உடன்படிக்கையும் பலியும்

Dr.உட்ரோ குரோல்
(மார்ச்-ஏப்ரல் 2014)

தேவன் தமது கிருபையையும் புது உடன் படிக்கையையும், இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நமக்கு அருளியுள்ளார். எனவே, பழைய சட்டத்தையும் பழைய உடன்படிக்கையையும் நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்ற கேள்வியை எபிரெயருக்கு எழுதின நிருபத்தின் ஆசிரியர் எழுப்புகிறார். உடன்படிக்கை என்றால் இரு குழுவினருக்கிடையே நடக்கும் ஒப்பந்தம் எனவும், அது சட்டத்தோடு தொடர்புடைய ஒரு சொல் என்றும் அநேகர் நினைக்கின்றனர். உண்மையில் அது அவ்வாறு அல்ல. உடன்படிக்கை என்பது ஒரு உறுதிமொழி அல்லது உடன்பாடு என்று பொருள்படும். அது இருவருக்கிடையே உண்டாகும் ஒப்பந்தம் என்றே நாம் கூறலாம். தாய்க்கும் சேய்க்கும், தகப்பனுக்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவே உடன்படிக்கை என்பதாகும்.

இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக உண்டான ஒரு புது உடன்படிக்கையைப் பெற்றுக்கொள்ளுவதன் மூலம், நீங்களும் நானும் சிறந்த பலியை தேவனுக்கு செலுத்துகிறோம்.

“எப்படியெனில், மோசே, நியாயப்பிரமாணத்தின்படி, சகல ஜனங்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை வெள்ளாட்டுக் கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டுமயிரோடும், ஈசோப்போடுங்கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார் மேலும் தெளித்து: தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்” (எபி.9:19,20).

இங்கு இளங்காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும், ஈசோப்போடுங் கூட எடுத்து, புஸ்தகத்தின்மேலும் ஜனங்களெல்லார்மேலும் தெளிக்கும் தேவ மனிதனாகிய மோசேயின் செயலைப் பற்றி வாசிக்கிறோம். இது ஐந்தாகமங்களில் எங்கே வருகிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் ஏன் ஈசோப்பைப் பயன்படுத்தினார்? ஏன் இளங்காளை வெள்ளாட்டுக் கடா இரத்தம்? ஏன் தண்ணீர்? ஏன் சிவப்பான ஆட்டுமயிர்? புஸ்தகம், ஆசரிப்புக் கூடாரம் மற்றும் ஆராதனைக்குரிய சகல பணிமுட்டுகளின் மேலும் ஏன் இரத்தத்தைத் தெளிக்க வேண்டும்? உண்மையில் வேதாகமத்தில் எங்கும் இப்பகுதி காணப்படவில்லை.

இது எபிரெயர்களின் பாரம்பரியங்களில் ஒன்று. பின்நாட்களில் இதுவே இஸ்ரவேலரின் மத சடங்காகவும் மாறிற்று. இதனை லேவியராகமத்தில் வாசிப்பதால் அங்குதான் அது ஆரம்பமானது என நாம் கூறமுடியாது. ஏனெனில் அது அதிக காலத்துக்கு முன்னரே ஆரம்பமாயிற்று. புதிய ஏற்பாட்டின் காலத்தில் எபிரெய ஆக்கியோன் எழுதும்பொழுது, ஓர் ஆசாரியனுடைய தினசரி காரியத்தை அவர் கவனித்துக் கூறுகிறார். ஏனெனில் அது அவர்களுடைய மத சடங்கு. ஒரு யூதனுடைய பாரம்பரியங்களில் ஒன்று.

வசனம் 20இல், “தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்று மோசே கூறினார். மனிதனுடன் தேவன் உடன்படிக்கை செய்வதற்கு – எப்பொழுதுமே இரத்தபலியைக் கேட்கிறார். பாவ நிவிர்த்திக்கும் பாவ மன்னிப்புக்கும் உடன்பாட்டுக்கும் இரத்த பலியே மத்தியஸ்தராக இருக்கிறது. மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருப்பதால் இதைத் தவிர வேறு வழியே இல்லை.

இதற்கு நான் ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். ஏதேன் தோட்டத்தில் ஆதாமும் ஏவாளும் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்பட்ட நிகழ்வை ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான். அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும் திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக் கச்சைகளை உண்டுபண்ணினார்கள்” (ஆதி.3:6,7). ஆனால் 8ஆம் வசனத்தில், “பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள். அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே ஒளித்துக்கொண்டார்கள்” என நாம் வாசிக்கிறோம்.

