கடுகு விதையும் தேவனுடைய இராஜ்யமும்

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மே-ஜுன் 2013)

“வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் கடுகு விதைக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு மனுஷன் எடுத்துத் தன் நிலத்தில் விதைத்தான். அது சகல விதைகளிலும் சிறிதாயிருந்தும், வளரும்போது, சகல பூண்டுகளிலும் பெரிதாகி, ஆகாயத்துப் பறவைகள் அதின் கிளைகளில் வந்து அடையத்தக்க மரமாகும் என்றார்” (மத்.13:31,32).

தேவனுடைய இராஜ்யம் எப்படிப்பட்டதாய் இருக்கிறது என்பதற்கும், உலகத்தின் பார்வையில் தேவ இராஜ்யத்தின் புத்திரர் எப்படியிருக்கிறார்கள் என்பதற்கும் கடுகு விதைக்கு ஒப்பிட்டு இயேசு கூறுகிறார். கடுகு விதையானது சிறிதானதாக தோற்றமளிக்கிறது. அந்தச் சிறிய கடுகுவிதை விதைக்கப்பட்டபோதோ அதிலே ஆகாயத்துப் பறவைகள் வந்து அடையத்தக்கதாக அது பெரிய மரமானது.

இதைப்போன்றுதான் மனிதர்களின் பார்வையிலும், அவர்களது அணுகுமுறையிலும் தேவ இராஜ்யத்தின் செய்தி சாதாரண மானதாகவும், தேவபுத்திரர் அற்பமானவர்களாகவும் காணப்படுகின்றனர். இயேசுவானவர் தம்முடைய 12 சீஷர்களோடு தமது திருப்பணியை ஆரம்பித்தார். யூதாஸிற்கு பின்பு மத்தியா அவர்களோடு சேர்க்கப்பட்டான். பிறகு 120 சீஷர்களாக மாறியது (அப்.1:15). பின்பு 3000 பேர் சபையிலே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். அதன்பின்பு போகமுடியாத இடத்திற்கெல்லாம் இராஜ்யத்தின் செய்தி சென்றது. இவ்வாறு தேவனுடைய இராஜ்யம் வளர்ந்து கனி கொடுக்க ஆரம்பித்தது. பூமியெங்கும் இந்தச் சுவிசேஷம் பரவினதாக பவுல் எழுதுகிறார். சிறிதாக இருந்த ஆண்டவருடைய ஊழியம் மிகப் பெரிய அளவிலே வளர்ந்தது.

ஆண்டவருடைய போதனையும், மதிப் பீடும் அணுகுமுறையும் வேறு. உலகத்தின் போதனையும் மதிப்பீடும் அணுகு முறையும் வேறு. பைத்தியமாய் தோன்றுகிற பிரசங்கத்தினாலே அநேகரை இரட்சிக்க அது ஏதுவாக இருந்தது. இராஜ்யத்தின் நற்செய்தி மனிதனின் பார்வையில் அற்பமாக எண்ணப்பட்டாலும், மனிதனால் அங்கீகரிக்கப்படாவிட்டாலும் அதிலே பெரிய வல்லமை உண்டு என்பதை நாம் மறுக்கவே முடியாது.

இயேசுகிறிஸ்து மரித்து, உயிர்த்தெழுந்து பரமேறின பிற்பாடு பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்தாவியானவர் இறங்கினார். அதன்பின் சீஷர்கள் வல்லமையாய் ஊழியஞ்செய்யத் தொடங்கினார்கள். சீஷர்கள் பேசுகிற தைரியத்தைக் கண்டு இவர்கள் படிப்பறியாதவர்களென்றும் ஆண்டவரோடுகூட இருந்தவர்களென்றும் அறிக்கையிட்டனர். உலகத்தால் அங்கீகரிக்கப்படாதவர்களைத் தெரிந்தெடுத்து தம்முடைய கனமான பணியை அவர்கள் கையில் கொடுத்தார். தேவனுடைய இராஜ்யத்தின் செய்தி சிறிதானதாகவும் அங்கீகரிக்கப் படாததுமாகவும் தோன்றலாம். இந்த செய்திதான் உலகத்தை ஆண்டுகொண்டுள்ளது. இன்று அநேகருக்கு வாழ்வு அளிக்கிறது. அற்பமாக எண்ணப்பட்டவர்களைக் கொண்டு நமது ஆண்டவர் பெரிய அசாதாரண காரியங்களை செய்ய வல்லவராயிருக்கிறார். கடுகு விதை முளைத்து பெரிய மரமாகி அநேக பறவைகளுக்கு அடைக்கலத்தைக் கொடுத்ததுபோல உலகத்தால் அற்பமாக எண்ணப்பட்ட தேவ இராஜ்யம் இஸ்ரவேல் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு இன்று உலகம் முழுவதும் பரவி வளர்ந்து அநேகருக்கு இன்று ஆசீர்வாதமாயிருக்கிறது.

