மரித்தோரை உயிர்ப்பிக்கும் மகத்தான உயிர்த்தெழுதல்

சகோ.எம்.எஸ்.வசந்தகுமார்
(மார்ச்-ஏப்ரல் 2014)

கிறிஸ்தவ மார்க்கத்தின் சிறப்பம்சமாய் இருப்பது இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலேயாகும். மற்றைய மதத்தலைவர்களது வாழ்வு அவர்களது மரணத்தோடு முற்றுப் பெற்றபோதிலும், இயேசுகிறிஸ்துவோ மரித்தும் உயிரோடெழுந்து இன்றும் ஜீவிக்கிறவராக இருக்கிறார். “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்” (வெளி.1:18) என அவரே கூறியுள்ளார். இன்று உலகில் இருக்கும் மதங்களில் பெரும்பாலானவை மனிதர்களது புராணக் கதைகளையும், தத்துவக் கருத்துக்களையும் அடிப்படையாய்க் கொண்டவை. எனினும் அத்தகைய மதங்களை உருவாக்கியவர்கள், மரணத்தோடு தம் வாழ்வை முடித்துக் கொள்கின்றனர். அதேபோல, ‘குறிப்பிட்ட நபர்களை ஆரம்ப கர்த்தாக்களாக கொண்டுள்ள மதங்களில் கிறிஸ்தவம் மட்டுமே வெறுமையான கல்லறையைப் பற்றி கூறுகின்றது’. மற்றைய மத ஸ்தாபகர்கள் மரணமடைந்துவிட்டனர். ஆனால் இயேசுகிறிஸ்துவோ மரித்தும் உயிரோடெழுந்து இன்றும் ஜீவிக்கிறவராக இருக்கின்றார். அவரே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருப்பவர்.

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவம் மட்டுமல்ல, அது கட்டாயம் நடைபெற வேண்டிய சம்பவமாகவும் இருந்தது. ஏனென்றால் அவர் மரித்தநிலையில் இருக்க முடியாதவராகவே இருந்தார். இதனால்தான் “அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது” என அப்.2:24 இல் சொல்லப்பட்டுள்ளது. இவ்வசனத்தில் ‘தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதினால், இயேசுகிறிஸ்து மரணத்திலிருந்து சுயமாக உயிர்த்தெழ முடியாதவராய் இருந்தார் என நாம் கருதலாகாது. அவருக்கு தன்னுடைய ஜீவனைக் கொடுக்கவும் அதை மறுபடியும் எடுக்கவும் அதிகாரம் இருந்தது (யோவா.10:18). இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைப் பற்றி குறிப்பிடும்போது, தேவன் அவரை எழுப்பினார் என்று சொல்வதே புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களது வழக்கமாயிருந்தது (அப்.2:32). “இயேசுகிறிஸ்து மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதவராய் இருந்தமையினால் தேவன் அவருடைய மரண உபாதைகளின் கட்டை அவிழ்த்து அவரை எழுப்பினார்” என்பதே மூல மொழியில் அப்போஸ்தலர் 2:24 இன் அர்த்தமாகும்.

அப்போஸ்தலர் 2:24 இல் மரண உபாதிகளின் கட்டு என்பதில், ‘உபாதிகள்’ என்பதற்கு மூலமொழியில் ‘பிரசவ வேதனை’ என அர்த்தந்தரும் பதமே உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே இதை, மரணத்தின் பிரசவ வேதனைக் கட்டு என நாம் மொழிபெயர்க்கலாம். “இதனுடைய அர்த்தம் யாதெனில், இயேசுகிறிஸ்து மரித்தபோது, மரணம் பிரசவ வேதனைப்படத் தொடங்கியது என்பதாகும்”. ‘இங்கு மரணமானது பிரசவ வேதனைப்படுபவளாக உவமிக்கப்பட்டுள்ளதோடு, அது இயேசுவைத் தன்னுள் வைத்திருக்கமுடியாது வேதனைப் படுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது’. அதாவது, “பிரசவ வேதனைப்படுபவளால் குழந்தையைத் தன் வயிற்றில் வைத்திருக்க முடியாதிருப்பதுபோல, மரணத்தினால் இயேசு கிறிஸ்துவைத் தன்னுள் வைத்திருக்க முடியவில்லை”. இதனாலேயே அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக் கூடாதிருந்தது என இவ் வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து மனிதனாக வந்த தெய்வமாக இருந்தமையினால், மரண நிலையில் அவரால் தொடர்ந்திருக்க முடியவில்லை. சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்த அவர் மூன்றாம் நாள் உயிரோடெழுந்தார் (1கொரி.15:3,4).

