ஆசரிப்புக்கூடாரத்தில் கிறிஸ்துவின் சாயல்

அத்தியாயம்: 14
Dr.
தியோடர்.எச்.எஃப்
(மார்ச்-ஏப்ரல் 2014)

தொங்கு திரை

தேவன் குறிப்பிட்ட பாதையில் மனிதன் வரவில்லையெனில் அந்த வாசல் அவனை உள்ளே பிரவேசிக்கவிடாமல் வெளியே தள்ளியது. திரையிலுள்ள கேருபீன், ஒருவன் பரிசுத்த தேவனைவிட்டுத் தூர விலகியே இருக்க வேண்டும் என்று காட்டியது. ஏதேன் தோட்டத் தில் ஜீவவிருட்சத்தை விட்டு, தூர விலகி நிற்கும்படி கேருபீன் தடுத்தது போல இந்தக் கேருபீனும் தடுத்தது (ஆதி.3:24).

இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் இருக்கும் போது, மனிதனுடைய பாவம் முற்றிலும் விலக்கப்பட்டு, இயேசுகிறிஸ்துவைப் போல பரிசுத்தமாகாவிட்டால் தேவனைத் தரிசிக்க முடியாது என்று வெளிப்படுத்தினார். வேதாகமம் இவ்வாறு கூறுகிறது:

“நீதிமான் ஒருவனாகிலும் இல்லை; உணர்வுள்ளவன் இல்லை; தேவனைத் தேடுகிறவன் இல்லை; ..எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி,” (ரோ. 3:10,11,23).

இந்தத் தொங்கு திரையின் அழகு எவருக்கும் உட்பிரவேச அனுமதியைப் பெற்றுத் தரவில்லை. அதுபோலவே இயேசு கிறிஸ்துவின் உலக வாழ்க்கையின் அழகு எவருக்கும் இரட்சிப்பைப் பெற்றுத் தரவில்லை. மகா பரிசுத்த ஸ்தலத்தில் பாவ நிவாரண பலியின் இரத்தம் கிருபாசனத்தின் மேல் தெளிக்கப்படவேண்டியதிருந்தது. இது கல்வாரிச் சிலுவையில் உலகமனைத்தும் உள்ள மனுக்குலத்தின் பாவத்தைப் போக்க இயேசு இரத்தம் சிந்துவதைச் சுட்டிக் காட்டிற்று.

ஒருவன் நியாயப்பிரமாணத்தைப் பின்பற்றுவதாலோ, இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கைப்போல வாழ முயற்சிப்பதாலோ தண்டனையிலிருந்து தப்ப முடியாது. மனிதனுடைய பாவத்துக்காகப் பிராயச்சித்தமாக இயேசுவின் இரத்தம் சிந்தப்பட வேண்டும். பாவி தனக்காக, தன் பாவத்தைப் போக்க இயேசு பலியானார் என்பதை விசுவாசித்து, தன்னை மீட்ட இரட்சகரைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நியாயப்பிரமாணத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்கள், ரோமர்3:19,20 வசனங்களை நினைவு கூறவேண்டும். “மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப் பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப் பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம். இப்படியிருக்க, பாவத்தை அறிகிற அறிவு நியாயப் பிரமாணத்தினால் வருகிறபடியால், எந்த மனுஷனும் நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை.”

மகா பரிசுத்த ஸ்தலத்தின் வாசலில் உள்ள தொங்கு திரை நான்கு தூண்களால் தாங்கப்பட்டது. “சீத்திம் மரத்தினால் செய்து, பொன் தகட்டால் மூடப்பட்ட நான்கு தூண்கள்” (யாத். 26:32). இந்த நான்கு தூண்களும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கை, ஊழியம், பாடுகள் சிலுவைக்காட்சிகள், உயிர்த்தெழுதல் இவற்றைச் சித்தரிக்கும் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களையும் (சுவிசேஷங்கள்) குறித்தன.

