அனைத்துலக மொழிபெயர்ப்புப் பணிகள்
புனித வேதாகமத்தின் வரலாறு (நவம்பர்-டிசம்பர் 2013)
அத்தியாயம்-9
சகோ.M.S.வசந்தகுமார்
(4) மலையாள மொழிபெயர்ப்பு
இந்தியாவின் மேற்குக்கரையோர மாநிலமான கேரளாவில் பேசப்படும் மலையாள மொழியில், தமிழ் மற்றும் சிரிய மொழிபெயர்ப்பு வேதாகமங்களில் இருந்து 4 சுவிசேஷங்களும் 1807இல் மொழிபெயர்க்கப்பட்டன. திம்மப்பா பிள்ளை, பிலிப்போஸ் எனும் இருவராலும் மொழிபெயர்க்கப்பட்ட இப்புத்தகங்கள், 1811ஆம் ஆண்டு திம்மப்பா பிள்ளையினால் அச்சிடப்பட்டன. 1813இல், திம்மப்பா பிள்ளை புதிய ஏற்பாடு முழுவதையும் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழி பெயர்த்திருந்தார். எனினும், இந்த மொழிபெயர்ப்பு உடனடியாக அச்சிடப்படவில்லை.
முழு வேதாகமத்தையும் மலையாளத்தில் மொழி பெயர்த்து வெளியிடுவது பற்றி கோட்டயம் எனுமிடத்தில் பிரித்தானியரால் ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியில் 1817ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சபை மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த பெஞ்சமின் பெய்லி என்பவர் இப்பணிக்காக நியமிக்கப்பட்டார். இவருக்கு உதவியாக 8 சிறிய மொழிப்போதகர்களும் இருந்தனர். 1825இல் இவர் மொழிபெயர்த்த மத்தேயு சுவிசேஷம் சென்னை வேதாகமக் கிளைச்சங்கத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்டது. 1829 இல் கோட்டயம் எனுமிடத்திலிருந்த மிஷன் அச்சகத்தில் பெஞ்சமின் பெய்லி மொழிபெயர்த்த புதிய ஏற்பாடு அச்சிடப்பட்டது.
பெஞ்சமின் பெய்லியின் மொழி பெயர்ப்பு கேரளாவின் தென் பகுதியில் வாழ்ந்த மலையாள மக்களுக்கே பொருத்தமானது என்றும், அது கேரளாவின் வடபகுதி மலையாள மக்களுக்கு பொருத்தமற்ற மொழி நடையில் இருக்கிறது என்றும் பலர் கருத முற்பட்டமையினால், அச்சமயம் கேரளாவின் வடபகுதியிலிருந்த கிழக்கிந்திய கம்பனியினரின் வழிபாட்டு மண்டபத்துக் குருவாக இருந்த ஸ்பிரிங் என்பவர் 1822இல், கேரளாவின் வடபகுதி மக்களுக்காக சமஸ்கிருத மொழியிலிருந்து வேதாகமத்தை மலையாளத்திற்கு மொழிபெயர்க்கத் தொடங்கினார். 1823ஆம் ஆண்டு ஸ்பிரிங் இங்கிலாந்துக்குச் சென்றமையினால் அவரது மொழி பெயர்ப்பு அச்சிடப்பட்ட புத்தகமாகவில்லை. அத்தோடு 1825 இல், ஒரு மொழியில் இரு மொழிபெயர்ப்புகள் இருக்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டதோடு, அவ்வாண்டு பெஞ்சமின் பெய்லியின் மொழிபெயர்ப்பே எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இது 1829இல் சென்னை வேதாகமக் கிளைச் சங்கத்தினால் அச்சிட்டு வெளியிடப்பட்டது. அவ்வாண்டு பெஞ்சமின் பெய்லியின் பழைய ஏற்பாட்டு மொழிபெயர்ப்பு வேலைகளும் பூர்த்தியடைந்தன. 1841இல், இம்மொழிபெயர்ப்பு சென்னை வேதாகமக் கிளைச்சங்கத்தினால் அச்சிடப்பட்டது. 1854இல் கேரளாவின் வடபகுதி மக்களின் தேவை கருதி மலையாள புதிய ஏற்பாட்டின் இன்னுமொரு மொழி பெயர்ப்பு வெளியிடப்பட்டது. இது லூத்தரன் மிஷனைச் சேர்ந்த எச்.குன்டர்ட் என்பவரினால் மொழி பெயர்க்கப்பட்டதாகும். 1859இல் பெஞ்சமின் பெய்லியின் பழைய ஏற்பாட்டின் திருத்தப் பதிப்பு வெளிவந்தது.
