அர்ப்பணிப்பு
அதிகாலை வேளையில்… (நவம்பர்-டிசம்பர் 2013)
– Dr.உட்ரோ குரோல்
“எப்பிராயீமே, உனக்கு என்ன செய்வேன்? யூதாவே, உனக்கு என்ன செய்வேன்? உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப்போலவும், விடியற் காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்துபோகிறது”(ஓசியா 6:4).
அர்ப்பணிப்பு என்ற சொல்லுக்கு, ஒரு காரியத்துக்கு முழுவதுமான ஒப்படைப்பு மற்றும் ஒரு நபருக்கு உண்மையாக இருத்தல் என்று பொருள்படும். நம்மை அர்ப்பணித்திருக்கிறோம் என்று நாம் யாவரும் கூறினாலும், ஒருசிலரே அதனை செயலில் காட்டுகிறார்கள். அநேக மக்கள் உள்ளூர் சபைக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பதாகக் கூறுவர். ஆயினும் தங்களது ஓய்வுநேரத்தில் கூட ஆலயத்துக்குச் செல்லமாட்டார்கள். சிலர் தங்களது விவாக உறுதிமொழியில் அர்ப்பணிப்பும் ஒப்படைப்பும் செய்திருந்தாலும் அவைகளை விரைவில் முறித்து விடுகிறார்கள். அரைகுறையான அர்ப்பணிப்பு செய்துள்ள ஒரு கிறிஸ்தவனைவிட தேவனுக்குத் துயரம் தருவது எதுவும் இல்லை.
பழைய ஏற்பாட்டில் அர்ப்பணிப்பற்ற காரியத்துக்கு ஒரு சரியான உதாரணத்தை ஓசியா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் நாம் காணலாம். ஓசியா என்பதற்கு இரட்சிப்பு என்று பொருள். இவர் ஆமோஸ் தீர்க்கதரிசியின் காலத்தில் வாழ்ந்த வடக்கு நாட்டின் தீர்க்கதரிசியாவார். அழுகையின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்படும் எரேமியா தீர்க்கதரிசி தென்னாட்டில் ஊழியம் செய்துவந்தார். இவரது தீர்க்கதரிசனம் அப். யோவானைப் போன்று மிகவும் அமைதியானவை.
இஸ்ரவேல் தேசத்துக்கு அவர்களது ஆன்மீக விக்கிரகாராதனையைப் பற்றி உயிருள்ள எடுத்துக்காட்டை அளிப்பதே ஓசியாவின் தீர்க்கதரிசன ஊழியமாகும். ஓசியா தனது சொந்த துயரத்தையே இஸ்ரவேல் நாட்டின் சோகமாக உருவகித்துக் காட்டுகிறார். இஸ்ரவேல் மக்களின் அர்ப்பணிப்பற்ற வாழ்வும் துரோகமும் அவரது மனைவியின் துரோகத்துடன் ஒப்பிடும் பொழுது ஒன்றுமில்லை. தனது ஒழுக்கக்கேடான மனைவியை மனந்திரும்ப அழைத்ததுபோல ஓசியாவும் இஸ்ரவேல் நாட்டை தேவனிடம் மனந்திரும்ப மன்றாடினார்.
இஸ்ரவேல் மக்களின் பதட்ட மில்லாத வாழ்வைப் பற்றி அவர்கள் அறிந்துகொள்வதற்காக, “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப்போலவும் ஒழிந்து போகிறது” (ஓசியா 6:4) என்று உரைத்தார். இஸ்ரவேலின் அர்ப்பணிப்பு ஆழமற்றதாயும் அம்மனிதர்களின் பக்தி காலை மேகத்தைப் போலவும் அதிகாலை சூரிய ஒளியில் மறைந்து போகும் பனித்துளி போன்றும் உள்ளது என்று ஒப்பிடுகிறார். தேவனுக்குத் தங்களை அரைகுறையாக அர்ப்பணித்து அதில் திருப்தியடையும் மக்களைப்பற்றி அவர் மகிழ்வடைவதில்லை. இஸ்ரவேல் இன்னும் அந்த பாடத்தைப் படித்துக் கொள்ளவில்லை. இந்த 21ஆம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் அதனைக் கற்றுக்கொள்ளவில்லை.
