ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

Dr.தியோடர்.எச்.எஃப்
(மார்ச்-ஏப்ரல் 2013)

மகா பரிசுத்த ஸ்தலம்

கிருபாசனத்தின் பொருள்.

கிருபாசனத்தின் பொருள் தெய்வீகமாக ரோமர்.3:25,26 இல் கொடுக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவைக்குறித்து பவுல், “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்”

இங்கே “பாவநிவாரணம்” என்று மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் அதே சொல் எபிரேயர் 9:5 இல் “கிருபாசனம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைக் குறித்து விவரமாய்ப் பேச இப்பொழுது சமயமில்லை” இவ்விதமாக ரோமர் 3:25,26யும், எபி.9:5யும் ஒப்பிட்டுப் பார்த்து, கிருபாசனம் சுட்டிக்காட்டியதைக் கிறிஸ்து இயேசு நிறைவேற்றிவிட்டார் என்று அறியலாம். அவரே நமது பாவங்களுக்கு நிவாரணமாகவும், தேவனைத் திருப்திப் படுத்துகிறவராகவும் இருக்கிறார். நம்முடைய பாவங்களுக்கு மட்டுமல்ல, சர்வ லோகத்தின் பாவங்களுக்கும் பரிகாரி அவரே. இதில் அன்பு வெளிப்படுகிறது. நாம் தேவனை நேசிக்கும் அன்பல்ல. தேவன் நம்மீது கொள்ளும் அன்பு.

நம்முடைய பாவங்களுக்காக கிறிஸ்து தேவனைத் திருப்திப்படுத்திவிட்டார். எனவே அவரே கிருபாசனம். “நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலி அவரே; நம்முடைய பாவங்களை மாத்திரம் அல்ல, சர்வலோகத்தின் பாவங்களையும் நிவிர்த்தி செய்கிற பலியாயிருக்கிறார். நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதார பலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே, அன்பு உண்டாயிருக்கிறது” (1 யோவா. 2:2; 4:10).

கிறிஸ்து செலுத்திய தியாக பலி, பாவத்திற்குரிய பிராயச்சித்தத்தைப் பூரணமாகச் செலுத்திவிட்டது. இது தேவநீதிக்கென்று எதிர்பார்க்கப்பட்ட காரியங்களை நிறைவேற்றி தேவனைத் திருப்திசெய்துவிட்டது. எனவே தேவன் தமது நீதியையும், பரிசுத்த நிலையையும் எள்ளளவும் தாழ்த்த வேண்டியதில்லை. அவர் பாவம் செய்த மனிதனை நியாயப்படுத்த வேண்டியதில்லை. இயேசுகிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகர் என்று விசுவாசித்து, ஏற்றுக் கொள்ளுகிற எந்த மனிதனும் கிறிஸ்துவின் நீதியை ஏற்றுக்கொள்ளுகிறான்.

ஆசரிப்புக்கூடாரத்தில் ஆசாரியன் அமருவதற்கு ஒரு நாற்காலி கூட இல்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஏனெனில் ஆசாரியனின் வேலை இன்னும் முடியவில்லை. நியாயப் பிரமாணம் கொடுக்கப்பட்ட நாள்முதல், சிலுவையில் கிறிஸ்துவின் மரணம்வரை மக்களின் பாவங்களை நிவாரணம் செய்வதற்காகப் பலிகளுடன் திரும்பத் திரும்ப ஆசாரியன் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் வர வேண்டியதிருந்தது. இருந்தபோதிலும், அவன் செலுத்திய பலிகள் பாவங்களைப் போக்கவில்லை. அவை பாவங்களைத் தற்காலிகமாக மூடி வைத்தன.

எபிரேயர் நிருபம் ஆசாரியனின் பணியை இயேசுகிறிஸ்துவின் சாதனையோடு ஒப்பிட்டுப் பார்க்கிறது. “அன்றியும் எந்த ஆசாரி யனும் நாடோறும் ஆராதனை செய்கிறவனாயும், பாவங்களை ஒருக்காலும் நிவிர்த்திசெய்யக் கூடாத ஒரேவித பலிகளை அநேகந்தரம் செலுத்திவருகிறவனாயும் நிற்பான். இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து, ..” (எபி.10:11,12).

