ஜெபக்குறிப்பு: ஜனவரி 31 சனி
“நீர் எனக்கு மறைவிடமாயிருக்கிறீர்” (சங்.32:7) இவ்வாக்குப்படியே கர்த்தர் இம்மாதம் முழுவதும் நமக்கு புகலிடமும் அரணான கோட்டையுமாக இருந்து பாதுகாத்த கிருபைகளுக்காக நன்றி செலுத்தி புதிய மாதத்தை ஆசீர்வதித்துத் தரும்படியாகவும் ஜெபிப்போம்.
நமக்கு ஒரு நிச்சயம் உண்டு!
தியானம்: ஜனவரி 31 சனி; வாசிப்பு: யோவான் 14:1-7
“நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணின
பின்பு ….நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில்
சேர்த்துக்கொள்ளுவேன்.” (யோவான் 14:3)
இப் புதிய வருடத்திலும் ஒரு மாதத்தை வெகு சீக்கிரமாகவே கடந்து வந்துவிட்டோம். எவ்வளவு வேகமாக நமது வாழ்நாட்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இது எங்கே முடியும் என்று ஏராளமான மக்கள் மனதில் ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நமக்கோ ஒரு நிச்சயம் உண்டு. ஆகவே, காலங்கள் நம்மைவிட்டுக் கடந்துபோனாலும், நாம் பயப்படவேண்டியதில்லை.
சிலுவை மரணம் சமீபித்துவிட்டதை அறிந்த இயேசு, தமது சீஷரைப் பலவிதங்களில் திடப்படுத்தியதை சுவிசேஷங்களில் காண்கிறோம். அதே வார்த்தைகள்தான் இன்றும் நமக்குத் திடநம்பிக்கையைத் தருகிறது. நித்திய வாழ்வு என்பது நமது கண்களுக்குப் புலப்படாத ஒன்றாயினும், நாம் இயேசுவின்மீது வைத்திருக்கும் விசுவாசம் எப்படி நிச்சயமோ, அப்படியே நித்திய வாழ்வும்; நிச்சயம்; அதற்கு இயேசு ஒருவரே வழி என்பதும் சத்தியம். அந்த நித்திய வாழ்வை இயேசு ஏற்கனவே வாக்குப்பண்ணிவிட்டார். ஆனால், அதை நம்புகிறோம் என்று சொல்லுகின்ற நாம், அந்த நம்பிக்கையை நமது வாழ்வில் எவ்வளவுதூரம் வெளிப்படுத்துகிறோம்? நித்திய வாழ்வைக்குறித்து நாம் பல காரியங்களை பரிசுத்த வேதாகமத்தில் வாசிக்கிறோம். இந்த வசனங்கள் யாவும் வாக்குத்தத்தங்களுடன் பின்னிப் பிணைந்தே காணப்படுகின்றன. “உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணப்போகிறேன்” என்று சொல்லி நித்திய வாழ்வை நிச்சயப்படுத்திய இயேசு, “நான் மறுபடியும் வந்து உங்களைச் சேர்த்துக்கொள்வேன்” என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். வாக்களித்தவர் வாக்களித்தபடி நிச்சயம் வருவார்.
கிறிஸ்து சிலுவை மரணத்தை ஏற்று, பிதாவுக்கும், நமக்கும் இடையே பிரிக்கப்பட்டிருந்த பாவம் என்ற கொடூர அரக்கனை அழித்து, நம்மைப் பிதாவோடு ஒப்புரவாக்கினார். இந்தக் கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன், பிதாவோடு நித்திய உறவைப் பெற்றுக்கொள்வதால், இக் குறுகிய வாழ்வைக்குறித்து கலங்க வேண்டியதில்லை. இவ்வுலக வாழ்வில் எவ்வளவுதான் துன்பங்கள் நேரிட்டாலும், இயேசுவோடு நித்தியமாய் வாழுகின்ற வாழ்வை விசுவாசித்து, நாம் பொறுமையோடு ஓடலாமே! அந்த சந்தோஷத்தை நம்பிக்கையோடு நாம் எதிர்பார்த்துக் காத்திருக்கலாம். ஏனெனில், அந்த வாக்குறுதியைத் தந்தவர் நமது ஆண்டவரே. அந்த நித்தியமான வாழ்வுக்குள் கடந்து செல்லத்தக்கதாக தேவனுக்கேற்ற வாழ்வு வாழவேண்டியதும், இயேசுவின்மீது கொண்ட விசுவாசத்தில் நிலைத்திருப்பதும் நமது பொறுப்பாக இருக்கின்றது.
ஜெபம்: “ஆண்டவரே, உம்முடன் என்றும் ஜீவிக்கும்படி சீக்கிரமாய் வந்து என்னை உம்முடன் சேர்த்துக்கொள்ளும். ஆமென்.”