1871இல் மலையாள மக்கள் அனைவரும் உபயோகிக்கக்கூடிய ஒரு வேதாகமத்தைத் தயாரிப்பதற்காகச் சென்னை வேதாகமச் சங்கக் கிளை ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவினர் கிரேக்க, ஆங்கில, தமிழ், சிரிய மற்றும் பெஞ்சமின் பெய்லியின் மலையாள மொழி பெயர்ப்பு என்பவற்றின் உதவியுடன் 1880இல் திருத்தப்பட்ட புதிய மலையாள புதிய ஏற்பாட்டை வெளியிட்டனர். லூத்தரன் மிஷனின் பேசல் அச்சகம் 1881இல், திருத்தப்பட்ட பழைய ஏற்பாட்டின் கவிதைப் புத்தகங்களையும், 1888இல் தீர்க்க தரிசனப் புத்தகங்களையும் அச்சிட்டு வெளியிட்டது.
பெஞ்சமின் பெய்லி மொழி பெயர்த்த பழைய ஏற்பாடு, ஆங்கிலத்தில் வெளிவந்த திருத்தப் பதிப்புக்கு ஏற்ற வண்ணமாகத் திருத்தப்பட்டு 1910இல் வெளியிடப்பட்டது. 1960இல் மறுபடியுமாக மலையாள வேதாகமத்தைத் திருத்தி மொழிபெயர்ப்பதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டது. ரோமன் கத்தோலிக்க சபையினர் லத்தீன் வேதாகமத்திலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்த்த சுவிசேஷப் புத்தகங்களும் அப்போஸ்தலர் நடபடிகளும் 1905இல் வெளிவந்தன. அவர்கள் மொழிபெயர்த்த மலையாள மொழி புதிய ஏற்பாடு 1951இல் வெளியிடப்பட்டது.
(5) தெலுங்கு மொழிபெயர்ப்பு
இந்திய மாநிலங்களுள் ஒன்றான ஆந்திரப் பிரதேசத்தில் பேசப்படும் தெலுங்கு மொழியில் ஆரம்ப காலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட வேதப்பிரதிகள் அனைத்தும் அழிந்து விட்டன. இந்தியாவில் மிஷனரியாகப் பணியாற்றிய ஜெர்மன் தேசத்தவரான பெஞ்சமின் சூள்ட்ஸ் என்பவர் 1727 இல் புதிய ஏற்பாட்டையும் 1732 இல் பழைய ஏற்பாட்டையும் தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருந்தார். அவர் மொழிபெயர்த்த வேதப்பிரதிகள் அச்சிடப்படுவதற்காக ஹலேக்கு அனுப்பப்பட்டு அங்கு காணாமற் போய்விட்டன.
