“பயப்படாதே”

உயிர்த்தெழுதலின் நற்செய்தி
சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2013)

சத்தியவசன நேயர்களுக்கு இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உயிர்த்தெழுதலின் நற்செய்தியை உங்களோடு பகிர்ந்து கொள்ளப் போகிறேன்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து மத்தேயு 28:20இல் “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்” என்று வாக்கு கொடுத்து விட்டுச் சென்றார். மத். 28:1-10 ஆகிய பகுதியிலுள்ள வேதவசனங்களை வாசித்துப் பார்ப்போமென்றால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “பயப்படாதே” என்கிற வார்த்தையை அங்கு பயன்படுத்துகிறார். மத்தேயு 28:5ஆம் வசனத்திலே “பயப்படாதிருங்கள்” என்று ஸ்திரீகளிடத்திலே தூதன் சொல்லுகிறான். அதேபோல அந்தப் பெண்களிடத்திலே நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து 10ஆம் வசனத்திலே “பயப்படாதிருங்கள்” என்று சொல்லுகிறார். உயிர்த்தெழுதலின் உண்மையான செய்தி என்ன? “பயப்படாதே”.

நம்முடைய வாழ்க்கையிலே அநேக சமயங்களிலே ஏராளமான பயங்கள் வருகிறது. மனிதர்களைக் குறித்து, மரணத்தைக் குறித்து, வியாதிகளைக் குறித்து பயம் வருகிறது. அல்லது புற்றுநோய்களைக் குறித்தும், விபத்துகளைக் குறித்தும், யுத்தங்களைக் குறித்தும், ஒருவேளை இனக் கலவரங்களைக் குறித்தும் நமக்கு பயங்கள் வருகிறது. இவ்வாறாக, பயங்களோடு வாழ்கின்ற மனுக்குலத்திற்கு உயிர்த்தெழுந்த ஆண்டவர் சொல்லுகிற வார்த்தை என்னவென்றால், “பயப்படாதே”. அவர் பயப்படாதே என்று சொல்லுவதற்கு அவர் வல்லமையுள்ளவர். ஏனென்றால், அவர் நமக்காக மரணத்தை ருசிபார்த்தார், அவர் நமக்காக உயிரோடு எழுந்தார், இன்றைக்கும் ஜீவித்துக்கொண்டிருக்கிறார். ஆகவே, அவர் சொல்லுகிறார் “பயப்படாதே”.

ஒருமுறை அமெரிக்க நாட்டிலே ஒரு பள்ளிக்கூடத்திலே ஒரு ஆசிரியை தனது பிள்ளைகளுக்கு, “ஆபிரகாம் லிங்கன் மிக தைரியமான மனிதன்” என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது அந்த முதலாம் வகுப்பிலே படிக்கிற ஒரு பையன் எழுந்து சொன்னான்: நான் ஆபிரகாம் லிங்கனை காணக்கூடிய பாக்கியம் கிடைத்தால் ஆபிரகாம் லிங்கனிடம் ஒரேயொரு கேள்வி கேட்பேன் என்று சொன்னானாம். என்ன கேள்வி என்று ஆசிரியர் கேட்டபோது அவன் சொன்னான், “ஆபிரகாம் லிங்கன் முதலாம் வகுப்பு படிக்கும் போது அவருக்கு என்ன பயம் இருந்திருக்கும்” என்பதை நான் கேட்பேன் என்று சொன்னான். ஏனென்றால் எப்படிப்பட்ட தைரியமுள்ள மனிதர்களும் பல சமயங்களில் பல சூழ்நிலைகளில் பயத்தோடு வாழ்கின்றனர். இந்த பயத்தினாலே நமது உடல்நிலையும், மனநிலையும் பாதிப்புக்குள்ளாகிறது, பயத்தினாலே நம்முடைய உணர்ச்சிகள் கொந்தளிக்க ஆரம்பித்துவிடுகிறது. அநேகர் பயத்தினுடைய உந்துதலினாலே தற்கொலை செய்துகொள்கின்றனர். அருமையான என் சகோதரனே, சகோதரியே இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கிற உன் வாழ்க்கையிலே பல்வேறுவிதமான பயத்தோடு நீ வாழ்வாயானால், உயிர்த்தெழுந்த ஆண்டவர் இன்றைக்கு உனக்குச் சொல்லுகிற நற்செய்தி, “பயப்படாதே”. மூன்றுவிதமான பயத்திலிருந்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் நமக்குத் தரும் விடுதலையைக் குறித்து தியானிப்போம்.

1. எதிர்காலத்தைக் குறித்த பயம்:

