ஜெபக்குறிப்பு: நவம்பர் 30 சனி
“கர்த்தர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்கிறார்” (சங்.69:33) என்ற வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் கர்த்தர் நம்மோடிருந்து நம்முடைய விண்ணப்பங்களைக் கேட்டு தம்முடைய ஆறுதலையும் சமாதானத்தையும் கட்டளையிட்டபடியால் நன்றியோடு துதித்து ஸ்தோத்திரிப்போம்.
யோபு
தியானம்: நவம்பர் 30 சனி; வாசிப்பு: யோபு 19:21-29
“என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்றும்,
அவர் கடைசிநாளில்பூமியின்மேல் நிற்பார் என்றும்
நான் அறிந்திருக்கிறேன்.” (யோபு 19:25)
தேவ குமாரனாகிய இயேசுகிறிஸ்து பரலோகத்தை விட்டு, பாவம் நிறைந்த இவ்வுலகிற்கு வந்தார். மனிதனின் பாவங்களையெல்லாம் தன்மேல் சுமந்து பாடுபட்டு மரித்தார். மரித்தவர் மரணத்தை ஜெயமாக்கி, உயிரோடு எழுந்து, சிலநாட்கள் தாம் தெரிந்துகொண்டவர்களுக்குத் தரிசனமாகி, பின்னர் திரும்பவும் பிதாவின் வலதுபாரிசத்தில் அமரும்படியாகச் சென்றுவிட்டார். அவர் நீதியுள்ள நியாயாதிபதியாக திரும்பவும் வருவார். யோவான் தனது வெளிப்படுத்தலில், “நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்” (வெளி.21:1) “சிங்காசனத்தின் மேல் வீற்றிருந்தவர்…” என்றும், “ஜெயங்கொள்ளுகிறவன் எல்லாவற்றையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்” (வெளி.21:5,7) என்றும் எழுதி வைத்துள்ளார். இவையாவும் நாம் நன்கு அறிந்த சத்தியங்களே! இவை எழுதப்பட்டு நமது கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியிருந்தும், நாம் இவற்றை விசுவாசித்தும், அந்த விசுவாசத்திற்கேற்ப நாம் வாழுகிறோமா என்று நம்மை நாமே கேட்டுப் பார்ப்பது நல்லது.
ஆனால், ஆபிரகாம் காலத்தில் வாழ்ந்த யோபு பக்தன், கிறிஸ்துவை, அவரால் உலகிற்கு வந்த மீட்பை அறியாத ஒருவர். தன்னைக்குறித்து பரலோகில் நடந்த சம்பாஷணையை அறிந்திராத ஒருவர். அப்படியிருந்தும் தன்னுடைய மீட்பர் உயிரோடிருக்கிறார் என்ற விசுவாசத்தை அறிக்கையிட்டது எப்படி? அவருடைய காலத்தில் மீட்பர் என்றால், ஒரு அடிமையை அல்லது ஒரு விதவையை மீட்கின்ற ஒருவர் என்ற அறிவுதான் இருந்தது. அப்படியிருந்தும் யோபுவின் விசுவாசம் ஆச்சரியம்தான். தனக்கு நேர்ந்த அத்தனையையும் தேவன்தான் செய்தார் என்ற குறுகிய அறிவுதான் யோபுவுக்கு. வேதனைக்கும் சாவுக்கும் இடையில் தவித்திருந்த அந்தவேளையிலும் யோபு, தான் கர்த்தரைக் காண்பேன் என்றும், அதுவும் தன் சரீரத்தில் இருக்கும்போதே காண்பேன் என்றும் அறிக்கையிட்டது யோபுவின் விசுவாசத்தின் உச்சக்கட்டமாகும். உயிர்த்தெழுதலைக்குறித்த அறிவற்றிருந்த காலத்திலும், தனக்கு நேர்ந்த சகல அழிவிலும் தேவன் தனக்கு எதிராயிருந்தாரோ என்று எண்ணிய போதிலும், முடிவிலே தேவன் தம் பக்கம் நிற்பார் என்ற உறுதியான விசுவாசம் யோபுவுக்கு இருந்தது.
அன்று யோபுவுக்கு தெரியாமலிருந்த பல விஷயங்கள் இன்று நமக்குத் தெரியும். நாம் விசுவாசித்திருப்பவர்தான் யோபுவின் வாழ்வில் இரு மடங்கு கிரியை நடப்பித்தவர் என்பதுவும் நமக்குத் தெரியும். ஆகவே, நமக்கு முன்னே வைக்கப்பட்டிருக்கும் ஜீவ கிரீடத்தை நோக்கி விசுவாசத்தோடும், உறுதியோடும் ஓடக்கடவோம். தேவன் நமக்குத் துணை நிற்பார். நம்மை வழுவாது காத்தருளுவார்.
