜனங்களின் காது கேட்க வாசித்தான். அவர்கள் கர்த்தர் சொன்னபடியெல்லாம் செய்து நடப்போம் என்றார்கள். இது இஸ்ரவேல் மக்கள் தேவனோடு செய்து கொண்ட உடன்படிக்கையாகும். அப்பொழுது மோசே இரத்தத்தை எடுத்து ஜனங்கள்மேல் தெளித்து இந்த வார்த்தைகள் யாவையும் குறித்து கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்றான். அன்று உடன்படிக்கையானது இரத்தத்தால் முத்திரையிடப்பட்டது. ஆனால் மனிதர்கள் இந்த உடன்படிக்கைக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கவில்லை. தேவனுடைய வார்த்தையை மீறி அழிவிற்கு பாத்திரரானார்கள். தேவன் ஜனங்கள்மேல் மனதுருகி நியாயப் பிரமாணத்தில் செய்யவேண்டியவைகளுக்குப் பதிலாக விசுவாசிக்கும்படியான ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார். பன்னிரண்டு சீடர்களும் மனுக்குலத்தின் பிரதிநிதிகளாய் தேவனோடு உடன்படிக்கைப் பண்ணினார்கள். ‘விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்’ (ரோம.1:17) என்பதே அந்தப் புதிய உடன்படிக்கையாகும். இதை கல்வாரியில் தமது இரத்தத்தால் உறுதிப்படுத்தினார். தம்மை அடிக்கடி நினைவுகூரவே திருவிருந்தையும் ஏற்படுத்தினார். அப்பத்தையும் திராட்சரசத்தையும் அவர்களுக்கு கொடுத்து இது புது உடன்படிக்கைக்குரிய என் இரத்தமாயிருக்கிறது. என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள் என்றார்.

இதை வாசித்துக்கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் உங்களோடு தேவன் ஏற்படுத்திய ஒரு நித்திய உடன்படிக்கை உண்டு. தேவனுடைய வார்த்தைகள் வேத புஸ்தகமாய் உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. நீங்கள் அதன்படி நடந்து தேவனை விசுவாசித்தால் பிழைப்பீர்கள். இல்லையென்றால் தண்டனைக்குத் தப்ப முடியாது. எபிரேயர் 10:28,29 தெளிவாக நம்மை எச்சரிக்கிறது. “மோசேயினுடைய பிரமாணத்தைத் தள்ளுகிறவன் இரக்கம்பெறாமல் இரண்டு மூன்று சாட்சிகளின் வாக்கினாலே சாகிறானே; தேவனுடைய குமாரனைக் காலின் கீழ் மிதித்து, தன்னைப் பரிசுத்தஞ்செய்த உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமென்றெண்ணி, கிருபையின் ஆவியை நிந்திக்கிறவன் எவ்வளவு கொடிதான ஆக்கினைக்குப் பாத்திரவானாயிருப்பான் என்பதை யோசித்துப் பாருங்கள்”. “விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் (எபி.10:38,39). நாமோ கெட்டுப் போகப் பின்வாங்குகிறவர்களாயிராமல், ஆத்துமா பிழைக்க விசுவாசித்து வாழ்வோம்.

5.பரிந்து பேசும் இரத்தம்:

சிலுவையில் இயேசுகிறிஸ்து சிந்தின இரத்தம் நமக்காகப் பரிந்து பேசுகிறதாயிருக்கிறது. 1யோவான் 2:1இல் ஒருவன் பாவஞ்செய்வானானால் நீதிபரராயிருக்கிற இயேசுகிறிஸ்து நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசுகிறவராயிருக்கிறார். எபிரேயர் 12:24இல் புது உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடத்திற்கும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைப் பார்க்கிலும் நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தம் என்றெழுதியிருக்கிறது. நான் பாவம் செய்யும் பொழுது எனக்கு பாவத்திற்குரிய தண்டனை உடனே வரலில்லையென்றால், எனக்காக பிதாவினிடத்தில் இயேசுகிறிஸ்து தன் சொந்த இரத்தத்தோடு மன்றாடுகிறபடியால் நான் தப்புகிறேன். கிறிஸ்து எல்லாவற்றையும் பூமியில் செய்துவிட்டு “முடிந்தது” என்றார். ஆனால் இன்றும் எனக்காக பரிந்துபேசும் ஊழியத்தை மாத்திரம் செய்துகொண்டே இருக்கிறார். அல்லேலூயா! எத்தனை இரக்கம்! எத்தனை கிருபை!! நாம் நிர்மூலமாகாதிருப்பது அவருடைய சுத்த கிருபையே!! எனவே நாம் தைரியமாய் கிருபாசனத்தண்டை வருவோம். அவரிடத்தில் வருகிறவனுக்கு அடைக்கலமும் ஆசீர்வாதமும் உண்டு.

இச்செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே இயேசுவின் இரத்தமில்லாமல் பாவமன்னிப்பில்லை. அவர் பரிந்து பேசாவிட்டால் நமக்கு அழிவு நிச்சயம். இயேசுவே உம்முடைய இரத்தத்தால் எங்களை கழுவும். உம்முடைய இரத்தத்தின் பாதுகாப்பில் எங்களையும் குடும்பத்தையும் வைத்துக் கொள்ளும். உம்முடைய இரத்தத்தை எங்கள் மேல் பூசி எங்கள் சிந்தைகளைப் பரிசுத்தமாய் காத்துக்கொள்ளும் என்று ஜெபியுங்கள்!

நிச்சயமாய் நீங்கள் ஒப்பற்ற வாழ்வைப் பெறுவீர்கள்!!

சத்தியவசனம்