அந்த ஏழு வார்த்தைகள்!

Dr.புஷ்பராஜ்
(மார்ச்-ஏப்ரல் 2014)

கர்த்தராகிய இயேசுகிறிஸ்து, சிலுவையிலே தொங்கி மரிப்பதற்கு முன்பதாக, ஏழு வார்த்தைகள் அவர் கூறியதாக வேதாகமத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. எந்த ஒரு மனிதனினதும், மரணத்திற்கு முன்னால், அவன் இதுவரை சொல்லாத காரியத்தை சொல்லுவது வழக்கம். சில பெரிய மனிதர்கள் சாகும்பொழுது, அவர் கடைசியாக என்ன சொல்லிவிட்டு மரித்தார் என்று வினவுவார்கள். அப்படியேதான், இங்கும்கூட நம்முடைய கர்த்தராகிய இயேசு அவர் கடைசியாக சிலுவையிலே தொங்கிக் கொண்டிருந்தபோது, கூறிய சில முக்கியமான வார்த்தைகள், இன்றைக்கு நமது ஆவிக்குரிய ஜீவியத்திற்கு பிரயோஜன மானவையாகும்.

மன்னிப்பு

சிலுவையிலே அவர் தொங்கிக் கொண்டிருந்தபோது, வேதனையின் மத்தியிலும் இரத்தம் சிந்தி பலவீனப்பட்டிருந்த சூழ் நிலையிலும் கூட, அவர் சொன்ன முதலாவது வார்த்தை, “…பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே…” (லூக்.23:34). கர்த்தருடைய சித்தம் – அவரது உள்ளத்தின் பாரம் என்ன என்பது, இந்த வார்த்தைகளிலே தெளிவாகப் புலப்படுகிறது.

கர்த்தருடைய சித்தம் என்ன? இந்த உலகத்திலே, நாம் யாரையெல்லாம் மன்னிக்கிறோமோ, அந்தத் தன்மை கிறிஸ்துவின் சித்தமாகும். நமக்கு சத்துருவாய் இருப்பவர்களை, வேதனைப்படுத்துகிறவர்களை நாம் மன்னிக்க வேண்டும்.

இன்றைக்கு அநேகக் குடும்பங்களிலே பிரச்சனைகள் உண்டு. புருஷன் மனைவியோடு பேசுகிறது இல்லை. தகப்பனோடு பிள்ளை பேசுகிறதில்லை. ஒருவரோடொருவர் பேசிக்கொள்ளாதபடி சண்டையோடு ஜீவிக்கிறவர்கள் அநேகர் உண்டு. ஆனால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டது உண்மையானால், ஒருவரையொருவர் மன்னிக்கிற சிந்தை உன்னிலே காணப்பட வேண்டும்.

சிலர் சொல்லுகிறதை நான் இவ்விதமாய்க் கேள்விப்பட்டிருக்கிறேன்: “ஐந்து வருஷமாய் நான் அவரோடுகூட பேசுகிறதில்லை”. ஆனால், இது கிறிஸ்துவின் சிந்தையே அல்ல. கல்வாரி காட்சி உனக்கு ஆசீர்வாதமாக இருக்க வேண்டுமேயென்றால், நீ உண்மையான கிறிஸ்தவனென்று சொல்லிக்கொள்வது மெய்யானால், நீ மற்றவர்களை மன்னிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எப்பேர்ப்பட்ட துரோகம் செய்திருந்தாலும் சரி, மன்னிக்கும் சிந்தை உன்னுள்ளத்தில் இருக்குமானால், கிறிஸ்துவினுடைய சிந்தை உன்னுள்ளத்திலே இருக்கிறது என்று அர்த்தம்.

கிறிஸ்துவின் இந்த முதல் வார்த்தை, உன்னோடுகூட பேசட்டும். யாருடனாவது நீ பேசாமல் இருக்கின்றாயா? குடும்பத்துக்குள்ளே விரோதமாக, சமாதானமின்றி இருக்கின்றாயா? இன்றைக்கே ஒப்புரவாகு, பேசு, கர்த்தர் பெரிய ஆசீர்வாதத்தைத் தருவார்.