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலானது மரணத்தின் மீது அவருக்கிருக்கும் வல்லமையை உறுதிப்படுத்தும் சம்பவமாக இருக்கின்றது. மரித்து உயிர்த்தெழுந்த அவர், மரித்தோரை உயிர்ப்பிக்கிறவராக இருக்கின்றார். இதனால் வேதாகமம் அவரை “உயிர்ப்பிக்கின்ற ஆவியானவர்” (1கொரி.15:45) எனக் குறிப்பிட்டுள்ளது. எனவே ‘அவர் மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்’ (1கொரி.15:20, கொலோ.1:18, வெளி.1:5). மரித்து உயிரோடெழுந்தவர்களில் இயேசுவே முதலிடம் பெறுபவர் என்பது இதன் அர்த்தமல்ல. ஏனென்றால், இயேசுகிறிஸ்துவே தன்னுடைய ஊழிய நாட்களில் மரித்தோரிலிருந்து சிலரை உயிரோடெழுப்பியுள்ளார் (மத்.9:18-26, லூக்.7:11-16, யோவா.11:11-44). எனினும் அவர்கள் மறுபடியும் மரணமடைந்தனர். ஆனால், “இயேசுகிறிஸ்து மட்டுமே மறுபடியும் மரிக்காத நிலையில் உயிர்த்தெழுந்துள்ளார். இத்தகைய உயிர்த்தெழுதலில் அவரே முதல் நபராய் இருக்கின்றார்”. அதேசமயம், முதற்பலன் எனும் சொற்பிரயோகம் பழைய ஏற்பாட்டோடு சம்பந்தப்பட்ட ஒரு பதமாகும். அக்காலத்தில் அறுவடையில் முதலில் அறுக்கப்படுவதும், முதல் பிறப்புகளும் முதற்பலன் என அழைக்கப்பட்டதோடு, அவை கர்த்தருக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது (யாத்.23: 19, லேவி.23:10). இந்த முதற்பலன், முழு அறுவடைக்குமான முன்னடையாளமாகவும் உறுதியாகவும் இருந்தது. எனவே இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந் தவர்களில் முதற்பலனானார் எனும்போது,

“அவரது உயிர்த்தெழுதலானது அவருடைய மக்களின் உயிர்த்தெழுதலுக்கான முன்னடையாளமாகவும், அதற்கான ஆதாரமாயும் உள்ளது”. “முதற்பலன் பிரதான அறுவடையில் முதலாவதாயிருப்பது மட்டுமல்ல, மிகுதியான அறுவடையை உறுதிப்படுத்துமொன்றாயும் இருப்பதனால், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல், அவருடைய மக்களது உயிர்த்தெழுதலை உறுதிப்படுத்தும் அடையாளமாயும் இருக்கின்றது”. “முதற்பலன் உருவகத்தின் மூலமாக, விசுவாசிகள் நிச்சயம் உயிர்த்தெழுவார் என்பதை பவுல் சுட்டிக் காட்டியுள்ளார்”.