இதை வாசித்துக்கொண்டிருக்கும் அருமையான தேவபிள்ளையே, மனிதர்கள் பார்வையிலே அவர்களது கணிப்பிலே நீ சிறியவனாக காணப்படலாம். உன்னுடைய பணி அற்பமாக எண்ணப்படலாம். ஆனால் பாருங்கள், இராட்சதனான கோலியாத்தை வீழ்த்துவதற்கு சிறிய தாவீதை தேவன் உபயோகப்படுத்தினார். அதேபோல தேவன் என்னையும் உன்னையும் பயன்படுத்துவார். மனிதர்கள் உன்னை அங்கீகரிக்கப்படாத நிலையிலே, தேவன் உன்னை அங்கீகரிப்பார். அவர் உன்னைக் கொண்டுதான் மகா பெரிய காரியங்களைச் செய்கிறார். எனவே சோர்வையும் கலக்கங்களையும் பயத்தையும் விட்டு விட்டு துணிச்சலோடு தேவராஜ்யத்தின் பணியைச் செய்வோம்.

அடுத்ததாக, இயேசு இந்த உவமையில், “சிறியதாய்” இருந்த கடுகு செடியாகி பின்பு மரமாய் வளர்ந்ததைக் குறிப்பிடுகிறார். இதைப் போலவே தேவஇராஜ்யம் படிப்படியாய் வளரக்கூடியது. இராஜ்யத்தின் சுவிசேஷம் சொல்லப்பட்டவுடனே அப்படியே மறைந்துவிடுவதில்லை. நான் ஆண்டவருக்காக செய்கின்ற ஊழியம் கனிகொடுக்கவில்லையே, என்னால் அநேக ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியவில்லையே எனக் கவலைப்படாதே. தேவனுடைய இராஜ்யம் வளரக்கூடியது. அதேபோல தேவன் உன்னுடைய ஊழியத்தையும் அநேக ஆத்துமாக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் படியாக வளர்ந்து பெருகச் செய்வார். உலக சரித்திரத்தில் பெரிதாக தோன்றிய அநேக இராஜ்யங்களும், சாம்ராஜ்யங்களும் ஒரு கால கட்டத்தில் மறைந்து, காணப்படாமற் சிதைந்து போய்விட்டது. ஆனால் இயேசுகிறிஸ்து ஸ்தாபித்த தேவ இராஜ்யமானது வளர்ந்து பெருகி இன்றும் நிலைநிற்கிறது. தேவனுடைய இராஜ்யம் முடிவில்லாதது என்று வேதம் போதிக்கிறது. கடந்த 20 நூற்றாண்டுகளாக நாம் பார்த்து வருகிறோம். 12 சீஷர்களோடு ஆரம்பிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யம், ஒரு சிறியக் கூட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்ட சுவிசேஷப்பணி உலகத்தின் கடைசிபரியந்தம் அது பரவி இன்று பெரியதொரு இராஜ்யமாக உருவாகியிருக்கிறது.

அடுத்ததாக, தேவனுடைய இராஜ்யம் எப்படி செயல்படுகிறதென்றால், அது அநேக மக்களுக்கு அடைக்கலம் தருகிறதாயிருக்கிறது. தானி.4:10-11 இல் வளர்ந்ததும் பலத்ததுமான ஒரு பெரிய விருட்சத்தைக் குறித்து தானியேல் கண்ட சொப்பனத்தைப் பற்றிப் பார்க்கிறோம். அதின் கொப்புகளில் ஏராளமான ஆகாயத்துப்பறவைகள் தாபரித்து சகல பிராணிகளும் அதினால் போஷிக்கப்பட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விருட்சம் நேபுகாத் நேச்சாருடைய இராஜ்யத்தைக் குறிக்கிறது. அவனுடைய இராஜ்யம் அநேக மனிதர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது. ஆனால் காலப்போக்கிலே அவனது இராஜ்யபாரம் அழிந்துபோனது. ஆனால் சிறியதாய் ஆரம்பமான நம் தேவனுடைய இராஜ்யம் இன்றும் வளர்ந்து பெருகிக்கொண்டு இருக்கிறது. நம் இந்திய தேசத்தில் எத்தனையோ விதமான மொழி, இனம், ஜாதி, வம்சம், கலாச்சாரம் இடம் பெற்றுள்ளது. இவர்கள் எல்லாரும் தேவனுடைய இராஜ்யத்தில் அடைக்கலம் பெறக்கூடிய கிருபையை தேவன் கொடுத்திருக்கிறார். இதேபோன்று எல்லா நாட்டுமக்களுக்கும் தேவ இராஜ்யத்தில் இடம் உண்டு. ஏனென்றால் அது வளரக் கூடியது.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்” (மாற்.11:17) என்று சொன்னார். எனவே இந்த இராஜ்யத்தின் செய்தி ஒரு குறிப்பிட்ட மக்களுக்கோ, இனத்திற்கோ, கலாச்சாரத்திற்கோ, நாட்டுக்கோ உரியதல்ல. எல்லா மக்களையும் ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு அடைக்கலம் தந்து இரட்சிப்பு, நித்திய ஜீவன், தேவ ஆசீர்வாதம், பரலோக மகிமை ஆகியவற்றை தருவதுதான் “தேவனுடைய இராஜ்யம்”. இவ்வுலகத்திலே யாரும் எங்களுக்கு அடைக்கலம் தரவில்லையே, எங்களுக்கு இங்கு நம்பிக்கையில்லையே என்று கலங்கலாம். தேவனுடைய இராஜ்யம் உங்களுக்கு அடைக்கலம் கொடுத்து நம்பிக்கையைக் கொடுக்கிறது.

என் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணித்தபோது அவர் எனக்கு அடைக்கலம் கொடுத்தார். உன் வாழ்க்கையை ஆண்டவருக்கு அர்ப்பணிப்பாயா?

சத்தியவசனம்