இரட்சிப்பு

இயேசு தனது அருகிலிருந்த கள்ளனிடம், “இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்…” (லூக்கா 23:43) என்றார். இது இரண்டாவது வார்த்தையாகும். தேவனுடைய பிள்ளைகளாகிய நம்முடைய வாழ்க்கையிலும் கூட, பாவத்தோடு ஜீவித்த நாட்களை யோசித்துப் பார்ப்போம். கர்த்தரிடத்தில் மன்னிப்புக் கேட்ட அன்றைக்கே, அவர் மன்னித்திருக்கிறார். இதுதான், நாம் நம் தெய்வத்தினிடத்திலே காண்கிற ஒரு விசேஷித்த காரியம். எப்பொழுது நீங்கள் உங்கள் பாவங்களுக்காக மனஸ்தாபப்பட்டு, ஆண்டவருடைய பாதத்தில் வருகின்றீர்களோ, அந்த நிமிஷமே இரட்சிப்பை அடைகிறீர்கள்.

இன்றைக்கு இதை வாசித்துக்கொண்டிருக்கிற உங்களுடைய வாழ்க்கையிலும்கூட அந்த கல்வாரிக் காட்சி தத்ரூபமாக அமையட்டும். அவருடைய இரத்தம் எனக்காகவே சிந்தப்பட்டது என்று விசுவாசித்து, உங்கள் பாவத்தை அறிக்கையிட்டு நீங்கள் கழுவப்படுவீர்களென்றால், இப்போதே உங்களுக்கு இரட்சிப்புண்டு. எத்தனை நாட்கள் நீங்கள் பாவத்தோடு வாழப்போகிறீர்கள். எத்தனை நாட்கள் பிரச்சனையோடு வாழப்போகிறீர்கள்? நீங்கள் சந்தோஷமாய் வாழ வேண்டுமென்பதுதான் தேவனுடைய சித்தம். இன்றே நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா? ஆண்டவரிடத்திலே ஒப்புரவாகுவீர்களா? உங்களுடைய பாவத்தைக் குறித்து நீங்கள் ஆண்டவரிடத்திலே மன்னிப்பு கேட்பீர்களென்றால் இப்பொழுதே உங்களுக்கு இரட்சிப்பு கிடைக்கும்.

உறவு

மூன்றாவது வார்த்தை, “…ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார். …அதோ, உன் தாய் என்றார்” (யோவான் 19:26,27). வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை முடிக்கக்கூடிய சூழ்நிலையிலே, தனது தாய்க்கும், தன்னை நம்பி வந்திருக்கிற தனது சீடனுக்கும் ஒரு உறவை ஏற்படுத்திப் பேசுகிறார். வாழ்க்கையிலே மகனை நம்பி மோசம்போனேன், என்னைப் பெற்றவர்களை நம்பி ஏமாற்றம் அடைந்தேன், என் புருஷனை நம்பினேன், கைவிடப்பட்டேன் என்று துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிற சகோதரிகளே, உங்கள் வாழ்க்கைக்கு உறுதுணைக்குப் பாத்திரவானாய், கர்த்தர் உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கிறார்!

வேதனையோடு இருந்த மரியாளுக்கு நம்பிக்கை உண்டாக்கித் தந்தார். தான் மரிக்கும்போது தனது குடும்பப் பொறுப்பை அவர் மறக்கவேயில்லை. தன்னுடைய தாயைக் கவனிக்கவேண்டிய பொறுப்புக்களை, ஒரு சகோதரனிடத்திலே ஒப்புவித்து, பிறகே அவர் மரிப்பதை நாம் பார்க்கிறோம். இதே மாதிரி பிள்ளைகள் தம் பெற்றோரைக் கனப்படுத்தவும் பிள்ளைகள் தம் பெற்றோரைக் கவனிக்கவும் வேண்டுமென்பது, மிகமிக முக்கியமான ஒரு காரியமாயிருக்கிறது. இன்றைக்கு நம்பிக்கை இழந்த உனது வாழ்க்கையிலே, இயேசு நம்பிக்கை தருகிறவராயிருக்கிறார்.

