ஜெபக்குறிப்பு: நவம்பர் 1 வெள்ளி
“..திடன்கொள்ளுங்கள்; உங்கள் கிரியைகளுக்குப் பலன் உண்டு” (2நாளா. 15:7) இவ்வாக்குப்படியே இம்மாதம் முழுவதும் நாம் மேற்கொள்ளும் கைகளின் பிரயாசங்களுக்கு நல்ல பலனை கர்த்தர் தந்தருளவும், தம்முடைய ஆவியினால் நம்மை வழிநடத்தவும் நம்மை அர்ப்பணித்து ஜெபிப்போம்.
நீ எங்கே இருக்கிறாய்?
தியானம்: நவம்பர் 1 வெள்ளி; வாசிப்பு: ஆதியாகமம் 3:1-24
“…தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு:
நீ எங்கே இருக்கிறாய் என்றார்.” (ஆதியாகமம் 3:9)
வேறுபட்ட மனநிலையோடு, இப் புதிய மாதத்தின் முதல் நாளிலே ஆறுதலையும், சமாதானத்தையும், வழிநடத்துதலையும் நாடி தேவசமுகத்தில் வந்துநிற்கும் தேவபிள்ளையே, “நீ எங்கே இருக்கிறாய்” என்று ஒரு மெல்லிய குரல் உன்னை அழைப்பது உன் காதுகளில் கேட்கிறதா? நீ என்ன பதில் சொல்லுவாய்? ‘இதோ நான் படுக்கையில் இருக்கிறேன்’ என்பாயோ; ‘நான் வேலையாயிருக்கிறேன்’ என்பாயோ? அல்லது, ‘ஒளித்திருக்கிறேன்’ என்பாயோ? அந்தக் கேள்வியைக் கேட்பவர் எதிர்பார்க்கும் பதில் இவையல்ல. கிறிஸ்துவுக்குள்ளாக நீ ஆரம்பித்த “விசுவாச ஓட்டத்தில்” இப்போது எங்கேயிருக்கிறாய் என்பதையே ஆண்டவர் இன்று நம்மைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு நமது பதில் என்ன? நமது ஆவிக்குரிய வாழ்வில் நாம் எங்கே இருக்கிறோம்?
கிறிஸ்துவுக்குள்ளான விசுவாச ஓட்டம் என்பது இலகுவானதொன்றல்ல. கிறிஸ்துவைத் தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் ஒருவன், நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்க்கையை விடுத்து, ஒருநாள் நித்திய பரலோக ராஜ்ஜியத்தைச் சென்றடைகிறான் என்பது நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையாகும். இவ் வோட்டத்தின் நிறைவானது, நாம் ஓட்டத்தை ஆரம்பித்த நாளையோ, அல்லது ஓடிவிட்ட சில காலத்தையோ அல்லாமல், ஓட்டத்தின் இலக்கை வெற்றியோடு சென்றடைவதிலேயே தங்கியுள்ளது. ஆனால், இந் நிறைவை அடையும் முன்பாக, ஓடு பாதையிலே அநேக கஷ்டங்கள், நஷ்டங்கள், பாடுகள், நெருக்கங்கள், துன்பங்கள், துயரங்கள், கல்லுகள், முள்ளுகள், நோய்கள், சோர்வுகள், தனிமை போன்ற பல சூழ்நிலைகளை நிச்சயமாகவே சந்திக்க நேரிடுகிறது. அப்போது நமது விசுவாச ஓட்டத்திலே தாமதங்களும், பின்னடைவும் ஏற்படுவதைத் தவிர்ப்பதும் தடுப்பதும் கடினமே.
