ஜெபக்குறிப்பு: ஜனவரி 26 திங்கள்

குடியரசு தினத்தை அனுசரிக்கும் நம்முடைய தேசத்தில் வன்முறை தீவிரவாதங்கள் முழுவதும் நீக்கப்படவும், தேசத்தின் நன்மை காக்கப்படவும், தேசபிரதமர், ஜனாதிபதி மற்றும் முக்கிய ஆளுமைப் பொறுப்புகளோடு இருக்கிற யாவரும் கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தோடு ஆட்சியை செய்திட ஜெபிப்போம்.

இன்னும் கொஞ்சக் காலம்

தியானம்: ஜனவரி 26 திங்கள்; வாசிப்பு: எபிரெயர் 10:32-39

“வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார்,
தாமதம்பண்ணார்.” (எபிரெயர் 10:37)

நம்முடைய தேசம் 66வது குடியரசு தினத்தை இந்நாளில் கொண்டாடி வருகிறது. தேவன் நமக்குத் தந்த தேசத்திற்காகவும் ஜனநாயகத்திற்காகவும் தேவனை இந்நாளில் துதிப்போம். நமது தேசத்தை ஆளும் தலைவர்களுக்காகவும் ஆட்சியாளர்களுக்காகவும் வேண்டுதல் செய்வோம். மதவாதம், தீவிரவாதம், பாவ அடிமைத்தனம், விக்கிரகராதனை ஆகியவற்றிலிருந்து மக்கள் விடுபடவும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டு சமாதானத்தோடு வாழவும் தேவன் கிருபை செய்ய மன்றாடுவோம். கர்த்தர் நன்மையானதைத் தருவார்; நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும் (சங்.85:12). (ஆ-ர்).

தொடர்ந்து இன்றைய தியானத்தை நாம் தியானிப்போம். தனக்கு நேரிட்ட வியாதியினாலே தடுமாறிய ஒரு தேவபிள்ளை இறுதியில் சகலத்தையும் அடுத்தவரிடம் ஒப்புவித்துவிட்டு மரித்துவிட்டார். அவரது ஆத்துமா நித்திய இளைப்பாறுதலுக்குள் பிரவேசித்துவிட்டது. அவர் வாழ்ந்திருந்தபோது அனுபவித்த வேதனைகள் சுகவீனங்கள், கர்த்தர் அவரைத் தாங்கி சாட்சியாக நிறுத்திவைத்த தருணங்கள் ஏராளம். தங்களது முதற்சந்ததியார், கிறிஸ்துவினிமித்தம் அடைந்த பாடுகள் வேதனைகளை, அவர்களுடைய பிள்ளைகளாகிய இந்த எபிரெய நிருபத்தை வாசித்த விசுவாசிகள் அறியாமற்போயிருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஆகவேதான், “முந்தின நாட்களை நினைந்துகொள்ளுங்கள்” என்று, அவர்கள் கர்த்தருக்கென்று வைராக்கியமாய் நின்ற நாட்களை ஞாபகப்படுத்தி பவுல் எபிரெயருக்கு எழுதியுள்ளார். பின் வாங்கிக் கெட்டுப்போக அழைக்கப்படவில்லை; மாறாக, வாக்குப்பண்ணப்பட்டதை அடையும்படிக்கு, விசுவாசத்தில் உறுதியாய் நின்று, எல்லாப் பாடுகளுக்கூடாகவும் அந்த இலக்கை நோக்கிச் செல்ல அழைக்கப்பட்டிப்பதையே பவுல் உறுதிப்படுத்தினார். ஆகவே, நாம் பொறுமையோடும் நம்பிக்கையோடும் ஓடலாம். ஏனெனில், அவர் பொய்யுரையாதவர்.

நமக்கு முன் வாழ்ந்தவர்கள் கிறிஸ்துவினிமித்தம் அடைந்த பாடுகளை குறித்து அறியவரும்போது, ‘அப்படியா’ என்று ஆச்சரியப்படுகிறோம். அவ்வளவுதானா நமது விசுவாசம்! நாம் அதில் நடக்கவேண்டி வரும்போது தவித்துப் போகிறோமே, ஏன்? இன்று, கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் அடி உதை வதை என்று நமக்கு பாடுகள் அதிகம் இல்லை. (சில இடங்களில் மரணத்தை சந்தித்தவர்களும் உண்டு.) நமக்கு ஆகக்குறைந்தது, தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவதில்தான் அதிக சோதனை ஏற்படுகிறது. நமது வாழ்வில் சோதனை வரும்போது, கிறிஸ்துவின் நிமித்தம் வைராக்கியமாக நிமிர்ந்து நிற்க முடிகிறதா? எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தில் தளர்ந்துவிடாமல், நமக்குள்ளிருக்கும் விசுவாசம் உண்மையானது என்பதை நிரூபிக்கும் சாட்சியின் தருணங்களாக அவற்றை மாற்றிப்போடுவோம். ஏனெனில், வருகிறவர் இனித் தாமதம்பண்ணார்.

ஜெபம்: “பிதாவே, பாதகமோ சாதகமோ எந்த சூழ்நிலையிலும் விசுவாசத்தில் உறுதியாய் பொறுமையாய் சாட்சியாய் நிலை நிற்க பெலன் தாரும். ஆமென்.”