இதோ, தேவ ஆட்டுக்குட்டி!

சகோதரி.சாந்தி பொன்னு
(மார்ச்-ஏப்ரல் 2014)

செருப்புத் தைக்கிற ஒருவன் சாலை யோரத்திலே உட்கார்ந்திருந்து போவோர் வருவோரைப் பார்த்துக்கொண்டிருந்தான். கறுத்து ஒடுங்கிய சரீரமும், சீப்புத் தொடாத தலை மயிரும், அழுக்கான உடையும், யாருடைய செருப்பாவது அறுந்து போகாதா என்ற ஏக்கம் நிறைந்த கண்களும் என்னைச் சுண்டி இழுத்தது. அறுந்துபோன செருப்பைத் தைப்பதற்குத்தான் நான் சென்றிருந்தேன். சில அறுந்த செருப்புகளை அடுக்கி வைத்துவிட்டு ஒரு ஓட்டைக் குடையின் கீழ் உட்கார்ந்திருந்த அவன், ‘வாங்கம்மா’ என்று சிரித்துக்கொண்டு வரவேற்றான். வாயிலே ஒற்றைப்பல்தான் வெளியே நீட்டியது. அவன் வயது சென்றவனா அல்லது இளமையானவனா எதுவும் தெரியவில்லை. அவனது கைகளின் தோற்றம் நிச்சயம் அவன் ஏதோவொரு போதைப் பொருளுக்கு அடிமை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது.

அவன் தன் வேலையை ஆரம்பிக்க நானும் பேச்சை ஆரம்பித்தேன். போலீஸ் அடித்ததில் பற்கள் கொட்டிப்போயினவாம், அவன் சொன்னான். அவனுடைய படுக்கை அந்தத் தெருவோரம்தான். அவன் தன் கதையைத் தொடர்ந்தான். ‘நான் ஒரு பெண்ணைக் காதலித்தேன். அவள் என்னை ஏமாற்றிவிட்டாள். அவளைத் தீக்கொழுத்தப் போனேன். கடைசி நிமிஷம் மனம் மாறிவிட்டேன். என் வாழ்க்கை இப்படி ஆச்சுது’ என்றான் பெருமூச்சுடன். ‘அவள் போனாலும் உன்னை எதிர்பார்த்திருக்கும் ஒருவர் உனக்காகக் காத்திருக்கிறார்’ என்று நான் சொல்ல, ‘அவர் யார்? அப்படி ஒருவரை யாரும் எனக்குச் சொல்லவில்லை’ என்றான் அவன். என் வாழ்வை மாற்றிய இயேசுவை அவனுக்கு அறிமுகப்படுத்தினேன். அவன் என்ன சொன்னான் தெரியுமா? ‘அம்மா, அந்த வேதக்கோயிலில் இருக்கிறவர்தானே. ஐய்யய்யோ, இந்த நிலையில் இத்தனை அழுக்குகளோடு தவறுகளோடு நான் எப்படி அங்கே போவது?’ என்றான். அவன் தன் உடையின் அழுக்கைச் சொல்லவில்லை; உள்ளத்தின் அழுக்கைத்தான் சொன்னான். அவனுக்கு இருக்கின்ற உணர்வு நம்மில் எத்தனை பேருக்குண்டு? இத்தனைக்கும் அவனுக்கு வயது 32 தான். என்ன பரிதாபம்!

சமீபத்திலே ஒரு ஞாயிறு ஆராதனையிலே தேவஊழியர் ஜெபித்த ஜெபம் உள்ளத்தை உடைத்துவிட்டது. இதுதான் அந்த மன்றாட்டு ஜெபம் “கர்த்தாவே, தன் பிள்ளைகளின் பசியை ஆற்றுவதற்காக தன் உடலை விற்று பிள்ளைகளுக்கு உணவூட்டும் நிலையில் பரிதவிக்கும் ஒரு தாய்க்காக ஜெபிக்கிறேன்…”.