இன்றைய நாளிலே நாம் சற்றுத் தரித்து நின்று, நமது நிலைமையை ஆராய்ந்து பார்ப்பது நல்லது. முதலாவது, சரியான ஓடுபாதையில் நாம் நிற்கிறோமா? தளர்ந்து தாமதமாக ஓடுவோமேயானால், அதற்குரிய காரணம் என்ன? நமது இலக்கை மறந்து, சூழ்நிலைகளை நோக்கியிருப்பது ஏன்? விசுவாச ஓட்டத்தில் பின்னடைந்து காணப்படுகிறோமா? மாயையான இவ்வுலக வாழ்வு நமது விசுவாசக் கண்களை மயக்கியது ஏன்? சற்று ஆராய்ந்து பார்ப்போம். விசுவாச மார்க்கத்தாரின் தந்தையாகிய ஆபிரகாமின் வாழ்வின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி ஓட ஒப்புக்கொடுத்திருந்தும், இன்று பின்னடைந்திருந்தால், மறுபடியும் பெலனடைந்து, விட்ட இடத்திலிருந்து மறுபடியும் நமது ஓட்டத்தைத் தொடருவோமாக. விசுவாசத்தை நமக்குள் தொடக்கியவர்தாமே இறுதிவரை நம்மை நிச்சயம் நடத்துவார். அவருடைய கரங்களில் நம்மை தருவோமாக!
ஜெபம்: “என் ஆண்டவரே, கிறிஸ்துவுக்குள் தொடங்கிய விசுவாச ஓட்டத்தை நான் வெற்றியோடே ஓடி முடிக்க எனக்கு உம் பெலன் ஈந்தருளும். ஆமென்.”
அர்ப்பணிப்பு
அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2013)
– Dr.உட்ரோ குரோல்
“எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற் காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது”(ஓசியா 6:4).
அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு, ஒரு காரியத்துக்கு முழுவதுமான ஒப்படைப்பு மற்றும் ஒரு நபருக்கு உண்மையாக இருத்தல் என்று பொருள்படும். நம்மை அர்ப்பணித்திருக்கிறோம் என்று நாம் யாவரும் கூறினாலும், ஒருசிலரே அதனை செயலில் காட்டுகிறார்கள். அநேக மக்கள் உள்ளூர் சபைக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதாகக் கூறுவர். ஆயினும் தங்களது ஓய்வுநேரத்தில் கூட ஆலயத்துக்குச் செல்லமாட்டார்கள். சிலர் தங்களது விவாக உறுதிமொழியில் அர்ப்பணிப்பும் ஒப்படைப்பும் செய்திருந்தாலும் அவைகளை விரைவில் முறித்து விடுகிறார்கள். அரைகுறையான அர்ப்பணிப்பு செய்துள்ள ஒரு கிறிஸ்தவனைவிட தேவனுக்குத் துயரம் தருவது எதுவும் இல்லை.
பழைய ஏற்பாட்டில் அர்ப்பணிப்பற்ற காரியத்துக்கு ஒரு சரியான உதாரணத்தை ஓசியா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் நாம் காணலாம். ஓசியா என்பதற்கு இரட்சிப்பு என்று பொருள். இவர் ஆமோஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் வாழ்ந்த வடக்கு நாட்டின் தீர்க்கதரிசியாவார். அழுகையின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் எரேமியா தீர்க்கதரிசி தென்னாட்டில் ஊழியம் செய்துவந்தார். இவரது தீர்க்கதரிசனம் அப். யோவானைப் போன்று மிகவும் அமைதியானவை.
இஸ்ரவேல் தேசத்துக்கு அவர்களது ஆன்மீக விக்கிரகாராதனையைப் பற்றி உயிருள்ள எடுத்துக்காட்டை அளிப்பதே ஓசியாவின் தீர்க்கதரிசன ஊழியமாகும். ஓசியா தனது சொந்த துயரத்தையே இஸ்ரவேல் நாட்டின் சோகமாக உருவகித்துக் காட்டுகிறார். இஸ்ரவேல் மக்களின் அர்ப்பணிப்பற்ற வாழ்வும் துரோகமும் அவரது மனைவியின் துரோகத்துடன் ஒப்பிடும் பொழுது ஒன்றுமில்லை. தனது ஒழுக்கக்கேடான மனைவியை மனந்திரும்ப அழைத்ததுபோல ஓசியாவும் இஸ்ரவேல் நாட்டை தேவனிடம் மனந்திரும்ப மன்றாடினார்.