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலானது அவருடைய மக்களும் உயிர்த்தெழுவர் என்பதற்கான உறுதியாய் இருப்பதனாலேயே, அவர் உயிர்த்தெழுந்தபோது மரித்த பரிசுத்தவான்களில் பலர் உயிரோடெழுந்துள்ளனர். மத்.27:52-53 இல் குறிப்பிடப்பட்டுள்ள இச் சம்பவம், இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலானது மரணத்தை மேற்கொண்டு மரித்தோரை உயிர்ப்பிக்கும் வல்லமையுடையது என்பதைக் காண்பிப்பதற்காக நடைபெற்றதாகும். இன்றைக்கு சிலர், இவ்வசனங்களைத் தவறாக விளங்கிக்கொண்டிருப்பதற்கு காரணம், மொழிபெயர்ப்புக் குறைபாடேயாகும். இப்பகுதியை மேலோட்டமாக வாசிக்கும்போது, இயேசுகிறிஸ்து மரித்தபோது, உயிர்பெற்ற பரிசுத்தவான்கள், அவர் உயிர்த்தெழுந்த பின்பு கல்லறையை விட்டு வெளியே வந்தனர் என நாம் விளங்கிக் கொள்ளுவோம். எனினும் மூல மொழியின்படி “இயேசுகிறிஸ்து மரித்தபோது ஏற்பட்ட பூமியதிர்ச்சி காரணமாக கல்லறை திறவுண்டன. அவர் உயிர்த்தெழுந்தபோது மரித்த பரிசுத்தவான்கள் பலர் உயிர்த்தெழுந்தனர் என்பதே இப்பகுதியின் சரியான அர்த்தமாகும்”. 51 ஆம் வசனத்தின் இறுதியில் கன்மலைகளும் பிளந்தது என்பதற்கு அடுத்துள்ள முற்றுப்புள்ளி காற்புள்ளியாகவும், 52 ஆம் வசனத்தில் கல்லறைகளும் திறந்தது என்பதற்கு அடுத்துள்ள காற்புள்ளி முற்றுப்புளியாகவும் மாற்றப்படல் வேண்டும். எனவே இயேசுகிறிஸ்து மரித்தபோது ஏற்பட்ட பூமி அதிர்ச்சி காரணமாக கன்மலைகள் பிளந்திட அதிலிருந்து கல்லறைகள் திறக்கப்பட்டன என்பதை இதன் மூலம் அறிந்துகொள்கின்றோம். “பாலஸ்தீனா பிரதேசத்தில் மலைகளிலுள்ள குகைகளே கல்லறைகளாக உபயோகிக்கப்பட்டன. எனவே பூமி அதிர்ந்து கன்மலைகள் பிளந்தபோது அதிலிருந்த கல்லறைகளும் திறவுண்டன”. இது, இயேசுகிறிஸ்து மரித்தபோது நடைபெற்ற சம்பவமாகும்.

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபோது கல்லறைக்குள்ளிருந்த பல பரிசுத்தவான்கள் உயிரோடெழுந்தனர். “53ஆம் வசனத்தின் ஆரம்ப வரியான, அவர் உயிர்த்தெழுந்த பின்பு என்பது, 51ஆம் வசனத்தில் கல்லறைகளும் திறந்தது என்பதற்குப் பிறகு வரக்கூடிய விதமாகவே மூலமொழியில் உள்ளது”. எனவே அவர் உயிர்த்தெழுந்த பின்பு நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தன. இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து அநேகருக்குக் காணப்பட்டார்கள் என்பதே இவ்வசனத்தின் அர்த்தமாகும். “இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்தை மேற்கொண்டதைக் காண்பிப்பதற்காகவே அவர் மரித்து உயிர்த்தெழும்பியபோது, மரித்த பரிசுத்தவான்கள் உயிரோடெழும்பிய சம்பவத்தை மத்தேயு குறிப்பிட்டுள்ளார்”.

இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலானது சரீரப்பிரகாரமாக மரித்தோரை உயிரோடு எழுப்ப வல்லமை உடையது என்பதை இச் சம்பவம் உறுதிப்படுத்துகின்றது. அவர் தன்னுடைய ஊழிய நாட்களில், தான் மரித்தோரை உயிர்ப்பிப்பதைப் பற்றி முன்னறிவித்திருந்தார். இது கடைசி நாளில் நடைபெறும் சம்பவத்தைப் பற்றிய முன்னறிவிப்பாயினும், (யோவா.6:39, 44, 54) அவர் தனது உயிர்த்தெழுதலை அடிப்படையாய்க்கொண்டு கடைசி நாளில் மரித்தோரை உயிர்ப்பிப்பார் என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அவர் உயிர்த்தெழுந்தபோது மரித்த பரிசுத்தவான்களை உயிரோடெழுப்பியுள்ளார்.