இது மாத்திரமா! தனது 8 வயதுப் பெண் குழந்தையை தனது இரண்டாந்தாரக் கணவன் நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தலுக்குட்படுத்துவதை, அந்தச் சிறுபெண்ணை தன் கர்ப்பத்தில் சுமந்து பெற்றெடுத்த தாயே வேடிக்கை பார்க்கிற பயங்கர நிகழ்வு நாம் வாழுகின்ற சமுதாயத்தில் இப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறதாம்.

வேலையாட்கள் தேவை
இவற்றுக்கெல்லாம் நாம் என்ன பதில் சொல்லுவோம்? நமக்கும் இவற்றுக்கும் சம் பந்தம் இல்லை என்போமா? வருடந்தோறும் நாற்பது நாட்கள் உபவாசம், இயேசுவின் பாடுகள் மரணத்தை நினைவுகூரும் ஆராதனைகள், சோகத்தோடு முன்னெடுக்கும் பெரிய வெள்ளி ஆராதனைகள், தொடர்ந்து மெழுகுவர்த்தி ஊர்வலத்துடன், சம்பந்தமே இல்லாத ஈஸ்டர் என்ற பெயரைக்கொண்ட உயிர்த்தெழுந்த நாளின் பஜனைகள்…. இவைகள் யாவும் நினைவுகூரப்பட வேண்டியதும், அவற்றுக்கூடாக நம்மைநாமே புதுப்பிக்க வேண்டியதும் மிகமிக அவசியமே.

ஆனால், இப்படி எத்தனை காலத்துக்குத்தான் நம்மை நாமே புதுப்பித்துக் கொண்டிருக்கப் போகிறோம்? நாம் யார்? நம்மை இரட்சித்த கிறிஸ்து யார்? அவருக்காக நாம் செய்யவேண்டியது என்ன? நமக்கு அவர் கொடுத்த பொறுப்பு என்ன? அவர் நமக்கிட்ட பெரிய கட்டளைதான் என்ன? நாம், நமது குடும்பம், நண்பர்கள், உறவினர் என்று வாழ்ந்துகொண்டிருக்கும் கிறிஸ்தவ கூட்டத்தார் ஒருபுறம் என்றால், மறுபுறத்தில் தேவ ஊழியம் என்ற பெயரில் தம்மை மேன்மைப்படுத்தி தம்மை வளப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.

என்றாலும், இயேசு சிலுவையில் அடைந்த வேதனை, பாடுகள், அவர் சிந்திய ஒவ்வொரு துளி இரத்தத்தையும், அதன் மேன்மையையும் உணர்ந்து தம்மையே கொடுத்து ஆண்டவருக்காக சுக துக்கம் பாராமல் இராப்பகலாய் உழைக்கின்ற ஒரு கூட்டம் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், விளைச்சல் ஏராளமாகப் பெருகியிருக்கும் இந்நாட்களில், துரிதமாக அறுவடை செய்யவேண்டிய இக் காலத்தில் வயலில் இறங்கி வேலை செய்ய ஏராளமான வேலையாட்கள் தேவை என்பதை நாம் உணரவேண்டும். விளைந்திருக்கும் விளைச்சலைத் தகுந்த நேரத்தில் அறுவடை செய்யாவிட்டால் அது அழிந்துபோகும் அல்லது சத்துரு வந்து களவாடிப் போய்விடுவான் என்பது யதார்த்தம்.

யோவான்ஸ்நானனின் பணி
யோவான்ஸ்நானன் அன்று தகுந்த நேரத்தில் தன் பணியைச் செய்தான். இயேசுவின் பிறப்பின் முன்னோடியாக பாதையைச் செவ்வைப்படுத்த வந்த அவன், “மனந்திரும்புங்கள், பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது…” (மத்.3:2) என்று இயேசு வந்துவிட்டதை கூறி அறிவித்தான். அத்துடன் அவனுடைய பணி முடியவில்லை. சுவிசேஷ செய்தியை ஆரம்பித்து வைத்தவனே யோவான்ஸ்நானன்தான். மனந்திரும்புதலின் செய்தியைக் கொடுத்த யோவான், அத்துடன் நிறுத்தவில்லை. இயேசுவை அடையாளம் காட்டிய முதல் மனிதனும் அவன்தான். “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” (யோவா.1:29) என்று உலகை ஆட்டிப் படைக்கின்ற பாவம் பரிகரிக்கப்படப் போவதை, அதற்காக கிறிஸ்து தம்மைத் தாமே பலியாக ஒப்புக்கொடுக்கப்போவதை, மனுக்குலம் விடுவிக்கப்படப்போவதை யோவான் பிரகடனப்படுத்தினான். அதாவது, இயேசுவின் வருகையை மாத்திரமல்ல, அவருடைய மரணத்தையும் முன்னறிவித்தான் யோவான்.