இந்தத் திரை தெய்வமனிதனாகிய இயேசுவின் பரிசுத்தத்தையும், மகிமையையும் வெளிப்படுத்தியது. அந்த நான்கு தூண்களும், கிறிஸ்துவின் பாவமற்றத் தன்மையையும், மகிமையையும் வெளிப்படுத்திய நான்கு நற்செய்தி நூல்களையும் குறித்தன.

கிழியுண்ட திரை
இயேசுவின் சிலுவை மரணத்தின் போது கிழியுண்ட தேவாலயத் திரைச்சீலைக்கு வேதாகமம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. இந்தச் செயல் எல்லோரும் தேவனுடைய சமுகத்துக்கு வரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. ஆசரிப்புக் கூடாரத்தின் திரைச்சீலை எவ்வளவு தடித்ததாய் இருந்தது என்பது தெரியவில்லை. அது நான்கு அங்குலம் தடிப்பானதாய் இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதன் தடிப்பு குறித்துப் பல கதைகள் சுற்றுக்கு விடப்பட்டன. இரண்டு ஜோடி காளை மாடுகள் எதிர் எதிர்த் திசையில் இருந்து இத்திரையை இழுத்த பின்னரும் அது கிழியவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தத் திரையின் நோக்கம் தேவனுடைய பரிசுத்தத்தையும், மனிதனுடைய அசுத்தத்தையும் வெளிப்படுத்துவதே. இதே கருத்தை வெளிப்படுத்தி, இயேசு 33 வருடங்கள் உலகில் வாழ்ந்தார். தேவனுடைய பரிபூரண தன்மையை வெளிப்படுத்தி முடித்தார், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து அதன்பின் தம்மை மனித இனத்தின் பாவங்களுக்குப் பிராயசித்த பலியாக ஒப்புக் கொடுத்தார். இயேசு வகுத்த இந்த வழியே தேவனுடைய சமுகத்தை நாம் சென்றடையும் மார்க்கமாயிற்று.

இயேசு சிலுவையில் மீட்பின் பணியை முடித்ததும் நடந்ததென்ன? தேவாலயத்திரைச் சீலைக்கு என்ன நேர்ந்தது? “தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது” (மத்.27:51). இது தேவனுடைய செயல். மனிதனுடைய செயலல்ல. கிறிஸ்து, தேவனுடைய நீதியையும், ஒழுங்கையும் நிறைவேற்றினார். அப்படிச் செய்ததனால் தேவன் திருப்தியடைந்தார். அதன்மூலம் மனிதன் பூரணமாக தேவனுடன் ஒப்புரவானான்.

இதன்மூலம் தேவன், “கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதார பலியாக அவரையே ஏற்படுத்தினார்” (ரோம.3:26). இயேசுகிறிஸ்துவைக் குறித்து எபி.1:3 இவ்வாறு கூறுகிறது: “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமையுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலே தாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்”. இப்பொழுது நாம் அவரை விசுவாசிக்க வேண்டும் என்றும், அவரை நம்முடைய சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு, அவரைக் குறித்து மற்றவர்களுக்கு முன் சாட்சி கூற வேண்டும் என்றும் நம்மை அழைக்கிறார் (ரோம.10:9,10).

