உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்கள்

கலாநிதி தியோடர் வில்லியம்ஸ்
(மார்ச்-ஏப்ரல் 2013)

உயிர்த்தெழுதலின் ஆசீர்வாதங்கள் எவை? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபடியினாலே நம்முடைய விசுவாசம் பயனுள்ளதாயிருக்கிறது. அது கனியற்ற வெறுமையான விசுவாசமாய் போய்விடவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபடியினாலே நமக்கு எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கை இருக்கிறது. மரணபயத்தின் மேல் வெற்றி உண்டாகிறது. சாவிற்குப் பிறகு வாழ்வு உண்டு என்கிற நம்பிக்கை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த ஆசீர்வாதங்கள் எல்லாம் திருமறையிலே கொடுக்கப்படுகின்றன.

1கொரிந்தியர் 15ஆம் அதிகாரத்தை எடுத்துப் பார்ப்போம். 18ஆவது வசனம்: “கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே” கிறிஸ்து எழுந்திராவிட்டால் கிறிஸ்துவுக்குள் நித்திரையடைந்தவர்களும் கெட்டிருப்பார்களே என்று பவுல் கூறுகிறார். “கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்தெழுந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். மனுஷனால் மரணம் உண்டானபடியால், மனுஷனால் மரித்தோரின் உயிர்த்தெழுதலும் உண்டாயிற்று. ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறது போல் கிறிஸ்துவுக்குள் எல்லோரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்” (வச.20-22). 26ஆவது வசனம்: “பரிகரிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்” என்று பார்க்கிறோம். அதேமாதிரி 52ஆவது வசனத்தை எடுத்துப்பார்ப்போம்: “எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்” 55ஆவது வசனம்: “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்று திருமறையிலே வாசிக்கிறோம்.

மரணத்தைப் பற்றிய பயம் எல்லா மனிதருக்கும் உண்டு. வெளியிலே பார்ப்பதற்கு தைரியசாலிகளாக காணப்படுகிறவர்கள், ஒருவேளை கொடூரமாய், பயங்கரமாய் காணப்படுகிறவர்களும் உள்ளத்திலே அவர்களும் கோழைகளாயிருக்கிறார்கள்; சாவைப் பொறுத்தமட்டிலே. ஒரு சமயம் ஒரு கூட்டம் விசுவாசிகள், ஊழியக்காரர்கள் வனாந்தரத்தின் வழியாக பிரயாணம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று முழுவதுமாய் ஆயுதம் தரித்த ஒரு மனிதன், பார்ப்பதற்கு பயங்கரமாய், கொடூர முகமுள்ளவனாய் காணப்படுகிறான். அந்த வண்டியை நிறுத்துகிறான். தான் உள்ளே வந்து உட்காரவேண்டும் என்று கேட்கிறான். பயத்தினால் அவனை உள்ளே வர அனுமதித்து விடுகிறார்கள். அவன் வண்டிக்குள்ளே உட்கார்ந்துவிடுகிறான். மறுபடியும் வண்டியை ஓட்டும்படி உத்தர விடுகிறான். வண்டி ஓடிக்கொண்டே இருக்கும்போது அவன் இருமிக்கொண்டே வருகிறான். அப்பொழுது அங்கிருந்த விசுவாசிகளில் ஒருவர் ஜெபத்தோடுகூட, அவனிடத்தில் சாட்சி கொடுப்பதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் அவனைப் பார்த்து, “அடிக்கடி இருமுகிறீர்களே? உங்களுக்கு உடல்நலமில்லையா?” என்று கேட்டார். உடனே அவன் தன் உள்ளத்தைத் திறந்து தனது சுகவீனத்தைப் பற்றியும், நோயைப்பற்றியும், தனக்கு இருக்கிற சாவைக்குறித்த பயத்தைப்பற்றியும் பேச ஆரம்பித்துவிட்டான். அப்பொழுது அங்குள்ள எல்லோருக்கும் பெருத்த ஆச்சரியம் ஏற்பட்டது.

பார்ப்பதற்குக் கொடூரமானவனாய் காணப்படுகிறான். தைரியசாலியாய், ஆயுதம் தரித்தவனாய், தன்னந்தனியனாய் அந்த வனாந்தரத்திலே சுற்றிக்கொண்டிருக்கிறவன் ஆனால் அவன் உள்ளத்திலே சாவைக்குறித்த பயம் இருக்கிறது. அருமையானவர்களே, சாவைப் பற்றிய பயம் எல்லா மனிதருக்கும் உண்டு. படித்தவர்களுக்கு, நல்ல உயர்பதவியிலிருக்கிறவர்களுக்கு, அதிகாரத்திலிருக்கிறவர்களுக்கும் சாவைப் பற்றிய பயம் உண்டு! சாவைப் பற்றிய பயம் மனிதரை அடிமையாக்கி விடுகிறது என்று திருமறையிலே வாசிக்கிறோம். எபிரெயர் 2:14,15 இவ்விதமாய்க் கூறுகிறது: “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும் படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலை பண்ணும்படிக்கும் அப்படியானார்” ஜீவகாலமெல்லாம் மரண பயத்தினாலே அடிமைகளாயிருக்கிறவர்கள். எத்தனை மக்கள் இவ்விதமாக மரணபயத்திற்கு அடிமைகளாயிருக்கிறார்களல்லவா?