கிருபாசனம் தேவனுடைய இளைப்பாறும் இடமாகும். ஏனெனில் அது கிறிஸ்து தமது கிரியைகளின் மூலம் இரட்சிப்பின் கிரியைகளைப் பூரணமாக முடிக்கும்போது கிடைக்கும் பூரணமான இளைப்பாறுதலை எதிர்நோக்கியிருக்கிறது. இந்த இடத்தில் “இளைப்பாறுதல்” என்பது மாம்ச பெலவீனங்களிலிருந்து ஓய்வு என்பதைக் குறிக்கவில்லை. நீதிமன்றத்திலிருந்து வழக்கு முடிவடைந்ததும் கிடைக்கும் இளைப்பாறுதலைக் குறிக்கிறது. தேவனிடத்தில் ஒரு வழக்கு இருக்கிறது. மனிதன் பாவம் செய்துவிட்டதினால் அவன் மரணத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான். அவன் தண்டனை பெற்றுவிட்டால் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட ஜனம் முழுவதையும் இழக்க வேண்டியது வரும். இந்த மக்கள் அனைவரும் மீட்கப்பட வேண்டுமானால் என்ன செய்வது? இதுவே வழக்கு. இந்த வழக்கைத் தீர்க்க தேவன் சித்தங்கொண்டு, தனது ஒரே குமாரனை இவ்வுலகுக்கு அனுப்பி, மனிதகுலத்தின் பாவம் முழுவதையும் அவர்மீது சுமத்தி, மாசற்ற தேவ ஆட்டுக்குட்டியாக சிலுவையில் அவர் பலியிடப்படவும், இரத்தஞ்சிந்தவும், மரணமடையவும், அடக்கம் பண்ணப்படவும், சித்தங் கொண்டார். இந்த இயேசுவின் செயலால் மனித இனம் இரட்சிக்கப்பட்டு மீண்டும் தேவனுடைய பிள்ளைகள் ஆகிவிட்டது. எனவே தேவன் “அப்பாடா, பிரச்சனை ஓய்ந்தது” என்று மனிதன் கூறுவது போல் நித்திய இளைப்பாறுதலைக் கண்டடைய முடியும். எபிரேயர் 4ஆம் அதிகாரத்தில் கிறிஸ்துவில் நாம் பெறும் இளைப்பாறுதலைப்பற்றி கூறப்பட்டுள்ளது. இவர் அனைவருக்கும் உள்ள போராட்டத்தின் முடிவாய் இருக்கிறார். கிறிஸ்துவை விசுவாசித்து, விசுவாசத்துடன் வாழ்பவர்களுக்கு இந்த இளைப்பாறுதல் கிடைக்கும்.

தேவன் இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வந்து நிறைவேற்றப்போகும் தியாகபலியை எதிர் நோக்கியிருந்தார். அதனால் அவர் பூரண திருப்தியடைந்தார். கிறிஸ்து நிறைவேற்றின பூரணமான இரட்சிப்பின், மீட்பின் பணி தேவனுக்கு முழுத்திருப்தியையும் கொடுத்ததால், இவ்வுலகில் அவருடைய சிங்காசனமாயிருந்த கிருபாசனத்தில் இளைப்பாறினார்.

தேவன் கிருபாசனம் குறித்து மோசேயிடம் அறிவுரை கூறுகையில், “அங்கே நான் உன்னைச் சந்திப்பேன்; கிருபாசனத்தின் மீதிலும், சாட்சிப்பெட்டியின்மேல் நிற்கும் இரண்டு கேருபீன்களின் நடுவிலும் இருந்து நான் இஸ்ரவேல் புத்திரருக்காக உனக்குக் கற்பிக்கப் போகிறவைகளையெல்லாம் உன்னோடே சொல்லுவேன்” (யாத்.25:22) என்றார். இரண்டு கேருபீன்கள் மத்தியிலிருந்து தேவன் பலருடன் பேசியதாக வேதாகமத்தில் நாம் பார்க்கிறோம். 2சாமு.6:2 இவ்வாறு கூறுகிறது: “கேருபீன்களின் நடுவே வாசமாயிருக்கிற சேனைகளுடைய கர்த்தரின் நாமம் தொழுது கொள்ளப்படுகிற தேவனுடைய பெட்டியைப் பாலையூதாவிலிருந்து கொண்டுவரும்படி, அவனும் (தாவீது) அவனோடிருந்த அந்த ஸ்தலத்தாரும் எழுந்துபோய்…..”. சங்கீதம் 99:1 இல் “கர்த்தர் ராஜரீகம் பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார். பூமி அசைவதாக”.