தொடர்பு

நான்காவதாக, “…என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்…” (மத்தேயு 27:46) என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார். கர்த்தரோடுள்ள தொடர்பு ஒரு நிமிஷம்கூட அறுந்துபோகக் கூடாதென்பது, தேவனுடைய சித்தமாயிருக்கிறது. நம்முடைய வாழ்க்கையிலும்கூட கர்த்தரோடுகூட உள்ள இணைப்பு ஒரு நிமிஷம்கூட அறுந்துவிடக் கூடாது. அந்த ஒரே நிமிஷம் இந்த உலகத்திற்காய் இயேசு கைவிடப்பட்டார். ஆனால் அந்த ஒரு நிமிஷத்தைக்கூட அவர் தாங்கிக்கொள்ள முடியாதபடி, ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று சொல்லி, அவர் ஏங்குகிறதை பார்க்கிறோம். கர்த்தரோடுள்ள அந்த உறவு நமக்கு எப்போதும் இருக்கட்டும். அவருக்கிருந்த அந்த ஏக்கம், நமக்கும் இருக்கட்டும். கர்த்தர் நிச்சயமாய் நம்மை ஆசீர்வதிப்பார்.

தவிப்பு

“தாகமாயிருக்கிறேன்…” (யோவான் 19:28) என்று ஐந்தாவதாகக் கூறினார். கர்த்தருடைய இந்த தாகம், சரீரத்தில் ஏற்பட்ட தாகம் என்று எண்ணிய மக்கள், அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால், அவரோ ‘குடிக்கவில்லை’ என்று வேதத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. அவருடைய தாகம் மிகவும் வித்தியாசமான ஒரு தாகம்.

சமாரிய ஸ்திரீயோடு பேசிக் கொண்டிருப்பதற்கு முன்பதாக, தன்னுடைய சீஷர்களிடத்திலே பசியாயிருக்கிறேன் என்ற அவருக்குப் போஜனம் கொண்டுவந்தபோது என் பசி தீர்ந்துவிட்டது என்று சொன்னார். அவருடைய பசி ஆத்தும பசி, அவரது தாகம் ஆத்தும தாகம். இன்றுகூட அவருடைய தாகத்தைத் தீர்க்க நமக்கு இஷ்டம் உண்டா? எத்தனை ஆண்டுகளாக ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு, அவருக்கென்று ஜீவித்து வருகிறோம். எத்தனை ஆத்துமாக்களை நாம் ஆயத்தப்படுத்தியிருக்கிறோம். எத்தனை ஆத்துமாக்களை ஆண்டவருடைய பாதத்திலே கொண்டுவந்திருக்கிறீர்கள்? கர்த்தருடைய தாகத்தை நாம் தீர்த்துவைப்போம். நம்மை நம்பி நம் கரங்களிலே ஒரு பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த மந்தையிலுமில்லாத அநேக ஆடுகள் எனக்கு உண்டு. அந்த ஆடுகள் இந்த மந்தைக்குள் வரும்வரை, நான் தாகமாயிருக்கிறேன், என் தாகத்தை நீ புரிந்து கொள்வாயா என்று சொல்லி, கர்த்தர் உன்னைப் பார்த்து கேட்கிறார். அவரது தாகத்தை நீ பூர்த்தி செய்வாயா?

