ஜெபக்குறிப்பு: அக்டோபர் 31 வியாழன்

“பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பான்” (மத்.7:21) என்று திருவுளம் பற்றின தேவன்தாமே தொடர்ந்துவரும் நாட்களிலும் நம்மோடிருந்து அவருடைய சித்தத்தின்படி செய்கிறவர்களாக நம்மை வனைந்தருளவும், பாதுகாத்து வழிநடத்தவும் ஜெபிப்போம்.

நல்ல மேய்ப்பன்!

தியானம்: அக்டோபர் 31 வியாழன்; வாசிப்பு: சங்கீதம் 23:1-6

‘நானே நல்ல மேய்ப்பன்: நல்ல மேய்ப்பன்
ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்.’
(யோவான் 10:11)

வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வெளிநாடு சென்றவர், திரும்பிவந்து பார்த்தபோது, அந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. ஆகவே, வாடகைக்குக் குடியிருந்தவர்களை எழுப்பிவிட்டு, தனது பணத்தைச் செலவு செய்து அந்த வீட்டைத் திருத்தியதாக வீட்டின் சொந்தக்காரரான அம்மா சொன்னார். ‘உடையவன் இல்லாவிட்டால் எல்லாம் தொலைந்துபோய் விடும்’ என்று அவர் மேலும் சலித்துக்கொண்டார்.

எந்தப் பொருளானாலும், அதற்கு உரியவன் அதனைப் உபயோகிப்பதற்கும் இன்னொருவன் உபயோகிப்பதற்கும் நாமே வித்தியாசம் கண்டிருக்கிறோம். அதே மாதிரி, ஒரு மந்தையை அதன் உரிமையாளன் பராமரிப்பதற்கும், கூலியாள் பராமரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கத்தானே செய்யும். இயேசு கிறிஸ்து தம்மை நல்ல மேய்ப்பனாகச் சித்தரித்துக் கூறியதையே மேலுள்ள வசனத்தில் காண்கிறோம். உரிமையாளனாகிய மேய்ப்பனுக்கும் கூலியாளுக்கும் பெரியதொரு வித்தியாசம் உண்டு. கூலியாள் பணத்துக்காக மந்தையை மேய்க்கிறான். மந்தையில் ஒரு ஆடு செத்துப்போனாலும் அவனுக்கென்ன! ஆனால், மேய்ப்பவனோ கூலிக்கு அல்ல; அவன் அன்பின் நிமித்தமே தம் மந்தையில் கரிசனை எடுக்கிறான். தன் ஆடுகளுக்காக தன்னையே அவன் அர்ப்பணிக்கிறான். நல்ல தண்ணீர், நல்ல மேய்ச்சல், பாதுகாப்பு, பராமரிப்பு யாவும் ஒரு நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்குக் கொடுக்கிறான். அதுபோலவே, தமக்குச் சாதகம் தேடும் கள்ளப் போதகர்களுக்கும், கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும் இந்த அர்ப்பணிப்பு இருக்குமா? ஆனால், இயேசுவோ, கூலிக்குத் தொழில் செய்ய வரவில்லை. அவர் தமது மந்தைக்காக தமது ஜீவனையே கொடுத்தவர். நம்மைப் பெயர் பெயராக அறிந்திருக்கிற அவரது சத்தத்தை நாம் அறிந்திருக்கிறோமா? மேய்த்தலைத் தன் தொழிலாகக் கொண்டிருந்த தாவீது, தன் ஆடுகளை நேசித்த ஒரு நல்ல மேய்ப்பனாக இருந்ததால், கர்த்தரைத் தன் மேய்ப்பனாகக் கண்டு அனுபவித்தார். அதன்விளைவே இந்த அற்புதமான 23ம் சங்கீதம்.

ஆனால், இன்று நல்ல மேய்ப்பர்களைப்போல இந்த உலகமும், உலகத் தாரும் நம்மை ஏமாற்றி, நல்ல மேய்ச்சலைத் தருகிறவர்கள்போல மாய்மாலம் பண்ணுகிறார்கள் என்பதைக்குறித்து நாம் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். ஒருவேளை அந்த மேய்ச்சல் நமக்கு சுகமாக சொகுசாக இருக்கலாம். ஆனால், நல்ல மேய்ப்பனின் கையில் நம்மை நடத்த கோலும், எதிரியை வீழ்த்தத் தடியும் இருக்கும். அன்புள்ள நமது மேய்ப்பன் கண்டிப்பும் உள்ளவர். நாம் எந்த மேய்ச்சலுக்குக் கீழ் நம்மைக் கொடுக்கப் போகிறோம்? நமக்காக ஜீவனையே தந்தவர் நம்மை என்றும் கைவிடவே மாட்டார்.

ஜெபம்: “நல்ல மேய்ப்பராகிய என் இயேசுவே, உமது குரலுக்குச் செவி கொடுத்து, உமக்கு என்றும் அடங்கி வாழ என்னைத் தருகிறேன். ஆமென்.”