அவர்கள் ஏற்கனவே தங்களுடைய மீறுதலுக்கு ஒரு பிராயச்சித்தம் செய்துகொண்டனர். பின்னர் ஏன் ஒளித்துக்கொள்ள வேண்டும்? ஏனெனில் தங்களுடைய பாவத்தையும் நிர்வாணத்தையும் மூடிக்கொள்ளும் முயற்சியில் அவர்கள் வெற்றி பெறவில்லை. எனவேதான் அவர்கள் தேவனிடமிருந்து ஓடி ஒளிந்தனர். வசனம் 9 “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்”. உங்களுடைய சிறுவன் தனது படுக்கைக்கு அடியில் ஒளிந்துகொண்டிருக்கும் பொழுது, “ஜானி நீ எங்கே இருக்கிறாய்?” என்று குரல் கொடுப்பீர்கள் அல்லவா? அதுபோலவே தேவனும் தாம் சிருஷ்டித்த ஆதாமை அழைத்தார்.

எங்களுடைய வீட்டில் ஒரு செயின்ட் பெர்னார்ட் வகை நாய் உள்ளது. அது உருவத்தில் சற்று பெரியது. இந்த நாயைவிட சில குதிரைகள் சிறியதாயிருக்கும். இந்த நாய் ஏதேனும் தவறு செய்துவிட்டால் ஓடிப்போய் ஒளிந்துகொள்ளும். அது காண்போருக்கு மிகவும் வேடிக்கையாக தோன்றும். இந்த நாய் தனது தலையை படுக்கைக்கு அடியில் வைத்துக்கொள்ளும். 90 சதவீதம் அதன் உடல் வெளியே தெரியும். அதனை மறைத்து வைக்க வழியே கிடையாது. நெருப்புக்கோழி தனது தலையை மண்ணில் புதைத்துக்கொள்வது போல அக்காட்சி இருக்கும்.

இங்கே ஆதாமும் ஏவாளும் இவ்வாறே தேவனிடமிருந்து தங்களை மறைத்துக் கொள்ள முயற்சித்தனர். தேவன், “ஆதாமே, நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு அவன், “நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன்” என்றான்.

தேவன் மீண்டுமொரு கேள்வியை எழுப்புகிறார். “நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?” இது இருதயத்தை ஊடுருவும் ஒரு கேள்வியாகும். அத்தோட்டத்திலே ஆதாமும் ஏவாளும் மாத்திரமே இருந்தனர். “நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்?” (வசனம் 21). தேவன், ஆதாம், ஏவாள் இவர்களைத் தவிர வேறொருவர் அங்கிருந்திருக்க வேண்டுமே. சிந்திக்க வேண்டிய ஒரு வினா.

அவ்வசனத்தை ஆராயும் முன்பதாக, அச்சூழலை நாம் சற்றே ஆராய்வோம். அவர்கள் இருந்தது ஏதேன் தோட்டம். அது பூமியிலே ஒரு வசீகரமான இடம். அத்தோட்டத்தின் சகல மரத்தின் கனிகளையும் அவர்கள் விருப்பம் போல் உண்ணலாம். ஒரேயொரு மரத்தின் கனியைத் தவிர. அங்கே எல்லா மிருகங்களும் இருந்தன. அவை பலவிதமான தோல்களை உடையனவாயிருந்தன. மரங்களில் அழகிய பறவைகள் பாடிக்கொண்டிருந்தன. மனரம்மியமான இடம். அங்கே பாவம் காணப்படவில்லை. யாவும் பூரணப்பட்டிருந்த இடம்.

ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபொழுது அவர்கள் தங்கள் நிர்வாணத்தை மூடிக்கொள்ள அத்தியிலையினால் உடைகளை உண்டுபண்ணிக் கொண்டனர். ஆனால் அது அவர்களை தேவனிடமிருந்து மறைக்க முடியவில்லை. தேவன் அவர்களை நோக்கி, “ஆதாமே நீ எங்கே இருக்கிறாய்?” என்று கேட்டார். அவர்களுக்கு தேவன் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினார்.