கிருபாசனத்தின்மேல் இருந்த இரண்டு கேருபீன்களின் மத்தியில் தேவன் வாசமாயிருந்து மனிதர்களோடு பேசினார் என்று காண்கிறோம். பரிசுத்தம் நிறைந்த அனாதி தேவன் எப்படிப் பாவிகளான மக்கள் மத்தியில் வாசமாயிருந்தார்? என்னும் கேள்வியைக் கேட்பது நியாயமே. இது சாத்தியமே. எப்படியெனில் கிருபாசனத்தின் மேல் பாவநிவாரண பலியின் இரத்தம் தெளிக்கப்பட்டது. அதனால் தேவன் அங்கே வாசமாயிருக்க முடியும். ஈடேற்றத்தின் நாளின் ஆசரிப்பைக் குறித்து லேவியராகமம் 16:14,15 வசனங்களில் அறிவுரை கூறப்பட்டுள்ளது “பின்பு காளையின் இரத்தத்திலே கொஞ்சம் எடுத்து, கீழ்ப்புறமாக நின்று, தன் விரலினால் கிருபாசனத்தின்மேல் தெளித்து, அந்த இரத்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிருபாசனத்துக்கு முன்பாக ஏழுதரம் தன் விரலினால் தெளிக்கக்கடவன். பின்பு ஜனத்தினுடைய பாவ நிவாரணபலியான வெள்ளாட்டுக்கடாவை அவன் கொன்று, அதின் இரத்தத்தைத் திரைக்கு உட்புறமாகக் கொண்டுவந்து, காளையின் இரத்தத்தைத் தெளித்தது போல, அதின் இரத்தத்தையும் கிருபாசனத்தின்மேலும் அதற்கு முன்பாகவும் தெளித்து…….”

இவ்வாறு கிருபாசனத்தின்மேல் தெளிக்கப்பட்ட பாவநிவாரணபலியின் இரத்தம் பரிசுத்த தேவன் பாவிகளின் மத்தியில் வாசம் செய்ய இடமளித்தது. அவர் நீதியுள்ளவராகவும், அதே வேளையில் தம்மிடம் விசுவாசத்தோடு வருகிறவர்களை நீதிமான்களாக்குகிறவராகவும் இருந்தார். ரோமர் 3:26ஐப் பாருங்கள். “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்”. இது எவ்வாறு நமக்கு மீட்பையும், இரட்சிப்பையும் தமது சிலுவை மரணத்தினால் சம்பாதித்துத் தந்த இயேசுகிறிஸ்துவைச் சுட்டிக்காட்டுகிறது பாருங்கள்!

கிறிஸ்து ஒரு பரிசுத்தமான வாழ்க்கை வாழ்ந்தார். பின்னர் மரித்தார். அதன்மூலம் தேவன் நரகத்துக்குப் பாத்திரமான ஒரு பாவியைத் தம்மோடு ஐக்கியம் கொள்ளச் செய்தார். அதேவேளையில் அவர் தமது நீதிக்கும், பரிசுத்தத்துக்கும் பங்கம் விளையாமலும் பார்த்துக்கொண்டார். தேவனுடைய பரிசுத்தத்தை நிலைநாட்ட கிறிஸ்து வாழ்ந்தார். தேவனுடைய நீதியையும், நியாயத்தீர்ப்பையும் நிலைநாட்ட இயேசு மரித்தார்.

தேவன் தமது நீதியையும், நியாயத்தீர்ப்பையும் இழந்து, கிருபையையும் இரக்கத்தையும் காட்ட முடியாது. தேவனுடைய பரிசுத்தத் தன்மை பாதுகாக்கப்பட வேண்டும். தேவனுடைய நீதிக்குப் பங்கம் விளையக்கூடாது. அதற்காகக் கிறிஸ்து உலக மக்களின் பாவத்தைத் தம்மீது ஏற்றுக்கொண்டு, சிலுவையில் தம் இரத்தத்தைச் சிந்தியபடியாலும், மரணத்தை அடைந்தபடியாலும், “பாவத்தின் சம்பளம் மரணம்” என்னும் தேவநீதி நிலை நாட்டப்பட்டுவிட்டது.

தம்முடைய வாழ்க்கையின்மூலம் இயேசு கிறிஸ்து கற்பனைகளைக் கனப்படுத்தினார். இதில் இவர் ஏசாயா.42:21 இன் நிறைவேறுதலானார். “கர்த்தர் தமது நீதியினிமித்தம் அவன் மேல் பிரியம் வைத்திருந்தார். அவர் வேதத்தை முக்கியப்படுத்தி அதை மகிமையுள்ளதாக்குவார்.”

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்