எச்சரிப்பைப் புறக்கணித்த யூதாஸ்

பேராசிரியர் எடிசன்
(மார்ச்-ஏப்ரல் 2014)

கிறிஸ்துவின் பாடுகளைக் குறித்து இந் நாட்களில் நாம் தியானித்து வருகிறோம். கிறிஸ்து ஏன் பாடுபட்டார்? கிறிஸ்துவின் பாடுகளுக்கு வழிவகுத்தவர்களில் யூதாசும் ஒருவன். இயேசுவை சமயம் பார்த்து காட்டிக் கொடுத்தவன் இந்த யூதாஸ். இவனைக் குறித்து ஒருசில காரியங்களை நாம் தியானிக்கலாம்.

“உன் நண்பன் யார் என்று கூறு, நீ யார் என்று சொல்லுவேன்” என்பது பழமொழி. ஆனால் இந்த யூதாஸோ இயேசுவின் சிநேகிதனாக இருந்தான். ஆனால் அவருடைய நற்குணங்கள் ஒன்றுகூட இவனுக்குள் இல்லை. யூதாஸ் இயேசுவோடு இருந்தான், ஆனால் அவரை தனது உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை. தண்ணீருக்குள் இருக்கும் ஒரு கல்லானது நனைந்தாலும், அந்த ஈரம் அதினுள் செல்லாததுபோல, கிறிஸ்துவின் போதனைகளும் பரிசுத்தமும் இந்த யூதாஸினுடைய உள்ளத்திற்குள் வரவில்லை. அவன் பணப் பையை சுமக்கிறவனாக இருந்தான். அவன் இயேசுவைவிட பணப்பைக்கு நெருக்கமாக இருந்ததினால் பண ஆசை அவனை ஆட்டியது.

30 வெள்ளிக் காசுக்காக அவன் தேவனைக் காட்டிக்கொடுக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் இயேசுவோ அவனை பல முறை எச்சரித்தார். பண ஆசைகொண்ட யூதாஸ் எச்சரிப்பைப் புறக்கணித்ததைப் பார்க்கிறோம். மத்தேயு 26:23-25இல் இயேசு கூறுகிறார்: “என்னோடேகூடத் தாலத்தில் கையிடுகிறவனே என்னைக் காட்டிக் கொடுப்பான். மனுஷகுமாரன் தம்மைக்குறித்து எழுதியிருக்கிறபடியே போகிறார்; ஆகிலும், எந்த மனுஷனால் மனுஷகுமாரன் காட்டிக்கொடுக்கப்படுகிறாரோ, அந்த மனுஷனுக்கு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவரை நோக்கி: ரபீ, நானோ? என்றான்; அதற்கு அவர்: நீ சொன்னபடிதான் என்றார்”. இந்த எச்சரிப்பை யூதாஸ் அலட்சியம் பண்ணினான்.

இதற்குக் காரணம் என்ன? தன் சுய புத்தியின்மேலும், தனது திட்டமிடும் தன்மையின்மேலும் அவனுக்கு அத்தனை நம்பிக்கை இருந்தது. நாமும் பலவேளைகளில் இந்த யூதாஸைப்போல நமது சுயபுத்தியின்மேல் சார்ந்து கொள்ளுகிறோம். இயேசுவின் கற்பனைகள் அவ்வளவு சரியல்ல, வியாபாரத்திலே எப்படி வியாபாரம் செய்தால் பணம் சம்பாதிக்கலாம் என்று எனக்குத் தெரியும், இயேசு வேண்டாம். ஆனால், பண ஆசை எல்லா தீமைக்கும் வேராயிருக்கிறது என்று ஆண்டவர் எச்சரித்தபோதிலும், பணத்திற்காக தேச சட்டத்தையும், தேவதிட்டத்தையும் நாம் புறக்கணித்து மாம்சப்பிரகாரமாய் நடந்து சாபத்தை வரவழைத்துக் கொள்கிறோம். பல நேரங்களில் நாமும் யூதாஸைப்போல செயல்படுகிறோம். ஒரு காரியம் தேவன் எச்சரிப்பாரென்றால் மனம் திரும்ப வேண்டும். பாவத்தை விட்டுவிட்டு அவரது வழிக்கு நாம் திரும்ப வேண்டும்.

தவறை உணர்ந்த யூதாஸ் “குற்றமில்லாத இரத்தத்தைக் காட்டிக்கொடுத்தேன்” என்று அவன் பிரதான ஆசாரியரிடத்தில் வந்தான். தவறை உணர்ந்தாலும் அதை சரிசெய்ய இயேசுவினிடத்தில் போகவில்லை. பாவங்களை மன்னிக்கிறவர் இயேசு என்பது அவருக்குத் தெரியும். ஆனாலும், அவனுடைய வெறுமையும், அவனுடைய கெளரவமும், அவனை இயேசுவினிடத்தில் குற்றம் புரிந்தவனாகப் போக அது மறுத்துவிட்டது. அநேகர் இன்றைக்கு இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். பாவம் செய்துவிட்டது தெரியும், தப்பிதம் செய்துவிட்டது தெரியும், இயேசு மன்னிப்பார் என்றும் தெரியும். ஆனால் அவரிடம் சென்று ‘நான் பாவம் செய்தேன்’ என்று சொல்வதற்கு அவர்களுக்கு மனதில்லை. பெருமைமிக்கவர்களாக தேவனுக்கு எதிர்த்துநின்று, நித்தியத்தை இழந்து போகிறார்கள்.

