ஜெபக்குறிப்பு: நவம்பர் 21 வியாழன்
“நீதிமானுடைய பேர் புகழ்பெற்று விளங்கும்” (நீதி. 10:7) என்ற வாக்குப்படி சத்தியவசன ஊழியத்தின் இலக்கியப்பணிகளில் மொழியாக்க உதவி செய்யும் சகோதர, சகோதரிகளை கர்த்தர்தாமே கனப்படுத்தி மேன்மைப்படுத்தவும், அவர்கள் குடும்பங்களை ஆசீர்வதிக்கவும் பாரத்துடன் ஜெபிப்போம்.
சிந்தனையைக் காத்துக்கொள்!
தியானம்: நவம்பர் 21 வியாழன்; வாசிப்பு: சங்கீதம் 139:1-24
“…தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள்;
உணர்வில்லாத அவர்களுடைய இருதயம்
இருளடைந்தது.” (ரோமர் 1:21)
“பாவம்” என்று கூறும்போது முக்கியமாக நமது கிரியைகளில் வெளிப்படையாகத் தெரிகின்ற காரியங்களையே நாம் கருதுவதுண்டு. “இவன் பொய் சொன்னான்”, “இவள் விபசாரம் செய்தாள்”, “அவன் திருடினான்” என்று கூறுவோம். பாவத்தின் பிடியில் அகப்பட்ட ஒருவன், கிருபையினாலே இரட்சிக்கப்படும்போது, அவன் கண்டுகொள்ளும் பெரிய விடுதலையினிமித்தமாக, வெளிப்படையான பாவங்களுக்கு விலகி ஓட முயற்சிக்கின்றான். அதிலே வெற்றியும் கண்டுகொள்ளுகிறான். அது நல்லது. ஆனால், வெளிப்புற செய்கைகளில் மாத்திரமல்லாமல், மறைமுகமான நமது இரகசிய சிந்தனைகளிலும் பாவம் செய்யக்கூடும் என்பதையும் நாம் மறக்கக்கூடாது.
பெண்ணைத் தொடுவது பாவம் என்று கருதும் இரு துறவிகள், கிணற்றில் விழுந்து உயிருக்காகப் போராடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணைக் கண்டார்கள். ஒரு துறவி, “ஐயோ! இப்பெண்ணைத் தொட்டுத் தூக்கினால் நான் அழுக்காகி விடுவேன்” என்று கூறி விரைந்து சென்றுவிட்டார். மற்றவரோ, பலத்த உட்போராட்டங்களின் பின்னர் அப்பெண்ணைக் காப்பாற்றிவிட்டு கடந்துசென்றார். அதிக தூரம் நடந்த பின்னர், முன்னே நடந்த துறவி இவரை நெருங்கி, “துறவியாரே, அப்பெண்ணைத் தொட்டுத் தூக்கும்போது உமக்குள் என்ன உணர்வு உண்டா னது?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார். மற்ற துறவியோ சிரித்துவிட்டு, “நானோ அப்பெண்ணைக் காப்பாற்றிய மறுகணமே அவளை மறந்துவிட்டேன். ஆனால், நீரோ அவளை உம் மனதில் சுமந்துகொண்டே இருக்கிறீர். நானல்ல, நீரே தீட்டுப்பட்டு இருக்கிறீர்” என்றாராம். இது அர்த்தமுள்ள கதையல்லவா?
ஆம்! நமது சிந்தனையில் நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொருகணமும் எத்தனை பாவங்களைக் கூட்டிக்கொள்கிறோம்? அதனாலேயே சங்கீதக்காரன், “வீண் சிந்தனைகளை நான் வெறுக்கிறேன்” என்றும், “என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும்” என்றும் ஜெபிக்கிறதை வாசிக்கிறோம். தேவனை அறிந்து, அவரை நினைத்திருந்து, அவரையே மகிமைப்படுத்தி, நமது சிந்தனைகளிலெல்லாம் அவரையே நினைத்திருக்கவேண்டிய நாம், முக்கிய மாக தனித்திருக்கும் வேளைகளில் சிந்திப்பது என்ன? ஆம், வீண் சிந்தனைகள், பாவ சிந்தனைகள் நமது விசுவாச ஓட்டத்தை நிச்சயமாகப் பாதிக்கும். ஆவிக்குரிய பிள்ளைகளாகிய நாம் ஆவிக்குரியவைகளையே சிந்தித்திருக்க தூய ஆவியானவரின் துணையை நாடுவோமாக. வெளிவாழ்வில் நாம் மனிதருக்கு முன்பாக நடிக்கலாம். ஆனால், நமது சிந்தனைகளை தேவனுக்கு முன்பாக மறைக்கமுடியாது. பாவ சிந்தனைக்குரிய வேர்கள் மனதை ஆக்கிரமித்துவிடாதபடி, நாம் அதனை கிறிஸ்துவுக்குரிய தூய எண்ணங்களினால் நிரப்புவோமாக.
ஜெபம்: “பிதாவே, உமக்குப் பிரியமற்ற மறைவான பாவங்களோ, பாவசிந்தனைகளோ என்னை ஆட்கொள்ளவிடாமல் என் இருதயத்தைக் காத்தருளும். ஆமென்”