பஸ்காப் பலி
மக்களின் பாவத்தின் நிமித்தம் பாவநிவாரண பலியாக காலையும் மாலையும் ஒரு ஆடு அன்று பலியாகச் செலுத்தப்பட்டது (யாத்.29: 38-42). “அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும்,….” (ஏசா. 53:7) என்று ஏசாயா, மேசியாவைக் குறித்து – கர்த்தருடைய தாசனைக் குறித்து தீர்க்க தரிசனம் உரைத்திருந்தார். எப்படியோ பாவத்திற்கு நிவாரணமாக ஒரு உயிர் கொடுக்கப்பட வேண்டியதே. அந்தப் பலியைப் பூரணமாகச் செலுத்துவதற்கு தேவன் தம்மையே கொடுக்கச் சித்தமானார். மனிதனாய் உலகிற்கு வந்த கிறிஸ்து பூரண பஸ்காப் பலியாகத் தம்மையே சிலுவையில் ஒப்புக் கொடுத்தபோது உலகத்தின் பாவம் சுமந்து தீர்க்கப்பட்டது. “…நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே” (1கொரி.5:7). இப்படித்தான் நமது பாவம் மன்னிக்கப்பட்டது. உலகத்தின் பாவம் என்பது நம் ஒவ்வொருவருடைய பாவமும்தான். தமது மரணத்தினாலே இயேசு நமது பாவங்களுக்கான விலையைச் செலுத்தி முடித்துவிட்டார்.

இயேசு சிலுவையில் போராடிய போராட்டம் யாருக்கு எதிராக? பிலாத்துவுக்கா? ஏரோதுவுக்கா? பரிசேயர் வேதபாரகருக்கு எதிராகவா? அல்லது, யூதர், ரோம போர்வீரருக்கு எதிராகவா? இல்லை. அவர் பாவத்தோடு போராடினார். அதற்கு மூலகாரணியான பிசாசின் தந்திரங்க ளோடு போராடி அவன் தலையை நசுக்கினார். ஆம், பாவத்திற்கு எதிரான போரில் இயேசு கிறிஸ்து சிலுவையில் வெற்றி பெற்றுவிட்டார். பாவமும் அதன் சம்பளமாகிய மரணமும் முறியடிக்கப்பட்டுவிட்டது. இதனால் நமது பாவம் மன்னிக்கப்பட்டது. இதனை விசுவாசித்து நாம் அந்த மன்னிப்பைப் பெற்றிருக்கிறோம். கிறிஸ்துவினால் விடுவிக்கப்பட்டு புதிய வாழ்வு வாழுகிறோம்.

இந்த செய்தியெல்லாம் நமக்குப் புதிதல்ல; பழகிப்போனதொன்று. இந்த மன்னிப்பை நாம் பெற்றுக்கொண்டது மெய்யானால், இந்த இயேசுவை, அவர் செலுத்திய பூரண பலியை, அதனாலுண்டான மீட்பை நாம் என்ன செய்கிறோம் என்பதே கேள்வி. இந்தக் கட்டுரையை எழுதி முடிக்குமுன்பே, இந்த உலகில் குறைந் தபட்சம் பல லட்சம் பேர்கள் மரித்திருப்பார்கள்.

