ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 28 சனி
“தங்கள் நெருக்கத்திலே … கர்த்தரிடத்துக்குத் திரும்பி, அவரைத் தேடினபோது, அவர் அவர்களுக்கு வெளிப்பட்டார்” (2நாளா.15:4) இவ்வாக்குப்படியே நெருக்கங்களும் ஆபத்துக்களும் வந்தாலும் உண்மையாய் அவரை நோக்கிக் கூப்பிட்டபோது நமக்கு அருகில் வந்து உதவிசெய்த கர்த்தாதி கர்த்தரை நன்றியோடு ஸ்தோத்திரித்து ஜெபிப்போம். .
தேவனை அறியவேண்டும்
தியானம்: பிப்ரவரி 28 சனி; வாசிப்பு: சங்கீதம் 34:1-10
“கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல்
நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”
(சங்கீதம் 34:8)
‘இவரை உங்களுக்குத் தெரியுமா’ என்று ஒருவர் கேட்டபோது, ‘ஆம், அவர் என்னோடு படித்தவர்தான், எனக்கு அவரைத் தெரியும்’ என்றேன். சிறிது நேரம் கழித்து இன்னமொருவரின் பெயரைச் சொல்லி, ‘இவரை உங்களுக்குத் தெரியுமா’ என்றபோது, ‘அவர் எனது மகள்தான், அவரை நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன். அவரையா தெரியும் என்று கேட்கிறீர்கள்’ என்றேன். ஒருவரை தெரிந்து வைத்திருப்பதற்கும், அறிந்துகொள்வதற்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. நாம் தேவனைப்பற்றி சாதாரணமாகத் தெரிந்திருக்கிறோமா? அல்லது அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்திருக்கிறோமா?
34ஆம் சங்கீதமானது மிகவும் உணர்வுப்பூர்வமானதொரு சங்கீதம். தாவீது தனது இக்கட்டான நிலையில் பாடிய ஒரு சங்கீதம் இது. தேவனை அறிந்து கொண்ட ஒருவனாலேயே இப்படிப் பாடமுடியும். தேவனோடு நெருங்கிய உறவு கொண்டு அவரைத் தனது வாழ்வில் ருசிபார்த்த தாவீது, இச் சங்கீதத்தை உணர்வோடு பாடியிருக்கிறார். அதுமாத்திரமல்ல, ‘கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்’ என்று நமக்கும் சவால் விடுகிறார்.
ஒரு உணவை நான் ருசிபார்க்காமல் அதன் சுவையை அறிந்துகொள்ள முடியாது. அதன் சுவையை நான் முதலில் அறியாமல் அச்சுவை பற்றிப் பிறருக்கு எடுத்துரைக்கவும் முடியாது. அதுபோலவே, தேவனையும், அவரது கிருபைகளையும் நான் என் வாழ்வில் ருசித்துப் பார்க்காமல் அதை அறிந்து கொள்ள முடியாது. அதைப் பிறருக்கு எடுத்துரைக்கவும் முடியாது. கர்த்தரை என் வாழ்வில் நான் ருசித்துப்பார்க்க அவரை நான் அறிந்துகொள்ள வேண்டுமே தவிர, அவரைப்பற்றி வெறுமனே தெரிந்து வைத்திருந்தால் போதாது. அவரை அறிந்துகொள்ள வேண்டுமாயின் அவரோடு நான் நேரம் செலவிட வேண்டும். அவரது வார்த்தைகளைத் தியானிக்கவேண்டும். அவற்றிற்குச் செவிகொடுத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
“உம்மை அறியவேண்டுமே தேவா, உம்மைத் தெரிந்து பயனில்லை ராஜா; என்னை மாற்றும், உமதாக்கும், உம் பாதம் அமரச்செய்யும்.” இந்த லெந்து காலங்களுக்கு மிகவும் பொருத்தமான அருமையான பாடல் வரிகள் இவை. இந்நாட்களில் தேவனை அறிந்துகொள்ள நேரம் கொடுத்திடுவோம். இதுவரை தேவனை தெரிந்துவைத்திருந்த காலங்கள் போதும். அவரைத் தனிப்பட்ட விதத்தில் அறிந்து கொள்வோம். அவரது வார்த்தைகளைத் தியானித்துப் புரிந்துகொள்வோம். பின்னர் அதைப் பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களும் தேவனை நன்கு அறிந்து கொள்ள நாம் உதவிகரம் நீட்டுவோமாக.