வாக்குத்தத்தம்: ஜனவரி 30 வெள்ளி
… அவர் அருளின வெளிச்சத்தினால் இருளைக் கடந்துபோனேன்.
(யோபு. 29:3)
ஜெபக்குறிப்பு: ஜனவரி 30 வெள்ளி
“சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே… உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும், அப்பொழுது இரட்சிக்கப்படுவோம்” (சங்.80:19) நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவன் தாமே சத்தியவசன அலுவலக ஊழியர்களுக்கு நல்ல சுகத்தைத் தந்தருளவும் அவர்களது குடும்பங்களின் தேவைகளைச் சந்திக்கவும் வேண்டுதல் செய்வோம்.
மறைவுகள் வெளியாகட்டும்!
தியானம்: ஜனவரி 30 வெள்ளி; வாசிப்பு: யோவான் 4:8-18
“நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்…”
(யோவான் 4:39)
எதையாவது மறைக்க முயற்சிக்கிறவர்களின் முகத்தையும், நடவடிக்கைகளையும் கவனித்திருக்கிறீர்களா? நாமும் எத்தனை உண்மைகளை இன்றும் மறைத்து வைத்திருக்கிறோம். நாம் மறைக்க முற்படுவது பொய்களை அல்ல; உண்மைகளைத்தான். எந்த உண்மை வெளிவந்தால் நம்மைப் பாதிக்கும் என்று நினைக்கிறோமோ அதைத்தான் நாம் மறைக்கிறோம். ஆனால், அவை நமக்குள் புதைந்திருக்கும் வரைக்கும், வெளிவந்தால் ஏற்படுத்தும் பாதிப்பைப் பார்க்கிலும், அவை நமது உள் வாழ்வைக் கொன்றுபோடும் என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம்.
சமாரியப் பெண்ணும், தனது உண்மை வாழ்வை மறைப்பதற்குத்தான் எந்தவொரு பெண்ணும் தண்ணீர் எடுக்க வராத மத்தியான வேளையிலே கிணற்றண்டைக்கு வந்தாள்; ஆனால், அங்கிருந்த இயேசுவுக்கு அவளால் தன்னை மறைக்க முடியவில்லை. வெளியரங்கமாக ஒப்புக்கொள்ளக்கூடியதை, அதாவது, தான் ஒரு சமாரிய ஸ்திரீ என்பதை ஒப்புக்கொண்ட அவள் தன் வாழ்வை மறைத்தாள். இயேசு சொன்ன ஜீவ தண்ணீரை அவள் கேட்டது, தனது வாழ்வு மாறுவதற்கு அல்ல; இனிமேல் தண்ணீர் எடுக்க வரவேண்டியதில்லை என்றபடியால்தான். ஆனால், இயேசுவோ, “நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக்கொண்டு வா” என்றார். அதாவது, ஜீவ தண்ணீர் வேண்டுமானால் தன் புருஷனை அழைத்துக்கொண்டு அவளும் வரவேண்டும். இப்போது, அவளோ தனக்குப் புருஷன் இல்லை என்கிறாள். அது உண்மைதான். ஆனால் இயேசுவோ, தனக்குப் புருஷன் இல்லை என்று அவள் சொன்னதன் உண்மை நிலையையும், அவள் சொல்லாமல் மறைத்த உண்மை நிலையையும் வெளியரங்கமாக்கினார். அதுவே அவளது உள்ளத்தைத் தொட்டது.
வெட்ககரமான அருவருப்பான மறைவுக்குள்ளே தன்னைத் தானே மறைத்து வைத்திருந்தவள், இப்போ வெளியிலே கொண்டுவரப்பட்டாள். அந்தக் கணமே அவளுடைய வெட்கம் வெளியேறி மறைந்து விட்டது. உடனேயே ஊருக்குள் ஓடி தான் செய்ததை ஒருவர் சொன்னார் என்று அவள் சொன்னதிலிருந்து இது தெளிவாகிறது. தன்னையும் நேசிக்கும் ஒரு அன்பை அவள் கண்டாள். அதன் பின் அவளால் மிக அமைதியாக இருக்கமுடியவில்லை. நமக்குள் ஒளிவுமறைவுகள் உள்ளவரை நமக்கு ஏது விடுதலை? ஜீவ தண்ணீர் வேண்டுமானால், முதலில் உண்மை நிலையிலிருந்து நாம் வெளிவரவேண்டும். மறைவுகளை வெளியாக்கி, சுத்தப்படுத்தி, நித்திய வாழ்வில் சேர்க்க வல்லவர் இயேசு ஒருவரே. அந்த மாசற்ற அன்பிடம் உண்மை உள்ளத்துடன் இன்றே வந்து சேருவோமா!
ஜெபம்: “பிதாவே, நான் அறிந்திருக்கிறதும், அறியாமலுமிருக்கிற மறைவுகளிலிருந்து என்னை வெளிப்படுத்தி, அரவணைத்தருளும். ஆமென்.”