இஸ்ரவேல் மக்களின் பதட்ட மில்லாத வாழ்வைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்வதற்காக, “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்து போகிறது” (ஓசியா 6:4) என்று உரைத்தார். இஸ்ரவேலின் அர்ப்பணிப்பு ஆழமற்றதாயும் அம்மனிதர்களின் பக்தி காலை மேகத்தைப் போலவும் அதிகாலை சூரிய ஒளியில் மறைந்து போகும் பனித்துளி போன்றும் உள்ளது என்று ஒப்பிடுகிறார். தேவனுக்குத் தங்களை அரைகுறையாக அர்ப்பணித்து அதில் திருப்தியடையும் மக்களைப்பற்றி அவர் மகிழ்வடைவதில்லை. இஸ்ரவேல் இன்னும் அந்த பாடத்தைப் படித்துக் கொள்ளவில்லை. இந்த 21ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் அதனைக் கற்றுக்கொள்ளவில்லை.
ஒரு கடற்கரையின் ஓரத்தில் ஒரு சிறிய துறைமுகப் பட்டணம் இருந்தது. உக்கிரமான வானிலையால் அங்கு அநேக கப்பல்கள் பாறைகளில் மோதி உடைந்தன. ஆபத்தில் இருந்த கப்பற்படையினருக்கு உதவிசெய்த மீட்புக்குழுவினரால் அந்த பட்டணம் பிரபலம் அடைந்தது. அபாய சங்கின் ஒலி கேட்டதும் விபத்து நடந்த இடத்துக்கு அக்குழு விரைந்துசென்று மாலுமிகள் மூழ்கி விடாதவாறு தங்களுடைய உயிரையும் உடலையும் பணயம் வைத்து அவர்களைக் காப்பாற்றுவது இவர்களது பணியாயிருந்தது. காலங்கள் கடந்துசெல்ல, அச்சிறு பட்டணத்து மக்கள் நிதி திரட்டி கடற்கரை ஓரத்தில் ஒரு மீட்பு நிலையத்தை ஆரம்பித்தனர். இது அக்குழுவினரின் மீட்புபணியை எளிதாக்கியதோடு அவர்களது சிரமத்தைக் குறைத்தது. நாளடைவில் மற்ற இடங்களில் உள்ள மீட்பு நிலையத்தைப் போலவே மேலும் சில வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்கள் பெருக்கிக் கொண்டனர். மேலும் சில வருடங்களில் அது ஒரு சமுதாயக்கூடத்தைப்போல மாறிவிட்டது. மக்கள் கேளிக்கைக்காகவும் ஓய்வெடுக்கவும் அங்குகூட ஆரம்பித்தனர். கப்பல்கள் பாறையில் மோதின, அபாய சங்கு ஒலிக்கத்தான் செய்தன; ஆனால் ஒருவரும் அதற்கு செவிகொடுக்கவில்லை. தங்களுடைய வசதிகளை விட்டு மீட்புப்பணிக்குச் செல்ல அவர்களுக்கு விருப்பமில்லை. ஆபத்திலிருக்கும் மாலுமிகளை மீட்கச் செல்லும் அர்ப்பணிப்பைவிட அவர்களுக்கு அந்நிலையத்தின் வசதிகள் மனநிறைவைத் தந்தன.