முடிவு

ஆறாவதாக, “…முடிந்தது” என்று சொல்லி அவர் தன் ஜீவனை விட்டார் (யோவா.19:30). இந்த உலகத்திலே அவர் மனுஷருக்காக செய்யவேண்டிய எல்லாக் காரியங்களையும் செய்து முடித்துவிட்டார். பாவ நிவிர்த்திக்காக பரிசுத்தமான இரத்தம் சிந்தப்படவேண்டியது அவசியம். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ நிவிர்த்தி கிடையாது என்று வேத வசனம் சொல்லுகின்றது. அதை நிறைவேற்றுகிறவராக, தன்னுடைய சரீரத்தை வேதனைக்கு ஒப்புக்கொடுத்து, தன்னுடைய இரத்தத்தை முழுவதுமாய் சிந்தி, முடித்துவிட்டார். அவர் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டார். இனி நாம் நிறைவேற்ற வேண்டிய சில காரியங்கள் நமது கையிலே கொடுக்கப்பட்டிருக்கிறது. எனவே உன்னை ஆண்டவருக்கு ஒப்புக்கொடு. கர்த்தருடைய சித்தத்தை அறிந்து அவருக்காக ஜீவியம் செய். உனக்காய் அவர் எல்லாவற்றையும் செய்து முடித்துவிட்டார். நீ அவருக்காக என்ன செய்யப்போகின்றாய்?

ஒப்படைப்பு

ஏழாவது வார்த்தை, “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்…” என்றார். வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை அவர் வெற்றியோடுகூட முடித்தார். பிரச்சனைக்கு மத்தியிலே, வேதனைக்கு மத்தியிலே, சகோதரரின் எதிர்ப்பின் நடுவிலே, தனது குடும்பத்தின் எதிர்ப்பின் நடுவிலே, ஊர் மக்கள் எதிர்ப்பின் நடுவே, பிசாசின் வேதனையின் மத்தியிலே, வெற்றி சிறந்த வேந்தனாய், பிதாவின் கரங்களிலே ஒப்புக்கொடுத்தார்.

இன்றைக்கும் இதே தெய்வத்தை நம்புவோமானால், நமது வாழ்க்கையிலும் ஒரு வெற்றி உண்டு. சந்தோஷம் உண்டு. வெற்றி கொடுப்பவர் இயேசு. அவர் தம் வாழ்வில் வெற்றி அனுபவித்தவர். ஜெயித்தவர், அதே ஜெயத்தை நமக்கும் இன்று கொடுப்பார்.

அருமையான சகோதர சகோதரிகளே, உங்களுடைய வாழ்க்கையை இன்றைக்கு நீங்கள் அவருக்கு ஒப்புக்கொடுப்பீர்களா? உனக்காக அவர் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் செய்து முடித்தார். கஷ்டங்களை அனுபவித்தார். இரத்தத்தை சிந்திவிட்டார். இனி நீங்கள் செய்ய வேண்டிய பாகம்தான் இருக்கிறது. உன் ஆத்துமாவை ஆண்டவருக்கு ஒப்புக்கொடு. கர்த்தாவே உம்மை நான் வேதனைப்படுத்தியிருக்கிறேன். நான் அனுபவிக்க வேண்டிய வேதனைகளை நீர் அனுபவித்தீர். நான் செய்த தவறுக்குப் பதிலாய், அந்த வேதனைகளை, நான் அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை நீர் அனுபவித்தீர். என்னை மன்னியும், உம்முடைய இரத்தம் என்னைக் கழுவட்டும். இனி நான் உம்முடைய பிள்ளை என்று சொல்லி, ஆண்டவருக்கு நம்மை ஒப்புக் கொடுப்போமா?

அவர் உன் கண்ணீரையெல்லாம் துடைப்பார். உன் வேதனைகளையெல்லாம் அவர் மாற்றுவார். உனக்கு ஒரு நம்பிக்கையின் தேவனாக அவர் இன்றைக்கு, கல்வாரி மேட்டிலே தொங்கிக்கொண்டிருக்கிறார். பயப்படாதே! அந்த இயேசு இன்று உன்னை ஆசீர்வதிப்பார். உன் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு உண்டாகும்!

சத்தியவசனம்