ஒரு புள்ளி விபரம்
அழிவைக் குறித்த ஒரு புள்ளிவிபரம் இது: ஒரு வருடத்திலே 51 மில்லியன் மக்கள் இறக்கிறார்களாம். ஒரு நாளில் ஏறத்தாழ 1,40,000 பேர்கள் இறக்கிறார்களாம். அதில் 35,000 பேர் ஒருபோதும் ஒருமுறையேனும் இயேசுவை, சுவிசேஷத்தை, அவர்களுடைய பாவம் மன்னிக்கப்பட்டதை, கிறிஸ்து அவர்களுக்கு அளித்திருக்கிற விடுதலையின் நற்செய்தியைக் கேட்டதில்லை என்று இப் புள்ளி விபரம் கூறுகிறது. இவர்கள் அழிந்துபோகின்ற அதேசமயம், சுவிசேஷத்தை அறிந்து, கிருபையாய் ஏற்று, கிறிஸ்துவின் அன்பை அனுபவித்தும் வாழுகிற நாம் மாத்திரம் நித்திய வாழ்வுக்குள் போவது எந்த விதத்தில் நியாயம்? இயேசு சிலுவையில் சிந்திய இரத்தம் எனக்கு மாத்திரமா? அதை அடுத்தவனுக்குச் சொல்லுகின்ற பொறுப்பு நம்முடையது இல்லையா?

ஆண்டவர் உன்னைத் தேடுகிறார்
“இதோ உலகத்தின் – உன்னுடைய பாவத்தைச் சுமந்து தீர்த்தவர்” என்ற செய்தியைக் கூறி அறிவிக்கின்ற மக்களை ஆண்டவர் தேடுகிறார். “உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டது” என்ற சுவிசேஷ – நற்செய்தியை வீட்டிலும் சொந்த நாட்டிலும் உலகெங்கிலும் அறிவிக்கின்ற கட்டளையைப் பெற்றிருக்கின்ற நாம், ஏதேன் தோட்டத்தின் கீழ்ப்படியாமையின் பாவத்துக்கு எப்படி இன்னமும் உடனாளிகளாக முடியும்? அன்றாடம் நாம் சந்திக்கின்ற, நம்முடன் வேலை செய்கின்ற, நம்முடன் பயணம் செய்கின்ற, நமக்கு பால், காய்கறி, மீன் விற்கின்ற, நமக்கு அருகில் வாழுகின்ற, அறுந்துபோன நமது செருப்பைத் தைக்கின்ற, ஏன், நமது குடும்பத்திலேயே இன்னமும் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத எத்தனைபேர் நம்மைச் சூழ வாழுகிறார்கள். இவர்களுக்குச் சிலுவையின் வெற்றிச் செய்தியைச் சொல்கிறவர்கள் யார்?

பரிகரிக்கப்பட்ட பாவம் தன்னை உயிருள்ளதுபோல காட்டிக்கொண்டு, எத்தனை மனித உயிர்களைக் குடித்துக்கொண்டிருக்கிறது. உலகமும், அதன் யுத்தங்களும், பாவத்தில் ஊறிப்போன மனிதரின் கடின இருதயங்களும் இன்று எத்தனை மனித உயிர்கள் பாவத்திற்குப் பலியாகக் காரணமாகி வருகின்றன. அதே சமயம், இன்று உலகம் நாளுக்குநாள் நிமிடத்துக்கு நிமிடம் உருவாக்கிக்கொண்டிருக்கிற மாயையான சந்தோஷ பிம்பங்கள் மனிதனை, விசுவாசிகளைக்கூட தேவனைவிட்டு வஞ்சகமாகப் பிரித்துக் கொண்டிருக்கிறது?

இயேசு செய்துமுடித்த பணியை இன்று நாம் தொடர அழைக்கப்பட்டிருக்கிறோம். “..கிறிஸ்துவினுடைய உபத்திரவங்களில் குறைவானதை அவருடைய சரீரமாகிய சபைக்காக, என் மாம்சத்திலே நிறைவேற்றுகிறேன்” (கொலோ.1:24) என்று பவுல் எழுதியது என்ன? இயேசு என்ன குறை வைத்தார். அவர் யாவையும் பூரணமாகவே செய்து முடித்தார். ஆனால், இன்று அதனை எடுத்துச் செல்லும் பொறுப்பை நிறைவேற்றுவதில் நமக்கு இந்த உலகம் மாலைபோட்டு வரவேற்காது என்பதையே பவுல் நமக்கு உணர்த்துகிறார். உபத்திரவங்களும் பாடுகளும்தான் நமக்கு மிஞ்சும். ஆனாலும், தமது பணியை உலகத்தின் முடிவுமட்டும் நிறைவேற்றுவோம் என்று நம்பித்தானே, ஆண்டவர் நம் எல்லோரையும் கிருபையாய் இரட்சித்திருக்கிறார். நாம் பாவத்திலிருந்து மீட்கப்பட்டது மெய்யானால், இன்று பாவத்திற்குள் அடிமைப்பட்டிருக்கும் மக்களினிமித்தம் கிறிஸ்து காட்டிய வழியில் நின்று, பரிசுத்தாவியானவரின் உன்னத பெலனைத் தரித்தவர்களாய், பாவத்திற்கு எதிர்த்து நின்று போராடி, மக்களை கிறிஸ்து வண்டை வழிநடத்த வேண்டிய நாமே, அதே பாவத்திற்குப் பலியாகி நிற்பது ஏன்?

சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய கைகளில் இருந்த புஸ்தகத்தின் ஏழு முத்திரைகளை உடைப்பதற்குப் பாத்திரரானவர் யார் உண்டு என்றிருக்க, “…யூதா கோத்திரத்துச் சிங்கமும் தாவீதின் வேருமானவர் புஸ்தகத்தைத் திறக்கவும் அதின் ஏழு முத்திரைகளையும் உடைக்கவும் ஜெயங்கொண்டிருக்கிறார்” என்று உரைக்கப்பட்டது. ஆனால், “அப்பொழுது, இதோ, அடிக்கப்பட்ட வண்ணமாயிருக்கிற ஒரு ஆட்டுக்குட்டி சிங்காசனத்திற்கும், நான்கு ஜீவன்களுக்கும், மூப்பர்களுக்கும் மத்தியிலே நிற்கக் கண்டேன்” (வெளி. 5:5,6) என்று யோவான் எழுதுகிறார். ஆம், இயேசு இன்னமும் நமக்காகப் பட்ட காயங்களின் தழும்புகள் மாறாதவராகவே இருக்கிறார். தோமா உயிர்த்த இயேசுவைக் கண்டபோது, அவரை அவருடைய கைகளில் ஆணிகள் கடாவிய காயத்தைக் கண்டான் (யோவான் 20:27).

இந்த இயேசுவை நமது தெய்வம் என்று சொல்லிக்கொள்கிற நமக்குள்ளேயே எத்தனை பகை, குரோதம், ஒருவரையொருவர் ஏற்றுக் கொள்ளவோ ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கவோ முடியாத தன்மை, போட்டி மனப்பான்மை, மன்னிக்க முடியாத கடின இதயம், உண்மையற்ற தன்மை… இவைகள் ஏன்? குடும்ப உறவுகள் சிதைவடையவும், விதவைகள் தங்கள் சரீரங்களை விற்கவும், பஞ்சத்தால் குழந்தைகள் சாகவும், சிறு பிள்ளைகள் பாலியல் பலாத்காரங்களுக்குப் பலியாவதும் யாருடைய குற்றம்? அதைச் செய்கிறவர்களுடையதா? இல்லை. அது நமது குற்றமே. இயேசு சுமந்த சிலுவை, அவருடைய பாடுகள் மரணம், உயிர்த்தெழுதல் எதுவும் நமக்கு மட்டும் சொந்தமல்ல. அடுத்தவனுக்கும் சொந்தமான இந்த செய்தியை நமக்குள் புதைத்து வைக்காதபடி கிறிஸ்தவன் என்ற பெயருடன் வாழுகின்ற ஒவ்வொருவனும், ஆணோ பெண்ணோ, வாலிபனோ, பெரியவர்களோ முதியவர்களோ யாராயிருந்தாலும், ‘இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற – தீர்த்த தேவ ஆட்டுக்குட்டி’ என்று கிறிஸ்துவை மக்களுக்குச் சுட்டிக்காட்டி, பாவம் மன்னிக்கப்பட்டுவிட்டது, விடுதலை அளிக்கப்பட்டுவிட்டது என்ற நல்ல செய்தியை எங்கும் எடுத்துச் செல்ல நம்மை அர்ப்பணிப்போமாக. ஆமென்.

சத்தியவசனம்