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த செய்தி நமக்கு எதைக் கற்றுக்கொடுக்கிறது என்றால், நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து இனி நாம் கவலைப்பட வேண்டியதில்லை என்பதைக் கற்றுக்கொடுக்கிறது. ஏனென்றால் மனுக்குலத்திலே இருக்கிற ஒரு பெரிய பயம் “மரண பயம்”. ஆனால் இந்த மரண பயத்தை இயேசுவானவர் சந்தித்து, மரணத்தை வென்று வெற்றிவாகை சூடினார். ஆகவேதான், அவர் உயிர்த்தெழுந்ததினாலே நாம் எதிர்காலத்தைக் குறித்து பயப்படவேண்டிய அவசியம் இல்லை. மனுக்குலத்தினுடைய மகா பிரதானமான எதிரி யார் என்றால் “மரணம்”தான். ஆகவே தான் எவ்வளவு பெரிய அரசியல்வாதியோ, பெரிய தலைவர்களோ, அல்லது பெரிய செல்வந்தர்களோ எதற்குமே பயப்படாமல் இருந்தாலும் மரணத்திற்கு பயப்படுகிறார்கள். ஆனால், கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினாலே இந்த மரணத்தைக் குறித்த, எதிர்காலத்தைக் குறித்த அந்த பயத்திலிருந்து நாம் விடுதலை பெறக்கூடிய கிருபையை அவர் தருகிறார். ஆகவே, அவர் உயிர்த்தெழுந்தபடியால் நம்முடைய எதிர்காலத்தைக் குறித்து நாம் பயப்படவோ கவலைப்படவோ வேண்டாம்.

2. கடந்த காலத்தைக் குறித்த பயம்:

இரண்டாவதாக, கிறிஸ்து உயிர்த்தெழுந்ததினால், கடந்த காலத்தைக் குறித்தும் நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலத்திலே நாம் ஏறெடுத்த தவறான தீர்மானங்கள், கடந்த காலத்திலே நாம் செய்த பாவங்கள், கடந்த காலத்திலே தேவனுக்கு விரோதமாகவும், மனிதர்களுக்கு விரோதமாகவும் செய்த மீறுதல்கள், கடந்த காலத்திலே வெளிப்படையாகவோ அந்தரங்கத்திலோ செய்த தவறுகள் ஆகிய இவைகளெல்லாம் நமது வாழ்க்கையிலே நினைவுக்கு வருகின்றன. ஆனால், அவர் உயிர்த்தெழுந்ததினாலே நீ கடந்த காலத்தைக் குறித்து பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், கடந்த காலத்தில் உனது வாழ்க்கையில் காணப்பட்ட வீழ்ச்சிக்குக் காரணமான பாவங்களை ஆண்டவராகிய இயேசுவினிடத்திலே நீ அறிக்கை செய்வாயானால், அதை விட்டுவிட நீ தீர்மானிப்பாயானால், உன் ஆண்டவர் உன்னை மன்னித்து ஏற்றுக் கொள்ள அவர் காத்துக்கொண்டிருக்கிறார்.

அவரால் மன்னிக்கப்படாத பாவம் ஒன்றுமில்லை. அவர் எப்படிப்பட்ட மனிதர்களையும் மன்னிக்க வல்லமையுள்ளவராக இருக்கிறார். ஒருவேளை நீங்கள் கொடூரராயிருக்கலாம், கொலைகாரராய் இருக்கலாம், மன்னிக்கப்படாத அல்லது சமுதாயத்திலே ஏற்றுக்கொள்ளப்படாத நிலையிலே நீங்கள் வாழலாம். ஆனால் நீங்கள் கடந்த காலத்துக்காக ஆண்டவரிடத்திலே வந்து, உயிர்த்தெழுந்த ஆண்டவருடைய கரத்திலே உங்களை ஒப்புக்கொடுத்து அவரிடத்திலே இரக்கத்திற்காக கெஞ்சுவீர்களானால், நிச்சயமாகவே உங்களை மன்னிக்க அவர் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார். “வழக்காடுவோம் வாருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்; அவைகள் இரத்தாம்பரச் சிவப்பாயிருந்தாலும் பஞ்சைப் போலாகும்” (ஏசா.1:18) என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார். ஆகவே, கடந்த காலத்தைக் குறித்த பயத்திலிருந்து உயிர்த்தெழுந்த ஆண்டவர் உன்னை விடுவிக்க தயாராக இருக்கிறார்.

3. நிகழ்காலத்தைக் குறித்த பயம்:

மூன்றாவதாக, அவர் உயிர்த்தெழுந்ததினாலே நம்பிக்கையோடு நிகழ்காலத்தைச் சந்திக்க நாம் அழைக்கப்படுகிறோம். ஏனென்றால், வாழ்க்கை என்பதே போராட்டமும் பிரச்சனைகளும் நிறைந்த ஒன்றாகும். வாழ்க்கையிலே கஷ்டங்கள் உண்டு, எதிர்ப்புகள் உண்டு, ஏமாற்றங்கள் உண்டு, நிந்தைகள் உண்டு. இவைகளின் மத்தியிலே நம்முடைய வாழ்க்கையிலே நாம் உயிர்த்தெழுந்த ஆண்டவர்மேல் இருக்கிற நம்பிக்கையோடு அதை சந்திக்க நாம் முற்படவேண்டும்.

“இதோ, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்” (மத்.28:20) என்ற ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தத்தைப் பற்றிக்கொள்வோம்.

அருமையான சகோதரனே, சகோதரியே! உயிர்த்தெழுந்த ஆண்டவர் எதிர்காலத்துக்கு உயிர்த்தெழுந்தவராய் இருக்கிறார், கடந்த காலத்துக்கு உயிர்த்தெழுந்தவராய் இருக்கிறார். நிகழ்காலத்துக்கும் உயிர்த்தெழுந்தவராய் இருக்கிறார். எனவே உயிர்த்தெழுந்த ஆண்டவர் கையிலே உங்களை ஒப்புக்கொடுங்கள்! மிக ஆச்சரியமாய் கர்த்தர் உங்களை நடத்துவார்!!

சத்தியவசனம்