ஜெபம்: “பிதாவே, உம்மை நான் அறியவும், பிறர் உம்மை அறியும் பாலமாக நான் மாறவும், என்மேல் கிருபையாயிரும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: பிப்ரவரி 27 வெள்ளி
கர்த்தர் வானத்திலிருந்து நோக்கிப்பார்த்து, எல்லா மனுபுத்திரரையும் காண்கிறார். (சங்.33:13)
ஜெபக்குறிப்பு: பிப்ரவரி 27 வெள்ளி
“நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்” (நீதி.15:29) என்ற வாக்குப்படியே பல்வேறுப்பட்ட தேவைகளோடு இருக்கிற குடும்பங்களில் கர்த்தர் கிரியை செய்து அவர்கள் இருதயத்தின் விருப்பங்களை தமது தயவுள்ள சித்தத்தின்படியே நிறைவேற்ற வேண்டுதல் செய்வோம்.
உறவில் பெலப்படு!
தியானம்: பிப்ரவரி 27 வெள்ளி; வாசிப்பு: மத்;தேயு 3:1-12
“மனந்;திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.”
(மத்தேயு 3:8)
“லெந்து நாட்கள் ஆரம்பித்தவுடனேயே, கர்த்தர் உயிர்த்தெழுந்த நாள் எப்போதுவரும் என்று நான் ஆவலோடு காத்திருப்பேன். காரணம், லெந்து நாட்களில் மரக்கறி சாப்பாடு மாத்திரமே வீட்டில் கிடைக்கும். பின்னர் ஈஸ்டர் வந்தால்தான் கொழுத்த சாப்பாடு கிடைக்கும்” என்று ஒருவர் தனது லெந்து கால அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார். லெந்து நாட்கள் தேவனோடுள்ள உறவில் நம்மை பெலப்படுத்துகிறதா அல்லது குடும்ப உறவுகளிலும் நெரிசல்களை ஏற்படுத்துகிறதா என்பது சிந்திக்கவேண்டிய ஒன்று.
பாவஅறிக்கை, பாவமன்னிப்பு, மனந்திரும்புதல் ஆகிய இவையே தேவனுடனான உறவில் நம்மைப் பெலப்படுத்துகின்ற மூன்று முக்கிய படிகளாகும். மனமாற்றம் பெற்றவனே தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்யமுடியும். யோவான்ஸ்நானன், “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள்; அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள்” என்று அறைகூவல் விடுத்த அடுத்த கணமே மனந்திரும்புதலைக் குறித்துப் பேசுவதைக் காண்கிறோம். மனந்திரும்பியவனே கர்த்தருக்கு வழியையும், பாதைகளையும் செவ்வைப்படுத்த முடியும். கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை எதிர்நோக்கி வழியை ஆயத்தப்படுத்தும் பணியில் இருக்கும் நாம் மனந்திரும்பவேண்டியதன் அவசியத்தை விசேஷமாக இந்த நாட்களில் உணர்ந்துகொள்வோம்.
‘நான் தேவனோடு இருக்கிறேன்; அவரோடு நடக்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டு பாவத்தை நமக்குள் தக்கவைத்துக்கொண்டு வாழுவது எப்படி? மற்ற வருக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய நாமே பாவத்துக்கு விலை போகலாமா? குருடனுக்குக் குருடன் வழிகாட்டக்கூடுமோ? பாவத்தை அறிக்கை செய்வோம்; மன்னிப்பைப் பெற்று மனந்திரும்புவோம்; தேவனுடனான உறவைக் காத்துக்கொள்வோம். இன்று தேவபணி செய்வோரில் அநேகரின் விழுகைக்குக் காரணம் தேவனுடனான உறவை அவர்கள் உதாசீனம் செய்வதேயாகும். தேவனோடு உறவாடும் நேரத்தைக்கூட ஊழியத்துக்காகச் செலவுசெய்வதால் காலப்போக்கில் பாவத்தின் படுகுழியில் விழுந்து ஊழியத்தையும் நாசப்படுத்தி விடுகிறார்கள்.
தேவனோடுள்ள உறவை உதாசீனப்படுத்துகிறவன் விழுந்துபோவது நிச்சயம். பாவத்தில் விழுகிறவன் தேவனோடுள்ள உறவில் அறுபட்டுப்போகிறான். மனந்திரும்பி மீண்டும் உறவைச் சீர்செய்து கொள்ளவேண்டியது அவசியம். நாம் இதிலே எங்கே நிற்கிறோம்? நமக்கும் தேவனுக்குமான உறவு எப்படிப்பட்டது? வருடந்தோறும் கடைப்பிடிக்கும் முறைமைகளைத் தவிர்த்து, தேவனுடனான உறவைப் பேணுவதற்கு இந்நாட்களில் முக்கியத்துவம் கொடுப்போம்.
ஜெபம்: “கர்த்தாவே, என் பாவநிலைமையை உணர்ந்து உம்மிடம் வருகிறேன். உம்மோடு என் உறவைக் காத்து நடந்திட உதவி செய்தருளும், ஆமென்.”