இயேசுகிறிஸ்துவின் தியாகபலியினால் பாவம் தொலைக்கப்பட்டது. தேவனுடைய பரி பூரண நீதி, அவரை விசுவாசிக்கும் யாவருக்கும் கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது. இவ்விதமாக மனிதன் தேவனை அடையும் மார்க்கம் சம்பாதிக்கப்பட்டுவிட்டது. இயேசு சிலுவையில் அறையப்பட்டு, உயிர்நீத்தபோது தேவாலயத் திரைச்சீலை இரண்டாகக் கிழிந்தது என்பதைக் கவனியுங்கள் (மத். 27:51). இது ஒருவர் மட்டும் திரையின் வழியாகத் தன் தலையை நீட்டி மகா பரிசுத்த ஸ்தலத்தில் என்ன இருக்கிறது என்று எட்டிப் பார்ப்பதற்குரிய ஒரு திறப்பு மட்டுமல்ல. இது வரை ஒரு தடுப்புச் சுவராய் விளங்கிய திரை இப்பொழுது ஒரு திறந்த வாசலாயிற்று. இயேசு சிலுவையில் உயிர்விட்டபோது இந்தத் திரை கிழிந்தது. ஏனெனில் சிலுவைப் பாடுகளின் போதுதான் இயேசுவின் உடல் நொறுக்கப்பட்டு, கிழிக்கப்பட்டது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டு, நாம் நீதிமான்களாக்கப்படுவதற்காக எழுப்பப்பட்டும் இருக்கிறார்” (ரோம.4:25). இப்பொழுது தேவன் ஒவ்வொரு விசுவாசியையும், கிறிஸ்துவைப் போல் பூரணமாயிருப்பதாகக் காண்கிறார். ஏன்? அது ஏனென்றால் நாம் கிறிஸ்துவுக்குள் இருப்பதை தேவன் பார்க்கிறார். பாவப் பிரச்சனை முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டது. நாம் கிறிஸ்துவின் நீதியினால் மூடப்பட்டிருக்கிறோம்.

பழைய ஏற்பாட்டுப் பலிகள் பாவத்தை நீக்க முடியாது. இயேசுகிறிஸ்து தமது சிலுவை மரணத்தின் மூலம் பாவத்தை நீக்கிவிட்டார். “அல்லாமலும், காளை வெள்ளாட்டுக் கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்தி செய்யமாட்டாதே. ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும்போது: பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம்பண்ணினீர்; … இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச் சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப் பட்டிருக்கிறோம். .. ஏனெனில் பரிசுத்தமாக்கப் படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்” (எபி.10:4,5,10,14).

இவ்விதமாக மகா பரிசுத்த ஸ்தலத்தின் தொங்கு திரை ஏன் இயேசுகிறிஸ்துவைக் குறிக்கிறது என்று அறிகிறோம். கிறிஸ்து தமது சரீரத்தை ஜீவபலியாகச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததன் மூலம், அவர் நம் அனைவருக்கும் தேவனுடைய சமுகத்தில் சேரும் பாக்கியத்தைப் பெற்றுத் தந்தார். “ஆகையால், சகோதரரே, நாம் பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர் தமது மாம்சமாகிய திரையின் வழியாய்ப் புதிதும், ஜீவனுமான மார்க்கத்தை நமக்கு உண்டு பண்ணினபடியால், அந்த மார்க்கத்தின்வழியாய்ப் பிரவேசிப்பதற்கு அவருடைய இரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிற படியினாலும்……” (எபி.10:12). பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கொடுக்கப்பட்ட பலிகள் திரும்பத் திரும்பக் கொடுக்கப்பட வேண்டியதிருந்தது. “இவரோ பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து….” (எபி.10:12).

இவ்வாறு இயேசுகிறிஸ்து தம்மைத் தியாக பலியாக ஒப்புக்கொடுத்ததன் மூலம் என்றென்றைக்குமான எவ்வளவு மாபெரும் மீட்பை ஏற்படுத்தியிருக்கிறார்!? “ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யும் கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையில் சேரக்கடவோம்” (எபி.4:16).