அதன் பின்னர் 1795 இல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் டொட்ஸ் என்பவர், கிழக்கிந்தியக் கம்பனியில் பணிபுரியும் காலத்தில் வேதாகமத்தை தெலுங்கு மொழியில் மொழி பெயர்த்தார். எனினும் அவர் சடுதியாக மரணமடைந்தமையினால், அவர் மொழிபெயர்த்திருந்த வேதாகமப் பிரதிகள், கிழக்கிந்தியக் கம்பனியில் வேலை செய்தவர்களால், தேவையற்ற காகிதங்கள் என கருதப்பட்டு எரிக்கப்பட்டன. அதேசமயம் 1805இல், செரம்பூரிலிருந்த மிஷனரிகள் புதிய ஏற்பாட்டைத் தெலுங்கு மொழியில் மொழி பெயர்க்கத் தொடங்கினர். 1811இல் அதன் அச்சுவேலைகளும் ஆரம்பமாகின. எனினும் 1812இல் செரம்பூர் அச்சகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், அச்சிடப்பட்ட பக்கங்களும் மூலப் பிரதியும் எரிந்து சாம்பலாகிவிட்டன.
1804இல் விசாகபட்டணத்தில் இருந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த ஜார்ஜ் க்ரான், அகஸ்ட்டஸ் டெஸ்கிராஞ்சஸ் என்போர், தெலுங்கு மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்க்கும் வேலையை ஆரம்பித்தனர். எனினும் 1808இல் ஜார்ஜ் க்ரான் மரித்தமையினால், அகஸ்ட்டஸ் டெஸ் கிராஞ்சஸ், ஆனந்தராய் எனும் பெயருடைய இரட்சிக்கப்பட்ட ஒரு பிராமணரது உதவியோடு மொழி பெயர்ப்பு வேலைகளை 1810ஆம் ஆண்டுவரை தொடர்ந்திட்டார். அவ்வாண்டு இவர்களிருவரும் புதிய ஏற்பாட்டில் 1 கொரிந்தியர் வரை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்திருந்தனர். அவ்வாண்டு ஜூன் மாதம் டெஸ்கிராஞ்சஸ் மரணமடைந்தார். 1812இல் இவர்கள் மொழி பெயர்த்த மத்தேயு, மாற்கு, யோவான் எனும் சுவிசேஷங்கள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டன. அவ்வாண்டு விசாக பட்டணத்துக்கு வந்த லண்டன் மிஷனரி சங்கத்தைச் சேர்ந்த எட்வர்ட் பிரிட்ச்செட் ஆனந்தராயரது உதவியோடு புதிய ஏற்பாட்டில் மிகுதிப் பகுதிகளை மொழிபெயர்த்தார். இவர்கள் பழைய ஏற்பாட்டில் பெரும்பாலான பகுதிகளையும் தெலுங்கில் மொழி பெயர்த்தனர். 1844இல் ஒரு மொழிபெயர்ப்புக் குழு நியமிக்கப்பட்டது. இதன் பயனாக 1854இல் தெலுங்கு மொழியில் பழைய ஏற்பாடு வெளிவந்தது.
1856இல் இக்குழுவினது தெலுங்கு மொழி புதிய ஏற்பாடும் வெளிவந்தது. 1857 இன் பழைய ஏற்பாடு திருத்தி வெளியிடப்பட்டது. புதிய ஏற்பாட்டின் திருத்தப்பதிப்பு 1860இல் வெளியிடப்பட்டதோடு, 1857இன் பழைய ஏற்பாட்டுத் திருத்தப் பதிப்பும் அதனோடு சேர்க்கப்பட்டு தெலுங்கு மொழியின் முதலாவது முழுவேதாகமமாக வெளிவந்தது. 1878இல் தெலுங்கு புதிய ஏற்பாடு மறுபடியுமாகத் திருத்தி மொழிபெயர்க்கப்பட்டது. 1884 இல் முழு வேதாகமத்தினதும் திருத்தப் பதிப்பு வெளிவந்தது.
மறுபடியுமாக முழுவேதாகமமும் திருத்தப்பட்டு 1904இல் வெளியிடப்பட்டது. இது மறுபடியு மாக 1911இல் திருத்தப்பட்டது. 1953இல் இதன் இன்னுமொரு திருத்தப் பதிப்பு வெளிவந்தது.
(தொடரும்)