ஏதேன் தோட்டத்தில் பறவைகளின் பாடல் ஒலி நிரம்பியிருந்தது. சிறு விலங்குகள் ஓடையில் விளையாடிக்கொண்டிருந்தன. ஆனால் ஆதாம் ஏவாளுக்குத் தேவையான உடைகளை உண்டுபண்ண தேவன் ஒரு பாவமும் அறியாத ஒரு மிருகத்தை அந்த ஏதேன் தோட்டத்தில் கொன்றார். ஆம், பாவத்தைப் போக்க தேவன் இரத்த பலியை எதிர்பார்க்கிறார்.

அடுத்த அதிகாரத்தில், காயீன்-ஆபேல் சகோதரர்களைப் பற்றி நாம் வாசிக்கிறோம். லேவியரின் சட்டங்கள், பழைய ஏற்பாட்டின் பலிகள் யாவுமே ‘தேவன் பாவபலியாக இரத்தத்தைக் கேட்கிறார்’ என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. பழுதற்ற ஆட்டுக்குட்டியின் இரத்தமே சிறந்தது என்றும் தேவன் கூறுகிறார். ஆனால் பழுதற்ற ஆட்டுக்குட்டி எது? பல ஆடுகளை நான் கவனித்துப் பார்த்திருக்கிறேன். எதுவுமே பழுதற்றதல்ல. மனிதனுடைய கண்களுக்கு சிறப்பாகத் தோன்றுபவை தேவ பார்வையில் பழுதுடையவையே. பழுதற்ற ஆட்டுக்குட்டி என்பது தமது குமாரனாகிய இயேசுகிறிஸ்துவையே குறிக்கும் அடையாளம் என்பதை தேவன் அறிந்திருந்தார்.

“நியாயப்பிரமாணத்தின்படி கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது” (எபி.9:22). கொஞ்சங்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும் என்று எபிரெயர் நிருப ஆக்கியோன் இங்கு எழுதியுள்ளார். பெரும்பாலும் எல்லாம் என்பதை, கொஞ்சங்குறைய என்று தவறுதலாக அவர் எழுதிவிட்டாரா? தேவனுடைய வார்த்தை தவறில்லாதது. கொஞ்சங்குறைய என்றால் கொஞ்சங்குறைய என்றே பொருள்படும்.

இரத்தத்தால் சுத்திகரிக்கப்படாத சில காரியங்களும் உண்டு என்பதை பழைய ஏற்பாட்டில் நாம் காணலாம் (எண்ணா.31:21-24). இஸ்ரவேலர் யுத்தத்துக்குச் சென்று வரும் பொழுது கொள்ளை பொருட்களை அக்கினிக்குள் போட்டு எடுக்கவேண்டும் என்ற கட்டளை தரப்பட்டது. அப்பொருட்கள் வெள்ளி அல்லது பொன்னாக இல்லையெனில் அக்கினியில் சாம்பலாகிவிடும். துணிகளாக இருப்பின் அவற்றை தண்ணீரால் சுத்தப்படுத்த வேண்டும். எனவே பொதுவான விதிக்கு சில விலக்குகள் உண்டு.

அக்காலத்தில் போக்காடாக விடப்பட்ட ஆட்டிலிருந்து உடைகள் செய்யப்பட்டன (லேவி.16:26). அத்துணிகள் இரத்தத்தால் அல்ல, தண்ணீரால் கழுவ வேண்டும். ஆசாரியர்கள் அணியும் பரிசுத்த உடைகளுக்கும் இது பொருந்தும். ஆசாரியர்களின் உடை கனமானது. அவைகள் சலவை செய்யப்பட வேண்டும். அதனை இரத்தத்தில் தோய்க்கக்கூடாது. தண்ணீரிலேயே சுத்தம் செய்யவேண்டும். யாத். 19:10 இதையே கூறுகிறது. எனவே இரத்தத்தால் சுத்திகரிக்கப்படுவதற்கு துணிகளைப் போன்ற சிலவற்றுக்கு விலக்குகள் உண்டு.

ஆகவே, இரத்தத்தால் சுத்திகரிக்கப்படும் என்று அவர் சொல்லும்பொழுது சில விதி விலக்குகள் உண்டு. ஆனால் ஆவிக்குரிய உலகில் எதற்கும் விதிவிலக்குகள் கிடையாது. ஏன்? இரத்தஞ்சிந்துதலில்லாமல் மன்னிப்பு உண்டாகாது என்று எபி.9:22 கூறுகிறது.