விசுவாசத்தோடு இரட்சிப்பை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பைக் கிறிஸ்து எல்லோருக்கும் அளித்துள்ள போதிலும் பலர் இன்னும் அவரை இரட்சிப்பின் வழி என்று ஏற்க மறுக்கிறார்கள். ஆனால் வேதாகமம் தெளிவாக இருக்கிறது. மனிதன் தன் இரட்சிப்புக்கான வழியைத் தானே தேடிக்கொண்டாலும், இயேசுகிறிஸ்துவைத் தவிர வேறே வழி இல்லை. “அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான்” (அப்.4:12). இஸ்ரவேலர் மகா பரிசுத்த ஸ்தலத்தினுள் தம் விருப்பப்படி பிரவேசிக்க முயற்சித்தால் மரணத்தைக் கண்டடைவார்கள். அதுபோலவே குறிப்பிட்ட வழியாக ஆண்டவரிடத்தில் வராதவர்கள் ஆவிக்குரிய மரணத்தைக் கண்டடைவார்கள். இயேசு கிறிஸ்து என்னும் ஒரே வழியின் மூலம் ஆண்ட வரிடத்தில் வரவேண்டும்.

“பாவத்தின் சம்பளம் மரணம்” (ரோ. 6:23). இயேசுகிறிஸ்துவின் மூலமாக அல்லாமல் வேறே வழியில் இரட்சிப்பு உண்டு என்று கூறுவது நற்செய்தி அல்ல. அது தவறான போதனை. அப்போஸ்தலனாகிய பவுல், இயேசு கிறிஸ்துவின் மூலமாக மட்டுமே இரட்சிப்பு உண்டு என்று போதித்தார். “நீங்கள் ஏற்றுக் கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன்” (கலா.1:9).

இயேசுகிறிஸ்து சிலுவையில் மரித்தபோது இரண்டாகக் கிழிந்த திரையை ஆசாரியர்கள் தைத்து இணைக்க முயற்சித்ததாக வரலாறு கூறுகிறது. அதுபோலவே மக்கள் இயேசு கிறிஸ்துவின் இரட்சிப்பை ஏற்றுக்கொண்டு அவரிடம் வராமல் உலகில் தங்கள் விருப்பம் போல புதிய மார்க்கங்களைத் தேடிக்கொண் டார்கள். ஆனால் அவர்களுடைய முயற்சிகள் கிழியுண்ட திரையைத் தைத்துச் சரிப்படுத்த முயற்சித்த ஆசாரியர்களின் முயற்சியைப் போல வீணாயின. இயேசுகிறிஸ்துவிடம் வராதவர்கள் எல்லாரும் நித்திய ஆக்கினைத் தீர்ப்புக்கு உள்ளாவார்கள்.

இயேசுவின் மூலமாக அல்லாமல் வேறு வழிகளில் இரட்சிப்படைய முயற்சித்தல் மனிதனுடைய சீரழிவைக் காட்டும். அப்படிப்பட்டவர்கள் தங்களைத் தாழ்த்தவும் மாட்டார்கள். தங்கள் பாவத் தன்மையை ஒப்புக் கொள்ளவும் மாட்டார்கள். அதன் பலனாக அவன் தன்னை தேவனுடைய சமுகத்துக்கும், இராஜ்யத்துக்கும் புறம்பே அடைத்துக் கொள்ளுகிறான்.

இரட்சிப்பைப் பற்றி தீத்து இவ்வாறு கூறுகிறார்: “நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்” (தீத்து 3:5). “ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும்” (ரோமர் 4:5).

நீங்கள் உங்கள் பாவத்தன்மையை உணர்ந்து ஒப்புக்கொண்டிருக்கிறீர்களா? உங்கள் நம்பிக்கை இயேசுகிறிஸ்துவில் இருக்கிறது என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? இயேசு உங்கள் பாவத்தின் தண்டனையை அனுபவித்தார் என்றும், உங்கள் பிராயச்சித்தத்தை அவர் செலுத்திவிட்டார் என்றும், உங்களை மீட்க இரத்தம் சிந்தினார் என்றும் விசுவாசித்து, அவரை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருக்கிறீர்களா? இல்லையேல் காலதாமதம் செய்யாமல் இன்றே, இப்பொழுதே அவரை இரட்சகராக ஏற்றுக்கொள்ளுங்கள்.

மொழியாக்கம்: Mr.G.வில்சன்
சத்தியவசனம்