திரைச்சீலை கிழிந்ததின் பலாபலன்

திருமதி மெடோஸ்
(மார்ச்-ஏப்ரல் 2013)

“தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ. அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்”. (யோவா.3:16) என்று நம் நாதர் இயேசு கூறிவிட்டு, அதைத் தொடர்ந்து “உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல் அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்” (வச.17) என்றும் கூறினார். இவ்வுண்மையை விவரித்து பவுலடிகள் பிலிப்பியருக்கு “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல் தம்மைத் தாமே வெறுமையாக்கி. அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷர் ரூபமாய் காணப்பட்டு மரணபரியந்தம் அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்” (பிலி.2:6.7) என்று எழுதியிருக்கிறதைக் காணலாம். ஆம். அன்பானவர்களே. பிறப்பு இல்லையானால், மரணமும் இல்லை. ஆகையினால்தான் தேவ குமாரன் சிலுவையை நோக்கினவராக மாம்சத்தில் வந்த கன்னியின் வயிற்றில் பிறந்தார்.

ஆதிப்பெற்றோர்கள் தேவனின் கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் தேவ கட்டளையை மீறினபடியால் தேவனின் சாபம் மனிதனுக்கு மரணமாயிற்று. “நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால் நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார் (ஆதி.3:19). எனவேதான் “பாவத்தின் சம்பளம் மரணமாக“ (ரோ. 6:23) தேவனால் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டது.

ஆனால் தேவன் மனுக்குலத்தில் வைத்த அன்பினால். தாம் சிருஷ்டித்த மக்கள்மேல் வைத்த இரக்கத்தினால். மனிதனின் மரணத்தை அவர் விரும்பாமல் அவனுக்கு மரணத்திற்குப் பின் ஒரு வாழ்வு இருக்க வேண்டுமென்று தமது ஏகசுதன் என்றும் பாராமல் பாவத்தில் மரிக்கும் பாவிக்கு நித்திய ஜீவனைக் கொடுக்க அவரை அனுப்பினார். “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்” (ரோ. 6 : 23).

பாவிகளின் மத்தியில் பரிசுத்தராக பாவமற்ற இயேசு வளர்ந்தார், வாழ்ந்தார். நற்போதனைகளைப் போதித்தார். பிணியாளிகளையும், குஷ்டரோகிகளையும் பிசாசு பிடித்தவர்களையும் குணமாக்கினார். மரித்தவர்களையும்கூட உயிரோடு எழுப்பினார். மற்றும் குருடருக்குப் பார்வையையும், செவிடர் கேட்கும்படியும், முடவர்கள் நடக்கவும் ஊமையர்கள் பேசவும் செய்த மகா அற்புதங்களின் மகானுக்கு காத்திருந்தது கொடூர சிலுவையின் மரணம்!

30 வெள்ளிக் காசுக்காக பன்னிருவரில் ஒரு சீஷனாகிய யூதாஸ் இயேசுவைக் காட்டிக் கொடுத்தான். பிலாத்து அவரில் ஒரு குற்றத்தையும் நான் காணேன் என்று சொல்லி ஐனங்களுக்கு முன்பாக தன் கைகளைக் கழுவி அவரை சிலுவையில் அறையும்படி ஒப்புக் கொடுத்தான். போர் சேவகர்கள் அவரை மகா வேதனைப்படுத்தி அவர் முகத்தில் துப்பி, அவர் சிரசில் கோலால் அடித்து, யூதருடைய இராஜாவே, வாழ்க! என்று பரியாசம்செய்து சிலுவையைச் சுமக்க வைத்து பாதகனைப் போல் பாதகர்களின் மத்தியில் கைகளிலும் கால்களிலும் ஆணிகளால் கடாவி அவரை சிலுவையில் அறைந்தார்கள்.

இயேசுவின் ஆவி பிரியுமுன் ஏழு வார்த்தைகளைச் சொன்னார்:

1) “பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார் (லூக்கா.23 : 34).

2) “இன்றைக்கு நீ என்னுடனேகூட பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்கா 23 : 43).

3) “அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே அதோ உன் மகன் … சீஷனை நோக்கி அதோ, உன் தாய் என்றார் (யோவான் 19: 26,27).

4) “இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி,” என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கை விட்டீர் என்று அர்த்தமாம்” (மத்.27 : 46).

5) “தாகமாயிருக்கிறேன் என்றார்” (யோ. 19 : 28).

6) “இயேசு காடியை வாங்கினபின்பு முடிந்தது என்று சொல்லி தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்” (யோவா. 19: 30).

7) “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்” (லூக்கா 23 : 46).

அன்பானவர்களே, அவர் தம்முடைய ஆவியை இப்படியாக ஒப்புவிக்கும்போது “தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாக கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது” (மத்.2 : 51). திரைச்சீலையை கீழே இருந்து கிழிப்பது சுலபம். ஆனால் மேலே இருந்து கிழிப்பது சிரமம். வாசஸ்தலத்திற்குரிய திரைச்சீலை இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும், சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் உண்டுபண்ணிய மிகக் கனமுள்ள திரைச்சீலையாகும். ஆனாலும் அது மேலேயிருந்து கீழே இரண்டாகக் கிழிந்தது.