இந்த அர்ப்பணித்த மீட்புக்குழு வைப்பற்றி நாம் நினைப்பது போலவே, ஓசியா தீர்க்கதரிசியும் இஸ்ரவேலரைப்பற்றி நினைத்தார். இன்றும் அநேக கிறிஸ்தவர்களும் தேவனை அரைகுறை மனதுடனேயே பின்பற்றுகின்றனர். ஓசியாவின் மனைவியைப்போன்றே இன்றைய கிறிஸ்தவர்களும் உலகை சிநேகித்து வாழ்கின்றனர். ‘நாட்டின் கிறிஸ்தவ சங்கம்’ என்றே இன்றைய கிறிஸ்தவம் செயல்படுகிறது. உலகத்தின் ஐசுவரியத்தை நம்பி தேவனுடைய நன்மையில் சுகமாகக் குளிர் காய்கின்றனர். பாவத்தில் அழிந்துபோகும் ஆத்துமாவைப் பற்றியோ, பிதாவாகிய தேவனுக்கு தங்களை அர்ப்பணிப்பதைப் பற்றியோ அவர்களுக்கு சிறிதேனும் அக்கறையில்லை.
இன்றும் நம்மைப் பார்த்து “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற் காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது” என்று ஓசியா தீர்க்கதரிசி கூறுவதை நாம் கேட்கமுடிகிறது.
அர்ப்பணிப்பில்லாத கிறிஸ்தவர்களின் விரைந்தோடும் நற்பணிகள் பயனற்றவை. அது பிரதான சாலையில் தற்காலிக ஓய்விடம் தரும் மனநிறைவு போன்றது.
அதிகாலை கீதம்:
என்னை இரட்சிக்க தம் குமாரனைத்
தந்த என் தேவனை மகிமைப்படுத்துவதே
இவ்வுலகில் எனக்குத் தரப்பட்ட பொறுப்பு.
மொழியாக்கம்: Sis.அகஸ்டா மங்களதுரை
அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(4) மலையாள மொழிபெயர்ப்பு
இந்தியாவின் மேற்குக்கரையோர மாநிலமான கேரளாவில் பேசப்படும் மலையாள மொழியில், தமிழ் மற்றும் சிரிய மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் இருந்து 4 சுவிசேஷங்களும் 1807இல் மொழிபெயர்க்கப்பட்டன. திம்மப்பா பிள்ளை, பிலிப்போஸ் எனும் இருவராலும் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகங்கள், 1811ஆம் ஆண்டு திம்மப்பா பிள்ளையினால் அச்சிடப்பட்டன. 1813இல், திம்மப்பா பிள்ளை புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழி பெயர்த்திருந்தார். எனினும், இந்த மொழிபெயர்ப்பு உடனடியாக அச்சிடப்படவில்லை.
முழு வேதாகமத்தையும் மலையாளத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவது பற்றி கோட்டயம் எனுமிடத்தில் பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் 1817ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபை மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த பெஞ்சமின் பெய்லி என்பவர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக 8 சிறிய மொழிப்போதகர்களும் இருந்தனர். 1825இல் இவர் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷம் சென்னை வேதாகமக் கிளைச்சங்கத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1829 இல் கோட்டயம் எனுமிடத்திலிருந்த மிஷன் அச்சகத்தில் பெஞ்சமின் பெய்லி மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு அச்சிடப்பட்டது.
