ஜெபக்குறிப்பு: நவம்பர் 12 செவ்வாய்

“… அவர்களைக் குறித்துச் சொன்ன எல்லா நன்மையையும் அவர்கள்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்” (எரேமி.32:42) இவ்வாக்கின்படியே லிங்கனிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக ஊழியத்திற்கு கர்த்தர் தயை செய்து, ஊழியம் தடையின்றி செய்யப்படுவதற்கு அனைத்து நன்மைகளையும் கிடைக்கச் செய்திட பாரத்துடன் ஜெபிப்போம்.

தேவவசனம்!

தியானம்: நவம்பர் 12 செவ்வாய்; வாசிப்பு: எபேசியர் 6:10-18

“கிறிஸ்துவின் வசனம் உங்களுக்குள்ளே
சகல ஞானத்தோடும்பரிபூரணமாக வாசமாயிருப்பதாக.”
(கொலோசெயர் 3:16)

வசனம் ஒரு மனுஷனுக்குள் எப்படி வாசம்பண்ணமுடியும்? தேவவசனம் என்பது தேவனுடைய வார்த்தையே. “…வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரேபேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது” (யோவா.1:14). இந்த ஒரேபேறான குமாரன், இயேசுகிறிஸ்துவே என்பதை அறிவோம். ஆதியிலே வார்த்தையாக இருந்து, ஏற்றகாலத்திலே மாம்சத்திலே உலகிற்கு வந்த இயேசுகிறிஸ்து, “ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்” (யோவா.14:23) என்று கூறினார். ஆம், தேவனுடைய வார்த்தையை நாம் இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது கிறிஸ்து நமக்குள்ளே வாசம்பண்ணுகிறார். ஆம்! ஒருவரோடு ஒருவர் உறவில் ஐக்கியப்படும்போது, அவர்கள் பேசிக்கொள்ளாமல் இருப்பார்களா? அதுபோல, கிறிஸ்துவோடுகூட ஐக்கியத்தில் உறுதிப்பட வாஞ்சிக்கும் நாமும் அவருடன் ஜெபிப்பது மட்டுமல்ல, தினமும் அவரது வசனத்தை வாசித்து உட்கொள்ளவும் வேண்டும்.

போருக்குச் செல்லும் போர்வீரன், கேடகத்தை மாத்திரம் கொண்டுசெல்வதினால் என்ன பலன்? எதிரியை வீழ்த்தும் “பட்டயத்தையும்” கொண்டுசெல்லவேண்டும். பட்டயமின்றி எதனால் போர்செய்ய முடியும்? தேவவசனம் ஆவியின் பட்டயமாக ஒரு விசுவாசிக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதையே எபேசியர் 6:17ல் “தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார் பவுல். இந்தப் பட்டயமானது, “ஜீவனும், வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும், ஆவியையும், கணுக்களையும், ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” (எபி.4:12). இப் பட்டயத்தைக் கைவிடலாமா?

விசுவாச ஓட்டத்தில் திண்டாடிக்கொண்டிருக்கும் தேவபிள்ளையே! நமக்குள்ளே விசுவாசம் உண்டு. ஆனால், அந்த விசுவாசத்தில் நாம் வளர வேண்டுமாயின், எதன்மீது நமது விசுவாசத்தை நாம் வைத்திருக்கிறோம் என்பது மிக முக்கியம். அது உலகமா? தேவவசனமா? தேவவசனமாகிய ஆவியின் பட்டயம், ஜீவனுள்ள கிறிஸ்துவாக நமக்குள்ளே வாசம்பண்ணுவாராகில், வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் எந்தச் சோதனையையும் ஜெயித்து முன்செல்ல முடியும். ஆகையால், தினமும் வேதவசனங்களை உட்கொள்ள தீர்மானிப்போமாக.

ஜெபம்: “ஆண்டவரே, தினமும் உமது வசனத்தை வாசித்து, என் இருதயத்தில் பதித்து, அதன் பெலத்தால் பலப்பட்டு முன்செல்ல கிருபை செய்யும். ஆமென்.”