‘இரத்தம் சிந்தாமல் பாவமன்னிப்புக்கான கிரயத்தை செலுத்தமுடியாது.’ இந்த விதிக்கு விலக்கு கிடையாது. “ஆதலால், பரலோகத்திலுள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாயிருந்தது; பரலோகத்திலுள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாமே” (எபி.9:23) என்று கூறுகிறது. ஒருவர் உங்களுக்கு சேவை செய்வதால், அவருக்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள். அது போலவே பாவமன்னிப்புக்கான கிரயத்தை இரத்தம் சிந்தாமல் செலுத்த முடியாது. இப்பூமியில் பரலோகத்திலுள்ளவைகளுக்கு சாயலானவைகள் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட வேண்டும். பழைய ஏற்பாட்டிலுள்ள பலிகளும் ஆசாரியர்கள் மதசடங்கின் பொழுது அணியும் உடைகளும் பரலோகத்திலுள்ளவைகளின் சாயல்களேயாகும். அவை நிஜங்களாகாது. பழைய ஏற்பாட்டின் பலிகளும், பாவப்பரிகாரத்தின் நாளிலும், ஒரு குடும்பம் ஆட்டுக்குட்டியைப் பலி செலுத்தும் பொழுதும், “அது நகல், நிழலுரு – பரலோகத்திலுள்ள நிஜத்தின் நிழல், – இயேசுகிறிஸ்துவின் இரத்தமே அசல், நிஜம்” என்று தேவன் கூறுவார். இவையெல்லாம் வரப்போகும் மெய்யான காரியங்களுக்கான அடையாளங்கள்.

பாவத்துக்கான நிவாரணம், ‘இரத்தம் சிந்தப்பட வேண்டும்’ என்பதை இன்று அநேக யூதர்கள் அறிவார்கள். எனவேதான் அவர்களுடைய முன்னோர்கள் ஆட்டுக்குட்டியை பலியாக செலுத்தினர். ஆனால் இன்றைய காலத்தில் அது பாரம்பரியமாக மாறிவிட்டது. அவர்களது முன்னோர்கள் பலி செலுத்தியதின் காரணம் மறக்கப்பட்டுவிட்டது. தாங்கள் செலுத்தியது வெறும் நிழல் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்.

இயேசுகிறிஸ்து உங்களுக்காக தன்னுடைய இரத்தத்தை சிந்தியது நிஜமான ஒரு பலி. அது அனைத்துக் காலத்துக்கும், அனைத்து மனுக்குலத்துக்கும் உரியதாகும்.

“அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார். பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறது போல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை. அப்படியிருந்ததானால், உலகமுண்டானது முதற்கொண்டு அவர் அநேகந்தரம் பாடுபட வேண்டியதாயிருக்குமே; அப்படியல்ல, அவர் தம்மைத் தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும் பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்” (எபி.9:24-26) இவை மிக முக்கிய மான வசனங்களாகும்.

“புதிய உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தம்” என்று இயேசுகிறிஸ்துவும் கூறினார். பழைய ஏற்பாட்டிலுள்ள முறைக்கும் புதிய ஏற்பாட்டின் முறைக்கும் இடையே உள்ள வேறுபாட்டை நாம் ஆராய்வோம். நியாயப்பிரமாணத்தின் சட்டங்களுக்கு – லேவியரின் சட்டங்களுக்கு ஆட்டுக்குட்டி, கடா இவற்றின் இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் இயேசு கிறிஸ்து தம்முடைய இரத்தத்தையே பலியாகச் செலுத்தினார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில், பலி செலுத்துவதற்கு மனிதனுடைய கையினால் செய்யப்பட்ட ஸ்தலத்துக்கு இஸ்ரவேலர் சென்றனர். ஆனால் இயேசுகிறிஸ்துவோ எந்த மனிதனாலும் உருவாக்கப்படாத பரலோகத்துக்குச் சென்றார். பழைய ஏற்பாட்டில் அவர்கள் தங்களுடைய பலியை பிற மனிதர்கள் முன்பாக செய்தல் வேண்டும் (வச.24). ஆனால் இயேசு கிறிஸ்து தம்முடைய பலியை பிதாவாகிய தேவனுக்கு முன்பாக செய்தார்.