பெஞ்சமின் பெய்லியின் மொழி பெயர்ப்பு கேரளாவின் தென் பகுதியில் வாழ்ந்த மலையாள மக்களுக்கே பொருத்தமானது என்றும், அது கேரளாவின் வடபகுதி மலையாள மக்களுக்கு பொருத்தமற்ற மொழி நடையில் இருக்கிறது என்றும் பலர் கருத முற்பட்டமையினால், அச்சமயம் கேரளாவின் வடபகுதியிலிருந்த கிழக்கிந்திய கம்பனியினரின் வழிபாட்டு மண்டபத்துக் குருவாக இருந்த ஸ்பிரிங் என்பவர் 1822இல், கேரளாவின் வடபகுதி மக்களுக்காக சமஸ்கிருத மொழியிலிருந்து வேதாகமத்தை மலையாளத்திற்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1823ஆம் ஆண்டு ஸ்பிரிங் இங்கிலாந்துக்குச் சென்றமையினால் அவரது மொழி பெயர்ப்பு அச்சிடப்பட்ட புத்தகமாகவில்லை. அத்தோடு 1825 இல், ஒரு மொழியில் இரு மொழிபெயர்ப்புகள் இருக்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டதோடு, அவ்வாண்டு பெஞ்சமின் பெய்லியின் மொழிபெயர்ப்பே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1829இல் சென்னை வேதாகமக் கிளைச் சங்கத்தினால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அவ்வாண்டு பெஞ்சமின் பெய்லியின் பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலைகளும் பூர்த்தியடைந்தன. 1841இல், இம்மொழிபெயர்ப்பு சென்னை வேதாகமக் கிளைச்சங்கத்தினால் அச்சிடப்பட்டது. 1854இல் கேரளாவின் வடபகுதி மக்களின் தேவை கருதி மலையாள புதிய ஏற்பாட்டின் இன்னுமொரு மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது. இது லூத்தரன் மிஷனைச் சேர்ந்த எச்.குன்டர்ட் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டதாகும். 1859இல் பெஞ்சமின் பெய்லியின் பழைய ஏற்பாட்டின் திருத்தப் பதிப்பு வெளிவந்தது.
1871இல் மலையாள மக்கள் அனைவரும் உபயோகிக்கக்கூடிய ஒரு வேதாகமத்தைத் தயாரிப்பதற்காகச் சென்னை வேதாகமச் சங்கக் கிளை ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவினர் கிரேக்க, ஆங்கில, தமிழ், சிரிய மற்றும் பெஞ்சமின் பெய்லியின் மலையாள மொழி பெயர்ப்பு என்பவற்றின் உதவியுடன் 1880இல் திருத்தப்பட்ட புதிய மலையாள புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். லூத்தரன் மிஷனின் பேசல் அச்சகம் 1881இல், திருத்தப்பட்ட பழைய ஏற்பாட்டின் கவிதைப் புத்தகங்களையும், 1888இல் தீர்க்க தரிசனப் புத்தகங்களையும் அச்சிட்டு வெளியிட்டது.
பெஞ்சமின் பெய்லி மொழி பெயர்த்த பழைய ஏற்பாடு, ஆங்கிலத்தில் வெளிவந்த திருத்தப் பதிப்புக்கு ஏற்ற வண்ணமாகத் திருத்தப்பட்டு 1910இல் வெளியிடப்பட்டது. 1960இல் மறுபடியுமாக மலையாள வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சபையினர் லத்தீன் வேதாகமத்திலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்த சுவிசேஷப் புத்தகங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1905இல் வெளிவந்தன. அவர்கள் மொழிபெயர்த்த மலையாள மொழி புதிய ஏற்பாடு 1951இல் வெளியிடப்பட்டது.
(5) தெலுங்கு மொழிபெயர்ப்பு
இந்திய மாநிலங்களுள் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் பேசப்படும் தெலுங்கு மொழியில் ஆரம்ப காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வேதப்பிரதிகள் அனைத்தும் அழிந்து விட்டன. இந்தியாவில் மிஷனரியாகப் பணியாற்றிய ஜெர்மன் தேசத்தவரான பெஞ்சமின் சூள்ட்ஸ் என்பவர் 1727 இல் புதிய ஏற்பாட்டையும் 1732 இல் பழைய ஏற்பாட்டையும் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அவர் மொழிபெயர்த்த வேதப்பிரதிகள் அச்சிடப்படுவதற்காக ஹலேக்கு அனுப்பப்பட்டு அங்கு காணாமற் போய்விட்டன.
