தேவனை மகிமைப்படுத்திய நூற்றுக்கு அதிபதி

சுவி.சுசி பிரபாகரதாஸ்
(மார்ச்-ஏப்ரல் 2014)

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் புண்ணிய நாமத்தினால் உங்களை வாழ்த்துகிறேன்.

இயேசுகிறிஸ்துவின் சிலுவையின் அருகே நின்ற மக்களைக் குறித்து இச்செய்தியில் தியானிக்கலாம். லூக்கா 23:47ஆவது வசனம் “நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்”. இது சிலுவையின் அருகே நின்ற ஒரு நூற்றுக்கதிபதி கூறின வார்த்தை. இயேசுவின் சிலுவையின் அருகே அவரை நேசித்தவர்கள் இருந்தார்கள். அதே சமயத்திலே அவரை தூஷித்தவர்களும் இருந்தனர். அவருடைய மரணம் எப்படி முடியுமோ என்று பார்ப்பதற்கு ஆவலாயிருந்த மக்களும் சிலர் இருந்தனர். அதேசமயத்திலே இராஜாவின் அல்லது அதிபதியினுடைய ஆணையை செயல்படுத்திக் கொண்டிருந்த ரோம போர்ச்சேவகர்களும் இருந்தனர். அருமையானவர்களே, இந்த ரோம போர்ச் சேவகர்களின் தலைவனாக இருந்த நூற்றுக்கு அதிபதியைக் குறித்து இச்செய்தியில் தியானிக்கப் போகிறோம்.

நூற்றுக்கு அதிபதி என்பவன் நூறு போர் வீரர்களுக்கு அவன் அதிபதியாக இருந்தான். இந்த அதிபதிதான் எல்லாக் காரியத்தையும் நிறைவேற்றிக் கொண்டிருந்தான். இந்த மனிதன் இயேசுவினுடைய பாடுகளை சிலுவையின் பாடுகளை முழுமையாய் பார்த்த மனிதன். இவன் சிலுவையிலே இயேசு அடிக்கப்பட்டு அவர் மரிக்கும்பரியந்தம் என்னென்ன சம்பவங்கள் நடந்தன, என்னென்ன நிகழ்ச்சிகள் சுற்றிலும் நடந்து கொண்டு இருக்கின்றன என எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தான்.

அடுத்ததாக, இயேசுகிறிஸ்து சிலுவையிலே சொன்ன ஏழு வாக்கியங்களையும் அவன் கேட்டவனாக இருந்தான். ஆண்டவருடைய ஏழு வார்த்தைகளும் கிறிஸ்தவத்தினுடைய முழு தாற்பரியத்தை வெளிப்படுத்துகிற வாக்கியங்களாகும். கிறிஸ்தவம் என்றால் என்ன? கிறிஸ்துவின் போதனை என்றால் என்ன? கிறிஸ்துவின் சிந்தனை என்றால் என்ன? எல்லாவற்றையும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த ஏழு வார்த்தைகள் வழியாக வெளிப்படுத்தினார். அந்த ஏழு வாக்கியங்களையும் இந்த நூற்றுக்கு அதிபதி கேட்டுக்கொண்டிருந்தான் .

மூன்றாவதாக, சுற்றிலும் நடைபெறுகிற எல்லா நிகழ்ச்சிகளை அறிந்தவன் இந்த நூற்றுக்கு அதிபதி. லூக்கா 23:44,45 “அப்பொழுது ஏறக்குறைய ஆறாம் மணி நேரமாயிருந்தது; ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரமுண்டாயிற்று. சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது” என்று வேதத்தில் வாசிக்கிறோம்.

இயேசுவானவர் சிலுவையிலே தொங்கிக் கொண்டிருக்கும்போது ஆறாம் மணி நேரம் முதல் ஒன்பதாம் மணி நேரம் வரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது. சூரியன் இருளடைந்தது. தேவாலயத்தினுடைய திரைச் சீலை நடுவிலே இரண்டாகக் கிழிந்தது. இவைகளையெல்லாம் அந்த நூற்றுக்கு அதிபதி பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது ‘இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டு தன் ஜீவனை விட்டதையும் கண்டான். இதைக் கண்ட வுடனே அவன் பேச ஆரம்பிக்கிறான்.

“நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்” (லூக்.23:47). சகலவற்றையும் கண்டு, கேட்டு, அறிந்த நூற்றுக்கு அதிபதி கிறிஸ்துவைக் குறித்து ஒரு விசுவாச அறிக்கையை வெளியிடுகிறான்: “…மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான்…”. இவர் ஒரு நீதிமான் என்று சொல்லி தேவனை மகிமைப் படுத்தினான்.

ஒரு கூட்ட மக்கள் இயேசுவை பாவி என்று சொன்னார்கள். மற்றவர்கள் இயேசுவை பகடி பண்ணினார்கள். இன்னுமொரு கூட்டம் ‘நீ தேவகுமாரனாயிருந்தால் வேகமாக சிலுவையிலிருந்து இறங்கி வா, உன்னையும் என்னையும் இரட்சித்துக்கொள்’ என்றெல்லாம் பகடி பண்ணினார்கள். ஆனால் இந்த நூற்றுக்கதிபதி சொல்லுகிறான்; ‘மெய்யாகவே இந்த மனுஷன் நீதிபரனாயிருந்தான்’ என்று விசுவாச அறிக்கை செய்கிறான். அவன் விசுவாச அறிக்கை செய்து அத்தோடு நின்றுவிடாமல் கர்த்தரை மகிமைப் படுத்துகிறான். உண்மையாகவே இந்த இயேசு கிறிஸ்துவின் மரணம் ஒரு சாதாரண மரணம் அல்ல. இது படைப்போடு படைப்பாளரோடு, நித்திய கர்த்தரோடு இணைக்கப்பட்ட ஒன்று என்பதை அவன் புரிந்துகொண்டு அவன் விசுவாச அறிக்கைசெய்து, கர்த்தரை அவன் மகிமைப்படுத்தினான். அருமையானவர்களே, நம்முடைய வாழ்க்கையிலே விசுவாச அறிக்கை மிகவும் முக்கியம். அத்தோடு தேவனை மகிமைப் படுத்துவதும் முக்கியமான ஒன்றாகும்.

சகோதரனே, சகோதரியே கிறிஸ்துவையும் அவரது செயல்களையும் கண்டு, கிறிஸ்துவினுடைய அற்புதத்தை உங்கள் வாழ்க்கையிலே ருசித்த நீங்கள், கிறிஸ்துவினுடைய மீட்பின் திட்டத்தை உங்களுடைய வாழ்க்கையிலே அனுபவித்துக் கொண்டிருக்கிற நீங்கள் உங்கள் வாழ்க்கையிலே கிறிஸ்துவைக் குறித்து மற்றவர்களிடத்தில் விசுவாச அறிக்கை பண்ணுகிறீர்களா? இந்த மனிதன் நூற்றுக்கு அதிபதி ரோமன், ஆனாலும் கூட அவன் ஆண்டவரைக் குறித்து விசுவாச அறிக்கை செய்தான். நம்முடைய விசுவாச அறிக்கை அநேகருடைய விசுவாசத்தை தட்டி எழுப்பும். நம்முடைய விசுவாச அறிக்கை அநேகரை ஆண்டவருக்குள்ளே இழுத்துக் கொண்டுவர உதவி செய்யும். நம்முடைய விசுவாச அறிக்கை நற்செய்தி வேகமாய் பரவுவதற்கு உந்து கோலாக மாறும். ஆகவே, நம்முடைய விசுவாச அறிக்கை மிக முக்கியமானது.

இரண்டாவதாக விசுவாச அறிக்கையோடு நின்றுவிடாதபடி, நாம் கர்த்தரை எல்லாக் காலத்திலும் மகிமைப்படுத்த வேண்டும். விசுவாச அறிக்கையும் கர்த்தரை மகிமைப்படுத்துதலும், நம்முடைய விசுவாச வாழ்க்கையிலே இணைந்த ஒன்றாகும்.

சகோதரனே, சகோதரியே, . இந்த நூற்றுக்கு அதிபதியைப்போல, இயேசுவைக் குறித்த விசுவாச அறிக்கையோடு, தேவனை மகிமைப் படுத்துகிற வாழ்க்கை நாம் வாழ்வோமானால் நம் மூலமாக ஏராளமான மக்கள் ஆண்டவரை அறிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும்.

சத்தியவசனம்