மரித்தோரை இயேசுகிறிஸ்து கடைசி நாளில் உயிர்ப்பிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, இயேசுகிறிஸ்து மரித்தோரிலிருந்தெழுந்து நித்திரையடைந்தவர்களின் முதற்பலனாய் இருப்பதோடு அவர், உயிர்த்தெழுந்தபோதே மரணமடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களை உயிர்ப்பித்துமுள்ளார். எனவே, அவர் மறுபடியும் இவ்வுலகுக்கு வரும் போது நிச்சயமாக மரித்தோரை உயிர்ப்பிப்பார். “இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கின்றோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்” (1தெச.4:14) என வேதம் கூறுகிறது. இதிலிருந்து, இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் நமது உயிர்த்தெழுதலை உறுதிப்படுத்துவதை அறிந்திடலாம். பவுல் இதைப் பற்றி கொரிந்தியருக்கு எழுதும்போது, “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள். … எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம்…. அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளும்போது, மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது என்று எழுதியிருக்கிற வார்த்தை நிறைவேறும்” (1கொரி.15:22-23, 52-54) என குறிப்பிட்டுள்ளார். அதாவது, ‘இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மரணத்தை விழுங்கிவிட்டமையினால், அவர் வரும்போது அவருக்குள் மரித்தவர்கள் உயிரோடெழும்புவார்கள்’.

இயேசுகிறிஸ்துவுக்குள் மரிப்பவர்கள் அவர் மறுபடியும் வரும்போது உயிர்த்தெழுவதனாலேயே வேதாகமத்தில் மரணம் நித்திரையாக உவமிக்கப்பட்டுள்ளது (1கொரி.15:18, அப். 7:60, ஆதி.47:30, 2சாமு.7:12, 1தெச. 4:13-14). இரவு நித்திரைகொள்ளும் நாம் காலையில் எவ்வாறு விழித்தெழுகின்றோமோ, அதே போல, கிறிஸ்துவுக்குள் மரிப்பவர்களும் ஒருநாள் விழித்தெழுவார்கள். “இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடே கூடக் கொண்டுவருவார்” (1தெச.4:14). இவ்வசனத்தில், இயேசுகிறிஸ்து மரித்ததாகவும் கிறிஸ்தவர்கள் நித்திரையடைந்தவர்கள் என்றும் சொல்லப்பட்டிருப்பதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. “இயேசுகிறிஸ்து மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்தமையினால், கிறிஸ்தவர்களுக்கு அதை ஒரு நித்திரையாக மாற்றிவிட்டார்”. எனவே, நாம் மரணத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை. மரணத்தை ஜெயித்த இயேசுகிறிஸ்து நம்மையும் மரணத்திலிருந்து உயிரோடெழுப்புவார்.

இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது அவருக்குள் மரித்தவர்களே உயிரோடு எழுப்பப்படுவார்கள் என்பதை நாம் மறுக்கலாகாது (1தெச.4:14-36, 1கொரி.15:23). எனவே நாம் மரித்த பின்னர் உயிர்த்தெழுவதற்கு அவருக்குள் வரவேண்டியது அவசியம். உண்மையில், இயேசுகிறிஸ்துவுக்குள் இருக்கும் ஒருவனுக்கே மரணத்தினால் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால்தான் இயேசுகிறிஸ்துவும் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்” (யோவா.11:25) என்றார். இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் மனிதனுக்கு நித்தியஜீவன் கிடைக்கின்றது (யோவா. 3:36), அவன் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட் பட்டிருப்பான் (யோவா.5:24). இதனால், அவன் சரீரப்பிரகாரமாக மரித்தாலும் கடைசி நாளில் உயிரோடெழுப்பப்படுவான். “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு” (யோவா.6:47) எனக் கூறும் இயேசுகிறிஸ்து “குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்திய ஜீவனை அடைவதும், நான் அவனை கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது என்றார்” (யோவா.6:40). உண்மையில், ‘இயேசு கிறிஸ்துவினுடைய ஜீவனைப் பெற்றிருந்தால் மட்டுமே மரணமானது முழுமையான வாழ்வுக்கு முன்னுரையாயிருக்கும்’. அதாவது, மரிக்கும் மனிதன் புதிய வாழ்வுக்குள் உயிர்த்தெழுவான். ‘இப்போது இயேசுகிறிஸ்துவிடமிருந்து ஜீவனைப் பெற்றுக்கொள்பவன் மரணத்தின்பின் அதை முழுமையாக அனுபவிப்பான்’.

எனவே, இன்றே மரணத்திலிருந்து உயிர்த்தெழுவதற்கு, மரித்து உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அவரை நம் இரட்சகராகவும் கர்த்தராகவும் ஏற்றுக்கொள்வோமாக.

சத்தியவசனம்