அதன் பின்னர் 1795 இல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டொட்ஸ் என்பவர், கிழக்கிந்தியக் கம்பனியில் பணிபுரியும் காலத்தில் வேதாகமத்தை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்தார். எனினும் அவர் சடுதியாக மரணமடைந்தமையினால், அவர் மொழிபெயர்த்திருந்த வேதாகமப் பிரதிகள், கிழக்கிந்தியக் கம்பனியில் வேலை செய்தவர்களால், தேவையற்ற காகிதங்கள் என கருதப்பட்டு எரிக்கப்பட்டன. அதேசமயம் 1805இல், செரம்பூரிலிருந்த மிஷனரிகள் புதிய ஏற்பாட்டைத் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினர். 1811இல் அதன் அச்சுவேலைகளும் ஆரம்பமாகின. எனினும் 1812இல் செரம்பூர் அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அச்சிடப்பட்ட பக்கங்களும் மூலப் பிரதியும் எரிந்து சாம்பலாகிவிட்டன.
1804இல் விசாகபட்டணத்தில் இருந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரான், அகஸ்ட்டஸ் டெஸ்கிராஞ்சஸ் என்போர், தெலுங்கு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கும் வேலையை ஆரம்பித்தனர். எனினும் 1808இல் ஜார்ஜ் க்ரான் மரித்தமையினால், அகஸ்ட்டஸ் டெஸ் கிராஞ்சஸ், ஆனந்தராய் எனும் பெயருடைய இரட்சிக்கப்பட்ட ஒரு பிராமணரது உதவியோடு மொழி பெயர்ப்பு வேலைகளை 1810ஆம் ஆண்டுவரை தொடர்ந்திட்டார். அவ்வாண்டு இவர்களிருவரும் புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் வரை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருந்தனர். அவ்வாண்டு ஜூன் மாதம் டெஸ்கிராஞ்சஸ் மரணமடைந்தார். 1812இல் இவர்கள் மொழி பெயர்த்த மத்தேயு, மாற்கு, யோவான் எனும் சுவிசேஷங்கள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டன. அவ்வாண்டு விசாக பட்டணத்துக்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த எட்வர்ட் பிரிட்ச்செட் ஆனந்தராயரது உதவியோடு புதிய ஏற்பாட்டில் மிகுதிப் பகுதிகளை மொழிபெயர்த்தார். இவர்கள் பழைய ஏற்பாட்டில் பெரும்பாலான பகுதிகளையும் தெலுங்கில் மொழி பெயர்த்தனர். 1844இல் ஒரு மொழிபெயர்ப்புக் குழு நியமிக்கப்பட்டது. இதன் பயனாக 1854இல் தெலுங்கு மொழியில் பழைய ஏற்பாடு வெளிவந்தது.
1856இல் இக்குழுவினது தெலுங்கு மொழி புதிய ஏற்பாடும் வெளிவந்தது. 1857 இன் பழைய ஏற்பாடு திருத்தி வெளியிடப்பட்டது. புதிய ஏற்பாட்டின் திருத்தப்பதிப்பு 1860இல் வெளியிடப்பட்டதோடு, 1857இன் பழைய ஏற்பாட்டுத் திருத்தப் பதிப்பும் அதனோடு சேர்க்கப்பட்டு தெலுங்கு மொழியின் முதலாவது முழுவேதாகமமாக வெளிவந்தது. 1878இல் தெலுங்கு புதிய ஏற்பாடு மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 1884 இல் முழு வேதாகமத்தினதும் திருத்தப் பதிப்பு வெளிவந்தது.
மறுபடியுமாக முழுவேதாகமமும் திருத்தப்பட்டு 1904இல் வெளியிடப்பட்டது. இது மறுபடியு மாக 1911இல் திருத்தப்பட்டது. 1953இல் இதன் இன்னுமொரு திருத்தப் பதிப்பு வெளிவந்தது.
(தொடரும்)
வாசகர்கள் பேசுகிறார்கள்
(நவம்பர்-டிசம்பர் 2013)
1. அனுதினமும் கிறிஸ்துவுடன் மிகவும் பிரயோஜனமாக உள்ளது. தினமும் காலையில் நாங்கள் இருவருமாக குடும்ப ஜெபத்தில் உபயோகித்து, ஜெபக் குறிப்புகளுக்காக கருத்தாய் ஜெபிக்கிறோம். நன்றி. தொலைகாட்சி நிகழ்ச்சி “சத்தியவசன” நிகழ்ச்சிகளை கூடியமட்டும் தவறாது கேட்டு பயன்பெறுகிறோம்.