அன்றாட, தினசரி செய்தித்தாளை எடுத்துப்பார்க்கும்பொழுது அங்கே சாவைப் பற்றி எடுத்துக்கூறியிருக்கிறது. செத்துப் போனவர்களைப் பற்றிய விபரங்கள் கொடுக்கப்படுகின்றன. அதை வாசிப்பதற்குக்கூட பயம். ஏதாவது ஒரு விபத்தைப்பற்றி செய்தித் தாளிலே வாசித்தால் நமக்கும் அவ்விதமாக விபத்து ஏற்பட்டுவிடுமோ என்கிற பயம். தொற்று வியாதி பரவுகிறது என்று செய்தித் தாளிலே வாசித்தால், நம்மையும் அந்தத் தொற்று வியாதி பிடித்துவிடுமோ என்கிற பயம். இப்படியாக மரண பயத்திற்கு அடிமைப்பட்ட மக்கள் அநேகர் உண்டு. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபடியினாலே அந்த மரணபயம் நம்மைவிட்டு நீங்கக்கூடும். சாவின் வல்லமை உடைக்கப்படுகிறது. ஆகையினால்தான் 1கொரி.15:55இல் நாம் ஏற்கனவே பார்த்தபடி, “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?” என்று பவுல் எழுதுகிறார். இது உயிர்த்தெழுதலின் வெற்றி கீதமாகும். இந்த வெற்றிகீதம் நம்முடைய அனுபவத்தில் நிச்சயமாய் ஏற்படக்கூடும்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்த மக்கள், அவருக்காய் வாழ்ந்தவர்கள் எவ்வளவு வெற்றியோடு, நம்பிக்கையோடு மரித்திருக்கிறார்களல்லவா? எத்தனை விசுவாசிகளின் மரணப்படுக்கையின் அருகிலே நாம் நிற்கும்போது இதை கவனித்திருக்கிறோம். அமைதியாக சாகிறவர்கள், சாவை ஒரு சத்துருவாகக் கருதாமல் ஆண்டவரை சந்திக்கும் ஒரு வாயிலாகக் கருதுகிறார்கள், இதுதான் மரணத்தின்மேல் நமக்கு உள்ள வெற்றியை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

1தெசலோனிக்கேயர் 4ஆவது அதிகாரத்திலே இந்த வெற்றியையும், நமக்கு இருக்கும் நம்பிக்கையையும் பற்றி பவுல் எழுதுகிறார். 13ஆவது வசனம்: “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை” சில சமயத்திலே விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளுகிறவர்கள்கூட தங்களுக்கு அருமையானவர்கள், நெருங்கினவர்கள், தங்கள் சொந்தப் பிள்ளைகள் மரிக்கும் பொழுது தலைமயிரை பிய்த்துக்கொண்டு விசுவாசம் இல்லாதவர்களைப்போல நடந்து கொள்ளுகிறார்கள், காரணம் என்ன? அவர்களுக்கு இந்த உயிர்த்தெழுதலின் நிச்சயத்தைப் பற்றிய நம்பிக்கையும் அறிவும் இல்லாதிருப்பதுதான்.

ஆகையினாலேதான் பவுல் இவ்விதமாக எழுதுகிறார். நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப்போல நீங்கள் துக்கிக்கக் கூடாது. ஆம், ஒரு விசுவாசிக்கும், அவிசுவாசிக்கும், துக்கத்தின் சமயத்திலே, மரணத்தின் சமயத்திலே நிச்சயமாய் வேறுபாடு இருக்க வேண்டும். ஒரு விசுவாசி நம்பிக்கையில்லாதவனாய் நடந்துகொள்ளுவானானால், ஆண்டவரை துக்கப்படுத்துகிறான், அவமானப்படுத்துகிறான். நமக்கு ஒரு நம்பிக்கை உண்டு. “இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்… பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டுபோக, மேகங்கள்மேல் அவர்களோடே கூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய் எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம். ஆகையால், இந்த வார்த்தைகளினாலே நீங்கள் ஒருவரையொருவர் தேற்றுங்கள்” (1தெச.4:14,17,18) என்று பவுல் எழுதுகிறார்.

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தார். ஆகையினாலே நமக்கும் உயிர்த்தெழுதல் உண்டு. நமக்கும் ஒரு எதிர்காலம் உண்டு. சாவு நம்மை மேற்கொள்ளவேண்டிய அவசியமில்லை. இயேசுகிறிஸ்துவுக்கும் நமக்கும் இப்போது ஏற்பட்டிருக்கும் இந்த உறவு பாதாளத்தையும் தாண்டி சாவின் வழியாகவும் நாம் செல்லும்பொழுது நம்மோடுகூட இருக்கும். இது எவ்வளவு பெரிய நிச்சயம்!

சத்தியவசனம்