ஜெபக்குறிப்பு: அக்டோபர் 30 புதன்

“… நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்றிருக்கிறாய்” (மாற்கு 10:51) என அன்போடே விசாரிக்கிற ஆண்டவர்தாமே பலவிதத் தேவைகளோடிருக்கிற 15 நபர்களுக்கு மனதுருகி அவர்களது நெருக்கங்களிலிருந்து விடுவித்திடவும், அற்புதங்களை செய்திடவும் ஜெபிப்போம்.

கிறிஸ்துவின் நீதி!

தியானம்: அக்டோபர் 30 புதன்; வாசிப்பு: பிலிப்பியர் 1:9-11

‘தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும்படி இயேசு
கிறிஸ்துவினால் வருகிற நீதியின் கனிகளால்
நிறைந்தவர்களாகி…’ (பிலிப்பியர் 1:10)

பவுலடியாரின் ஜெபங்கள் மிகவும் ஆழமானவை. விசுவாசிகளினிமித்தம் அவர் பற்பல காரியங்களுக்காக ஜெபித்தார். நமது அன்பானது அறிவிலும் எல்லா உணர்விலும் அதிகமதிகமாகப் பெருகுவதற்காக ஜெபித்தார். அப்போது தான் உத்தமமானவைகளை நாம் ஒப்புக்கொள்ளமுடியும். கிறிஸ்துவினால் வரும் நீதியின் கனிகளால் நிறையவேண்டுமென்று ஜெபித்தார். ஏனெனில், அதனாலேயே தேவனுக்கு மகிமையும் துதியும் உண்டாகும். நாம் கிறிஸ்துவின் வருகையின் நாளுக்கு என தூய்மையுள்ளவர்களாகவும் இடறலற்றவர்களாகவும், அதாவது தெளிவான அறிவும் நிச்சயமும் உள்ளவர்களாக இருப்பதற்காகவும் பவுல் ஜெபித்தார்.

இந்த ஆசீர்வாதங்களை நமது சுயநீதியினால் பெற்றிடவே முடியாது. சுயநீதி என்பது மனிதனுக்கு நல்லது என்று காணப்படும் நற்செயல்களால் அமைகின்ற நீதி. இது மாம்சசிந்தையின் மறுவடிவம். சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், இந்த நீதியானது தேவனுடைய பார்வையில் அழுக்கான கந்தையைப்போல் இருக்கிறது (ஏசா.64:6) என்று வேதம் சொல்லுகிறது. இயேசு கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்து, மரணத்தை வென்று உயிர்த்தார் என்பதை விசுவாசிப்பதால் உண்டாகும் நீதியின் கனிகளோ, ஆவியின் சிந்தைகளை அடிப்படையாகக்கொண்டது. சுயநலமற்றது. பிறர் நலமிக்கது. தீமைக்கு தீமை அல்ல; மாறாக, தீமைக்கு என்றும் நன்மை செய்வது.

தாவீதின்மீது பொறாமைகொண்டிருந்த சவுல், தாவீதைக் கொன்று போடுவதற்காகத் துரத்திக்கொண்டே இருந்தான். அந்த சமயத்தில், சவுலைக் கொல்லுவதற்கு இருமுறை தாவீதிற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், தாவீதோ, தேவநீதியைத் தரித்தவனாக, தீமைக்குத் தீமைசெய்யாமல், பழிவாங்காமல், உயிரோடே தப்பிப்போக சவுலை விட்டுவிட்டான். தாவீது இருந்த இடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம்? இன்று நாம் என்ன நிலைமையில் வாழுகிறோம்? தேவநீதியைக் குறித்து வல்லமையாய் பேசுகின்ற நமது வாழ்வில் கிறிஸ்துவுக்குள்ளான அந்த நீதியின் கனி வெளிப்படுகிறதா? அல்லது, இன்னமும் சுய நீதிக்கு இடமளித்து, தீமைக்கு தீமை செய்கிறோமா? நீதி என்பது தேவனுடைய பார்வையில் எது சரி என்பதையே குறிக்கின்றது. இந்த நீதியைத் தரித்துக்கொள்ள ஒரே வழி, இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டு, பாவங்கள் மன்னிக்கப்படுவதே ஆகும். சுயநீதியைக் களைந்தெறிந்து, கிறிஸ்துவினாலுண்டாகும் நீதியைத் தரித்துக்கொள்வோமாக. அப்போது தேவனுக்கும் மகிமை உண்டாகும். நாமும் கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்பரவானவர்களாக வாழலாம்.

ஜெபம்: “நீதியின் தெய்வமே, சுயநீதி கொண்ட என் வாழ்வை மன்னித்து, உமது குமாரனால் உண்டாகும் தேவநீதியில் பிழைத்திருக்க உதவிசெய்யும். ஆமென்.”