பழைய ஏற்பாட்டில் அவர்கள் அடிக்கடி பலி செலுத்தவேண்டியதாயிருந்தது. வருடந்தோறும் ஒப்புரவின் பலியை அவர்கள் செலுத்தவேண்டும். ஆனால், இயேசு தம்முடைய பலியை ஒரேதரம் செலுத்தி முடித்துவிட்டார். எனவே நாம் திரும்பத் திரும்ப பலிகளை செலுத்த வேண்டியதில்லை. வசனம் 26இல் இயேசுகிறிஸ்து தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக ஒரேதரம் வெளிப்பட்டார்.

ஆட்டுக்கடா இளங்காளை ஆகிய பிற விலங்குகளை இஸ்ரவேலர் தங்களுக்காக பலியிட்டனர். ஆனால், இயேசுகிறிஸ்துவோ பிறருக்காக தம்மையே பலியாக்கிவிட்டார். நாம் இன்னமும் இயேசுவை சிலுவையில் பார்க்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் சிலுவையில் இப்பொழுது இல்லை. ஒரே ஒரு நாள், ஒரே ஒரு நிகழ்வு, ஒரே ஒருமுறை அவர் சிலுவையில் மரித்தார். அது ஒன்றே போதுமானதும் நிறைவானதுமான பலி. பழைய ஏற்பாட்டுக் கால மக்களுக்கு தேவன் தந்ததை விட, தற்பொழுது சிறப்பானதை நமக்குத் தந்துள்ளார். புது உடன்படிக்கையை நீங்கள் பெற்றுக்கொள்ளும்பொழுது புது பலியையும் பெற்றுக்கொள்ளுகிறீர்கள். அது மிகவும் உன்னதமானது.

வேதாகமத்தில் அநேக காரியங்கள் மூன்று என்ற எண்ணுடன் தொடர்புள்ளதாகக் காணப்படுகிறது. பலியாகும் ஆட்டுக்குட்டியும் மூன்று இடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோரியா மலையில் ஆபிரகாமும் ஈசாக்கும் பலியிடச் சென்றதை பழைய ஏற்பாட்டில் ஆதியாகமம் 22ஆம் அதிகாரத்தில் நாம் வாசிக்கிறோம். அங்கே பலிபீடத்தில் நெருப்பும் கட்டையும் இருந்தன. ஆனால் தகனபலிக்கான ஆட்டைக் காணாத ஈசாக்கு தனது தந்தையிடத்தில் ‘தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?’ என்று வினவுகின்றான்.

பழைய ஏற்பாட்டின் புத்தகங்களில் மக்கள் தாங்கள் செலுத்தவேண்டிய தகனபலிக்கான ஆட்டுக்குட்டியைத் தேடுவதை நாம் காண முடியும். ஒவ்வொரு பலியின் போதும் ஒரு ஆட்டுக்குட்டி அவர்களுக்குத் தேவையாயிருந்தது. “தகனபலிக்கு ஆட்டுக்குட்டி எங்கே?” என்பதே பழைய ஏற்பாட்டின் கேள்வியாக இருந்தது. ஆனால் புதிய ஏற்பாடு இதற்கான பதிலுடன் ஆரம்பமாகிறது. யோவான் முதல் அதிகாரத்தில், யோர்தான் நதிக்கரையில் யோவான்ஸ்நானன் மனந்திரும்புவதற்கான அழைப்பையும், திரு முழுக்கையும் கொடுத்து வந்தார். ஜனங்களுடன் இயேசுவும் தம்மிடம் வந்ததைக் கண்ட அவர், “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவா.1:29) என்று சாட்சி கொடுத்தார். இயேசுவை நீங்களும் நித்திய பாவநிவாரண பலியாகக் காணவேண்டும்.

இறுதியாக வேதாகமத்தின் இறுதிப் புத்தகத்தில் வெளி.5:12இல் 24 மூப்பர்களும் பதினாயிரம் பதினாயிரமான தூதர்களும் இயேசுவின் பாதத்தில் விழுந்து மகா சத்தமிட்டு: “அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்”. இது மலிவான பலி அல்ல; மிகச் சிறந்ததும், பூரணமானதும், விலையேறப் பெற்றதுமான பலியை இயேசு நமக்காகச் செலுத்தியுள்ளார். அது ஆட்டுக் குட்டியோ, இளங்காளையோ, கடாவோ அல்ல; தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவினுடைய ஜீவன். எவ்வளவு விலையேறப் பெற்ற கிரயம்!

தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ, அவன் கெட்டுப் போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்.

மொழியாக்கம்: Mrs.அகஸ்டா மங்களதுரை

சத்தியவசனம்