ஒரு கடற்கரையின் ஓரத்தில் ஒரு சிறிய துறைமுகப் பட்டணம் இருந்தது. உக்கிரமான வானிலையால் அங்கு அநேக கப்பல்கள் பாறைகளில் மோதி உடைந்தன. ஆபத்தில் இருந்த கப்பற்படையினருக்கு உதவிசெய்த மீட்புக்குழுவினரால் அந்த பட்டணம் பிரபலம் அடைந்தது. அபாய சங்கின் ஒலி கேட்டதும் விபத்து நடந்த இடத்துக்கு அக்குழு விரைந்துசென்று மாலுமிகள் மூழ்கி விடாதவாறு தங்களுடைய உயிரையும் உடலையும் பணயம் வைத்து அவர்களைக் காப்பாற்றுவது இவர்களது பணியாயிருந்தது. காலங்கள் கடந்துசெல்ல, அச்சிறு பட்டணத்து மக்கள் நிதி திரட்டி கடற்கரை ஓரத்தில் ஒரு மீட்பு நிலையத்தை ஆரம்பித்தனர். இது அக்குழுவினரின் மீட்புபணியை எளிதாக்கியதோடு அவர்களது சிரமத்தைக் குறைத்தது. நாளடைவில் மற்ற இடங்களில் உள்ள மீட்பு நிலையத்தைப் போலவே மேலும் சில வசதிகளையும் வாய்ப்புகளையும் அவர்கள் பெருக்கிக் கொண்டனர். மேலும் சில வருடங்களில் அது ஒரு சமுதாயக்கூடத்தைப்போல மாறிவிட்டது. மக்கள் கேளிக்கைக்காகவும் ஓய்வெடுக்கவும் அங்குகூட ஆரம்பித்தனர். கப்பல்கள் பாறையில் மோதின, அபாய சங்கு ஒலிக்கத்தான் செய்தன; ஆனால் ஒருவரும் அதற்கு செவிகொடுக்கவில்லை. தங்களுடைய வசதிகளை விட்டு மீட்புப்பணிக்குச் செல்ல அவர்களுக்கு விருப்பமில்லை. ஆபத்திலிருக்கும் மாலுமிகளை மீட்கச் செல்லும் அர்ப்பணிப்பைவிட அவர்களுக்கு அந்நிலையத்தின் வசதிகள் மனநிறைவைத் தந்தன.
இந்த அர்ப்பணித்த மீட்புக்குழு வைப்பற்றி நாம் நினைப்பது போலவே, ஓசியா தீர்க்கதரிசியும் இஸ்ரவேலரைப்பற்றி நினைத்தார். இன்றும் அநேக கிறிஸ்தவர்களும் தேவனை அரைகுறை மனதுடனேயே பின்பற்றுகின்றனர். ஓசியாவின் மனைவியைப்போன்றே இன்றைய கிறிஸ்தவர்களும் உலகை சிநேகித்து வாழ்கின்றனர். ‘நாட்டின் கிறிஸ்தவ சங்கம்’ என்றே இன்றைய கிறிஸ்தவம் செயல்படுகிறது. உலகத்தின் ஐசுவரியத்தை நம்பி தேவனுடைய நன்மையில் சுகமாகக் குளிர் காய்கின்றனர். பாவத்தில் அழிந்துபோகும் ஆத்துமாவைப் பற்றியோ, பிதாவாகிய தேவனுக்கு தங்களை அர்ப்பணிப்பதைப் பற்றியோ அவர்களுக்கு சிறிதேனும் அக்கறையில்லை.
இன்றும் நம்மைப் பார்த்து “உங்கள் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற் காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது” என்று ஓசியா தீர்க்கதரிசி கூறுவதை நாம் கேட்கமுடிகிறது.
அர்ப்பணிப்பில்லாத கிறிஸ்தவர்களின் விரைந்தோடும் நற்பணிகள் பயனற்றவை. அது பிரதான சாலையில் தற்காலிக ஓய்விடம் தரும் மனநிறைவு போன்றது.
அதிகாலை கீதம்:
என்னை இரட்சிக்க தம் குமாரனைத்
தந்த என் தேவனை மகிமைப்படுத்துவதே
இவ்வுலகில் எனக்குத் தரப்பட்ட பொறுப்பு.