ஜெபம்: “பிதாவே, மேலான பாக்கியத்தை நான் பெற்றிட நீர் கிருபையாய் கரம் பிடித்து என்னை வழுவாது காத்தருளும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: நவம்பர் 29 வெள்ளி
நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா பெரிய பலனுமாயிருக்கிறேன். (ஆதி. 15:1)
ஜெபக்குறிப்பு: நவம்பர் 29 வெள்ளி
“…நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” (மாற்.16:15) என்ற வாக்கின்படி நம்முடைய தேசத்தில் இயங்கிவரும் அனைத்து மிஷனரி ஸ்தாபனங்களுக்காகவும், அதன் தலைவர்களுக்காகவும், மிஷனரி குடும்பங்களின் பாதுகாப்பிற்காகவும், ஒவ்வொரு ஊழியங்களின் தரிசனங்கள் நிறைவேற்றப்படுவதற்கும் ஜெபம் செய்வோம்.
மரியாள்
தியானம்: நவம்பர் 29 வெள்ளி; வாசிப்பு: லூக்கா 1:26-45
“விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச்
சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்…” (லூக்கா 1:45)
இரட்சகராம் இயேசு இவ்வுலகில் வந்து பிறப்பதற்காகத் தெரிந்துகொள்ளப்பட்ட பாத்திரந்தான் மரியாள். தேவதூதன் மரியாளை நோக்கி, “இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” (லூக்.1:31) என்று கூறினான். மரியாளோ, புருஷனை அறியாதவளாயிருந்தும், “இதோ நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது” என்று கூறி தேவ வார்த்தைக்குத் தன்னை ஒப்புக்கொடுத்தாள் என்று வாசிக்கிறோம். அப்படியே தேவவார்த்தை மாம்சமாகி, மரியாளின் வயிற்றில் உதித்தார். மரியாள் புருஷனை அறியாதிருந்தபோதும், தனக்குக் கூறப்பட்ட வார்த்தையை பூரண மாக விசுவாசித்தாள். இது மிகவும் கடினமானது. ஆனால், அவள் விசுவாசித்தாள். விசுவாசித்தபடியே ஆயிற்று. அவள் பாக்கியவதி என்று பெயர் பெற்றாள்.
தேவனுடைய வார்த்தை “உத்தமமானது” (சங்.33:4); “ஜீவனும் வல்லமையுமானது” (எபி.4:12). இந்த வார்த்தைகள் வாக்குத்தத்தங்களாக நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது, அவ் வாக்குத்தத்தங்களை நமது வாழ்க்கையில் ஏற்று, அவை நிறைவேறும் என்ற விசுவாசத்தோடு நாம் காத்திருக்கிறோமா? வேதத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குத்தத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவ் வாக்குத்தத்தங்கள், “..உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது” (அப்.2:39) என்று கூறப்பட்டுள்ளது. “வாக்குத்தத்தம் பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்” (எபி.10:23). விசுவாசப் பாதையில் முன்சென்ற அனைவரும், தமக்கு வாக்களித்தவரையும், அவருடைய வாக்குத் தத்தங்களையும் தம் வாழ்க்கையில் முற்றிலுமாய் ஏற்றுக்கொண்டு, அவ் வாக்குத்தத்தங்கள் தமது வாழ்க்கையில் நிறைவேறும்வரைக்கும் விசுவாசத்திலிருந்து விலகாது, உறுதியோடு அவரைப் பற்றிக்கொண்டதால் கர்த்தரின் பிள்ளைகளாகும் சுதந்திரத்தைப் பெற்றுக்கொண்டனர்.
நமது விசுவாச ஓட்டத்தை நாம் இறுதிவரை ஓடி முடிக்க கர்த்தர் நமக்கு கொடுத்திருக்கும் வாக்குத்தத்தங்களை, விசுவாசத்தோடு இறுகப் பற்றிக்கொள்வோமாக. வாக்களித்தவர் தாமே அதை நிறைவேற்றவும் வல்லவராயிருக்கிறார். “தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக் குறித்துத் தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லோரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்” (2பேது.3:9). நாமும் விசுவாசத்தோடு வாக்குத்தத்தங்களைப் பற்றிக் கொண்டு, அது நிறைவேற பொறுமையோடு காத்திருப்போமாக.
ஜெபம்: “பிதாவே, வாக்குத்தத்தங்களை விசுவாசத்தோடு ஏற்று, அவை நிறை வேறும்வரைக் காத்திருக்க கிருபை செய்யும். ஆமென்.”