திரைச்சீலை எப்படி உண்டுபண்ணப்பட்டது? நியாயப்பிரமாணகாலத்தில் தேவன் மோசேயிடம் தமக்கு வாசஸ்தலத்தைக் கட்ட வேண்டிய விதிகளைக் கூறியிருக்கிறார். தொங்குதிரையைப் பற்றி தேவன் யாத்திராகமத்தில் விளக்கமாய் கூறியிருக்கிறார். “இவ்விதமாக மலையின்மேல் உனக்கு காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே வாசஸ்தலத்தை நிறுத்துவாயாக. இளநீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலுமான இவற்றால் ஒரு திரைச் சீலையை உண்டு பண்ணக்கடவாய்” (யாத்தி. 26:30,31). “கொக்கிகளின் கீழே அந்தத் திரைச்சீலையைத் தொங்கவிட்டு சாட்சிப் பெட்டியை அங்கே திரைக்குள்ளாக வைக்கக் கடவாய்; அந்தத் திரைச்சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும். மகா பரிசுத்த ஸ்தலத்திலே சாட்சிப்பெட்டியின்மீதில் கிருபாசனத்தை வைப்பாயாக என்றார்” (வச.33,34).

இன்னும் லேவியராகமத்தில் ஐனங்கள் பலியிட வேண்டிய பாவநிவாரண பலி, குற்ற நிவாரண பலி, சர்வாங்க தகன பலி, சமாதான பலி இப்படியான பலிகளைக் குறித்த பிரமாணங்களை மோசேக்கு அருளியிருக்கிறார். 4:20ல் “பாவ நிவாரணபலியின் காளையைச் செய்த பிரகாரம் இந்தக் காளையையும் செய்து, இவ்வண்ணமாய் ஆசாரியன் அவர்களுக்கு பாவநிவர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்” என்று கூறியுள்ளார். 17 : 11ல் “ஆத்துமாவிற்காகப் பாவ நிவர்த்தி செய்கிறது இரத்தமே” என்று சொல்லுகிறார். இரத்தம் உயிராய் இருக்கிறது. இரத்தம் ஜீவனுக்கு சமானம். ஆகவே பாவநிவாரண பலி செலுத்துவதற்கு ஒவ்வொருவரும் அவனவன் திராணிக்கு தகுந்த பிரகாரம் ஆடு. காளை, புறா. இவைகளின் இரத்தத்தை ஆசாரியனிடம் கொடுக்கவேண்டும். ஆசாரியன் மாத்திரமே மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் சென்று ஐனங் களுக்காக பாவநிவாரண பலி செலுத்துவான்.

இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை. பழைய ஏற்பாட்டின் காலத்தில் மிருகங்களின் இரத்தத்தினாலும் பட்சிகளின் இரத்தத்தினாலும் பாவ நிவாரண பலி செலுத்தப்பட்டது. புதிய ஏற்பாட்டில் தேவன் அதை ஒழித்துவிட்டு மாசற்ற ஆட்டுக் குட்டியாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சிலுவையில் சிந்தப்பட்டதை ஏற்றுக்கொண்டிருக்கிறார். ஆகவே இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கிறது. மிருகங்களின் இரத்தம் நம் பாவங்களை சுத்திகரிக்காது. இயேசுகிறிஸ்துவின் இரத்தம் ஒன்றே நமது பாவங்களை சுத்திகரிக்கிறது. பழைய ஏற்பாட்டின் காலத்தில் ஐனங்களின் பாவத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு வருடத்திற்கு ஒருமுறை ஆசாரியன் பலி செலுத்துவான். அதாவது, அப்பொழுது வருடம்தோறும் பாவத்திற்காக பலி செலுததப்பட்டது. ஆனால். இப்பொழுது இயேசு தன்னையே ஒரேதரமாக பலியிட்டார். இது எபிரேயர் 7:27இல் விளக்கப்பட்டிருக்கிறது. “அவர் பிரதான ஆசாரியர்களைப் போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடப்பட வேண்டுவதில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே இதை ஒரேதரம் செய்து முடித்தார். முன்பு ஆசாரியன்; இப்போது இயேசு பிரதான ஆசாரியனாக பிதாவிடத்தில் நமக்காக பரிந்து பேசுகிறார்.

எபிரேயர் 10:19ல் “சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும் ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டுபண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறது” என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு தமது ஜீவனைவிட்டபோது, திரைச்சீலை இரண்டாக கிழிக்கப்பட்டது. பழைய ஏற்பாட்டின் பலிகள், கொள்கைகள் அனைத்தும் முடிவடைந்தன என்பதை வெளிப்படுத்தும்படியே தேவாலயத்தின் திரைச்சீலை இரண்டாக கிழிந்தது. கிறிஸ்துவின் சரீரம் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் மட்டும் கொடூர வேதனைகளால் கிழிக்கப்பட்டதால் நாம் தைரியமாக கிருபாசனத்தண்டைக்கு போகக்கூடியதாக இருக்கிறது.

நாம் குமாரன் மூலமேயன்றி வேறெவ்விதத்திலும் எவரைக் கொண்டும் பிதாவின் சமுகத்தில் பிரவேசிக்க முடியாது. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே… வேறேரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” (அப்.4:12). புண்ணிய ஸ்தலங்களுக்குப் போவதிலும் பொருத்தனைகள் பல தெய்வங்களுக்கு செய்வதினாலும், தங்களைக் கீறிக்கொள்ளுவதினாலும் புனிதர்களை வழிபடுவதின் மூலம் நாம் தேவனின் சமுகத்திற்கு செல்லமுடியாது, “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவா. 14 : 6) என்ற இயேசு தாமே நாம் எந்த நிலையில் இருந்தாலும், எந்த வேளையிலாகிலும் தைரியமாக அவர் சமுகத்திற்குச் செல்லும் வாய்ப்பு திரைச்சீலை கிழிக்கப்பட்டதன் மூலம் நமக்கு கொடுக்கப்பட்ட சிலாக்கியமாகும்.

சத்தியவசனம்