ஜெபக்குறிப்பு: நவம்பர் 6 புதன்

“பெறப்பண்ணுகிறவராகிய நான் பெறச்செய்யாமல் இருப்பேனோ என்று கர்த்தர் சொல்லுகிறார்” (ஏசா.66:9) என்ற வாக்குப்படி பிரசவத்திற்கு காத்திருக்கும் 4 சகோதரிகளுக்கு சுகப்பிரசவத்தில் ஆரோக்கியமான பிள்ளைகளைத் தந்து கர்த்தர் ஆசீர்வதிக்க ஜெபம் செய்வோம்.

ஒப்புக்கொடு!

தியானம்: நவம்பர் 6 புதன்; வாசிப்பு: எபேசியர் 5:16-27

“…என்னுடைய சித்தத்தின்படியல்ல, உம்முடைய
சித்தத்தின்படியே ஆகக்கடவது…” (லூக்கா 22:42)

“முழுமையான ஒப்புக்கொடுத்தல்” ஒரு விசுவாசியின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானதாகும். விசுவாசியாகிய நீங்கள் ஒரு முழுமையான ஒப்புக்கொடுத்தலோடு விசுவாசப் பாதையில் முன்செல்கிறீர்களா? அல்லது, அரைகுறை ஒப்புக் கொடுத்தலுடன் உங்கள் சித்தப்படி உங்கள் வாழ்க்கையை நடத்துகிறீர்களா?

முழுமையான ஒப்புக்கொடுத்தல் என்பது, அது மனப்பூர்வமான கீழ்ப்படிதலைக் காண்பிக்கிறது. இயேசுகிறிஸ்துவின் வாழ்க்கைப் பாதையில் நடந்து செல்லும் ஒரு விசுவாசி, அவர் வாழ்ந்ததுபோலவே தானும் வாழவேண்டும் என்பதை நன்கு அறிந்துகொள்வான். இயேசுகிறிஸ்துவோ, “சிலுவையின் மரண பரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி” (பிலி.2:8), “நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்” (எபி.9:14). இம் முழுமையான கீழ்ப்படிதலோடு தம்மை ஒப்புக்கொடுத்ததால், சிலுவை மரணம் அவருக்குத் தோல்வியை அல்ல, வெற்றியையும், பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கும் மேலான பாக்கியத்தையும் பெற்றுக்கொடுத்தது. அதுமட்டுமல்ல, அவரோடு நாமும் வாசம்பண்ணும்படிக்கு நமக்கும் வழியை உண்டுபண்ணியது.

நமது விசுவாச ஜீவியத்தில், பூரண கீழ்ப்படிதலோடு கூடிய ஒப்புக்கொடுத்தல் மிகவும் முக்கியம். இயேசுகிறிஸ்துவின் சீஷர்கள், அவருக்குப் பின்னர் தங்களது வாழ்க்கையில் பலவிதமான பாடுகளையும், சோதனைகளையும் கடந்துசென்றார்கள். இவற்றிலெல்லாம் அவர்கள், எப்போதும், தம்மை நடத்தும் இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிந்தவர்களாயும், வேறுபட்ட சூழ்நிலைகளுக்கும், நிலை பரங்களுக்கும் தம்மை ஒப்புக்கொடுத்தவர்களாயும் சென்றதால், சத்துருவான சாத்தான் எவ்விதத்திலும் அவர்களை ஜெயிக்க முடியாதே போய்விட்டது.

நமது விசுவாச வாழ்க்கையையும் நாம் இப்படியே அமைத்துக்கொள்ள வேண்டும். பாடுகளும், சோதனைகளும் ஏற்படும்போது, பயப்படாமல்  நம்மை நாமே ஆராய்ந்து பார்த்து, கீழ்ப்படிதலோடுகூடக் அவற்றின்வழியாகக் கடந்து செல்லுவோமானால், நாம் ஒருபோதும் கலங்கத் தேவையில்லை. ‘என் சித்தம் அல்ல; உம் சித்தமே என் வாழ்க்கையில் ஆகட்டும்’ என்று கூறி மனதார நம்மை தேவனின் கரத்தில் தருவோமானால், அந்தப் பாடுகளின் பாதையும் மகிமை நிறைந்ததாகவே இருக்கும். எந்தச் சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருக்கக் கற்றுக்கொள்வோம். நமது பாடுகளில் அவர் நிச்சயம் நமக்குத் துணை நிற்பார். இறுதியில் நாம் வெற்றிபெறுவது நிச்சயம்.

ஜெபம்: “பிதாவே, என் விசுவாச ஜீவியத்தில் ஏற்படும் சோதனைகளைக் கண்டு கலங்காமல், உமது பெலத்தால் ஜெயம் பெற என்னை நீரே நடத்தும். ஆமென்”