Mr.Appadurai, Srivilliputhur.
2. என் மகனுடைய 10ஆம் வகுப்பு தேர்வுக்காக தங்களுக்குக் கடிதம் எழுதியிருந்தேன். நீங்களும் என் மகனுக்காக அதிகமாக ஜெபித்துள்ளீர்கள். கர்த்தர் ஜெபத்தைக் கேட்டு, தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறக் கிருபை செய்தார். அவர் வல்ல நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். ஜெபித்த உங்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். மிகவும் ஞானத்தில் குறைவான மகனை கர்த்தர் ஆசீர்வதித்தார்.
Mrs.Angelin Jose, Chennai.
3. அன்பு சகோதரி சாந்திபொன்னுவின் தியானக் குறிப்புகள் “அனுதினமும் தேவனுடன்” புத்தகத்தில் ஆவிக்குரிய வாழ்விற்கு மிகவும் பிரயோஜனமாயிருக்கிறது. அவர்களுடைய ஒளிவு, மறைவு இல்லாமல் வெளியரங்கமாக, தைரியமாக கர்த்தருடைய வார்த்தைகளை எடுத்துச்சொல்வது வாழ்க்கைக்கு மிகப் பிரயோஜனமாக இருக்கிறது. கர்த்தர் தாமே அந்த ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக.
Mr.Nelson Ross, Mumbai.
4. We Listen your TV Programs often and get benefited in some areas. Now we would like to be one of the Visuvasa Pankalars. Thanking you.
Mr.N.Abraham Lincoln,Chennai.
5. நான் சத்தியவசன விசுவாசப் பங்காளராக உள்ளேன். தாங்கள் அனுப்பும் பத்திரிக்கைகளையும் தவறாமல் பெற்றுவருகிறோம். தொலைகாட்சி நிகழ்ச்சியை குடும்பமாகப் பார்க்கிறோம். ஊழியங்கள் வளரட்டும். பரமனின் பணியை விரைவாய் செய்துவருகிற சத்தியவசன ஊழியங்கள் இனியும் விரைவாய் நம் பாரத தேசம் எங்கும் பரந்துகிடக்கிற ஜனங்களைத் தேடி கண்டுபிடிக்கட்டும். அனைவரும் இயேசுவே தெய்வம், இயேசுவே இரட்சகர் என முழங்கட்டும். ஊழியங்களுக்காக அனுதினமும் ஜெபிக்கிறேன்.
Mr.K.Yovan, Coimbatore.
6. சத்தியவசனம் அனுதின தியானம் மற்றும் வெளியீடுகளைப் படிக்கிறோம். பயனுள்ளதாக இருக்கிறது. ஜெபக் குறிப்புகளுக்காகவும் ஜெபிக்கிறோம். TV நிகழ்ச்சிகளும் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. ஆன்மீக வாழ்வுக்குப் பிரயோஜனமாக இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம்.
Mr.D.Thangaiah, Kanchipuram.
7. அனுதினமும் கிறிஸ்துவுடன் புத்தகம் அனுதினமும் முறையாக வேதத்தை வாசிக்கவும் தியானப்பகுதியை வாசித்து வாழ்க்கையை கிறிஸ்துவுக்குள்ளாக வாழ்ந்து ஆசீர்வதிக்கப்படவும் பிரயோஜனமுள்ளதாக இருப்பதால் நன்றிசெலுத்துகிறேன். ஊழியங்களுக்காகவும், தியானங்களை எழுதுகிற சகோதர, சகோதரிகளுக்காகவும் ஜெபிக்கிறேன்.
Mrs.E.Jeyaseeli Edward, Madurai.