இதை வாசித்துக்கொண்டிருக்கிற சகோதரனே, சகோதரியே, நீ இன்னும் பாவத்திலேயே இருந்து பாவத்தை தேவனிடத்தில் அறிக்கை செய்யாமல் விடுதலை பெறாமல், நீ உனது பெருமைக்காக எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருக்கிறாயோ? உன்னை தேவன் எச்சரிக்கிறார். உன் முடிவு அழிவாக இருக்கும்! தவறை உணர்ந்த யூதாஸ், இயேசுவண்டை வரவில்லை. அந்தப் பணத்தை திருப்பி கொடுத்து தான் செய்த தவறை தானே சரியாக்கும்படி அவன் முயற்சி செய்தான். ஆனால், முயற்சியோ வீணானது. நமது புத்தி ஒரு எல்லையில் நின்றுவிடும். தேவசித்தமே கடைசிவரைக்கும் செல்லும். இதை அறிந்து கொண்டாய் என்றால் இயேசுவினிடத்தில் வா.

கடைசியாக சாத்தான் புகுந்த யூதாஸ். யோவான் 6:70,71, லூக்கா 22:3, யோவான் 13:2,27 ‘துணிக்கையை வாங்கின பின்பு அவனுக்குள் சாத்தான் புகுந்தான்’. இயேசுவோடு இருந்தவன், அவருடைய பணப் பையை சுமந்தவன், அவரோடுகூட மூன்றரை ஆண்டுகள் திரிந்தவன், ஆனால் அவனுக்குள் பிசாசு புகுந்தான். காரணம் என்ன? தேவ சித்தத்தைப் புறக்கணித்து, சொந்த புத்தியில் நடக்க ஆரம்பித்தான். கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்து விலக ஆரம்பித்தான். உங்களுடைய பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? கிறிஸ்துவைவிட்டு விலகும்படி அவர்கள் போவார்கள் என்றால், சாத்தான் அவர்களை ஆண்டுகொள்வான். நரகத்திற்கு நேராக வழி நடத்திவிடுவான். உங்கள் வீட்டைவிட்டு உங்களுடைய பிள்ளைகள் வெளியேறும் பொழுதே, பிசாசு உலகத்தின் இச்சைகளையும் பாவ இன்பங்களையும் காட்டி அவர்களை தனக்கு அடிமையாக்கி, அவர்களை ஆண்டு கொள்ள காத்துக்கொண்டு நிற்கிறான். நீங்கள் அதை அறிவீர்களா? விழித்திருந்து ஜெபம் பண்ணுவீர்களா? உங்கள் பிள்ளைகளுக்காக உபவாசமிருந்து, முழங்காலில் நின்று இந்த சாத்தானை ஜெயித்து, அவன் உங்கள் குடும்பத்தைத் தொடமுடியாதபடி தேவனுடைய அக்கினியை உங்கள் குடும்பத்தைச் சுற்றிலும் நிறுத்துவீர்களா? குடும்ப ஜெபம் செய்து பிள்ளைகளை தேவபக்தியில் வளர்ப்பீர்களா? அப்படியிருந்தால் மட்டுமே சாத்தான் உங்கள் பிள்ளைகளுக்குள் புகமுடியாது. இல்லையென்றால் எளிதாகப் புகுந்துவிடுவான்.

துணிக்கையை வாங்கினபின்பு, திருவிருந்தில் பங்கெடுத்த பின்பும் சாத்தான் ஆட் கொள்ள முடியும். உங்களை நீங்களே வஞ்சித்து கொள்ளாதீர்கள். சடங்காச்சாரங்களுக்கு அவன் பயப்படுகிறவன் அல்ல. நீங்கள் மனந்திரும்பி தேவனிடத்தில் உங்கள் பாவங்களை அறிக்கை செய்யும் பொழுதும், அவர் உங்கள் உள்ளத்தில் வரும்பொழுதுதான் சாத்தானை நீங்கள் ஜெயிக்கமுடியும். எனவே இன்றைக்கே நீங்கள் மனந்திரும்புங்கள். சாத்தானை ஜெயிக்கும் வழி அவருடைய சாட்சியின் வசனமும், ஆட்டுக்குட்டியின் இரத்தமும்தான். இந்த இரண்டும் நமக்கு உண்டு.

சத்தியவசனம்